ஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 16

அன்ரன் பாலசிங்கம் புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா?

• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. காரணம் என்ன??

• இப்ப பாக்கிற ஆக்கள் முகத்தை திருப்பிக் கொள்ளுகினம், அல்லது ஏளனமா சிரிக்கினம். ‘இதுகள் உயிரோட வந்ததுக்கு சயனைட்டைக் கடிச்சிருக்கலாம்’ எனக்குப் பின்னால் இப்பிடியான குரல்களும் கேட்டன.

• இயக்கத்தில் ஆண் பெண் போராளிகளுக்கிடையே காதல், திருமணம் போன்ற உறவுகளுக்கும் அனுமதி இருந்தது.

• வயது வந்த ஆண் போராளிகள் தம்மைவிட மிகவும் வயது குறைந்த பெண் போராளிகளைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர்

FemaleCadres_MartyrsDay05.1

ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்

“இருபது வருசமா இயக்கத்தில இருந்தன். எத்தினையோ சண்டையில காயப்பட்டன், தாக்குதல் படையணிகளை வழிநடத்தவும் துவக்கு தூக்கிச் சுடவும்தான் எனக்குத் தெரியும்.

இனி வீட்டுக்குப் போய் என்ன செய்யப்போறன்” “நான் இயக்கத்தில் இருந்து சீருடையும் போட்டுக்கொண்டு துவக்கோட ஊருக்குள்ள போனபோது எல்லாரும் என்னைப் பார்த்த பார்வையில ஒரு மதிப்பு இருந்தது.

நான் தங்களுக்காகப் போராடப் போனதற்காக சனங்கள் என்னைத் தங்கட வீட்டுப் பிள்ளையாகவே நினைச்சு உறவு கொண்டாடினவையள்.

இப்ப நான் ஊருக்குள்ள போறன். சீருடையில்லை துவக்கில்லை, ஏன் சாதாரணமாக உடுத்துறதுக்கு நல்ல உடுப்பே இல்லை. ஏனென்டால் நான் எனக்கென்று எதுவும் உழைச்சதேயில்லை.

இப்ப பாக்கிற ஆக்கள் முகத்தை திருப்பிக் கொள்ளுகினம், அல்லது ஏளனமா சிரிக்கினம். ‘இதுகள் உயிரோட வந்ததுக்கு சயனைட்டைக் கடிச்சிருக்கலாம்’ எனக்குப் பின்னால் இப்பிடியான குரல்களும் கேக்குது, இப்ப நான் ஒரு செல்லாக்காசு”

“இது அப்ப இயக்கத்தில் இருந்தது. இப்ப ஆமிக்காரரோட வேலை செய்யுது, அங்க போறதுகளுக்கு நல்ல பெயரில்ல” ஏன் இவ்விதமாக இந்தப் பகுதியைத் தொடங்குகிறேன் என என்னை நானே கேட்டுப் பார்த்தேன்.

இதுதானே இன்றைய யதார்த்தமாக இருக்கிறது? பெண் போராளிகளான நாங்கள் ஒருகாலத்தில் வானத்தை வில்லாக வளைக்கக் கனவு கண்டோம்.

இப்போது எல்லாக் கனவுகளும் கலைந்து நிஜத்தின் முற்றத்தில் விழுந்து கிடக்கிறோம். ஆயுதப் போராட்டத்தில் பெண் போராளிகளின் பங்களிப்பும் அர்ப்பணிப்புகளும் எமது சமூகத்தின் சராசரியான மனநிலைக்கும் மீறிய செயற்பாடுகளாகவே அமைந்திருந்தன.

எப்படி விடுதலைப் புலிகள் இயக்கம் தனிச் சமூகமாகத் தன்னைப் பிரம்மாண்டமாக வளர்த்துக்கொண்டு எழுந்து நின்றதோ அது போலவே ஆயுதம் தாங்கிய பெண் போராளிகளும் சமூகத்திலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டுத் தனித்துவமான அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்தார்கள்.

சமூகம் பெண் போராளிகளை விலகி நின்று நம்ப முடியாத அதிசயத்துடன் வேடிக்கைப் பார்த்து வியந்து பாராட்டியது.

makaleer-ltte

தமிழ் அரசியல் தலைமைகளால் முன்மொழியப்பட்ட தனி நாட்டுக்கான போராட்ட வழிமுறையை அதிலிருந்த எல்லா விதமான விமர்சனங்களுடனும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவிருந்தது.

ஆயுதப் போராட்டத்தினால் ஏற்பட்ட புறச்சூழ்நிலையின் தாக்கங்கள் ஆயுதம் ஏந்திய பெண்களையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை சமூகத்தில் ஏற்படுத்தியிருந்தது.

அதனால்தான் பெண்கள் போராடப்போன ஆரம்ப காலத்தில் பெண்களுக்கெதிராகச் சமூகத்திலெழுந்திருந்த வசைபாடல்கள் காலப்போக்கில் அருகி ஒருகட்டத்தில் இல்லாமலே போயிருந்தது.

இன்னுமொரு விடயம் என்னவெனில், தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அதிகம் அடக்குமுறையான கருத்துருவாக்கங்களுக் கூடாகப் பெண்கள் வார்த்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவளுடைய தனிப்பட்ட ஆளுமையின் வீரியம் குடும்பக் கட்டமைப்புக்குள்ளே நிரூபிக்கப்பட்டே வந்துள்ளது.

அதிகம் வீட்டுக்கு வெளியே போகாத, படிப்பறிவில்லாத பெண்களாக இருப்பினும் குடும்பத்தில் அவர்களுக்கிருந்த அதிகாரமும் சேமிப்புப் பொருளாதாரமும் அவசர காலங்களில் குடும்பத்தின் தாங்குசக்தியாகப் பெண்களைப் பலப்படுத்தியிருக்கிறது.

சாதாரண மனிதருக்குரிய சராசரி உரிமைகள்கூட மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில், உச்சமான சகிப்புத் தன்மையோடு பிரச்சனைகளுக்குத் தாக்குப்பிடித்து வாழும் வலிமையான மனப்பாங்கு பெண்களுக்குள் விருத்தியாவதற்கும், பெண்கள் மீதான அடக்குமுறைகளே காரணமாக அமைந்திருக்கின்றன.

இதனுடைய நீட்சியாகவே இனத்தின் விடுதலைக்காக ஆயுதப் போராளிகளாகவும் அவர்கள் போராட்டத்தின் சென்ற தடங்களையும் கடந்தே தமிழ்ப் பெண்கள் போராட்ட அரசியலுக்குள் பிரவேசித்திருந்தார்கள்.

இதிலிருக்கும் கசப்பான உண்மை எதுவென்றால் பெண்களின் அறிவு மற்றும் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்துவதை விடவும் ஆயுதமேந்திப் போராடுவதன் மூலம் சமூகத்தில் எமது நிலையை வலுப்படுத்துவது தொடர்பில் அதிகம் சாதித்துவிட முடியும் எனப் பெண்களான நாங்களே எமக்குக் கற்பிதம் செய்து கொண்டதுதான்.

எனது பாடசாலைக்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெருவளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் களமுனைகளில் வீர சாதனைகளையும் உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்ட சூழ்நிலைகள் காரணமாக இருந்தாலும், ஒருபெண் என்கிற நிலையில் எனது குடும்பத்தினதும் என்னைச் சூழ்ந்திருந்த சமூகத்தினதும் பெண்ணியக் கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக் கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக் கருதினேன்.

நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப் பருவத்தில் ஒரு வேகமும் துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர அரசியல், சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை என்றே கருதுகிறேன்.

1989-92 காலப் பகுதியில் ஆயிரக்கணக்கில் பெண் போராளிகள் இயக்கத்துடன் இணைந்துகொண்டார்கள்.

ஒரே காலப் பகுதியில் தலா முந்நூறு பெண் பயிற்சியாளர்களைக் கொண்ட அடிப்படை ஆயுதப் பயிற்சி முகாம்கள் இவ்விரண்டாகவும் நடாத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் பொலிகண்டியில் சுகி பயிற்சி முகாம், மணலாறு காட்டுக்குள் ஜீவன், கஸ்ரோ பயிற்சி முகாம்கள், தென்மராட்சியில் கிளாலி சோதியா பயிற்சி முகாம், திலகா பயிற்சி முகாம், இதனைவிட 1992 இல் சிறுத்தைப் படையணி, கடற்புலி மகளிர் அணி எனப் பெண் போராளிகளின் படைப் பெருக்கம் உலகில் வேறெங்குமே இல்லாத வகையில் புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்டிருந்தது.

பெண்கள் ஆயுதப் பயிற்சி பெற்றபோது அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்தபோதிலும் அவர்களுடைய அடிப்படைச் சிந்தனைகளில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குறியானது.

குடும்பம் என்கிற அமைப்புக்குள்ளிருந்து வெளியே வந்து இயக்கம் என்கிற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட புலிப் பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டார்கள் எனக் கூறிவிட முடியாது.

எப்படி ஒரு கட்டுக்கோப்பான குடும்பப் பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ அதே போலக் கடினமான இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம்.

ltte-women-brigade-with-leader

வரிச்சீருடை அணிந்து, கையில் ஆயுதத்தை ஏந்தி நிற்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் மனநிலை முற்றிலும் வித்தியாசமானது.

என்னை நானே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையும், பிறந்ததிலிருந்தே அனுபவித்து வந்த சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து மீண்டு தன்னைத்தானே புதிதாகத் தரிசிக்கும் சுதந்திர உணர்வும், கடமைகள், பொறுப்புகள் தரப்படும்போது சுயமான முடிவுகளை எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதும்,எல்லாவற்றிற்கும் மேலான அர்ப்பணிப்பு உணர்வுமாக ஒரு பெண் போராளிக்குள் ஏற்படும் இயல்பு மாற்றமானது அவளது வாழ்வில் ஏற்படும் முக்கியமான அம்சமே.

சீனத்தின் செஞ்சேனையிலும் பலஸ்தீனத்திலும் தெலுங்கானாவிலும் இணைந்து போரிட்ட ஆயுதப் பெண்கள் படைத்த வீர வரலாறுகளைப் போன்று ஈழப் பெண்களாகிய நாமும் படைப்போம் என்ற உணர்வே கடினமான ஆயுதப் பயிற்சியையும் எதிர்கொள்ள எம்மைத் தூண்டியது.

எனினும், இத்தகைய உணர்வுகள் தற்காலிக அனுபவங்களாக இல்லாமல் ஒரு பண்பு மாற்றமாக உருவெடுப்பதற்குரிய வழிவகைகள் இயக்கத்திற்குள் நடைமுறையில் இல்லாமல் போனதுதான் அபத்தமானது.

பெண் விடுதலைக்குரிய தீர்க்கமான கொள்கைத் திட்டங்கள் எவையும் எங்களிடம் இருக்கவில்லை. பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதம் ஏந்துவதால் சமூகத்தையே நாம் மாற்றிவிடலாம் எனக் கனவு கண்டோம்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவெனில், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால் போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை.

தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனேயே முடிந்தும் போனது.

“கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளில் பெண்கள் மேம்படுவதும், ஆண் பெண் பாலியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அவர்களுடைய மனிதம் பரஸ்பரம் மதிக்கப்படுவதும்தான் பெண் விடுதலையைச் சாத்தியமாக்கும்” இயக்கத்தின் தலைவரால் மகளிர் தினங்களில் விடுக்கப்பட்ட அறிக்கைகளில் பெண் விடுதலை பற்றிய கருத்தை அவர் பல விதங்களில் விபரித்திருக்கிறார்.

அரசியல்துறை மகளிர் பிரிவினுடைய பணிகளாகச் சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பதும் இன்னும் பரந்துபட்ட ரீதியில் சமூக மாற்றத்திற்காக உழைப்பதும் என்பனவாகவே இருந்தன.

இதன் அடிப்படையில்தான் அரசியல் மகளிர் பிரிவின் வேலைத்திட்ட அலகுகளும் பிரிக்கப்பட்டிருந்தன.

ஆனாலும் நடைமுறையில் சாத்தியமானது என்னவோ இயக்கத்திற்குப் புதிய போராளிகளை இணைப்பதும், பெண்களுக்கான குறிப்பிட்ட சில வேலைகளை மாத்திரம் செய்ய முடிந்ததுமேயாகும்.

ஏனெனில் இயக்கத்தின் முழுக் கவனமும் மொத்த வளங்களும் யுத்தத்தில் நோக்கியே திருப்பப்பட்டிருந்தன. 1999 வன்னி யுத்தம் மிக உக்கிரமடைந்திருந்த காலப் பகுதியாக இருந்தது.

புதிய போராளிகளை இயக்கத்திற்கு இணைக்கும் வேலைகளுக்காக அரசியல் துறையில் கொள்கை முன்னெடுப்புப் பிரிவு இயங்கியது.

அதற்கு ஒரு மூத்த ஆண் போராளி பொறுப்பாக இருந்தார். அவருடன் சேர்ந்து ஆண்-பெண் போராளிகள் செயற்பட்டனர். மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு இளைஞர்களையும் யுவதிகளையும் போராளிகளாக இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது.

இதற்காக வீதி நாடகங்கள், கருத்தரங்குகள், வீரமுரசு மேடை நிகழ்வுகள் என்பவற்றுடன் தனிநபர் சந்திப்புகளும் நடாத்தப்பட்டன. அதற்குப் பேச்சாளராகச் செல்வது எனக்குரிய மேலதிகமான வேலையாகத் தரப்பட்டிருந்தது.

பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனக் கருத்துக்களை நான் கூறியிருக்கிறேன்.

ஆனாலும் ஆயுதப் போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை.

இயக்கத்தில் பெண் போராளிகளின் கடமைகளும் செயற்பாடுகளும் பரந்துபட்டுச் செல்லத் தொடங்கியிருந்தன.

மகளிர் படையணி என்ற ஒரு நிர்வாக அலகு பிரிந்து பல படையணிகளும் பிரிவுகளும் உருவாகியிருந்தன. இவர்கள் பரந்து விரிந்திருந்த யுத்த முன்னணிகளிலும் பின் தளங்களிலும் செயற்பட்டு வந்தனர்.

புதிய பெண் தளபதிகளும் பொறுப்பாளர்களும் உருவாகியிருந்தனர். எனவே பெண் போராளிகளிடையே ஆரம்பத்தில் இருந்ததைப் போன்ற அறிமுகங்களும் ஐக்கியமும் குறையத் தொடங்கின.

மகளிர் படையணிப் போராளிகளின் ஒரேவிதமான ஒழுங்கு நடைமுறைகளில் மாற்றங்களும் வேறுபாடுகளும் ஏற்படத் தொடங்கின.

1985 ஆவணி 18 தமிழ்நாடு திண்டுக்கல், சிறுமலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுக்கு முதலாவது ஆயுதப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இயக்கத்தின் மிகச்சிறந்த பயிற்சியாசிரியராக இருந்த பொன்னம்மான் ஆறுமாத காலக் கடும் பயிற்சியைப் பெண்களுக்கு வழங்கி இருந்தார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் கிளாலியில் நடைபெற்ற இரண்டாவது அணிக்குப் பெண் போராளிகளே பயிற்சி வழங்கியிருந்தனர். பெண் போராளிகளது எந்த நிர்வாகத்திலும் அளவுக்கதிகமாக ஆண் பொறுப்பாளர்கள் மூக்கை நுழைப்பதைப் பெண் தளபதிகள் விரும்புவதில்லை.

ஆரம்பத்திலிருந்தே பெண் போராளிகளுடைய விடயங்களைத் தலைவர் தானே நேரடியாக வழிநடத்தி வந்திருந்தார். பெண் போராளிகள் வீடுகளிலே தமது தகப்பனிடம் காட்டும் அன்பையும் உணர்வு ரீதியான நெருக்கத்தையும் தலைவரிடம் கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆண் பெண் போராளிகள் இணைந்து பயிற்சிகள் எடுத்துப் பல பணிகளிலும் சேர்ந்து செயற்பட்டாலும், மிக இறுக்கமான ஒழுங்கு விதிகள் மீறப்படும்போது கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இயக்கம் விதிவிலக்கான சம்பவங்களும் நடக்காமலில்லை.

அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை இயக்கம் மேற்கொண்டிருந்தது.

W-tigers7

1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இயக்கத்தின் அனைத்துப் பெண் போராளிகளும் கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

வடமராட்சி முகாம் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் இயக்கத்தைச் சாராத ஆண்களுடன் பாலியல் தொடர்புகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றத்திற்காகவே இயக்கத்தின் ஒழுக்க நடைமுறைகளுக்கமைவாக அவர்களுக்கு அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்தக் குற்றச் செயலோடு தொடர்பு கொண்டிருந்த ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.

பெண் போராளிகளுக்கிடையே ஒரு பலமான உறவு நிலையைத் தொடர்ந்து கட்டியெழுப்புவதற்காக மகளிர் படையணிகளை இணைத்து ‘மகளிர் பேரவை’ என ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென்பது பெண் தளபதிகளுடைய விருப்பமாக இருந்தது.

இக்கருத்தைத் தலைவரிடம் கொண்டுசென்றபோது, அவர் அதனை வரவேற்றதுடன் அந்தக் கூட்டத்தில் தானும் கலந்துகொண்டு தனது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வதாகக் கூறியிருந்தார்.

vithusaa

அந்த அமைப்புக்குத் தலைவராகக் கேணல் விதுஷாவும், அவருக்கு அடுத்த நிலையில் கேணல் துர்க்காவும், அந்த அமைப்பின் செயலாளராக நானும், பொருளாளராக மூத்த உறுப்பினர் ஜனனியும் தெரிவு செய்யப்பட்டிருந்தோம்.

மகளிர் பேரவையின் நிர்வாகச் செலவுகளுக்கெனத் தலைவரால் ஐம்பதினாயிரம் ரூபாய் பணம் கேணல் விதுஷாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த அமைப்புக்காகப் பெண் போராளிகளுடைய நடைமுறைகள் பற்றிய ஒரு யாப்பும் உருவாக்கப்பட்டிருந்தது.

பெண் போராளிகளுக்கான பொதுவான தேவைகள், பிரச்சனைகள் என்பன ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் கண்டறியப்பட்டன. இந்தக் கூட்டத்தின் அறிக்கை நேரடியாகத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுவதால் பெண் போராளிகளுடைய நிர்வாகங்களில் ஏனைய தளபதிகளும் மிகவும் கவனமாக ஈடுபட்டு வந்தனர்.

களமுனைகளிலும், ஏனைய வேலைகளிலும் முக்கியப் பணிகளில் பெண் போராளிகளும் ஈடுபட்டிருந்ததால் பெண் பொறுப்பாளர்கள், தளபதிகளின் கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டியதாகவே இருந்தது.

பெண் போராளிகளின் திருமணம், திருமணத்தின் பின்னர் அவர்களுடைய தொடர்ச்சியான செயற்பாடுகள் என்பனவற்றிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன.

இயக்கத்தில் ஆண் பெண் போராளிகளுக்கிடையே காதல், திருமணம் போன்ற உறவுகளுக்கும் அனுமதி இருந்தது.

விடுதலைப் புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தலைவரால் 1991ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார்.

அடுத்த வருடமே தன்னால் அந்தப் பொறுப்பைத் தொடர்ந்து செய்ய முடியாது எனக் கூறிவிட்டு விலகிவிட்டார்.

அதற்கான காரணத்தைப் பின்னர் ஒருதடவை குறிப்பிட்டபோது, “இயக்கத்தில எத்தினையோ வயது வந்த பெண் போராளிகள் இருக்கிறார்கள், யுத்தத்தில நின்று காயப்பட்ட, அங்கங்களை இழந்த போராளிகள் இருக்கிறார்கள்.

இவர்களை இயக்கத்தில இருக்கிற ஆண் போராளிகள்தான் திருமணம் செய்ய முன்வர வேண்டும். எங்கட பொடியளில சிலர் தங்களோடு சண்டைக் களத்தில நின்று போராடிய பெண் போராளிகளைக் கலியாணம் கட்டுவம் எண்டு யோசிக்காமல், அழகான, நல்ல உத்தியோகம் பார்க்கிற அல்லது வெளிநாட்டில சொந்தக்காரர் இருக்கிற பொம்பிளைகளைத் தேடித் திரிகினம்.

இப்படியான கலியாணங்களைச் செய்து வைக்க நான் தேவையில்லை எனத் தலைவரிட்ட சொல்லிப்போட்டு நான் விலகிட்டன்” எனக் கூறினார்.

இதற்குப் பின்னரான காலப் பகுதியில் இருவரும் இயக்கப் போராளிகளாக இருக்கின்ற திருமணங்கள் முக்கியத்துவப் படுத்தப்பட்டன.

பெரிய தளபதிகள் இயக்கப் பெண் போராளிகளை விரும்பி மணந்தனர். ஏனைய போராளிகள் மட்டத்திலும் காதல், திருமணங்கள் இயல்பாக ஏற்படத் தொடங்கின.

உறுப்பினர்கள் காதலிக்கும்போது தத்தமது பொறுப்பாளர்களுக்கூடாகத் தலைமைச் செயலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது.

ஆண்களுக்குத் திருமண வயது 29ஆகவும் பெண்களுக்கான திருமண வயது 23ஆகவும் இருந்தது. இதில் ஒருவராவது கட்டாயமாக ஐந்து வருடத்திற்கு மேற்பட்ட சேவையைச் செய்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஒருசில போராளிகளின் திருமணங்களின்போது சாதி பற்றிய மறைமுகமான உறுதிப்படுத்தல்களும் இருந்தன. ஆனாலும் பல போராளிகள் இவற்றைக் கடந்து திருமணம்செய்து அன்பான காதல் வாழ்வை மேற்கொண்டனர்.

எனது குடும்பத்தில் அம்மம்மாவிடம் சாதி வேறுபாடு பார்க்கும் குணம் இருந்தது. எமது வீட்டிலே வேலைகள் செய்யவரும் ஒருவருக்கு அம்மம்மா போத்தலில்தான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுப்பதை அவதானித்து வந்திருந்தேன்.

ஒரு நாள் அவர் தண்ணீர் கேட்டபோது அம்மம்மாவுக்கு முன்னதாகவே நாங்கள் தண்ணீர் குடிக்கும் சொம்பிலே தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்தேன்.

அம்மம்மாவுக்குப் பயங்கர கோபம். என்னுடன் எதுவும் பேசாமல் அந்தச் சொம்பை வெளியே வீசி எறிந்துவிட்டார். அப்போதுதான் சமூகத்தில் சாதியம் ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதை நான் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

இயக்கத்தில் இணைந்து யாழ்ப்பாணத்தில் அரசியல் வேலைகளுக்காக மக்கள் மத்தியில் போனபோது, பெரிய படித்த மனிதர்கள்கூட அற்பமான சாதிச் சாக்கடையில் விழுந்துகிடக்கும் சமூகக் கொடுமை என் மனதைச் சுட்டது.

எழுத்தாளர் கே. டானியல் எழுத்துக்களின் மூலம் சாதிக் கொடுமை சமூகத்தில் மலிந்து கிடக்கும் தன்மைகளை விளங்கிக்கொண்டேன். எமக்கொரு நாடு கிடைத்ததும் இதற்கான விழிப்புணர்வு வேலைகளை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதன் அவசியத்தை எனது போராளி நண்பிகளுடன் பேசிக்கொள்வேன்.

பல போராளிகள் சாதியத்தை அறவே வெறுத்தார்கள். அதற்கெதிராகப் போராடுவதன் அவசியத்தை உணர்ந்திருந்தார்கள்.

ஆயுதப் பயிற்சியெடுத்து ஒரு போராளியாகியிருந்தாலும் சிலருடைய ஆழ் மனங்களில் சாதி, மதம், தேவையற்ற சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் பற்றிய கருத்துக்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.

இது இப்படியிருக்க, பல வயது வந்த ஆண் போராளிகள் தம்மைவிட மிகவும் வயது குறைந்த பெண் போராளிகளைத் திருமணம் செய்வதற்கான அனுமதியைக் கேட்கும்போது தர்மசங்கடமான பிரச்சனைகள் எழுவது வழக்கம்.

ஆனால் இந்த இடத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் பெண் பொறுப்பாளர்களிடமே இருந்தது. சில ஆண் தளபதிகள் தமது போராளிகளுக்காகச் சிபார்சு செய்து வரும்போது பலவிதமான முரண்பாடுகள் ஏற்படுவது வழக்கம்.

இதனால் பெண் பொறுப்பாளர்களுக்குப் பல உளைச்சல்களும் ஏற்பட்டதுண்டு. திருமணம் முடித்து இருவரும் பணிக்குச் செல்லும் போராளிக் குடும்பங்களில் அவர்களுடைய குழந்தைகளைப் பராமரிப்பதற்கு ஒரு காப்பகம் அமைக்கும்படியான ஆலோசனைக்கமைவாக அந்தப் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதன்முதலாகப் புதுக்குடியிருப்பில் ‘தளிர் குழந்தைகள் காப்பகம்’ அமைக்கப்பட்டது.

தமிழினி

தொடரும்…

நன்றி : இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s