ஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 11

தலைவரை முதன்முதலாக சந்தித்தோம்: “அண்ணா எங்களைப் பயிற்சி எடுப்பதற்கு அனுப்புங்கள்” என ஒருமித்த குரலில் எல்லோரும் பாடினோம்

இயக்கத்தில் சேர்ந்த பிற்பாடு இயக்கத்தின் கட்டுப்பாடுகள்.

• “இனிமேல் இயக்கம்தான் உங்கட குடும்பம், இங்க இருப்பவர்கள்தான் உங்கட உறவுகள், அம்மா, அப்பா எல்லாமே. எங்களுக்குத் தலைவர்தான்.
• இயக்கப் போராளிக்கு இருக்க வேண்டிய முதலாவது பண்பு கட்டளைக்குக் கீழ்ப்பணிதல்.”

• இயக்கத்தில் சேர்ந்த பின்னர் சொந்தப் பெயருக்குப் பதிலாக இயக்கப் பெயர் சூட்டப்பட்டது.

• இயக்கப் பெயர் சூட்டப்பட்ட கணத்திலிருந்து சொந்தப் பெயர் பாவிக்கக் கூடாது எனவும், மறந்தும் பாவித்தால் தண்டனைக்குள்ளாக வேண்டியிருக்கும்

ஆயுதப் பயிற்சி பெற்ற அரசியல் போராளி எனது மாலைநேர வகுப்பு முடிந்ததும் வழக்கம்போல வீடு திரும்பாமல், நான் இயக்கத்தில் இணைந்துகொண்டதை எப்படியோ அறிந்து கொண்ட எனது மாமா, அம்மா, தாத்தா அனைவரும் கனகபுரம் பெண் போராளிகளின் முகாம் வாசலில் வந்து நிற்பதாக எனக்குச் சொல்லப் பட்டது.

பொறுப்பாளர் அக்கா என்னிடம் “நீங்கள் போய் அவர்களுடன் கதைத்துவிட்டு வாருங்கள்” என அழைத்தார். ஆனால் நான் போகவில்லை.

எனது இலட்சிய வேட்கையைத் தமது பாசத்தால் பலவீனப்படுத்தி என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்களோ என்று நினைத்தபோது அவர்களை எதிர்கொள்ளப் பயமாக இருந்தது.

அவர்களுக்காக நான் எழுதிய கடிதத்தைக் கொடுத்துவிடும்படி பொறுப்பாளர் அக்காவிடம் கூறினேன்.

என்னைத் தோளிலும் மார்பிலும் சுமந்து வளர்த்து ஆளாக்கிய அந்த அன்புத் தெய்வங்களின் முகத்தையோ, அவர்கள் எனக்கு முன்பாகக் கண்ணீர் வடிப்பதையோ காண்கிற துணிச்சல் எனக்கு இருக்கவில்லை.

நான் தனிமையில் சென்று குமுறிக் குமுறி அழுதேன். நான் பிறந்ததிலிருந்து ஒரு நாளேனும் என் குடும்பத்தை பிரிந்திருக்கவில்லை. திடீரென ஒரேயடியாக அவர்களை பிரிந்து செல்வதை எண்ணித் துடித்தேன்.

என்னைப் போலவே அங்கிருந்த அனைவரும் தமது குடும்பத்தினரைப் பிரிந்து நாட்டுக்காக வந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கியதால் எனது துயரத்தை அடக்கி என்னை நானே திடப்படுத்திக்கொண்டேன்.

மறுநாள் இரவு வன்னி மாவட்ட மகளிர் அரசியல் பொறுப்பாளர் எங்களைச் சந்திப்பதற்காக வந்திருந்தார். “இயக்கமெண்டால் கஷ்டம், கஷ்டமெண்டால் இயக்கம்” எனக் கூறியவாறு பேசத் தொடங்கியவர், மிக நீண்ட நேரமாகப் புதிய போராளிகளான எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

“இனிமேல் இயக்கம்தான் உங்கட குடும்பம், இங்க இருப்பவர்கள்தான் உங்கட உறவுகள், அம்மா, அப்பா எல்லாமே. எங்களுக்குத் தலைவர்தான்.

இயக்கப் போராளிக்கு இருக்க வேண்டிய முதலாவது பண்பு கட்டளைக்குக் கீழ்ப்பணிதல்.” இவ்வாறாகப் பல முக்கியமான அடிப்படை விஷயங்கள் பற்றியெல்லாம் விளக்கமளித்தார்.

அதன்பின்னர் எமது சொந்தப் பெயருக்குப் பதிலாக இயக்கப் பெயர் சூட்டப்பட்டது. எனக்கு அன்று சூட்டப்பட்ட பெயர் சந்திரிகா.

அந்தக் கணத்திலிருந்து சொந்தப் பெயர் பாவிக்கக் கூடாது எனவும், மறந்தும் பாவித்தால் தண்டனைக்குள்ளாக வேண்டியிருக்கும் எனவும் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டது.

லெப்.கேணல் சந்திரன் வன்னி மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்து கொக்காவில் பகுதியில் இராணுவத்துடனான சமரில் காயமடைந்து மருத்துவச் சிகிச்சைக்காகத் தமிழ்நாட்டுக்குப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்டபோது இடைநடுவில் உயிரிழந்துபோனதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர் எனது தாய்வழி உறவினராக இருந்த காரணத்தால் எனக்கு சந்திரிகா என்ற பெயரைப் பொறுப்பாளர் சூட்டியதாகக் கூறினார். தாயார் மற்றும் உறவினர்களுடன் இருநூறுக்கும் மேற்பட்ட புதிய போராளிகள் அங்குச் சேர்ந்திருந்தார்கள்.

புதிய போராளிகள் வந்து சேர்ந்துகொண்டேயிருந்தார்கள். ஆகவே உடனடியாக யாழ்ப்பாணத்திலிருக்கும் பயிற்சி முகாம்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன.

ஆனையிறவு பகுதியில் யுத்தம் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அடிக்கடி உலங்கு வானூர்திகள் வானத்தில் வட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்திக்கொண்டேயிருந்தன.

கனகபுரம் முகாமின் மாமர தோப்புக்குள் அமைக்கப்பட்டிருந்து ‘I’ அடைந்து கிடந்தோம்.

அங்கிருந்தவர்களில் பன்னிரண்டு பேர் வேறாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தோம். எம்மைத் தனியாகச் சந்தித்த பொறுப்பாளர் “நீங்கள் அரசியல் வேலைக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.

இயக்கத்தில நாங்கள் ஒவ்வொருவரும் நினைக்கிற வேலையைச் செய்ய முடியாது. இயக்கம் தீர்மானிக்கிற வேலையைத்தான் நாங்கள் செய்ய வேணும்.

எனவே இந்த அணியுடன் நீங்கள் அனுப்பப்பட மாட்டீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் பிறகு உங்களுக்குச் சொல்லுவேன்” எனக் கூறினார்.

அதன் பின்பு நாம் தனியாகப் பிரிக்கப்பட்டோம். யாழ்ப்பாணத்திலிருக்கும் பெண் போராளிகளின் பயிற்சி முகாமுக்கு அனைவரையும் ஏற்றிச் செல்வதற்காக மினி பஸ்கள் வந்திருந்தன.

அவர்களுடன் பயிற்சி முகாமுக்கு அனுப்பப்படாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தேன்.

மறுநாள் எமக்குப் புதிய சீருடைகள் தரப்பட்டன. முதன் முதலாகச் சீருடையும் சப்பாத்தும் அணிந்துகொண்டபோது, ஒரு கம்பீரமும் மிடுக்கும் எனக்குள்ளே புகுந்துகொண்டதை உணர்ந்தேன்.

ஒரு பிக்கப் வாகனத்தில் அனைவரும் ஏற்றப் பட்டு மாங்குளம் காட்டுப் பகுதியில் அமைந்திருந்த முகாமொன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டோம். அங்கு ஒரு மாதமளவில் தங்க வைக்கப்பட்டுச் சில அடிப்படைப் பயிற்சிகள் தரப்பட்டன.

ஆயுதங்களைக் கழற்றிப் பொருத்துவது, ஓட்டம், உடற்பயிற்சி என்பவற்றுடன் பொதுமக்களுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதும் இயக்க வரலாறு, மாவீரர்களின் வரலாறு என்பனவும் கற்பிக்கப்பட்டன.

உண்மையில் எனக்கு இப் பயிற்சிகள் எதுவுமே கடினமானதாக இருக்கவில்லை. அதிகாலை நாலு மணிக்கு நித்திரை விட்டெழும்புவதும், இரவு பத்து மணிக்குப் பின்னர் நித்திரைக்குப் போவதும், நள்ளிரவு காவல் கடமையும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தன.

இதன் பின்னர் வெவ்வேறு பிரதேசங்களிலும் ஏற்கனவே அரசியல்வேலை செய்துகொண்டிருந்த மூத்த உறுப்பினர்களுடன் சேர்த்து அனுப்பப்பட்டோம்.

வவுனியா மாவட்டத்தின் மகிழங்குளம் எனும் கிராமத்திற்கு நான் அனுப்பப்பட்டிருந்தேன். அப்போது அந்தக் கிராமம் அடர்ந்த காடுகளுடன் சூழ்ந்த மக்கள் வாழ்விடமாக இருந்தது.

வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். பெண்கள் குழந்தைகளின் விபரங்களைத் திரட்டினோம். சைக்கிளில் டபுள் ஏற்றி ஓடுவதும், பதிவுகளைக் கொப்பியில் எழுதுவதும்தான் எனது வேலை.

எனக்குப் பொறுப்பாக இருந்த அக்கா, அங்கு ஏற்கனவே அதிகமான மக்களை அறிந்து வைத்திருந்தார். எனக்கு மக்களுடன் பழகுவது மிகவும் மகிழ்ச்சியான விடயமாக இருந்தது.

புதிய கிராமம், புதிய முகங்கள். எம்மை அன்புடன் வரவேற்கும் அந்த எளிமையான மக்களின் முகங்களில் எனது உறவுகளையே கண்டேன்.

நடுத்தர வயதைக் கடந்திருந்த ஒரு தாயார் எமது முகாமில் இருந்தார். அவர் தனது இரண்டு புதல்வர்களைப் போராட்டத்தில் இழந்திருந்தார்.

அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்துகொண்டிருந்த அவர் போராளிகளுடன் மிகவும் அன்பாகப் பழகினார்.

எந்தக் கடினமான வேலைகளையும் சளைக்காமல் செய்வார். அவருக்கிணையாக எமது போராளிகளால்கூட வேகமாகச் சைக்கிள் ஓட்ட முடியாது.

இரவு நேரத்தில் அனைவரும் படுத்திருக்கும்போது, “அன்ரி ஒரு பாட்டு பாடுங்கோ” என்ற எமது வேண்டுகோளை ஏற்று, “பள்ளி செல்லும் பருவத்திலே படையில் சேர்ந்தவர், அவர் துள்ளித் திரியும் வயதினிலே துவக்கை ஏந்தினார்” எனத் தானே எழுதிய கவிதை வரிகளுக்குத் தானே மெட்டமைத்து அழகாகப் பாடுவார்.

வாழ்வின் எத்தனையோ வலிகளைக் கடந்து வந்திருந்த அந்தத் தாயார் தானும் ஒரு போராளியாகிச் செயற்பட்டார்.

நான் சந்தித்த பல பெண் ஆளுமைகளில் அவரும் என் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தார். நாங்கள் எவ்வளவுதான் சிறப்பாக வேலை செய்தாலும் முறைப்படியான அடிப்படை ஆயுதப் பயிற்சி பெற்றிராத காரணத்தால் நாம் முழுமையான உறுப்பினர்களாகக் கணிக்கப்படவோ மதிக்கப்படவோ இல்லை.

இயக்கத்தில் ஒரு உறுப்பினரை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது “நீங்கள் எத்தனையாவது பயிற்சி முகாம்” என்றுதான் முதலில் கேட்பார்கள்.

எங்களிடம் அப்படிக் கேட்கும்போது “இன்னும் பயிற்சி எடுக்கவில்லை” என்று கூற நேரும்போது ஒரு இளக்காரமான பார்வை எம்மீது வந்து விழும்.

அது எமக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது. இயக்கம் தானே எம்மைப் பயிற்சிக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறது என நினைத்துக்கொள்வோம்.

 இரவு நேரங்கள்தான் அதிகப் பிரச்சனைக்குரியதாக இருந்தன. ஒவ்வொருவரும் தனித்தனியாகவே காவல் பார்க்க வேண்டிய நிலையில் எனது காவல் கடமை நேரம் பெரும்பாலும் நள்ளிரவை அண்டியதாகவே இருந்தது.

சரிவர இயக்கப் பழகியிராத ஒரு துப்பாக்கியைச் சுடுவதற்குத் தயாரான நிலையில் ஏந்தியபடி நிற்க வேண்டும். எனக்குச் சிறுவயதிலிருந்தே பேய் பற்றிய பயம் எதுவும் இல்லாதிருந்த போதிலும் பருத்த காட்டு மரங்களும் கும்மிருட்டும் “ஙீ . . . ஙீ” என்ற இரைச்சலும், திடீரெனப் பறவைகள், மிருகங்கள் எழுப்பும் வினோதமான சத்தங்களும் தனிமையும் இனம்புரியாத கலக்கத்தை அடிவயிற்றில் தோற்றுவித்தன.

அம்மம்மா சிறுவயதில் சொல்லியிருந்த பிசாசு, முனிக் கதைகள் வேறு அந்த நேரத்தில் நினைவுக்கு வந்து தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்த தேவாரம், திருவாசகம் எல்லாமே மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

ஆனால் இந்தப் பயத்தையெல்லாம் முகத்திலோ அல்லது எனது நடத்தையிலோ காட்டிக்கொள்வது கிடையாது.

பயத்தை வெளிக்காட்டினால் பயிற்சிக்கு அனுப்பாமல் விட்டுவிடுவார்களோ என்ற சிந்தனையுடன் அது ஒரு தன்மானப் பிரச்சனையாகவும் இருந்தது.

நான் மட்டுமல்ல, அங்கிருந்த போராளிகள் எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வேலைத்திட்ட அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வவுனியா மகிழங்குளத்திலிருந்து மாங்குளத்திற்குச் சைக்கிளில் டபிள் ஏற்றிக்கொண்டு செல்லவேண்டும்.

பாதையின் காடுகளுக்கூடாகச் செல்லும்போது இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கக்கூடும் என்ற நிலையில், முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி மேடு பள்ளமான மண் பாதைகளைக் கடந்து ஓமந்தைப் பகுதியில் ஏ9 வீதியில் ஏறி மாங்குளம்வரை சென்று மீண்டும் உள்வீதிகளுக்கூடாக எமது முகாம் அமைந்திருந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்.

இப்படி கிலோமீற்றர் கணக்காகச் சைக்கிள் ஓட்டுவது ஆரம்பத்தில் கடினமானதாக இருந்த போதிலும் காலப்போக்கில் பழகிப்போனது. இப்படியாக மூன்று மாதங்கள் சென்ற பின் நானும் இன்னொரு போராளியும் திண்ண வேலியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மகளிர் முன்னணி நடுவப் பணியகத்திற்கு அனுப்பப்படுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தோம்.

பொறுப்பாளருக்கு எமது திறமையின் மீது இருந்த நம்பிக்கையோ என்னவோ இடத்தின் முகவரியை மட்டும் தந்து எம்மிருவரையும் தனியாகவே அனுப்பிவைத்தார்.

நான் வீட்டிலிருந்த காலத்தில் பெரியவர்களுடன் யாழ்ப்பாணம் போயிருக்கிறேன். யாழ் பஸ் நிலையமும், நல்லூர் முருகன் கோவிலும், ஜஸ்கிறீம் கடையும் மலாயன் கபேவும் தெரியும்.

இவற்றைத் தவிர வேறு எந்த இடமுமே எனக்குச் சரியாகத் தெரியாது. பூநகரி – சங்குப்பிட்டி வழியாகவே யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஒருவாறு சங்குப்பிட்டிப் பாதையைக் கடந்து மறவன்புலவு வீதிக்கூடாகச் சாவகச்சேரிச் சந்தியை அடைந்தோம்.

என்னுடன் வந்த போராளி தருமபுரத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையார் ஒரு பாடசாலை அதிபர். தாயார் ஆசிரியர். யாழ்ப்பாணத்தில் திண்ணைவேலிக்கு எந்தப் பக்கத்தில் போவது என்று தெரியாமல் நின்ற நிலையில், அவ்வழியாய் வந்த வாகனம் ஒன்றினை மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கையசைத்து மறித்தோம்.

அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் இயக்கப் போராளிகளே இருந்தனர். மிகுந்த மனச் சாந்தியுடன் “அண்ணா திண்ணவேலி அரசியல் பேஸு2க்குப் போக வேணும்” எனக் கூறினோம்.

“ஆ . . . நீங்கள் அரசியல் பிள்ளைகளா? வாங்கோ” என ஏற்றிக்கொண்டார்கள். நாம் போய்ச் சேர வேண்டிய அந்த முகாம் வளாகத்திற்குள்ளேயே கொண்டுபோய் எங்களை இறக்கிவிட்டுச் சென்றனர் அந்த ஆண் போராளிகள்.

பரப்பளவில் பெரியதொரு முகாமாக அது இருந்தது. விடுதலைப் புலிகளின் மகளிர் நிர்வாகத்தைச் சேர்ந்த, பெரிய பொறுப்புகளை வகிக்கும் பல உறுப்பினர்கள் அங்கிருந்தனர்.

பலர் சந்திப்புக்களுக்காக வந்து சென்ற வண்ணமிருந்தனர். எந்நேரமும் பரபரப்பாக அவர்கள் இயங்கிக்கொண்டிருந்தார்கள். வன்னியிலிருந்து அனுப்பப்பட்ட புதிய உறுப்பினர்களாகிய எம்மைச் சந்தித்த பொறுப்பாளர், எம்மைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்து கொண்டதுடன், சில விளக்கங்களையும் தந்தார்.

என்னுடன் வந்த போராளியை வேறு முகாமொன்றிற்கு அனுப்பிவைத்த பின்னர், தனது அலுவலகத்தில் வேலைத்திட்ட அறிக்கைகளைத் மக்கள் முன்னணிப் பொறுப்பாளராகவும் இருந்த மாத்தையா அண்ணருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கைப் பொறுப்பாளராக இருந்த சீனியருக்கு உதவியாளரான என் மீது முடிவேயில்லாத பல வேலைகள் சுமத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாத முடிவில் அனுப்பி வைக்கப்படும் அறிக்கைகளைத் தொகுத்து எழுதுவது இலகுவான பணியாக இருக்கவில்லை.

எல்லா அறிக்கைகளையும் கவனமாகப் படித்துப் பொதுவான தலைப்புகளின் கீழ் அங்கு மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தொகுக்க வேண்டும்.

எனக்குத் தரப்பட்ட இந்த வேலையினால் இயக்கத்தின் அரசியல் பிரிவு பெண் போராளிகள் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களையும் அதுசார்ந்த நடைமுறைப் பிரச்சனைகளையும் என்னால் நன்கு கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் கூட்டங்களில் பெண் போராளிப் பேச்சாளர்கள் பட்டியலில் என்னையும் எமது மகளிர் பொறுப்பாளர் இணைத்துவிட்டார்.

அவர்கள் எம்மிடம் தரும் பட்டியலின்படி கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குக் குறித்த நேரத்திற்குச் சென்று கலந்துகொள்ள வேண்டிய பணியும் எனக்கிருந்தது.

இதனால் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் எனப் பல பகுதிகளுக்கும் செல்ல வேண்டியேற்பட்டது. இயக்க நடவடிக்கைகளில் நீண்டகால அனுபவமும் அறிவும் கொண்ட பல பெரிய பொறுப்பாளர்கள், தளபதிகள், மூத்த உறுப்பினர்கள் மத்தியில் அடிப்படைப் பயிற்சிகூடப் பெற்றிராத என்னைப் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றுமாறு பணித்தார்கள்.

மிகுந்த பயத்துடனும் நடுக்கத்துடனும் நான் உரையாற்றியபோதிலும், உரையாற்ற வேண்டிய கூட்டங்களுக்கேற்ற விதத்தில் எனது பேச்சைத் தயார்படுத்திக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.

அதற்காகச் சமர்களில் விழுப்புண்ணடைந்த மூத்த உறுப்பினர்களிடம் சென்று அவர்களுடைய அனுபவங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தேன்.

புலிகளால் வெளியீடு செய்யப்படும் புத்தகங்கள், பத்திரிகைகளைத் தேடியெடுத்து அனைத்தையும் கவனத்துடன் வாசித்தேன். இத்தகைய ஒரு கூட்டத்தில் எனது பேச்சைக் கேட்ட மாத்தையா அண்ணர் பலத்த ஒலியுடன் கைதட்டி இயக்கப் பேச்சென்றால் இப்படித்தான் இருக்க வேணும் எனப் பாராட்டினார்.

இன்னும் பல மூத்த போராளிகளின் பாராட்டுக்களையும் நான் பெற்றதுடன், மக்களுக்கு ஏற்ற விதமாக அவர்களுக்குப் புரியக்கூடிய முறையில் உரையாற்றுவதற்கு அயராமல் முயற்சித்தேன்.

பிறிதொரு காலத்தில், பல இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் உரையாற்றும் பெரும் பொறுப்பு, இயக்கத்தின் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான் மகளிர் நடுவப் பணியகத்தில் அறிக்கை வேலைகளின் உதவியாளராக இருந்தது, இப்படியான மக்கள் கூட்ட நிகழ்வுகளில் பங்குபெற்று வந்தாலும்கூட, என் மனதில் ஒரு தாழ்வுணர்ச்சி எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.

ஒரு போராளிக்கு மிக அத்தியாவசியமான ஆயுதப் பயிற்சிக்கு நான் அனுப்பப்படாமல் இருந்ததுதான் அத்தாழ்வுணர்ச்சிக்கான காரணம்.

அரசியல் பிரிவில் என்னையொத்த பயிற்சி பெறாத பல போராளிகள் இருந்தார்கள். நான் இருந்த முகாமில் மட்டும் இருபது பேர் வரை இருந்தோம்.

திடீரென ஒருநாள் எமது முகாம் ஒரு முக்கியமான உறுப்பினரை வரவேற்பதற்குத் தயாராகத் தொடங்கியது. எமக்குப் புதிய வெள்ளை சேட்டும், கறுப்பு நீளக் காற்சட்டையும், புதிய சப்பாத்துக்களும் தரப்பட்டன.

அங்கு நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்குத் தேனீர், சிற்றுண்டி பரிமாறும் வேலை எமக்குத் தரப்பட்டிருந்தது. நாங்கள் அதற்கேற்ற வகையில் தயாராகக் காத்திருந்தோம்.

மேலதிகமான தகவல்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இயக்கத்தில் எமக்குத் தேவையற்ற தகவல்களைப் பெற முயற்சி செய்தல் பெரும் குற்றமாகவே கருதப்பட்டது.

சற்று நேரத்தில் பஜரோ வாகனம் ஒன்று வந்து நின்றது. தளபதி சொர்ணமும், அவருடன் சிலரும் வந்து இறங்கினர். அவர்கள் கூட்ட ஏற்பாடுகளையும் சுற்றுப்புறங்களையும் ஆராய்ந்ததுடன் முகாமைச் சுற்றி வளைத்துக் காவல் நிற்கத் தொடங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து இன்னொரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களும் உதவியாளர்களும் இறங்கினார்கள்.

கம்பீரமாகச் சிரித்த முகத்துடன் அவர் வந்து இறங்கியதைக் கண்டு வாயடைத்துப்போன நிலையில் மறைவாக நின்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

அதுவரை பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் அவரைப் பற்றி அறிந்திருந்தோம். இயக்கத்தில் இணைந்தபின் மூத்த போராளிகள் அவரைப் பற்றிச் சொன்ன நிறைய கதைகளைக் கேள்விப்பட்டிருந்தோம்.

ஆனால் நேரடியாக இவ்வளவு அருகில் தலைவரைக் காணமுடியும் என நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை. ஆனையிறவுப் போரிலேயே முதன்முதலாகப் பெண் போராளிகள் பெருந்தொகையில் பங்கு பெற்றிருந்தார்கள்.

ஒரு மாத காலத்திற்கு மேல் நீடித்த அச்சமரில் பெரும் என்ணிக்கையிலான போராளிகள் உயிரிழந்ததுடன் பலர் பலத்த காயமடைந்தும் அங்கங்களை இழந்துமிருந்தனர்.

அங்கவீனப்பட்ட பெண் போராளிகளைச் சந்திப்பதற்காகவே தலைவர் அங்கு வந்திருந்தார். அவர்கள் அனைவருக்குமான தேநீர் உபசரணைகளை நாம் மேற்கொண்டோம்.

அந்தப் போராளிகள் மிகவும் மகிழ்ச்சியாகத் தலைவருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். தமது பொறுப்பாளர், தளபதிகளிடம் காணப்படும் பயம் தலைவரிடம் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

குடும்பத்தில் உரிமையுடன் அம்மா, அப்பாவுடன் பேசுவதுபோல் “அண்ணா அண்ணா” என அழைத்துத் தமது பிரச்சனைகளை அவாகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அங்கவீனமடைந்துவிட்ட அப்பெண் போராளிகளுக்கு ஏற்ற வேலைத் திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்துவதே தலைவரின் அன்றைய சந்திப்பின் நோக்கமாக இருந்தது என்பதை அங்கு நடைபெற்ற உரையாடல்களிலிருந்தும் அதற்குப் பின்னர் நடந்த வேலைத் திட்டங்களிலிருந்தும் உணரக் கூடியதாக இருந்தது.

கூட்டம் முடிந்து தலைவர் புறப்படத் தயாரானபோது, திடீரென எமது பொறுப்பாளரை அழைத்து “மற்றப் பிள்ளைகளையும் கொஞ்சம் கூப்பிடுங்கோ” என்றதும், அதுவரை ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த நாங்கள் நேரடியாகத் தலைவருக்கு முன்னால் போய் நின்றோம்.

அவருடைய முகத்தில் இருந்த மலர்ச்சியைக் கண்டபோது அமைப்பின் மீதான எமது பற்றுதல் இன்னமும் அதிகமாகியது. ஒவ்வொருவருடைய பெயர்களையும் கேட்டுக்கொண்டார்.

சிலருடைய பெயர்கள் ஆங்கிலப் பெயர்களைப் போல இருந்ததை உணர்ந்து, “அர்த்தமுள்ள தமிழ்ப் பெயர்களை இந்தப் பிள்ளைகளுக்கு வைக்கக்கூடாதா? பாருங்கள் மில்லர், டாம்போ, போர்க் என மாவீரர்களது பெயர்கள் உள்ளன.

ஒரு காலத்தில் இவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்து போராடினார்கள் என ஆய்வு நடத்தத் தொடங்கிவிடுவார்கள்” என எமது பொறுப்பாளரிடம் கூறினார்.

அடுத்து எமக்குத் தரப்பட்டுள்ள வேலைகளைப் பற்றி விசாரித்தார். “வேறு என்ன சொல்லுங்கள்” என்று அவர் எம்மிடம் கேட்டதுதான் தாமதம்.

“அண்ணா எங்களைப் பயிற்சி எடுப்பதற்கு அனுப்புங்கள்” என ஒருமித்த குரலில் எல்லோரும் பாடினோம். “ஓகோ . . . பயிற்சிக்கு அனுப்பாமலே உங்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்களா? எனச் சிரித்தபடி, “உங்கள் அனைவரையும் ஒரே அணியில் பயிற்சியெடுக்க அனுப்ப முடியாது.

வேலைகள் பாதிப்படையும். பத்துப் பத்துப் பேராக ஒவ்வொரு பயிற்சி முகாமுக்கும் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன்” எனக் கூறி விடை பெற்றுக்கொண்டார்.

தமிழினி

தொடரும்…

நன்றி : இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s