ஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 6

மாவோவின் செஞ்சேனை  போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம்!

தாய்நாட்டை விடுவித்து  விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.

அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது. அரசியல்துறையினால் மக்கள் மத்தியில் பல வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.

அரசியல்துறையின் ஒரு பிரிவாகச் செயற்பட்டு வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரை பயன்படுத்தி தாய், சேய் போசாஷாக்கு நிலையங்களும் மாணவர் விடுதிகளும் முன்பள்ளிகளும் குழந்தைகளுக்கான பகல் பராமரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டன.

இவற்றை விடவும் இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியிருப்புகளும் ஏற்படுத்தப் பட்டன.

வன்னியில் செயற்பட்டுக்கொண்டிருந்த  ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமே ஒரு வழிகாட்டும் அமைப்பாகச் செயற்படவேண்டும் என்பதில் அரசியல்துறை உறுதியாக இருந்தது.

இதனைவிட மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் எனப் பல பிரிவுகள் மக்கள் மத்தியில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தாலும் போதிய அளவு நிதி வசதி இல்லாத காரணத்தால் எந்த வேலைகளையும் முழுமையாகச் செய்ய முடியாதிருந்தது.

இதனால் இயக்கத்திற்கு ஆளணி சேர்ப்பது மட்டுமே அரசியல்துறையின் பிரதான வேலைத் திட்டமாக அமைந்தது.

மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த ‘போரெழுச்சிக் குழு’ கட்டமைப்பின் மூலமாக மக்களுக்குத் தற்காப்புப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

63-makkal-padai 'மாவோவின் செஞ்சேனை' போன்றதொரு மக்கள் படையாக  'எல்லைப்படை' உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6) 63 makkal padaiகிராமிய மக்கள், வர்த்தகர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயிற்சி வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதே தருணத்தில் ‘எல்லைப்படை’ என்கிற ஆயுதப் பயிற்சி பெற்ற மக்கள் படையும் உருவாக்கப்பட்டது.

வன்னியில் முதன் முதலாகத் ‘துணைப்படை’ என்கிற மக்கள் இராணுவக் கட்டமைப்பை உருவாக்கியவர் லெப். கேணல் அன்பு ஆவார்.

இவர் 1990-93 காலப் பகுதிகளில் மணலாறு போராளிகள் மத்தியிலும், முள்ளியவளை, குமுழமுனை, அலம்பில், கொக்குளாய், கொக்குத் தொடுவாய், நாயாறு பகுதி மக்களிடமும் மிகுந்த அன்பையும் அபிமானத்தையும் பெற்றிருந்தார்.

மணலாற்றுப் பெருங்காட்டுப் பகுதியின் உட்பாதைகள் பற்றிய அறிவைத் தனது விரல் நுனியில் வைத்திருந்த அன்பு, தேர்ந்தெடுத்த சில மக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து..,

மணலாறு காட்டுப் பகுதிகளில், தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போராளிகளுக்குத்  துணைப் படையினராகவும்  பாதை காட்டிகளாகவும் பயன்படுத்தியதுடன் சில இடங்களில் அவர்களுடைய அணிகளைப் பாதுகாப்புப் பணியிலும் நிறுத்தியிருந்தார்.

women7 'மாவோவின் செஞ்சேனை' போன்றதொரு மக்கள் படையாக  'எல்லைப்படை' உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6) women7

இப்படிச் செயற்பட்ட மக்களில் பலர் தாக்குதல் நடவடிக்கைகளில் தமது உயிர்களையும் இழந்திருந்தனர். அவர்களுக்குக் களத்தில் வீரச் சாவடையும்  போராளிகளுக்கான மரியாதையை வழங்கியதுடன், அவர்களுடைய குடும்பங்களுக்கும் ஒரு சிறிய உதவித் தொகை வழங்குமாறு தலைமையிடம் வற்புறுத்தினார்.

இயக்கத்தின் வரலாற்றிலேயே   முதன்முதலாக  மக்கள் படையணியை எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் அவர்களின் மனமுவந்த பங்களிப்புடன் கட்டியெழுப்பிய வீரத் தளபதியான லெப்.கேணல் அன்பு 1993 பூநகரிச் சமரில் உயிரிழந்தார்.

தமிழ்- சிங்கள எல்லைப்புறக் கிராமங்களில் இருந்த தமிழ் மக்களின் உயிர்கள் பெருமளவில் பாதுகாக்கப்படுவதிலும், இராணுவத்தின் துணையுடனான சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நைப்படுத்தி, நிறுத்துவதிலும் அவர் ஆற்றிய பங்கு தமிழ் மக்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

மீண்டும் ஜயசிக்குறு காலத்தில் வன்னிப் போர்க்களத்தில் அப்படியான ஒரு மக்கள் இராணுவக் கட்டமைப்பை உருவாக்கு வதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அது ‘எல்லைப்படை’ என்ற பெயருடன் அரசியல்துறையின் கீழ் தனி நிர்வாகப் பிரிவாக இயங்கியது. எல்லைப் படையில் பங்கு கொண்டோருக்கான பயிற்சி முகாம்களும் அமைக்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வு புதுக் குடியிருப்பு மாலதி மைதானத்தில் ஒரு சிறப்பு நிகழ்வாகப் புலிக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டிருந்தேன்.

எனது கண்களையே நம்ப முடியாத அளவிற்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பெருவெள்ளமாக அணிவகுத்து நின்றனர்.

760_1452298894_karunaai 'மாவோவின் செஞ்சேனை' போன்றதொரு மக்கள் படையாக  'எல்லைப்படை' உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6) 760 1452298894 karunaai

அப்போதைய ‘ஜெயசிக்குறு’ களமுனையின் முன்னணித் தளபதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த கருணா அம்மான் புலிக் கொடியேற்றி அந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந் தார்.

அரசியல்துறையின் வேலைத் திட்டத்தின்படி புரட்சியாளர் ‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் இராணுவத்தைத் தலைவர் பிரபாகரனது இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருக்கும்படி கட்டியெழுப்பு வதே நோக்கமாயிருந்தது.

மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கான சகல வழிகளும் அடைக்கப்பட்டிருந்த அன்றைய யுத்த சூழலில் விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் வார்த்தைகளுக்கு இணங்கி நடப்பதைத் தவிர மக்களுக்கு வேலைத் திட்டங்களில் மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தேன்.

மிகக் குறைந்த அளவிலான மக்கள் தொகையினரே உண்மையான விருப்பத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டு எல்லைப் படையாகக் களமுனைகளுக்குச் செல்லத் தயாராகவிருந்தனர்.

பெரும்பான்மையான மக்கள் தவிர்க்க முடியாத நிலைமையில் விருப்பத்துடன் ஈடுபடுவதாகக் காட்டிக் கொண்டு செயற்பட்டனர்.

இன்னும் சிலர் நேரடியாகவே முரண்பட்டு, விமர்சித்துத் தூற்றினார்கள். ஆனாலும் பல இறுக்கமான கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் செயற்படுத்தியதன் மூலம் அனைவரும் பயிற்சி எடுத்தேயாக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

இயக்கத்தின் ஆளணி பற்றாக்குறையான நிலைமையில் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் எல்லைப் படையை நிறுத்தி வைப்பதன் மூலம் அப்பிரதேசங்களைப் பறிகொடுக்காமல் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும்,

அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் உளவியல் ரீதியான நெருக்கடியைக் கொடுக்கவும் முடியும் எனவும் இயக்கத் தலைமை எதிர்பார்த்தது.

இதனைவிடச் சர்வதேசத்திற்கு விடுதலைப் புலிகளின் போராட்டமானது ஒரு மக்கள் போராட்டம் என்பதாகக் காண்பிக்கும் நோக்கமும் இச்செயற்திட்டத்தில் உள்ளடங்கியிருந்தது.

மக்கள் அனைவரும் பயிற்சி மைதானத்திற்கு வந்தேயாக வேண்டும். வயது முதிர்ந்தவர்கள், இருதய நோயாளிகள், அங்கவீனமானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார் ஆகியோருடன் வேறு பாரதூரமான மருத்துவக் காரணங்கள் உள்ளோர் எனக் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே விலக்களிக்கப்பட்டிருந்தது.

ஏனைய அனைவரும் பயிற்சி எடுத்து அதனை உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த அட்டை இல்லாதவர்கள் கிராம அலுவலர்களிடம்கூட எவ்விதமான உதவிகளையும் பெற்றுக்கொள்வது தடுக்கப்பட்டிருந்தது.

வேறு வழியின்றி மக்கள் அனைவரும் பயிற்சிகளில் பங்கெடுக்கத் தொடங்கினர்.

f-11 'மாவோவின் செஞ்சேனை' போன்றதொரு மக்கள் படையாக  'எல்லைப்படை' உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6) f 11தமிழினியின் தாய்

எனது தாயாரும்கூட ஒரு மண்வெட்டிப் பிடியை எடுத்துக்கொண்டு மாலை நேரங்களில் அருகிலிருந்த மைதானத்திற்குப் பயிற்சிக்குச் சென்று வந்தார்.

அவருக்கு இரண்டு முழங்கால்களிலும் வீக்கமும் நோவும் இருந்த காரணத்தால் மைதானத்தைச் சுற்றி நடக்கும்படி தனது பயிற்சியாசிரியர் கூறியதாகச் சொன்னார்.

அன்றிருந்த நிலைமையில் வன்னியின் பல முனைகளிலும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வன்னிப் பெருநிலப்பரப்பு யுத்தத்தினால் சுருங்கிப் போயிருந்தது.

மக்கள் யுத்தத்தின் அகோரத்தினுள் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

ஏ9 வீதிக்கு மேற்காக மல்லாவியைப் பிரதானமாகக்கொண்டு, துணுக்காய், யோகபுரம், கல்விளான், தேறாங்கண்டல், ஜெயபுரம், வெள்ளாங்குளம், முழங்காவில், கிராஞ்சி, பிரமந்தனாறு, உடையார்கட்டு, தேராவில், பேராறு, கற்சிலைமடு, கேப்பாப்பிலவு, குமுழமுனை, அளம்பில் ஆகிய பிரதேசங்களிலும் மிக நெருக்கமாகச் சிறு குடிசைகளின் கீழும், தறப்பாள் விரிப்புகளின் கீழும் வாழ்விடங் களை அமைத்திருந்தனர்.

புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினரால் நடாத்தப்பட்ட ஓரிரு சர்வதேச தொலைத்தொடர்பு நிலையங்களைத் தவிர மக்களுக்கு வெளியுலகத்துடன் தொடர்பு கொள்வதற்கு வேறு எவ்விதமான வழிகளும் இருக்கவில்லை.

Makkal Padai 'மாவோவின் செஞ்சேனை' போன்றதொரு மக்கள் படையாக  'எல்லைப்படை' உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6) Makkal Padaiஇள வயதிலுள்ளவர்கள் வன்னியை விட்டு வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்பட்டிருந்தது.

உயர் கல்வி கற்பதற்கான பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவர்கள், திருமணம் நிச்சயிக்கப் பட்ட பெண்கள் திருமணக் காரணங்களுக்காகவும் மற்றும் மக்கள் மேலதிக வர்த்தக, மருத்துவக் காரணங்களுக்காகவும் போதிய ஆதாரங்களைக் காட்டிப் புலிகளின் புலனாய்வுத் துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியேறக் கூடியதாக இருந்தது.

ஆனாலும்கூட, பணவசதி படைத்தவர்கள் தமது வீடுகளையும் காணிகளையும் ஏனைய சொத்துக்களையும் இயக்கத்திடம் ஒப்படைத்துவிட்டுக் குடும்பத்துடன் வெளியேறினார்கள்.

புலிகளின் பயண அனுமதி கொடுக்குமிடங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் பற்றி மக்களிடம் ஏராளமான விமர்சனங்கள் இருந்தன. மக்கள் மத்தியில் வேலைசெய்யும் போராளிகளாகிய நாம் பல சந்தர்ப்பங்களில் மக்கள் கோபத்துடன் எம்மிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திண்டாட வேண்டிய நிலைக்கு உள்ளானோம்.

ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்திருந்த இயக்க நிர்வாகங்களின் நடைமுறைக் குறைபாடுகள் இயக்க உறுப்பினர்களாகிய எமக்குத் தெரிந்திருக்கவில்லை.

மக்களுடைய கேள்விகளையும் சந்தேகங்களையும் பொறுப்பானவர்களிடம் தெரிவித்து விளக்கம் கேட்டபோது, இயக்கத்தின் இரகசிய வேலைகளுக்காகக் குறிப்பிட்ட சில மக்களைப் புலனாய்வுத்துறையினர் கொழும்புக்கு அனுப்புவதாக எமக்குக் கூறப்பட்டது.

அதில் உண்மைகளும் இருந்தன. ஆனால் அத்தகைய ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு பல வசதி படைத்தவர்களும் வெளியேறிச் சென்றிருந்தனர்.

இத்தகைய நிர்வாகத் தவறுகள் எம்மைவிட மக்களுக்கு அதிகமாகத் தெரிந்திருந்தது. அதனால் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புகளின் மீது மக்களுக்குக் கசப்புணர்வும் கோபமும் ஏற்பட்டது.

“நாட்டின் விடுதலைக்காக இன்னும் கொஞ்சக் காலத்திற்கு இந்த நெருக்கடிகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள், நாம் விரைவில் நாட்டை வென்றுவிடுவோம்.

நமது தலைவர் உங்களுடைய கஷ்டங்களுக்கு விரைவில் ஒரு முடிவு கட்டுவார்” என மக்களின் மனக் குமுறல்களுக்கு நாம் தற்காலிக மருந்து தடவி ஆறுதலைக் கூறினாலும் இயக்கத்தின் சில நடவடிக்கைகளும் முடிவுகளும் போராளிகளான எமக்குப் புரியாத புதிராகவும் மனக் குழப்பம்  ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தன.

Thalaivar-01 'மாவோவின் செஞ்சேனை' போன்றதொரு மக்கள் படையாக  'எல்லைப்படை' உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6) Thalaivar 01

எத்தனையோ இடப்பெயர்வுகளையும்  இழப்புக்களையும் சந்தித்த, அன்று வன்னியிலிருந்த சாதாரண ஏழை மக்களே எல்லைப் படைகளாகவும் போராளிகளாகவும் களமுனைகளில் உயிர் இழந்து கொண்டிருந்தனர்.

ஆனாலும் மக்களை நேசிக்கும் தலைவர் பிரபாகரன் அந்த மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பார் என்ற எமது திடமான நம்பிக்கையிலிருந்து போராளிகளாகிய நாம் சிறிதும் விலகாதிருந்தோம்.

என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம் மல்லாவி பிரதேசத்தில் எனக்கு ஏற்பட்டது. ஆட்சேர்ப்புப் போராளிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவி பயிற்சிக்கும் அனுப்பப்பட்டுவிட்டார்.

ஒருநாள் எமது முகாமுக்கு அந்தப் பெண்ணின் தந்தை வந்திருந்தார். அவர் ஏனைய பெற்றோர் களைப் போல் போராளிகளை ஏசவோ அல்லது தமது மகளைத் தந்துவிடும்படி எம்மிடம் அழுது மன்றாடவோ இல்லை.

அவரது இரு கால்களும் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியின் உதவியுடனே வந்திருந்தார். இயக்கத்தின் சார்பில் நான்தான் அவரை எதிர்கொள்ள வேண்டிய நிலை.

அந்தத் தகப்பன் சொன்னார் “தங்கச்சி, நான் பிச்சைக்காரன். நாளாந்தம் கிடைக்கிற வேலைகளைச் செய்து பிச்சைக் காசு மாதிரி சேர்த்துத் தான் என்ர மகளைப் படிப்பிச்சனான், மகள் போராடப் போனது எனக்குக் கவலையில்லை.

போகட்டும், ஊரோட ஒத்ததுதான் எனக்கும்.

ஆனால் நாளைக்கு வெளிநாடுகளில இருந்து டொக்டரா எஞ்சினியரா படித்த பபோகட்டும், ஊரோட ஒத்ததுதான் எனக்கும்.

ஆனால் நாளைக்கு வெளிநாடுகளில இருந்து டொக்டரா எஞ்சினியரா படித்த புத்திசாலிகளாக ஆட்கள் வந்து இறங்கும்போது, நாட்டுக்காகப் போராடின என்ர மகளும் என்ர குடும்பமும் அவையளுக்கு முன்னால படிக்காத பிச்சைக்காரர்களாய்த்தானே நிற்கப் போறம்.

தமிழினி

தொடரும்..

நன்றி : இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s