தமிழ் நேரலை செய்திகள்

Featured

உடன் பிறவா சகோதரியின் கதை : பாகம் 46

ஜெயலலிதா சந்திரலேகா மோதல்

ஜெயலலிதாஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் பொதுமக்களை அநாசயமாக அலட்சியப்படுத்தியது.

அதற்கு உதாரணம் கும்பகோணம் மகாமகம்.

ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் அராஜகமாகத் தொடர்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, தராசு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, அதன் இரண்டு ஊழியர்களின் உயிர் பறிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம், தமிழகத்தில் ஆடம்பர அரசியலுக்கு அச்சாரம் போட்டது.

அதற்கு  விளக்கம் மதுரையில் நடந்த  வெற்றி விழா மாநாடு. ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் கொடூரங்களின் கோட்டையாக நின்றது.

அதன் நிகழ்கால அடையாளம், ஆசிட் வீச்சில் சிதைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திரலேகாவின் முகம். 

ஆசிட் வீச்சு : கொடூரத்தின் அடையாளம்!

சந்திரலேகா ஆசிட் வீச்சு1992 மே 19-ம் தேதி ஒரு செவ்வாய் கிழமை. அன்று காலையே வெயில் கொளுத்தத் தொடங்கியது.

ஊர் முழுவதும் புழுக்கம் நிரம்பி இருந்தது.

தன் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா தனது காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டார்.

கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, வெளிக்காற்றை வாங்கிக் கொண்டும், சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணத்தில் மூழ்கி இருந்தார்.

அவருடைய கார் எழும்பூர் அருகே வந்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசலில் அந்தச் சாலை சிக்கித் கொண்டிருந்தது.

ஊர்ந்து… ஊர்ந்து… மெல்ல நகர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒரு கட்டத்தில், திணறத் தொடங்கின.

அந்த நேரத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு இளைஞன் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.

அவன் எதேச்சையாக சந்திரலேகாவின் கண்களில் தென்பட்டான். ஏனோ… அவனை கவனிக்க வேண்டும் போல் சந்திரலேகாவுக்குத் தோன்றியது.

அதே நேரத்தில் அந்த இளைஞனும் சந்திரலேகாவின் காரை நோக்கியே ஓடி வந்தான்.

காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் எதையாவது விநியோகிப்பான் என சந்திரலேகா நினைத்துக் கொண்டார்.

இப்போது அந்த இளைஞன் சந்திரலேகாவின் காரை வெகு அருகில் நெருங்கி இருந்தான்.

அந்த நேரத்தில் சட்டென சந்திரலேகாவுக்கு மனதில் ஒரு உறுத்தல்… “இவன் வரும் பரபரப்பில் நோட்டீஸை விசிறியடித்தான் என்றால், அது கண்களில் படுமே!” என நினைத்து, வலதுபக்கம் திரும்பி கண்களையும் லேசாக மூடிக் கொண்டார்.

அடுத்த சில நொடிகளில், எரிகிற தீயில் உருக்கப்பட்ட இரும்பு நெருப்புக் குழம்பை முகத்தில் ஊற்றியது போன்ற ஒரு கொடூர வேதனையை சந்திரலேகாவின் மூளை உணர்கிறது.

எந்த வார்த்தையாலும் உணர்த்திவிட முடியாத ரணவேதனை அது.

சந்திரலேகாவால் குரல் எழுப்பி அலறக்கூட முடியவில்லை.

அனைத்தையும் மீறி லேசாகக் கண்களைத் திறந்து அவர் பார்த்தபோது அவருடைய புடவை, ஜாக்கெட்டும் எரிந்து கரும்புகைக் கிளம்பிக் கொண்டிருந்தது.

சட்டென செயல்பட்ட சந்திரலேகாவின் டிரைவர் பிரேம்குமார், காரை விட்டு இறங்கி அந்த இளைஞனை துரத்திப் பிடித்தார்.

சந்திரலேகா ரோட்டில் இறங்கி வேதனையில் துடித்தார். அப்போது, அவரைத் தாண்டிச் சென்ற எந்தக் காரும் அவருக்காக நிற்கவில்லை.

ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்குப் போனார். வேதனையும் இயலாமையும் சூழ்ந்திருந்த அந்தச் சூழலிலும் சந்திரலேகாவின் மனமும் புத்தியும், இது சதித்திட்டம் என்று அவரை எச்சரித்தது.

இதைச் செய்தவர்கள் கொன்று கூவத்தில் வீசவும் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த சந்திரலேகா, நினைவை மட்டும் இறுக்கிப்பிடித்துக் கொண்டார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது, நெருங்கிப் பழகிய அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் வட்ட நண்பர்கள் என யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. 

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நலனுக்குப் பொறுப்பு மாநில முதலமைச்சர்தான். அவர்களுக்கு விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரம் படைத்தவர் மாநில முதல்வர்தான்.

அப்படி இருந்தும், தனது அரசாங்கம் நடக்கும் மாநிலத்தில், தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி மருத்துவமனையில் இருந்தபோதும், ஜெயலலிதா அவரைப் போய்ப் பார்க்கவில்லை.

ஆறுதலாக ஒரு அறிக்கையைக்கூட வெளியிடவில்லை.

ஆனால், அதன்பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், யாராவது ஒரு அதிகாரி கையெழுத்துப் போட மறுத்தால், “பாத்துப்பா… உன் முகத்துல ஆசிட் அடிச்சிரப்போறாங்க” என்று பேச ஆரம்பித்தனர்.. 

யார் அழகு : ஜெ.-சந்திரலேகா நடத்திய நீயா? நானா?

சந்திரலேகா

1992 காலகட்டத்தில் சந்திரலேகா டிட்கோ சேர்மனாக இருந்தார்.

அந்த நேரத்தில் ஸ்பிக் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை அரசாங்கம் வைத்திருந்தது.

அவற்றையும் தாங்களே வாங்கிவிட வேண்டும் என ஸ்பிக் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஏ.சி முத்தையாவும் எம்.ஏ.சிதம்பரமும் துடித்தனர்.

அந்த நேரத்தில் அரசாங்கமும் பங்குகளை விற்க முடிவு செய்தது. ஆனால், என்ன விலைக்கு விற்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அந்தச் சிக்கலுக்குள்தான் கண்ணுக்குத் தெரியாத ஊழல் ஒன்று ஊடுருவி இருந்தது.

1992 ஜனவரி 24-ம் நாள் அரசின் வசம் உள்ள ஸ்பிக் பங்குகளை, அந்த நிறுவனத்துக்கே விற்பனை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அந்த முடிவை அரசாங்கம் எடுத்தபோது, ஒரு பங்கின் விலை 80 ரூபாய்.

அதன்பிறகு இரண்டு மாதங்கள் கழித்துத்தான் பங்குகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது (1992 மார்ச் 23-ம் தேதி) ஒரு பங்கின் விலை 210 ரூபாய்.

ஏறத்தாழ 3 மடங்கு அளவுக்கு பங்கின் விலை உயர்ந்திருந்தது. ஆனால், அரசாங்கம் 80 ரூபாய்க்கே ஸ்பிக் நிறுவனத்துக்கு பங்குகளை விற்பனை செய்ய ஆர்வம் காட்டியது.

அதற்கு டிட்கோ சேர்மன் சந்திரலேகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, “சந்திரலேகாவிடம் நானே பேசுகிறேன்” என்று சொல்லி தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டார்.

அந்தத் தொலைபேசி உரையாடலில், “ஜெயலலிதா சொன்னதை சந்திரலேகா மறுக்க… சந்திரலேகா சொன்னதை ஜெயலலிதா எதிர்க்க…” என இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது.

கடைசியில் அந்த வாக்குவாதம், ‘யார் அழகு : நீயா? நானா?” என்ற இடத்தில் வந்து நின்றது.

ஒருகட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா, “முகத் தோற்றம்தான் முதலமைச்சராவதற்கு அடிப்படைத் தகுதி என்றால், நானும் முதல்வராகியிருப்பேன்” என்று கூறியதாக அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

அதில் காயம்பட்ட ஜெயலலிதா சந்திரலேகாவுக்குத் தக்க பாடம் புகட்டக் காத்திருந்தார். அந்த நேரத்தில்தான் அவர் மீது ஆசிட் அடிக்கப்பட்டது.

அதில் டிரைவரிடம் பிடிபட்ட இளைஞன் பெயர் சுடலை என்கிற சுர்லா என்று சொல்லப்பட்டது. 5 ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வழக்கு கடுமையாகப் போடப்பட்டு இருந்தது.

ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சுர்லா மீதும் குற்றம் நிருபிக்கப்படவில்லை. கடைசிவரை சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது வெளி உலகத்துக்கு தெரியாமலே போனது.

பெண்களை பழிவாங்க ஆசிட்டை கையில் எடுக்கும் புதிய-கொடூர கலாச்சாரம் ஒன்று தமிழகத்துக்கும் தமிழக அரசியலுக்கும் அறிமுகம் ஆனது. 

ஜெயலலிதாவின் கொடுங்கனவு நடராசன்! 

சசிகலா,அனுராதா, தினகரன்,ந்டராசன்இத்தனை அட்டூழியங்களையும் ஒரு சேர சேர்த்து நடத்திய ஜெயலலிதாவை, நடராசனின் நடவடிக்கைகள் மட்டும் கொடுங் கனவாய்த் துரத்திக் கொண்டே இருந்தன.

நடராசன் தன் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார் என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார்.

அதனால், ‘நடராசனோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது’ என தன் கட்சிக்காரர்களை, தன் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை, எம்.பி-க்களை, மந்திரிகளை எச்சரித்துக் கொண்டே இருந்தார்.

அவர்களை நடராசன் பக்கமே அண்டவிடவில்லை ஜெயலலிதா. நடராசனின் மனைவி சசிகலாவுக்கும் அதே கட்டளையைப் பிறப்பித்திருந்தார் ஜெயலலிதா.  

தன் தோழியின் விருப்பப்படியே சசிகலாவும் நடராசனை முற்றிலுமாக வெட்டி விட்டிருந்தார்.

ஜெயலலிதாவின் சொல்லை சசிகலா எந்த அளவுக்கு கறாராகப் பின்பற்றினார் என்றால், நெருங்கிய உறவுகளுக்குள் நடந்த டி.டி.வி.தினகரனின் திருமண விழாவில் கூட நடராசனோடு சசிகலா ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரனின் திருமணம், 1992 அக்டோபர் 30-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்றது.

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாதான் மணமகள்.

நெருங்கிய சொந்தங்களுக்குள் நடைபெற்ற திருமணத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வரவில்லை.

திருமணம் நடைபெற்ற ‘குருதயாள் சர்மா’ கல்யாண மண்டபத்துக்கு கட்சிக் கரை வேட்டிகள் யாரும் வரவில்லை. எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களும் வரவில்லை.

ஆனால், அதிகாரிகள் வந்திருந்தனர். டாமின் தியானேசுவரன், முதலமைச்சர் பாதுகாப்பு அதிகாரி பழனிவேல் என ஆரம்பித்து போலீஸ் அதிகாரிகள் எக்கச்சக்கமாக குவிந்திருந்தனர்.

அந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட சசிகலாவும் நடராசனும் பேசிக் கொள்ளவே இல்லை.

ஆனால், நடராசன் உறவினர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு, ஏதோ ஒரு ஜோக்கை சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

அவற்றை ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த சசிகலா, நடராசனின் ஒரு ஜோக்கைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்.

அதிகபட்சமாக தினகரனின் திருமண விழாவில் சசிகலா, நடராசனின் சந்திப்பு அந்தச் சிரிப்போடு முடிந்தது. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை :பாகம் 45

“போஸ்டர்… கட்-அவுட்… நான்கு லாரிப் பூக்கள்” 

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார்.

காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை.

அண்ணா காலத்தில் அதை யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாது.

கருணாநிதி காலத்திலும் அவ்வளவு ஆடம்பரம் அரசியலில் எட்டிப்பார்க்கவில்லை.

சொகுசான நடிகராக இருந்து, முதல்வரான எம்.ஜி.ஆர் காலத்தில்கூட நிலைமை அவ்வளவு மோசமாகவில்லை.

அதுவரையிலும் ஆர்ப்பாட்டமான அரசியல் இருந்தது. ஆனால், ஆடம்பர அரசியல் என்ற ‘கான்செப்ட்’ தமிழகத்துக்கு அறிமுகம் ஆகவில்லை.  

ஜெயலலிதா காலத்தில் அது தமிழகத்துக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கி… பிறகு, அரசியலின் அங்கமாக மாறிப்போனது.

அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா தன்னை, தமிழகத்தை ரட்சிக்க வந்த ஆதிபராசக்தியின் வடிவமாக கற்பனை செய்து கொண்டார்.

தன்னைவிட்டால் தமிழகத்துக்கு வேறு நாதி இல்லை என்ற நினைப்பில் இருந்தார்.

இனி நிரந்தரமாக தமிழகத்தில் அ.தி.மு.க-வின் ஆட்சிதான் என்று தப்புக் கணக்கைப் போட்டுக் கொண்டார். அந்த எண்ணம் அவர் கண்ணில் இருந்து எதார்த்தத்தை மறைத்தது.

எதார்த்தம் தெரியாததால், அவருக்கும் தமிழக மக்களும் இருந்த இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. 

ஜெயலலிதா எங்கு போனாலும் அவருடைய காருக்கு முன்னாலும் பின்னாலும் தலா 50 கார்கள் அணிவகுத்தன;

மேரி மாதா, ஆதி பாராசக்தி வடிவத்தில் சித்தரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் போஸ்டர்கள் தமிழகத்தை கேலிக்குரிய மாநிலமாக பார்க்க வைத்தன;

ஜெயலலிதாவின் 150 அடி உயர கட்-அவுட்கள் பொதுமக்களை வாய்பிளக்க வைத்தன; ஜெயலலிதா கடந்து செல்லும்வரை மணிக்கணக்கில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர்.

ஜெயலலிதா கலந்து கொள்ளும் சில மணி நேர கூட்ட மேடைகளுக்கு அருகில் அவருக்காக  லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டி கழிப்பறைகள் உருவாக்கப்படுவதும், கூட்டம் முடிந்ததும் அவை இடித்துத் தகர்க்கப்படுவதும் தமிழக மக்களை ஆத்திரமுறச் செய்தன.

ஆனால் ஜெயலலிதா இவற்றை எல்லாம் விரும்பினார். அவற்றை ரசித்தார். அது ஒவ்வொன்றுக்கும் சசிகலா சாட்சியாக இருந்தார்.

ஜெயலலிதாவுக்கு இப்படிப்பட்ட ஆடம்பரங்களை பழக்கிவிடுவதும், அவற்றைச் செய்யத் தூண்டுவதும் சசிகலாதான் என்று பலர் குற்றம் சாட்டினர்.

அந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் சசிகலா கண்டுகொள்ளவில்லை. அந்த விமர்சனங்கள் எதற்கும் ஜெயலலிதா பதில் சொல்லவில்லை.

இவற்றை எல்லாம் உணர்ந்து கொள்ள ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சியில் பல சம்பவங்கள் இருக்கின்றன.

அதில் கும்பகோணம் மகாமகத்துக்கு அடுத்து நடந்த மதுரை மாநாடு உலகப்பிரச்சித்தம். 

மதுரை மாநாடு : ஆடம்பர அரசியலின் உச்சம்! 

1992 ஜுன் 27,28,29 மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

அதையடுத்து மதுரை சசிகலா, ஜெயலலிதாஅல்லோலகல்லோலப்படத் தொடங்கியது.  

மதுரையில் சர்க்கியூட் ஹவுஸில் ஜெயலலிதா, சசிகலா தங்குவதற்காக தனி அறைகள் உருவாக்கப்பட்டன. அந்த அறைகளின் கட்டமைப்பு, ஒருமுறை அல்ல… இருமுறை அல்ல… 27 முறை மாற்றி அமைக்கப்பட்டது.

மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்த சீஃப் இன்ஜினீயர்கள் எல்லாம் மதுரையில் மாநாடு நடைபெறும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குவிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ‘ஸ்பார்டெக்ஸ்’ டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன.

தமுக்கத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையின் முகப்பில் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வடிந்துவிடாமல் இருக்க, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ‘பைபர் ஸ்பான்ஞ்’ கூரைகள் வேயப்பட்டன.

மேடையிலும்  டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. மேடையில் இருந்து ஜெயலலிதாவின் ரெஸ்ட் ரூம் செல்லும் பாதையில், பாலீஸ் செய்யப்பட்ட கடப்பா கற்கள் பதிக்கப்பட்டன.

ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ரத்தினக் கம்பளங்கள் கொண்டு வரப்பட்டு விரிக்கப்பட்டன அதற்குள்ளேயே மேக்கப்-ரூம், டிரெஸ்ஸிங் ரூம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த டிஸ்கஷன் ரூம் அமைக்கப்பட்டது.

மன்னார்குடியில் இருந்து சமையலுக்கு தனி சமையல்காரர்கள் இறக்கப்பட்டனர். 

போஸ்டர்… கட்-அவுட்… நான்கு லாரிப் பூக்கள்!

மதுரை மாநாட்டில் மாநாடு

தலைநகரின் ஜான்சி ராணி… என்று கலர் போஸ்டர்கள் பளபளத்தன.

செங்கோட்டையன், கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசுதான் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.

70 எம்.எம். கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டது. அதன் முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த பிரம்மாண்ட யானை சிலைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

150 அடி உயரத்துக்கு ஜெயலலிதாவின் கட்-அவுட்கள் தமிழகத்தில் மதுரை மாநாட்டில் அறிமுகமானது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைவிட அந்த கட்-அவுட்கள் உயரமாக இருந்தன. அதைப் பார்த்து மதுரை அஞ்சியது.

27 ஆம் தேதி தொடங்கிய மாநாட்டுக்கு தனி ஹெலிபேடில் சசிகலாவும் ஜெயலலிதாவும் வந்திறங்கினர்.

ஜெயலலிதா நேராக நடக்க, சசிகலா தனியாக வேறு ரூட்டில் நடந்து போனார்.  சசிகலாவோடு டி.எஸ்.பி சிவனாண்டி சகஜமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு, அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

ஹெலிபேட் மைதானத்தில் நின்று கொண்டிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் ஜெயலலிதா வந்தவுடன் தபதபவென வரிசையாய் அவர் காலில் விழுந்தனர்.

தொலைவில் இருந்து அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கு ஒரு மனிதக் கோபுரம் ஸ்லோமோஷனில் சாய்வது போலத் தெரிந்தது.

அதன்பிறகுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.

ஜெயலலிதாவுக்காக பல லட்சங்களைக் கொட்டி, பார்த்து பார்த்து இழைக்கப்பட்ட அந்த அறையில்… 27 முறை மாற்றி அமைக்கப்பட்ட அந்த அறையில் ஜெயலலிதா தங்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

அசோக் ஹோட்டலில் தங்கினார். 28 ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜெயலலிதா கொடியேற்றி வைத்தார்.

அங்கிருந்து மாநாட்டுப் பந்தலுக்கு ஜெயலலிதா வரும் வழியில் 4 லாரிகளில் கொண்டு வந்து பூக்களைக் கொட்டி இருந்தனர்.

அது ஜெயலலிதா நடந்துவருவதற்காக கொட்டப்பட்ட பூக்கள் அல்ல… ஜெயலலிதாவின் கார் மிதந்து வருவதற்காக கொட்டப்பட்டவை.

முதல்நாள் நிகழ்ச்சியில், முசிறித் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேலுவின் திருமணம் உட்பட நான்கு திருமணங்களை மாநாட்டில் ஜெயலலிதா நடத்தி வைத்தார். 

ஜெ.வுக்கு இணையாக சசிகலாவுக்கு மரியாதை!

சசிகலா குடும்பம்

முதல்நாள் மாநாட்டில் மடிப்பாக்கம் வேலாயுதம் வெள்ளி சிம்மாசனத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கினார்.

அதில் யாழி வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனால், அதற்குத் தனியாக சாந்தி பூஜை செய்த பிறகே ஜெயலலிதா  அதில் அமர்ந்தார்.

ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் முதல்நாள் யானைப்படை, குதிரைப்படை, தரைப்படை அணிவகுப்பு நடைபெற்றது.

அதன்பிறகு, வேல் காவடி, மயில் காவடி, சிலம்பாட்டங்கள் நடைபெற்றன. கவிஞர் இளந்தேவனும், சுதா சேஷய்யனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலா ஒவ்வொரு முறை எழுந்து வெளியில் சென்றபோதும், திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்தபோதும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர்.

சசிகலாவின் குடும்பம் அந்த மாநாட்டில் பிரதானமாக வலம் வந்தது. இவற்றை எல்லாம் மேடையில் இருந்து ஜெயலலிதா அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கும் மரியாதையை சசிகலாவுக்கும் கொடுத்தனர்.  மதியம் 2.25 மணிக்கு ஜெயலலிதா மாநாட்டுக்கு வந்தார்.

அங்கு உண்மையிலேயே கூட்டம் லட்சக்கணக்கில் திரண்டிருந்தது.  ஜெயலலிதா சாதனைகள் பற்றி அமைச்சர்கள் அடுக்கடுக்காக பேசினார்கள்.  

பேச வருவதற்கு முன் அமைச்சர் விஸ்வநாதன், வெல்வெட் சூட்கேஸ் ஒன்றை ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அதை மடியில் வைத்து திறந்து பார்த்த ஜெயலலிதா,

அதை உடனே மூடி தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கொடுத்தார். அது அங்கிருந்து நேராக சசிகலாவின் கைகளுக்குப் போனது.

சசிகலாவும் அதைப் பார்த்துவிட்டு ஒரு சீட்டை எழுதி ஜெயலலிதாவுக்கு அனுப்பினார்.

அதைப் படித்த ஜெயலலிதா சசிகலாவை ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

இரண்டறை மணிநேரம் பேசிய ஜெயலலிதா, “ராஜிவ் காந்தியின் ரத்தத்தில் நான் வெற்றி பெறவில்லை என்று பேசினார்.

29 ஆம் தேதி அதிகாலையில் 4 மணிக்கு ஜெயலலிதா மாநாட்டை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

அந்த மாநாடுதான் அடுத்தடுத்த தமிழகத்தில் ஜெயலலிதா-சசிகலா கூட்டணி தமிழகத்தில் நடத்தப்போகும் ஆடம்பரங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 44

அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க நடராசன் சதி? 

 தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்து, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா.

ஆனால், “தனது ஆட்சிக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுமோ… தன்னிடம் இருக்கும் முதல்வர் நாற்காலியையும் டெல்லி பறித்துவிடுமோ…” என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாள்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.

நடராசன் அப்படியானதொரு இனம் புரியாத பயத்தை ஜெயலலிதாவிடம் ஒவ்வொரு நாளும் உருவாக்கிக் கொண்டே இருந்தார்.

ஜெயலலிதாவால் நடராசனை கணிக்கவும் முடியவில்லை; கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

ஜெயலலிதாவின் எண்ணத்திற்கேற்ப நடராசனின் நடவடிக்கைகளும் புரியாத புதிராகவே இருந்தன. 

ஜெயலலிதாவை எச்சரித்த நரசிம்மராவ்!

1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சில மாதங்கள் கழித்து, பிரதமர் நரசிம்மராவை டெல்லியில்  போய்ச் சந்தித்தார்.

நரசிம்ம ராவ், ஜெயலலிதா

பல விஷயங்கள் குறித்து ஜெயலலிதாவிடம் பேசிய நரசிம்மராவ் இறுதியில், “நடராசன் என்பவர் யார்? உங்கள் கட்சியில் அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்.

அவர் அடிக்கடி அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்து வந்து மத்திய அமைச்சர்களை சந்திக்கிறாரே. யார் அவர்… கட்சியில் அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்…?” என்று கேட்டு பொடி வைத்தார்.

பிரதமர் வாயில் இருந்து நடராசனின் பெயரைக் கேட்ட ஜெயலலிதா அந்த இடத்திலேயே கொஞ்சம் உறைந்து போனார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த ஜெயலலிதா, அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்து திட்டித் தீர்த்தார்.

“நடராசனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நான் பலமுறை உங்களை எச்சரித்துள்ளேன்; ஆனால், நீங்கள் அதைப் பொருட்படுத்தவே மாட்டேன் என்கிறீர்கள்;

இனிமேல் நடராசனோடு தொடர்பு வைத்துக் கொண்டு நீங்கள் ‘லாபி’ செய்வது எனக்குத் தெரியவந்தால், என் நடவடிக்கை கடுமையானதாக இருக்கும்” என எச்சரித்துவிட்டு தமிழகம் திரும்பினார்.

தமிழகம் வந்ததுமே, அப்போது உளவுத்துறை டி.ஐ.ஜியாக இருந்த பஞ்சாபகேஷனிடம் நடராசன் விவகாரங்கள் குறித்து ரிப்போர்ட் கேட்டார்.

அவர் அளித்த ரிப்போர்ட் ஏற்கெனவே அதிர்ச்சியில் இருந்த ஜெயலலிதாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

“அந்த அளவுக்கு அரசாங்கத்தின் எல்லா இடத்திலும் நடராசனின் ஆதிக்கம் இருந்தது” என அந்த ரிப்போர்ட் தெளிவுபடுத்தியது.

‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பதற்கேற்ப, “நம்மைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியில் அமர நடராசன் திட்டமிடுகிறார்” என்றே ஜெயலலிதா கருதினார். 

அடுத்த முதல்வர் நடராசனா?

ஜெயலலிதாவின் இரும்புக்கரம் நடராசனுக்கு எதிராக நீண்டது.

1992 ஆகஸ்ட் 2ஆம் தேதி தஞ்சையில் நடராசன், ‘தமிழ் அரசி’ பத்திரிகையின் வாசகர் வட்ட சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர் எல்லாம் நடராசன்தான்.

நிகழ்ச்சிக்கு முதல் நாள் போலீஸ் நடராசனைச் சந்தித்து, ‘உங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை’ என்றது.

அதோடு, நடராசனை ஏறத்தாழ வீட்டுச் சிறையில் வைத்ததுபோல் அவரை நகரவிடாமல் வைத்தது. நடராசன் கொந்தளித்தார்.

ஆனாலும் அவரால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.

அதன் பிறகு  சுப்பிரமணிய சாமி சென்னையில் ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் நடராசனும் கலந்துகொண்டார்.

பூச்செண்டு, தஞ்சாவூர் தட்டு எல்லாம் கொடுத்து சுவாமியை நடராசன் குஷிப்படுத்தினார்.

அப்போது நடராசனோடு வந்த சிலர், “50 எம்.எல்.ஏ-க்கள் அண்ணன் பின்னால்தான் இருக்கின்றனர்” என்றனர்.

அதைக் கேட்டு சிரித்த சுவாமி, “ஓகோ… அப்போ தமிழ்நாட்டுக்கு அடுத்த சி.எம். நடராஜன்தானா” என்றார். இந்தத் தகவலும் ஜெயலலிதாவை எட்டியது.

சுப்பிரமணிய சாமி, நடராசன்

A to Z…. Z to A….

ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வெறுத்துப்போய் இருந்த நடராசனும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை.

அவர் வழக்கம்போல் அவர் பாதையில் மாயமானைப் போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தார்.

இந்தியன் வங்கி சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட நடராசன், “A இருக்க வேண்டிய இடத்தில் Z-ஐப் போட்டு, Z இருக்க வேண்டிய இடத்தில் வேறொன்றைப் போட்டு, இன்றைக்கு அரசியலில் Z-யை A-ஆக்கியிருக்கிறேன்.

நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் Z-யை காலி செய்து அந்த இடத்துக்கு A-வைக் கொண்டு வருவேன்” என்றார்.

சசிகலா - நடராசன்

இவை எல்லாவற்றையும் கேட்ட ஜெயலலிதா பத்திரிகைகளுக்கு காட்டமாக ஒரு அறிக்கையைக் கொடுத்தார்.  

அதில், “கழகத்தின் ஆட்சியைக் கவிழ்க்க நடராசன் சதித் திட்டம் தீட்டுகிறார். அதனால், அவரோடு கழகத்தினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு நடராசனோடு நெருங்கிய தொடர்பில் இருந்த தேனி பன்னீர் செல்வம், சிவகங்கை முருகானந்தம், நெல்லை வேலய்யா, பால்ராஜ், ஆர்.பி.ஆதித்தன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், அப்போதும் சசிகலா ஜெயலலிதாவுடனேயே இருந்தார்.

தன் சொந்தத் தம்பி திவாகரனை துரத்திவிட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடனே இருந்தார்.

தனது அண்ணன் விநோதகனை ஜெயலலிதா துரத்தி விட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடனே இருந்தார்.

தனது அக்காள் மகன் தினகரனை ஜெயலலிதா துரத்திவிட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடன்தான் இருந்தார்.

தன் கணவர் நடராசனை ஜெயலலிதா துரத்தி துரத்தி அடித்தபோதும் சசிகலா, ஜெயலலிதாவுடனே இருந்தார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத நடராசன் நேராக போயஸ் கார்டனுக்கு கிளம்பிப்போய், “உங்களை ஆட்சியில் அமர்த்தப் பாடுபட்டவன் நான்… என்னை சந்தேகிக்கிறீர்கள்.. என்னை வெளியில் அனுப்பிவிட்டு, என் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டீர்கள்.

அதுபோல, சசியையும் அனுப்பிவிடுங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு மட்டும் சசி வேண்டுமா? என்று சத்தம் போட்டார்.

ஆனால், அந்தச் சத்தம் வெறுமனே காற்றில் கரைந்து காணாமல் போனது.

ஜெயலலிதாவும் சசிகலாவை அனுப்பிவிடவில்லை; சசிகலாவும் ஜெயலலிதாவை விட்டு விலகிவிடவில்லை. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 43

கும்பகோணம் மகாமகம்

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக  பொறுப்பேற்பதற்கு முன்பே சசிகலா, ஜெயலலிதாவின் இணைபிரியாத் தோழியாகி இருந்தார்.

சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்ற நிலை அப்போதே உருவாகி இருந்தது.

அதனால்தான், போயஸ் கார்டன் மற்றும் கட்சிக்குள் இருந்து தினகரன், திவாகரன், நடராசனை ஒதுக்கி வைத்த ஜெயலலிதாவால் சசிகலாவை விலக்கவே முடியவில்லை; விலகவும் அவர் விரும்பவில்லை.

அதே நேரத்தில் சசிகலாவின் கணவர் நடராசனிடம் ஜெயலலிதா கொஞ்சம் எச்சரிக்கையைக் கடைபிடிக்க ஆரம்பித்தார்.

“நம்மை அரியணையில் ஏற்றி வைக்க நடராசனால் இத்தனை திட்டங்களைத் தீட்ட முடிகிறதென்றால்…

நம்மை அரியணையில் இருந்து இறக்குவதற்கும் நடராசனால் பல திட்டங்களைத் தீட்ட முடியும்” என்ற எச்சரிக்கை அது.

நடராசனின் செயல்பாடுகளும் ஜெயலலிதாவின் உள்ளுணர்வு ஒலித்த எச்சரிக்கைக்கு ஏற்பவே இருந்தன.

தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்துக் கொண்டு போய் மத்திய அமைச்சர்களைச் சந்திப்பது, தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டத்தை தனக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு நிரப்புவது, தன் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் எதையும் செய்ய முடியாது என்று பேசுவது, பேட்டி கொடுப்பது என்று புதிராகவே நடராசன் வலம் வந்தார்.

கடைசிவரை ஜெயலலிதாவால் அவரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதனால் வெறுத்துப்போய் கொஞ்சம் ஒதுக்கி மட்டும் வைத்தார்.

மகாமகம் விழாவில் ஜெயலலிதா, சசிகலா

சசிகலா விவகாரத்தில் அதைக்கூட அவரால் செய்ய முடியவில்லை.

தமிழகத்துக்கே முதல்வர் ஆன பிறகும்கூட சசிகலாவின் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் செயல்பட முடியவில்லை.

முதல்வராகும் வரை இணை பிரியாத்தோழி என்றளவில் இருந்த ‘ஜெயலலிதா-சசிகலா நட்பு’, ஜெயலலிதா முதல்வரான பிறகு, ‘சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி’ எனச் சொல்லும் கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

தினகரன், திவாகரன், நடராசனுக்குப் பதில் சசிகலாவின் அண்ணன் விநோதகன் போயஸ் தோட்டத்துக்குள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

தமிழகத்தை கேடு காலம் மெல்லச் சூழத் தொடங்கியது.

அதேநேரத்தில், சசிகலா குடும்பத்துக்கு நல்ல யோகம் பொங்கிப் பிரவாகம் எடுக்கத் தொடங்கி இருந்தது.

திருத்துறைப் பூண்டியில் விநோதகன் ஆடம்பரத் திருமண மண்டபம் ஒன்றை கட்டத் தொடங்கினார்.

அந்தக் காலத்திலேயே அது முழுமையான ஏ.சி வசதி செய்யப்பட்ட திருமண மண்டபமாக கட்டப்பட்டது.

திருத்துறைப் பூண்டி பேருந்து நிலையமே இடம் மாற்றத்தில் சிக்கி சில நாள்கள் தவித்துப்போனது. 

தமிழகத்தின் இருண்ட காலம் தொடக்கம்!

தாக்கப்பட்ட தராசு பத்திரிகை அலுவலகம், ஆசிரியர் சியாம்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், 7 துப்பாக்கிக் சூடுகள் தமிழகத்தில் நடந்தன.

ஜெயலலிதாவை விமர்சித்த எதிர்கட்சித் தலைவர்கள் கொலை வெறியோடு துரத்தி துரத்தி தாக்கப்பட்டனர்.

ப.சிதம்பரத்துக்கு எதிராக, திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க-வினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தனர்.

பெயருக்குத்தான் அது கருப்புக் கொடி காட்டும் போராட்டம். ஆனால், உண்மையில் அது சிதம்பரத்தை சின்னபின்னப்படுத்துவதற்கான திட்டம்.

அதில் இருந்து தப்பித்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிதம்பரம் பட்டபாடு அவர் மனதில் இன்னும் இருக்கிறது.

இப்போது அவரைச் சந்தித்து அந்தச் சம்பவம் குறித்துக் கேட்டாலும், அது ஏற்படுத்திய வடுவை அவர் வார்த்தைகளில் உணர முடியும்.  

மணிசங்கர் அய்யர் பாண்டிச்சேரி வரை துரத்தி அடிக்கப்பட்டார். ஆளும்கட்சியை விமர்சித்த பத்திரிகைகளின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன.

மற்ற ஆட்சிகளிலும் அது நடக்கும். ஆனால், அவதூறு வழக்குகள், தொலைபேசியில் கெட்ட வார்த்தைகளால் நடத்தப்படும் அர்ச்சனை என்ற அளவில் மட்டுமே இருக்கும்.

ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் ஆளும் கட்சியை, ஜெயலலிதாவை விமர்சித்த பத்திரிகைகளை அடக்க,  பாக்ஸர் வடிவேலு போன்ற ரவுடிகள் களம் இறக்கப்பட்டனர்.

கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

கொல்லப்பட்ட தராசு பத்திரிகை ஊழியர்கள்

தாராசு பத்திரிகை ஊழியர்கள் சுப்பிரமணி, சத்தியமூர்த்தி கொல்லப்பட்டனர்.

நக்கீரன் கோபாலுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான தலைவலி காத்திருந்தது.

திடீரென்று நக்கீரன் அலுவலகத்தில் மட்டும் கரண்ட் கட் ஆகும்;

திடீரென்று நக்கீரன் அலுவலகத்துக்குள் போலீஸ் படை உள்ளே நுழையும்; விசாரணை என்ற பெயரில் நக்கீரன் கோபாலை படுத்தி எடுத்துவிடுவார்கள்.

ஆசிட் வீச்சு, ஆட்டோவில் குண்டர்கள், அடி-தடி, ரவுடிகள் ராஜ்ஜியம், துப்பாக்கிச் சூடு,  ஒவ்வொரு துறையிலும் ஊழல்… ஊழல்… ஊழல்… என தமிழகம் அல்லோலகல்லோலப்பட்டது.

ஆறே மாதத்தில் இந்த ஆட்டம் என்றால், மீதமிருக்கும் நான்கறை ஆண்டுகளையும் கடத்தப் போகிறோம் என்று தெரியாமல் தமிழகம் விழி பிதுங்கி நின்றது.

தமிழகம் கண்ட இந்த வேதனைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஆளும் கட்சி இருந்தது; ஆளும் கட்சிக்குப் பின்னால் ஜெயலலிதா இருந்தார்; ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா இருந்தார்; சசிகலாவுக்குப் பின்னால் சசிகலா குடும்பம் இருந்தது.

ஆனால், அவர்கள் எல்லாம் வேறு உலகத்தில் இருந்தனர். தமிழக அரசியல் அதுவரை காணாத ஆடம்பரத்தைக் காணத் தொடங்கியது.

தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் அப்போது அனுபவித்த ஆடம்பரங்களை, அதிகாரத்தின் உச்சத்தை, உலகத்தையே ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விக்டோரியா மாகராணியேகூட அனுபவித்திருப்பாரா? என்பது சந்தேகம் தான்.

அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த காலத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து அரங்கேற்றிய சில சம்பவங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

கும்பகோணம் மகாமகம், மதுரை உலகத் தமிழ் மாநாடு, வளர்ப்பு மகன் திருமணம், மிரட்டி வாங்கப்பட்ட மாளிகைகள், போயஸ் கார்டன் வீட்டில் இருந்த வைர-வைடூரிய-தங்க நகைகளின் மதிப்பு, ஜெயலலிதா, சசிகலா பெயரில் வாங்கிக்குவிக்கப்பட்ட சொத்துக்களின் கதைகளுக்குள் போய் வரவேண்டும்.

அந்தச் சொத்துக்கள், சொகுசுகள், ஆடம்பரங்களின் கதைகளுக்குப் பின்னால்தான், ஜெயலலிதா ஏன் சசிகலாவை விலக்கி வைக்கவில்லை என்பதற்கான காரணம் இருக்கிறது.

சசிகலா ஏன் ஜெயலலிதாவை விட்டு விலகவில்லை என்பதற்கான காரியமும் அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது.  

கும்பகோணம் மகாமகம் தொடக்கம்…

மகாமகத்தில் சசிகலா, ஜெயலலிதா ஒருவருக்கொருவர் நீராட்டிவிட்ட போது

1992 பிப்ரவரி 18-ம் தேதி கும்பகோணம் மகாமகம்.

அதற்கான நாள் நெருங்க நெருங்க பலவிதமான சர்ச்சைகளும், இனம் புரியாத அச்சமும் தமிழகத்தில் பரவிக் கொண்டிருந்தன.

கும்பகோணம் மகாமகக் குளத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா நீராடப் போகிறார் என்ற செய்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது.

கும்பகோணம் முழுவதும் ஜெயலலிதாவின் வானுரய கட்-அவுட்களால் நிறைந்து போனது.

அ.தி.மு.க-வினர் தீவிர வசூல் வேட்டையில் இறங்கினர். 17-ம் தேதியே போலீஸ் கெடுபிடிகள் தொடங்கின.

ஜெயலலிதா நீராடுவதற்காக பல லட்சங்களைக் கொட்டி குளியலறை அமைக்கப்பட்டது.

“முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும்வரை பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்கக்கூடாது” என்று போலீஸ் கட்டுப்பாடு விதித்தது.

திகிலடைந்தவர்கள் மகாமகத்துக்கு முதல் நாளே நீராடிவிட்டுக் கிளம்பினர்.

மகமகத்தன்று காலை 8.30 மணிக்கு குளத்தருகே பக்தர்கள் மெதுவாகக் கூடத் தொடங்கினர்.

போலீஸ் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அந்தக் கட்டுப்பாடு எல்லாம், 9.30 மணி வரை மட்டுமே.

அதன்பிறகு, குளத்தில் நின்ற மக்கள் கூட்டம் வேகமாகக் கூடிக் கொண்டே போனது.

போலீஸால் அதைக் தடுக்க முடியவில்லை.

ஜெயலலிதா நீராடுவதைப் பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தனர்.

ஜெயலலிதா வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே குளத்தருகே வந்த தேவாராம் ஐ.ஜி. பைனாகுலரில், மக்கள் நெருக்கியடித்து அவதிப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் கையை விட்டு எல்லாம் போய் இருந்தது.

அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் சூழல் அப்போது. சரியாக காலை 11.32 மணிக்கு ஜெயலலிதா நீராடுவதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு வந்தார்.

அங்கிருந்து கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார்.

கும்பகோணம் மகாமகம் முடிவு…

மகாமகத்தில் பலியானவர்கள்

ஜெயலலிதா கை அசைத்ததை அவருக்கு நேர் எதிரில், வடக்கு வீதிப்பக்கம் இருந்தவர்களால் பார்க்க முடியவில்லை.

இடையில் இருந்த ஒரு கோயில் அவர்களை மறைத்தது.

எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முன்னுக்கு வந்து பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயன்றனர்.

அதைத் தொடர்ந்து இரும்பு கிரில் கட்டைச் சுவரோடு சாய்ந்தது.

அதில் நசுங்கி பலர் இறந்தனர். அந்தத் துயரம் ஏற்படுத்திய ஓலம், பதற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெறித்து ஓடத் தொடங்கினர்.

அதே நேரத்தில் குளத்துக்குள் இருந்தவர்கள் வெளியில் ஏறி ஓடத் தொடங்கினர்.

இதனால், நேரேதிரில் பதற்றத்தோடு ஓடிய கும்பல், கூட்டம் ஒன்றும் புரியாமல், ஒன்றோடு ஒன்று மோதி, கீழே விழுந்து, நசுங்கி, மூச்சுத் திணறி உயிரைவிட்டது.

அதற்கு நூறு அடி தூரத்துக்குள் சசிகலா ஒரு குடத்தில் மகாமகக் குளத்தின் தண்ணீரை அள்ளி அள்ளி ஜெயலலிதாவின் தலையில் ஊற்றினார்.

அதன்பிறகு ஜெயலலிதா அதேபோல் சசிகலாவின் தலையில் தண்ணீரை ஊற்றினார்.

கொஞ்சம் தள்ளி மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியை வர்ணித்தவர்களின் வர்ணனை ஒலியில் மக்களின் மரண ஓலம் ஜெயலலிதா-சசிகலாவின் காதுகளில் விழவில்லை.

போலீஸ் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 என்று சொல்லப்பட்டது.

ஜெயலலிதாவும் சசிகலாவும் கும்பகோணத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இரண்டறை மணிக்கு மேல்தான் கிளம்பினார்கள்.

ஆனால், இறந்த உடல்கள் வைக்கப்பட்டு இருந்த குடந்தை மருத்துவமனைப் பக்கமோ…  காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவையோ திரும்பிக்கூட பார்க்கவில்லை.

‘ரெட் கிராஸ்’ அமைப்பின் ஆம்புலன்ஸ்கள் மட்டும் இறந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் தேடி அலறிக் கொண்டிருந்தது. 

தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சைகளை எழுப்பிய இந்த விவகாரத்துக்குப் பின்னால், சசிகலாவின் செல்வாக்கு கார்டனுக்குள் இன்னும் கூடியது.

அதன்பிறகு அவர் தினம்தோறும் நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார்.

அதோடு எப்போதும் சசிகலா-நடராசனுக்கு ஆகாத ஆர்.எம்.வீ-யின் அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 42

சசிகலா சகாப்தம் ஆரம்பம்

1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதாரணமாகத்தான் தொடங்கின.

வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது.

ஒரு படுகொலை… தமிழகத்தில் அதுவரை இருந்த காட்சிகள் அனைத்தையும் உருமாற்றியது.

அந்தப் படுகொலைக்குப் பிறகு, இந்தியாவின் பார்வை தமிழகத்தின் மீது பதற்றத்துடன் படரத் தொடங்கியது;

தேர்தல் கணக்குகள் தூள் தூளாயின; கருத்துக் கணிப்புகள் நொறுக்கித் தள்ளப்பட்டன.

அந்த ஒரு படுகொலை…

தமிழக அரசியலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவை ஆட்சியதிகாரத்தில் கொண்டு போய் அமரவைத்தது;

ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில் முன்னுரைக்கு முடிவுரை எழுதிவிட்டு, அவரின் அத்தியாயங்களை ஆரம்பித்து வைத்தது;

தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் சசிகலாவின் சகாப்தத்துக்குக் கொடியேற்றம் செய்து வைத்தது;

அடுத்து வந்த 5 ஆண்டுகளும், தமிழகம் துயரங்களுக்குள் மூழ்கடிப்பட்டு துன்பப்படுவதற்குக் காரணமாக மாறின;

‘மன்னார்குடி குடும்பம்’ என்றொரு புதிய உடைமை வர்க்கம் தமிழகத்தில் உருவாக வழிவகுத்துக் கொடுத்தது.

இப்படிப்பட்ட எல்லாப் பிழைகளுக்கும் காரணமாக அமைந்த அந்தப் படுகொலை… ராஜீவ் காந்தியின் படுகொலை. 

விறுவிறுப்பான தேர்தல் களம்!

ஜெயலலிதா

1991 ஜனவரி 30-ம் தேதி தி.மு.க அரசாங்கம் கலைக்கப்பட்டது.

ஒரு மாநிலத்தில் இருந்த ‘மெஜாரிட்டி’ அரசாங்கத்தை, தகுந்த காரணம் இல்லாமல் மத்திய அரசு கவிழ்த்தது.

ராஜீவ்-ஜெயலலிதா நிர்பந்தங்கள் மட்டுமே கருணாநிதியின் அரசாங்கத்தைக் காவு வாங்கின.

தமிழகம் தேர்தல் கோலம் பூண்டது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு, மீட்டெடுத்த ஆட்சியதிகாரத்தை பாதியில் தோற்ற கருணாநிதி, அடிபட்ட புலியின் சினத்தோடு வலம் வந்தார்.

வருடைய அரசாங்கம் நியாயமற்ற முறையில் கலைக்கப்பட்டதை தமிழகமும் கொஞ்சம் உணர்ந்தே இருந்தது.

அதனால் தி.மு.க மேல் ஒரு அனுதாபமும், கருணாநிதியின் மேல் ஒரு பரிதாபமும் அப்போது தமிழக மக்களிடம் உருவாகியிருந்தது.

கடுமையான சூழ்நிலைகளுக்கு இடையிலேயே கட்சியையும் வளர்த்து, தன்னையும் வளர்த்துக் கொண்ட கருணாநிதிக்கு அது கூடுதல் தெம்பைக் கொடுத்தது.

‘டெல்லியிடம் தோற்ற அதிகாரத்தை தமிழகத்தில் வென்றே தீர வேண்டும்’ என்ற வெறியோடு தேர்தல் களத்தில் ஓடிக் கொண்டிருந்தார். சென்னை துறைமுகம் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.

‘பல ஆண்டுகளாக எட்டாத தொலைவிலிருந்த முதல்வர் நாற்காலி, இப்போது எட்டிப் பிடிக்கும்  தூரத்துக்குள் வந்துவிட்டது.

கொஞ்சம் முயன்றால் அதைத் தொட்டுவிடலாம்’ என்ற எண்ணத்தோடு ஜெயலலிதாவும் முதல்வர் நாற்காலியைக் குறிவைத்து தேர்தல் களத்தில் ஓடிக்கொண்டிருந்தார்.

பர்கூர், காங்கேயம் என்று இரண்டு தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டார்.

அவரும் தேர்தல் வேலைகளில் கொஞ்சமும் சுணக்கம் காட்டவில்லை.

வன்னியர் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியாகப் பரிணமித்து முதல்முறையாகத் தேர்தல் களம் கண்டிருந்தது.

அந்தக் காலத்தில், தேர்தல் பிரச்சாரங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும்  காலக்கெடு, நேரக்கெடு என்பதெல்லாம் கிடையாது.

அதனால், இரவு-பகல் என எந்நேரமும் ‘மைக் செட்டு’கள் பெரியோர்களே… தாய்மார்களே… என விடாது முழங்கிக்கொண்டே இருந்தன. 

கோரப் படுகொலையும்… வீண் பழியும்!

1991 மே மாதம் 21-ம் தேதி ராஜீவ் காந்தி சென்னை வந்தார்.

அன்று ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரக்கூட்டம். அதற்கு மறுநாள்-மே 22ம் தேதி-கிருஷ்ணகிரியில் ஒரு பிரசாரக்கூட்டம்.

அதில், ராஜீவ்காந்தி, ஜெயலலிதா, மூப்பனார், ப.சிதம்பரம், வாழப்பாடி ராமமூர்த்தி ஒரே மேடையில் பேசுவதாகத் திட்டம்.

அதற்குமுன்பு கிருஷ்ணகிரியில் 15 கிராமங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்வதாக நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு இருந்தது.

அதற்காக மே 21-ம் தேதியே ஜெயலலிதா, சசிகலா, நடராசன் அங்குச் சென்றுவிட்டனர்.

கிருஷ்ணகிரியில் பிரம்மாண்ட மேடை தயாராகிக் கொண்டிருந்தது. சென்னையில் விதி வேறு மாதிரி ஒரு கணக்கைப் போட்டு வைத்திருந்தது.

மே 21-ம் தேதி இரவு ராஜீவ் காந்தி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கு தன் கடைசி பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, காரில் ஸ்ரீபெரும்புதூர் கிளம்பினார்.

ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தை அடைந்ததும், ராஜீவ் காந்தி காரைவிட்டுக் கீழிறங்கி மேடை நோக்கி வேகமாகச் சென்றார்.

அவர் மேடைக்குப் போவதற்கு முன்பே, காதைக் கிழிக்கும் வெடிச் சத்தம் கேட்டது. அதன்பிறகு என்ன நடந்ததென்றே யாருக்கும் தெரியவில்லை.

சுற்றிலும் புகை மண்டலம்; அலறல் சத்தம்; கருகல் மணம் என்று களேபரமான காட்சிகளாக இருந்தன.

புகை மண்டலம் லேசாகக் கலைந்தபோது, மனித உடல்கள் சிதறிக் கிடந்தன.

ரத்தத் கறைகளும், ரத்தத் திட்டுகளும் சதைத் துணுக்குகளுமாய் அந்த இடம் பலி பீடத்தைப் போல் காட்சி அளித்தது.

ராஜீவ் காந்தியைக் காணவில்லை. மூப்பனார் ஓடி வந்து, கிழே கிடந்த உடல்களுக்குள் ராஜீவ் காந்தியின் உடலைத் தேட ஆரம்பித்தார்.

ராஜீவ் காந்தியும் அங்கு அடையாளம் தெரியாத அளவுக்கு சதைத் துண்டங்களாய்ச் சிதறிக் கிடந்தார்.

இந்தியாவின் எதிர்காலப் பிரதமர், தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில், பனங்காடுகளுக்கு மத்தியில் உடல் சிதறிக் கிடந்தார்.

அந்தக் கோரக் கட்சிகள் கலர் படங்களாக எடுக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.

அதோடு சேர்த்து, ‘ஆட்சியைக் கலைத்த ஆத்திரத்தில் தி.மு.கதான் விடுதலைப்புலிகளை வைத்து ராஜீவ் காந்தியைத் தீர்த்துக்கட்டியது’ என்ற வதந்தியும் தீயாய்ப் பரப்பப்பட்டது.

வதந்தியை யார் பரப்பி இருப்பார்கள் என்ற ஆராய்சிக்குள் போகத் தேவையில்லை.

ஆனால், தேர்தலுக்கு ஓட்டுக் கேட்பதை விட்டுவிட்டு, இந்த வதந்திக்கு விளக்கம் சொல்வதிலேயே தி.மு.க-வுக்கு நேரம் விரயமானது.  

அழுகை… கண்ணீர்… அனுதாப சுனாமி!

ரோஜாப்பூ நிறத்தில் இருந்த ராஜீவ் காந்தி, சதைத் துணுக்குகளாய் சிதறிக் கிடந்த புகைப்படங்களும், பால்வடியும் சோக முகத்தோடு ராஜீவ் காந்தியின் சிதைக்கு ராகுல் காந்தி தீ மூட்டும் காட்சிகளும் இந்தியாவை உலுக்கியது.

தமிழகத்தை குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது.


 அதில் தமிழகம் முழுவதும் ஒரு அனுதாபம் உருவானது.

அதைச் சாதரண அனுதாபம் என்று கணக்கிட முடியாது; அனுதாப அலை என்றும் எழுதிவிட முடியாது;

சுனாமிப் பேரலையைப் போல் அந்த அனுதாபம் தமிழகத்தை வாரிச் சுருட்டி வைத்திருந்தது.

அந்த அனுதாபச் சுனாமியில், தமிழகம் போட்டு வைத்திருந்த தேர்தல் கணக்குகள் எல்லாம் துவம்சமாகிப் போனது.

ஆட்சியை இழந்ததால் தி.மு.க மேல் இருந்த அனுதாபம் அடித்துக் கொண்டு போனது. அ.தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

168 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க 164 தொகுதிகளை வென்றெடுத்தது.

65 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளைக் கைப்பற்றியது.

பர்கூர், காங்கேயம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா, இரண்டிலுமே வெற்றி பெற்றார்.

ஆனால், 176 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க மொத்தமே இரண்டு தொகுதிகளில் மட்டும்தான் கைப்பற்றியது.

ஜெயலலிதா என்ற ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார்.

தி.மு.க என்ற மாபெரும் கட்சியும் மொத்தமே இரண்டு தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றிருந்தது.

தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற அந்த இரண்டு வேட்பாளர்கள், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூரில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டுமே.

தி.மு.க கூட்டணியில் இருந்து 22 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

அந்தக் கட்சியின் சார்பில் திருவாரூரில் போட்டியிட்ட தம்புசாமி வெற்றி பெற்றிருந்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டது.

அந்தக் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட பழனிச்சாமி மட்டும் வெற்றி பெற்றிருந்தார்.

தாயக மறுமலர்ச்சி கழகம் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசு அறந்தாங்கியிலும், கே.கே.எஸ்.எஸ்.ஆர் சாத்தூரிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

பட்டாளி மக்கள் கட்சி 194 தொகுதிகளில் போட்டியிட்டது.

ஆனால், அந்தக் கட்சியின் சார்பில் பண்ரூட்டியில் போட்டியிட்ட பண்ரூட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றிருந்தார்.

ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட குமாரதாஸ், கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.

விருதுநகரில் இந்தியன் காங்கிரஸ் என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் ராமசாமி என்பவர் வெற்றி பெற்றிருந்தார்.

சுயேட்சையாகப் போட்டியிட்டவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி மட்டும் வெற்றி பெற்றிருந்தார்.

சசிகலா சகாப்தம் தொடக்கம்!

அசுர பலத்துடன் அ.தி.மு.க ஆட்சி அமைத்தது.

ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனார். “ஜெ.ஜெயலலிதாவாகிய நான்…” என்று உறுதிமொழியேற்றுப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

காங்கேயம் தொகுதியில் பெற்ற வெற்றியை ரத்து செய்தார். அந்தத் தொகுதியில் ஆர்.எம்.வீரப்பனை போட்டியிட வைத்தார்.

அதற்கு முன்பே, அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். ஆரம்பம் நான்றாகத்தான் இருந்தது.

ஆனால், எதிர்பாராமல் கிடைத்த அசுரத்தனமான வெற்றி… பலவீனமான எதிர்கட்சிகள்… சட்டமன்றத்தில் எதிர்த்துக் கேள்வி கேட்க ஆள் இல்லாத நிலை… ஜெயலலிதாவின் கண்ணை மறைத்தது.

“இனி ஜெயலலிதா தான் தமிழகம்… தமிழகம்தான் ஜெயலலிதா” என தனக்குத்தானே அவர் நினைத்துக் கொண்டார். ஜெயலலிதா சகாப்தம் தொடங்கியது.

அதே நேரத்தில் நடராசனும் சசிகலாவும், “இனி சசிகலாதான் ஜெயலலிதா… ஜெயலலிதாதான் சசிகலா” என்றும் நினைக்க ஆரம்பித்தனர். அங்கிருந்து சசிகலா சகாப்தமும் ஆரம்பமானது. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 41

நடராசனை நாடுகடத்திய ஜெயலலிதா

1991-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்த தி.மு.க ஆட்சியை டெல்லி கலைத்தது.

கருணாநிதியின் தலைமையில், தமிழகத்தில் அன்று அமைந்திருந்தது பலவீனமான ‘மைனாரிட்டி’ அரசாங்கம் அல்ல.

அசுர பலம் கொண்ட ‘மெஜாரிட்டி’ அரசாங்கம். அந்த அரசாங்கம் நடத்திய நிர்வாகத்தில் மிகப்பெரிய ஓட்டைகள் எதுவும் விழவில்லை; சட்டம் ஒழுங்கு மோசமாகக் கெட்டுப்போய்விடவில்லை.

தமிழகத்தில் அந்த அரசுக்கு முன்பும் பின்பும் நடைபெற்ற அரசுகளோடு ஒப்பிடும்போது, 1990-ல் நடைபெற்ற கருணாநிதியின் அரசு நன்றாகத்தான் நடந்தது.

ஆனாலும்கூட, வம்படியாக காரணங்களைக் கண்டுபிடித்து அதை டிஸ்மிஸ் செய்தது டெல்லி. அதற்கு இரண்டே காரணங்கள் மட்டுமே இருந்தன.

முதல் காரணம், ராஜீவ் காந்திக்கு  ஜெயலலிதா கொடுத்த நிர்பந்தம்; இரண்டாவது காரணம், பிரதமர் சந்திரசேகருக்கு ராஜீவ் காந்தி கொடுத்த நிர்பந்தம்.  

இப்படி, தமிழகத்தின் முதல்வர் பதவியை அடையத் துடித்த ஜெயலலிதாவும், இந்தியப் பிரதமர் பதவியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியும் கூட்டுச் சேர்ந்து கருணாநிதியின் ஆட்சியைக் காவு வாங்கினர்.   

நடராசனை நாடு கடத்திய ஜெயலலிதா!

தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதும் ஜெயலலிதா தமிழக அரசியலில் வேகமெடுத்து ஓடத் தொடங்கினார். நடராசன் நிதானமாக வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

சசிகலா எல்லாவற்றுக்கும் சாட்சியாக ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்தார்.

இந்தக் கூட்டணி நடராசன்

அந்தக் காலகட்டத்தில் மூன்று முக்கியத் திட்டங்களைத் தீட்டியது. அதன்படி கட்சியில், “ ‘எங்கும் ஜெயலலிதா… எதிலும் ஜெயலலிதா…’ என்ற ஒற்றைச் சிந்தனை மட்டுமே நிலைக்க வேண்டும், ஜானகி அணியில் இருந்து வந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக களையெடுக்க வேண்டும்,  அவர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும்” என்று தீர்மானமான வேலைகளைத் தொடங்கினார்.

ஆனால், அவற்றைச் நடைமுறைப்படுத்தும்போது  ஜெயலலிதாவுக்குத் துணையாக நடராசன் இல்லை. அவர் இருந்தால் திட்டத்தின் முதல் நோக்கமான, ‘எங்கும் ஜெயலலிதா… எதிலும் ஜெயலலிதா…’ என்பதே நிறைவேறாது; மீண்டும் எல்லா இடத்திலும் நடராசனே இருப்பார் என்பதால் அவரைக் கொஞ்சம் ஒதுங்கி இருக்கச் சொன்னார் ஜெயலலிதா.

‘தனக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை’ என்பதைப்போல் ஒதுங்கிக் கொண்டார் நடராசன்.

ஜெயலலிதா-நடராசன் சேர்ந்து நடத்திய இந்த நாடகத்துக்கு வேறோரு காரணமும் இருந்தது.

‘நடராசனை கொஞ்சம் ஒதுக்கிவைக்கச் சொல்லி ஜெயலலிதாவுக்கு டெல்லி காங்கிரஸ் தலைமையும் ஓலை அனுப்பிக் கொண்டே இருந்தது.

டெல்லியை அப்படிச் சொல்லச் சொல்லி தொல்லை கொடுத்தவர்கள், தமிழ்நாடு காங்கிரஸில் இருந்த சில தலைவர்கள்.

அதற்கு அவர்கள் ஏகமொத்தமாக சொன்ன காரணம், “நடராசன் பக்கத்தில் இருந்தால் ஜெயலலிதாவின் கவனத்தை எந்த நேரத்திலும் திசை திருப்பிவிடுவார்; கூட்டணிப் பேச்சு வார்த்தைகளுக்கு அது மிகப்பெரிய இடையூறாக அமையும்” என்பதே.

அதன் அடிப்படையில் “நடராசனோடு கட்சிக்காரர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என்று அடிக்கடி ஜெயலலிதா அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.

அதனால், ஜெயலலிதாவே அவருடைய சொந்த செலவில் நடராசனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

தமிழகத்தில் இருந்து தலைமறைவான நடராசன் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார்.

அங்கிருந்து அமெரிக்கா சென்று சில நாட்கள் தங்கி இருந்தார்.

தமிழகத்தில் இருந்த ஜெயலலிதா ஒவ்வொரு திட்டமாக நடைமுறைப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் அதற்கு  முதல் பலியாகக் கொடுக்கப்பட்டன.

கட்சியில் இருக்கும் எம்.ஜி.ஆர் இளைஞரணி மட்டும் போதும் என்றார்.

அதுவரை எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களை முன்னெடுத்து நடத்தியவர்கள் கட்சியில் காலாவதியாகத் தொடங்கினார்கள். 

எங்கும் ஜெயலலிதா… எதிலும் ஜெயலலிதா…

நேர்காணல் நடத்தும் ஜெயலலிதா

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம் கூடியது.

ஜெயலலிதாவுக்கு வலதுபுறம் ஒன்பது உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்; இடதுபுறம் ஒன்பது உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால், யாரும் பேசவில்லை.

ஜெயலலிதா மட்டுமே பேசினார். “வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் யாரும் சீட் கேட்கக்கூடாது.

அவர்கள் தொகுதியில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

எந்தத் தொகுதிக்கு யார் வேட்பாளர்கள் என்று தலைமைக் கழகம் அறிவிக்கிறதோ… அவர்கள்தான் உங்களுக்கும் வேட்பாளர்கள்.

அவர்களை எதிர்த்து கழகத்தினரே வேலை செய்வதோ… மனுத்தாக்கல் செய்வதோ கூடாது.

அதுபோன்ற துரோகச் செயல்களில் ஈடுபட்டால், கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள்.

இப்போதே சிலர் தலைக்கனம் பிடித்து அலைகிறார்கள்.

அவர்கள் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அதிகாரிகளை எல்லாம் இப்போதே மிரட்டுகிறார்கள்.

ஏதோ ஆட்சிக்கு இப்போதே வந்துவிட்டோம் என்ற மமதையில் அப்படி நடந்து கொள்கிறார்கள்.

நீங்கள் என்ன செய்தாலும் உடனே நிறுத்த வேண்டும்… அதை மீறி எனக்குத் தெரியாமல் எதுவும் செய்யலாம் என யாரும் நினைக்க  வேண்டாம்.

யார் என்ன செய்தாலும் எனக்கு உடனடியாக தகவல் வந்துவிடும். அவர்கள் கழகத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.

வேட்பு மனு விற்பனை மூலம் ஒரு கோடி ரூபாய் நாம் எட்ட முடியவில்லை.

அதனால், தொகுதியில் நிதி வசூல் செய்ய வேண்டும்.

அதிகம் எல்லாம் இல்லை. தொகுதிக்கு ஒரு லட்சம் தான்.

இது மாவட்டச் செயலாளர்களின் பொறுப்பு. இது கழகம் வைத்திருக்கும் அக்னீப் பரிட்சை” என்றார்.

வேட்பாளர் தேர்வும் சூடுபிடித்தது. ஜெயலலிதாவே தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்து வேட்பாளர் தேர்வை நடத்தினார்.

வழக்கம்போல, “என்ன ஜாதி, நீங்கள் போட்டியிடும் தொகுதியில் எந்த ஜாதிக்காரர்கள்  அதிகம் உள்ளனர், எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கேள்விகளுடன் 1989-க்குப் பிறகு நீங்கள் கழகத்துக்கு செய்த பணி என்ன? என்றும் கேட்டுவைத்தார்.

இப்படி கட்சிக்குள், ‘எங்கும் ஜெயலலிதா… எதிலும் ஜெயலலிதா…’ என்ற சிந்தனை ஆழமாக நிறுவப்பட்டது.

வேட்பாளர் பட்டியல் வெளியானது!

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைக் கலைத்த சந்திரசேகரின் ஆட்சியை மத்தியில் ராஜீவ் காந்தி கலைத்தார்.

1991 மார்ச் 6-ம் தேதி, சந்திரசேகர் அரசாங்கத்துக்கு கொடுத்த ஆதரவை ராஜீவ் காந்தி வாபஸ் வாங்கினார்.

அதில் மத்தியில் இருந்த அந்த அரசாங்கம் கவிழ்ந்தது. இதையடுத்து வெளிநாட்டில் இருந்த நடராசனுக்கு அதற்குமேல் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. 

வேட்பாளர்கள் பட்டியலுடன் வரும் ஜெயலலலிதா

அவசரமாக நாடு திரும்பினார். ஆனால், போயஸ் கார்டன் பக்கமே அவர் வரவில்லை.

தலைமைக் கழகத்தின் திசையைக்கூட திரும்பிப் பார்க்கவில்லை.

எங்கோ இருந்துகொண்டு காய்களை நகர்த்தும் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தார்.

எப்படியோ அவரைக் கண்டுபிடித்து போய் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்ட சிலரையும், “செங்கோட்டையனிடம் போய்க் கேளுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

அதற்கு முன்பே நடராசன் தனது அரசாங்க வேலையை ராஜினாமா செய்திருந்தார்.

அதை அப்போது இருந்த தி.மு.க அரசு ஏற்காமல் இருந்தது.

ஆனால், அது டிஸ்மிஸ் ஆனதும் நடராசனின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

டெல்லியில் இருந்த சுப்பிரமணியசாமியைப் பிடித்து, நடராசனின் ராஜினாமாவை காதும் காதும் வைத்ததுபோல் முடித்துக் கொடுத்தார் ஜெயலலிதா.

ஏனென்றால், நடராசனுக்கு கட்சிக்குள் நிழல் வேலைகள் காத்திருந்தன.

அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிந்தன.

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களை ஏற்கெனவே கலைக்கச் சொல்லியிருந்த ஜெயலலிதா, அந்த மன்றங்களை முன்னின்று நடத்தியவர்களைத் தேர்தலில் முழுமையாக ஓரம் கட்டினார்.

செங்கோட்டையனும் மதுசூதனனும்   மட்டுமே அதில் தப்பிப் பிழைத்தனர்.

ஜானகி அணியில் விசுவாசமாக இருந்து பின் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக் கொண்ட அரசியல் ஜாம்பவான், ஆர்.எம்.வீரப்பனுக்கே சீட் இல்லை என்று மறுத்துவிட்டார் ஜெயலலிதா.

வேடசந்தூர் வி.பி.தணிகாசலம், தாம்பரம் எல்ல.ராஜமாணிக்கம் உள்பட சைதை துரைசாமிக்கும் நோ சீட்.

இதைச் செய்ததன் மூலம் ஜானகி அணியில் இருந்து வந்தவர்களை எல்லாம் முழுமையாக ஓரம் கட்டினார் ஜெயலலிதா.

1991 தேர்தலில் அ.தி.மு.கவில் போட்டியிட சீட் வாங்கியவர்கள் எல்லாம் ஜெயலலிதா, சசிகலா-நடராசனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் மட்டுமே.

ஆனால், நடராசனின் அரசியல் ஆசானாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் பெயர் ஆரம்பத்தில் அந்தப் பட்டியலில்  விட்டுப்போனது.

ஆனால், தன் அரசியல் ஆசானை நடராசன் விட்டுவிடவில்லை.

‘எஸ்.டி.எஸ் இல்லையென்றால், தஞ்சையில் கட்சி தேர்தலில் தோற்றுவிடும்’ என்பதை விளக்கி நூற்றுக்கணக்கில் போயஸ் கார்டனுக்கு கடிதங்கள் வரவழைத்தார்.

சசிகலா அவற்றை  ஜெயலலிதாவின் பார்வைக்குக் கவனமாகக் கொண்டு சென்றார்.

அதையடுத்து, எஸ்.டி.சோமசுந்தரத்தை தொலைபேசியில் அழைத்த ஜெயலலிதா “உங்களுக்கு சீட் உண்டு… போட்டியிடுங்கள்’‘ என்றார்.

எஸ்.டி.சோமசுந்தரம் நெகிழ்ந்து போனார். 

காலில் விழும் கலாசாரம் ஆரம்பம்!

ஜெயலலிதாவின் காலில் விழும் வேட்பாளர்

வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் சென்னை மெரீனாவில் கூடியது.

ராஜீவ் காந்தி வழக்கம்போல தனி விமானத்தில் வந்தார். அந்தக் கூட்டத்துக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆர்.எம்.வீரப்பன் வரவில்லை.

நாவலர் தலைமையுரை ஆற்றினார்.

அந்த மேடையில்தான் ஜெயலலிதா காலில் விழும் கலாசாரம் அப்பட்டமாகத் தொடங்கியது.

சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிமுகம் செய்தபோது, கே.ஏ.கே, மயிலை ரங்கராஜன், தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீதர் தவிர மற்ற அனைவரும் ஜெயலலிதாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.

அதைப் பார்த்த ராஜீவ் காந்தியே கொஞ்சம் அசந்து போனார். அந்த மேடையில் பேசிய ஜெயலலிதா அனுதாப அஸ்திரத்தை முழு ஆவேசத்துடன் எய்தார்.

கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, “என்னை ஒரு பெண் என்று பார்க்காமல் கருணாநிதி சட்டமன்றத்தில் குண்டர்களை வைத்துத் தாக்கினார்.

மீனம்பாக்கத்தில் என்னை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி செய்தார்.

அந்த விபத்தில் சிக்கிய நான் குணமடைந்து வருவதற்குள் அந்த லாரி டிரைவரை அபராதம் மட்டும் விதித்து விடுதலை செய்து கருணாநிதி வழக்கை முடித்துவிட்டார்.

இதுபோன்ற கருணாநிதியின் அராஜகத்தைப் பார்த்துதான் அவரை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் புறக்கணித்தார்கள்.

அவருடைய ஆட்சியும் பறிபோனது. ஆட்சியை இழந்த கருணாநிதி, இப்போது மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்.

அவரைப் புறக்கணிப்பீர்களா… புறக்கணிப்பீர்களா?” என்று முழங்கினார்.

கடற்கரையில் கூடியிருந்த கூட்டம், ‘புறக்கணிப்போம்… புறக்கணிப்போம்’ என்று கோரஸாகத் திரும்பச் சொன்னது.

சொன்னபடி அதைச் செய்தும் காண்பித்தது. அதன் எதிர் வினையை அடுத்து வந்த 5 ஆண்டுகளுக்கும் தமிழகம் அனுபவித்தது.

தொடரும்…
நன்றி : ஜோ ஸ்டாலின் – இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 40

தமிழக அரசு டிஸ்மிஸ்!

“தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்தால் டெல்லியில் ஆட்சி கவிழும்; தமிழகத்தில் ஆட்சி கலைந்தால் டெல்லியில் ஆட்சி பிழைக்கும்” என்று டெல்லியை மிரட்டினார் ஜெயலலிதா. 

தி.மு.க ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று அப்படித் துடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.

அதைப் பயன்படுத்தி ஜெயலலிதாவை வைத்தே, பிரதமர் சந்திரசேகருக்கு பிரஷர் கொடுத்துக் கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி.

ஜெயலலிதா கேட்கிறபடி தி.மு.க ஆட்சியைக் கலைக்க காரணங்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.

காரணங்கள் இருக்கிறது என்று சொல்லி பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுக்களை பட்டியல் போட்டுக் கொண்டிருந்தார் ப.சிதம்பரம்.

ஆட்சி 5 ஆண்டுகளுக்கும் நிலைக்குமா… இடையில் கலையுமா… என்று தெரியாமல் கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார் கருணாநிதி.

கடைசியில் ஜெயலலிதா நினைத்ததே நடந்தது.

வாழப்பாடி வைத்த வெடி!

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஜெயலலிதா

தி.மு.க ஆட்சியைக் கலைக்கும் வேலைகள், 1990 அக்டோபர், நவம்பர் மாதங்களில் வேகம் பிடிக்கவில்லை.

மந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

‘அது நடக்கும்போது நடக்கட்டும்…’ என்ற எண்ணத்தில்தான் ஜெயலலிதாவும் இருந்தார்.

அதனால்தான் அவர் அந்த நேரத்தில் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் போய் ஓய்வெடுக்கப் போனார்.

அதோடு அந்தத் தோட்டத்தின் மையத்தில், பளிங்கு மாளிகை ஒன்றைக் கட்டும் வேலைகளையும் தொடங்கினார்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் உதவியோடு அந்த மாளிகை வேகமாக எழும்பியது. 

அந்தத் திருப்தியில், அங்கிருந்து கிளம்பி பெங்களூரு ஜிண்டால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கக் கிளம்பிவிட்டார்.

இப்படி ஓரளவுக்கு பெரிய குழப்பம் இல்லாமலேயே தமிழகத்தின் அரசியல் சூழல் நகர்ந்து கொண்டிருந்தது.

ஜெயலலிதா தமிழகத்தில் இல்லாத அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்களின் நிறமும் குணமும் லேசாக மாறத் தொடங்கின.

தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டார்.

அவர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றால், தமிழகத்தில் கூட்டணி அரசாங்கம் தான் அமையும்; அதற்கு யார் முதல்வர் என்பதை ராஜீவ்காந்தியும் ஜெயலலிதாவும் கலந்துபேசி பிறகு முடிவு செய்வார்கள்” என்று தெவித்தார்.

இந்தப் பேட்டி ஜெயலலிதாவின் நிம்மதியைக் கெடுத்தது.

ஜிண்டால் மருத்துவமனையில் சிகிச்சையை முடித்துவிட்டு, பெங்களூரு ஜெய மஹால் எக்ஸ்டென்சன் வீட்டில் ஓய்வில் இருந்த ஜெயலலிதாவின் நிம்மதி குலைந்தது.

ஜெயலலிதா கொதித்துப் போனார். நடராசன் துடித்துப் போனார். காங்கிரஸ் கட்சி ஜெயலலிதாவின் கனவை மட்டும் கலைக்கவில்லை… நம் இலட்சியத்தையும் தகர்க்கப் பார்க்கிறது என்று நடராசன் நினைத்தார்.

அதன்பிறகுதான் தி.மு.க-வைக் கலைப்பதற்கான வேலைகளில் தீவிரமாகக் களம் இறங்கினார் ஜெயலலிதா. 

பெண் என்று நினைத்து ஏமாற்றப் பார்க்கிறீர்களா?

பெங்களூரு ஜெய மஹால் வீட்டில் இருந்து, டெல்லியில் இருந்த சுப்பிரமணிய சுவாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயலலிதா,

“என்னிடம் ராஜீவ் காந்தி ஒன்றைச் சொல்கிறார்… தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு நேர் எதிராகப் பேசுகிறார்கள்.

ஒரு சாதரண பெண் என்று நினைத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா… மத்தியில் சந்திரசேகர் அரசாங்கத்துக்கு ராஜீவ் காந்தி என்னிடம் ஆதரவு கேட்டபோது என்ன சொன்னார்?

தமிழகத்தில் நீங்கள்தான் முதல்வர் என்று சொல்லித்தானே என் ஆதரவைப் பெற்றார்.

ஆனால், வாழப்பாடி ராமமூர்த்தி இப்போது அதற்கு நேர்மாறாகப் பேசுகிறார்.

அப்படியானால், நானும் என் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டியது வரும்”

என்று பொறிந்து தள்ளினார்.

ஜெயலலிதாவின் இந்த கோபத்தில் டெல்லி கொஞ்சம் நடுங்கிப் போனது. ஜெயலலிதாவிடம் டெல்லி சரண்டர் ஆனது.

பிரதமர் சந்திரசேகரே ஜெயலலிதாவைச் சந்திக்க சென்னை வந்தார்.

‘ஜெயலலிதாவைச் சந்திப்பதற்காகவே பிரதமர் தமிழகம் வருகிறார்’ என்று அறிவிப்பது நன்றாக இருக்காது என்பதால், ‘காஞ்சி சங்கராச்சாரியாரை சந்திக்கப் பிரதமர் வருகிறார்’ என்று அறிவித்தனர். 

ஜெயலலிதாவை சமாதானம் செய்த சந்திரசேகர்!

பிரதமர் சந்திரசேகர், ஜெயலலிதா

சங்கராச்சாரியாரைச் சந்தித்துவிட்டு, ஜெயலலிதாவைச் சந்தித்த பிரதமர் சந்திரசேகர், “அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தின் முதல்வர் நீங்கள்தான்;

இந்த உறுதியை ராஜீவ் காந்தி என் மூலமாக உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்; அதனால், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று சமாதானம் செய்தார்.

அதில் சமாதானம் ஆனாலும்கூட ஜெயலலிதா அதோடு ஓய்ந்துவிடவில்லை.

“தி.மு.க ஆட்சியை எப்போது கலைக்கப் போகிறீர்கள்” என்று கறாராகக் கேட்டார்.

அதற்குப் பொறுமையாகப் பதில் சொன்ன பிரதமர் சந்திரசேகர்,

தி.மு.க ஆட்சியைக் கலைக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், எந்த அடிப்படையில் கலைக்கச் சொல்கிறீர்கள்.

தமிழகத்தில் சட்டம்-ஓழுங்கு அவ்வளவு மோசமாக இல்லை.

பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஒரு அரசாங்கத்தை அவ்வளவு எளிதாக கலைக்க முடியாது. நான் அட்டர்னி ஜெனரல் ஜி.ராமசாமியை கூடவே அழைத்து வந்துள்ளேன்.

அவரிடம் நீங்கள் ஆலோசனை நடத்துங்கள். அதோடு தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நிறைய நடத்துங்கள்”

என்று சொல்லிவிட்டு மீண்டும் டெல்லிக்கு கிளம்பிச் சென்றார்.

இதையடுத்து டெல்லி கிளம்பிப்போன ஜெயலலிதா, ஜனாதிபதி வெங்கட்ராமனைச் சந்தித்தார்.

அவரிடம் தி.மு.க ஆட்சி மீதான குற்றச்சாட்டுக்களை பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டு வந்தார். 

இரண்டாவது விருந்து… இறுதி எச்சரிக்கை…

ஜெயலலிதா டெல்லியில் இருந்து திரும்பிய சில நாட்களிலேயே, ராஜீவ் காந்தி சென்னை வந்தார். 1991 ஜனவரி 16-ம் தேதி அந்தச் சந்திப்பு நடந்தது.

ராஜீவ் காந்தியும் சங்கராச்சாரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்லிவிட்டுத்தான் வந்தார்.

சென்னையில் விமானத்தைவிட்டு இறங்கிய ராஜீவ் காந்தியை வரவேற்க ஜெயலலிதா மதியம் 2.30 மணிக்கே விமான நிலையம் வந்துவிட்டார்.

வி.ஐ.டி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் விஸ்வநாதனின் ‘கண்டஸா‘ காரில் ஜெயலலிதா வந்திருந்தார்.

விமான நிலையத்தில் இறங்கிய ராஜீவ் காந்தி அங்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், “கருணாநிதி ஆட்சியைக் கலைப்பதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.

அவற்றை எல்லாம் பிரதமரே சொல்லி இருக்கிறார். அதனால், இந்த ஆட்சி கலைக்கப்படுவது உறுதி.

அது எப்போது என்பதை பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

அதுவே ஜெயலலிதாவுக்கு பரம திருப்தியாக இருந்தது. அன்று இரவு ராஜீவ் காந்திக்கு போயஸ் கார்டன் வீட்டில் விருந்து நடந்தது.

அந்த விருந்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, எச்.கே.எல்.பகத், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விருந்தின்போது,

“பிப்ரவரி மாதத்தில் தி.மு.க ஆட்சி தமிழகத்தில் இருக்கக்கூடாது. அதன்பிறகும் தி.மு.க ஆட்சி இருந்தால், மத்தியில் சந்திரசேகர் ஆட்சிக்கு அ.தி.மு.க கொடுக்கும் ஆதரவை மறு பரீசிலனை செய்ய வேண்டியது வரும்”

என்று எச்சரிக்கை தொனியில் ஜெயலலிதா தன் முடிவை தெளிவாக எடுத்துச் சொன்னார். 

கவர்னருக்கு கருணாநிதி கொடுத்த பட்டம் – ‘மாவீரன்’ பர்னாலா!

சுர்ஜித்சிங் பர்னாலா

‘ஆட்சி கலைக்கப்படப் போகிறது’ 1991 ஜனவரி 30-ம் தேதி மதியமே தி.மு.க-வுக்கு தெரிந்துவிட்டது.

காரணம், முதல்நாள் இரவு திடீரென தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவரசமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

அந்தத் தகவல் கருணாநிதிக்கு கிடைத்ததுமே, ‘ஆட்சி கலைக்கப்படும்’ என்பதை அவர் யூகித்துவிட்டார்.

ஜனவரி 30-ம் தேதி ஆலிவர் வீட்டில் அமைச்சரவை சகாக்களுடன் முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார் கருணாநிதி.

அந்த நேரத்தில் திடீரென நியாபகம் வந்தவராய், பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கூட்டத்துக்கு கிளம்பினார்.

அவருடைய சகாக்கள், இந்த நேரத்தில் போய்த்தான் ஆக வேண்டுமா? என்று கேட்டபோது, “நிச்சயம் போய்த்தான் ஆகவேண்டும்… அங்கு நான் பேசுவதன் மூலம் நான் தெரிவிக்கும் கருத்துக்கள் முக்கியமானவை… நான் என்ன பேசப்போகிறேன் என்பதை அங்கு வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் எந்தவித சலனத்தையும் காட்டாமல் நிதானமாகப் பேசத் தொடங்கிய கருணாநிதி, “நான் இப்போது முதல் அமைச்சரா? இல்லையா? என்று எனக்கே தெரியாது.

நான் அந்த நாற்காலியில் இருந்தாலும்… இல்லை என்றாலும்… நான் உங்களோடுதான் இருப்பேன். தமிழகத்தின் ஆளுநர் பர்னாலா டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் எதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. டெல்லியில் அவர் இந்த நிமிடம் வரை ஆட்சிக் கலைப்பு கடிதத்தில் கையெழுத்துப் போடவில்லை.

எனவே, அவரை நான் இனிமேல் ‘மாவீரன்’ பர்னாலா என்றுதான் அழைப்பேன் என்றார். 

தமிழக அரசு டிஸ்மிஸ்!

ஜனாதிபதி வெங்கட்ராமனுடன் ஜெயலலிதா

டெல்லியில் தமிழ்நாடு ஹவுஸில் தங்கி இருந்தார் தமிழக ஆளுநர் பர்னாலா. அவரை உள்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் வரிசையாக வந்து சந்தித்தனர்.

“தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான குற்றச்சாட்டுப் பட்டியல் தயாராகிவிட்டது. நீங்கள் அதில் கையெழுத்திட வேண்டும்” என்றனர்.

பர்னாலா அதற்கு மறுத்தார். கடைசிவரை அவர் கையெழுத்துப்போடவில்லை.

“ஆட்சியைக் கலைக்கும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமாக இல்லை” என்று வாதாடிப் பார்த்தார்.

ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் அவர் அந்த அறிக்கையில் கையெழுத்துப் போடாமலே திரும்பிவிட்டார்.

தமிழ்நாடு ஹவுஸில் பணிபுரிந்த தமிழக இணை இயக்குனர் சம்பத் மூலம், ‘ஆட்சி கலைப்பு உறுதி’ என்ற தகவலை கருணாநிதிக்கு தெரியப்படுத்தினார்.

அதன்பிறகு சென்னை கிளம்ப ஆளுநர் பர்னாலா முடிவெடுத்தபோது அவருடைய விமானம் தாமதம் செய்யப்பட்டது.

அவருக்கு பல வழிகளில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஆனால், பர்னாலா எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை.  

கிண்டி கவர்னர் மாளிகைக்கு வந்ததும் கருணாநிதியைத் தொலைபேசியில் அழைத்தார்.

“ நான் என் மனசாட்சிப்படி நடந்துகொண்டேன். என் சம்மதமின்றியே அனைத்தும் நடக்கின்றன” என்று சொன்னார்.

அதே நேரத்தில் டெல்லியில் கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். 

அமர்க்களப்பட்ட போயஸ் கார்டன்… 

தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், நடராசன் வீட்டில் அ.தி.மு.க-வினர் குழுமத் தொடங்கினார்கள்.

டிஸ்மிஸ்க்கு மறுநாள் வெகு அமர்க்களமாக விழித்தெழுந்தது நடராசனின் வீடு.

“அரசியல் பேசுபவர்கள் இங்கு வரவேண்டாம்” என்று அவர் வீட்டுக் கதவில் மாட்டப்பட்டு இருந்த போர்டு மாயமாய் மறைந்தது.

காலையிலேயே தொண்டர்கள், வட்டம், மாவட்டச் செயலாளர்கள் பெரிய பெயரி ரோசப்பூ மாலைகளோடு நடராசனைப் பார்க்க வந்துவிட்டனர்.

நேரம் ஆக ஆக ஆட்டோக்களும் கார்களும் நடராசன் வீட்டைச் சூழ ஆரம்பித்தன.

கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்தே தீருவேன் என்ற நடராசனின் சபதம் நிறைவேறியது.

மாலையில் ஒரு காரில் நான்கு பேருடன் அங்கிருந்து கிளம்பினார் நடராசன்.

அந்தக் கார் போயஸ் கார்டனுக்குப் போனது. அங்கு ஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்ட சந்தோஷத்தில் இருந்தார். 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்