ஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 24

தலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி!


• ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி முகம் சிதைந்து, நாடிப்பகுதி உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது.

• 2007 செப்டம்பரில் இலங்கைப் படையினரால் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை பெரும் நிலப் பிரதேசங்களை ஆக்கிரமித்தபடி வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தது.

• தலைவரைப் பொறுத்தவரை தமிழ்ச்செல்வனின் இழப்பு ஒரு பேரிழப்பாக இருந்தது. தலைவரின் எந்தக் கருத்தையும் மறுகேள்வி கேட்காமல் செயற்படுத்தும் உயர் விசுவாசம் கொண்ட போராளியாக அவர் இருந்தார்.

தமிழ் செல்வன்

2007ஆம் ஆண்டு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனும் அவரின் உதவியாளர்களுமாக ஏழு போராளிகள் இலங்கை வான்படையினரின் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்கள்.

தலைவரைப் பொறுத்தவரை தமிழ்ச்செல்வனின் இழப்பு ஒரு பேரிழப்பாக இருந்தது. தலைவரின் எந்தக் கருத்தையும் மறுகேள்வி கேட்காமல் செயற்படுத்தும் உயர் விசுவாசம் கொண்ட போராளியாக அவர் இருந்தார்.
தலைவருக்குரிய பல தனிப்பட்ட வேலைகளையும் அவரே பொறுப்பாக செய்து கொடுப்பது வழக்கம். 1993இலிருந்து அரசியல் துறை நிர்வாகத்தில் தமிழ்ச்செல்வனின் பொறுப்பிலே நான் பணியாற்றியிருந்தேன்.
உடன்பிறந்த சகோதரனின் இழப்பைப்போல அவரது இழப்பு என்னை மிகவும் பாதித்திருந்தது. எந்தவொரு வேலைத்திட்டத்தை எமக்கு விளங்கப்படுத்தும்போதும் “அண்ணை இப்பிடித்தான் எதிர்பார்க்கிறார்.
நாங்கள் அதற்கேற்ற  விதமாகத்தான் செயற்பட வேண்டும்” என்று வார்த்தைக்கு  வார்த்தை தலைவரையே குறிப்பிடுவார்.  குறிபார்த்துச் சுடுவதில் மிகவும் திறமைசாலியான தமிழ்ச்செல்வன் தமிழ்நாட்டில் ஆயுதப் பயிற்சியெடுத்துத் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் செயற்பட்டிருந்தார்.

1993இல் அதுவரை மாத்தையாவின் பொறுப்பிலிருந்த அரசியல் பிரிவு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராகத் தனது இறுதிக் காலம் வரை செயற்பட்டிருந்தார்.
பெண் போராளிகள் தொடர்பான அணுகுமுறையிலும் இவர் தலைவரின் கருத்துக்களை அப்படியே பின்பற்றினார் என்பதை நானறிவேன்.  மிகவும் அனுபவம் குறைந்த போராளியாக இருந்த என்னை ஒரு பொறுப்பாளராக வளர்த்தெடுத்தவர் தமிழ்ச்செல்வன்.

ஒருவரிடம் காணப்படும் திறமையைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி அவர் மேலும் வளர்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் மனப்பாங்குடையவராக இருந்தார்.  வேலைகளை வழங்குவதில் ஆண்கள் பெண்கள் என வேறுபாடு பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். பல நெருக்கடியான வேலைத் திட்டங்களில் ஆண் போராளிகளுக்கு நிகராகப் பெண் போராளிகளையும் ஈடுபடுத்துவார்.

1994ஆம் ஆண்டு கொக்குவில் லிங்கம் முகாமில் கல்விக் குழு பிரிவில் நான் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். திடீரென என்னைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அழைப்பதாகக் கூறப்பட்டது. பல பெரிய பொறுப்பாளர்கள் அங்கு வந்து அவரைச் சந்தித்துச் செல்வது எனக்குத் தெரியும். நான் ஒரு சாதாரண போராளி.

எதற்காக என்னை அழைக்கிறார் என மிகுந்த பயத்துடன் சென்றேன்.

“இங்க வாங்கோ தங்கச்சி.
நான் உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை தரப் போறன், பருத்தித்துறை பிரதேசத்திற்குப் பரப்புரை வேலைகளுக்குப் பொறுப்பாக உங்களை நியமித்திருக்கிறன். நீங்கள்தான் பொறுப்பாக நிண்டு செய்யவேணும். உங்களுக்கான முழு ஒத்துழைப்பையும் நான் செய்து தாறன்.

 

உடனடியாக வேலையைத் தொடங்க வேணும்” என செய்ய வேண்டிய வேலைகளை விளங்கப்படுத்தி அனுப்பி வைத்தார். முதன்முதலாக ஆண், பெண் போராளிகளை இணைத்து அந்த வேலைத் திட்டத்தை வழிநடத்தியமை எனக்குப் புதியதும், வளர்ச்சிக்குரியதுமான பல அனுபவங்களைத் தந்திருந்தது.

 

1999இல் நான் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தன்னால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒருவர்தானே என்கிற அலட்சிய மனப்பாங்கின்றி எனது பொறுப்புக்குரிய மதிப்போடு என்னை நடாத்தினார். அதனால் ஏனைய ஆண் பொறுப்பாளர்களுக்கிடையே நான் கொஞ்சமாவது தலையெடுத்து வளரக்கூடியதாக இருந்தது.

 

வேலைத் திட்டம் காரணமாகப் பல பொறுப்பாளர்களுடன் முரண்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தபோது, நடுநிலையோடு தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவரது திடீர் மறைவுக்குப்பின் காவல்துறை பொறுப்பாளராக இருந்த திரு. நடேசன், அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரும் தலைவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.


2007 செப்டம்பரில் இலங்கைப் படையினரால் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை பெரும் நிலப் பிரதேசங்களை ஆக்கிரமித்தபடி வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தது.

முன்னைய காலங்களைப் போலன்றி, இராணுவத்தினர் தந்திரமான ஊடுருவித் தாக்குதல்கள் மூலமும் எமது கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை வேகமாகக் கைப்பற்றினார்கள்.

 

இராணுவத்தினரின் ‘ஜெயசிக்குறு’ படையெடுப்புக் காலப்பகுதியில் புலிகளுக்குச் சாதகமாக இருந்த வன்னிக் காடுகளின் அனைத்துச் சூட்சுமங்களையும் இராணுவத்தினர் இப்போது நன்றாக அறிந்து உள்வாங்கியிருந்தனர்.

 

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முன்னேற்ற நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த அதேவேளை மறுபுறத்தில், புலிகளுடைய பின்னணிச் செயற்பாடுகளை முடக்கும் திட்டத்துடன் பல கிளைமோர் தாக்குதல்களும் வான் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.

புலிகளின் களமுனைத் தளபதிகள், பொறுப்பாளர்கள் பயணிப்பதற்கும் போராளிகளின் உதவி அணிகள், கனரக ஆயுதங்கள் நகர்த்தப்படுவதற்கும் பயன்படுத்தப்படுகின்ற பாதைகளை இலக்கு வைத்து இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

 

முன்னணிக் காவலரண்களுக்குப் பின்புறமாக அமைக்கப்படும் நகர்வுப் பாதைகளிலும் இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதல்கள் பலமாக இருந்தன. சில சந்தர்ப்பங்களில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்ட

அதே இலக்கின் மீது கனரக ஆயுதங்களினாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஏ9 வீதியில் தளபதி பால்ராஜ் மீது நடத்தப்பட்ட அத்தகைய தாக்குதல் நடவடிக்கை ஒன்றிலிருந்து அவர் சாதுர்யமாக உயிர் தப்பியிருந்தார். நான் முதன்முதலாகக் கண்ணெதிரே கண்ட ஒரு கிளைமோர் தாக்குதல் சம்பவம் புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் நடைபெற்றிருந்தது.

ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த பெண் போராளிகளின் முகாமொன்றுக்கு நானும் இன்னொரு பெண் பொறுப்பாளரும் ‘எம்டி90′ மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தோம்.
கிறவல் எழும்பிக் கிடந்த மேடு பள்ளம் நிறைந்த வீதியில் எமது மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள், கடலில் போகும் படகுபோல எழுவதும் விழுவதுமாகப் போய்க்கொண்டிருந்தது. நேரம் காலை எட்டு மணி கடந்திருக்கும். வீதியில் சன நடமாட்டமே இருக்கவில்லை.

 

இருவரும் மோட்டார் சைக்கிள் என்ஜின் சத்தத்திற்கும் மேலாக உரத்துப் பேசியபடி போய்க்கொண்டிருந்தோம். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நான், எமக்குப் பின்புறமாக எழுந்த பேரதிர்வினால் வீதிக்கரையில் தூக்கியெறியப்பட்டேன். அங்கே ஏதோ பயங்கரமான அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என எண்ணியபடி எமது மோட்டார் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு அந்த இடத்தை நோக்கிச் சென்றோம்.


அங்கே தலைவருடைய மெய்ப்பாதுகாவலர்கள் பதற்றமான நிலையில் வேகமான தேடுதல் நடவடிக்கையைச் செய்துகொண்டிருந்தனர்.
எம்மை முன்னே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள். எமக்கு மனது படபடக்கத் தொடங்கியது.
தலைவருடைய முகாம் அமைந்திருந்த சிறு உள்வீதியை அண்மித்த இடமாக அது இருந்தது. எமக்குத் தெரிந்த ஒரு போராளியிடம் என்ன நடந்தது எனக் கேட்டபோது, நேரடியாகப் போய்ப் பார்க்கும்படி கூறினார்.
அங்கே ஒரு வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி அதன் முன்புறம் முற்றாகச் சிதைந்து போயிருந்தது. சற்றுப் பருமனான தோற்றம்கொண்ட ஒரு உயிரற்ற உடல் வாகனத்துடன் சாய்த்து இருத்தி வைக்கப்பட்டிருந்தது.
முகம் சிதைந்து, நாடிப்பகுதி உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது. அந்த உடல் அமைப்பையும் வாகனத்தின் அமைப்பையும் பார்த்து அவர் யாரென்பதை அடையாளம் கண்டுகொண்ட போது தாங்க முடியாத அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றோம்.
விடுதலைப் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரப்பா அந்தத் தாக்குதலில் உயிரிழந்து போயிருந்தார்.

விமானப் பொறியியலாளரான இவர் லண்டனிலிருந்து வந்து இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.  1987இல் சயனைட் உட்கொண்டு உயிர் நீத்த புலிகள் இயக்கத்தின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு பேரில் ஒருவரான கரன், சங்கரப்பாவின் இளைய சகோதரன் ஆவார்.
கேணல் சங்கர் அவர்களுடைய கடுமையான உழைப்பினால்தான் புலிகள் இயக்கத்தில் ஒரு வான்படை உருவாகியிருந்தது. அம்பகாமம் காட்டுப் பகுதி இவருடைய முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.
இரணைமடுவை அண்டிய அதே காட்டுப் பகுதியில் ஒரு விமான நிலையத்தையும் உருவாக்கியிருந்தார்.
அடர்ந்த காட்டுப் பகுதியினூடாகத் திசையறிக் கருவியின் உதவியுடன் நகர்தல், உச்ச இரகசியம் பாதுகாத்தல் என்பது போன்ற விடயங்களைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலப் போராளிகளுக்குக் கற்பித்தவர் இவர்தான்.

வான்படை தளபதி கேணல் சங்கர்


ஏனைய தளபதிகளைப் போல் அல்லாது தலைவரிடம் தனது கருத்துக்களை நெருக்கமாகப் பகிர்ந்துகொள்ளக்கூடியவர்.
பல தளபதிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் நல்ல ஆலோசகராக இருந்தவர். என்னுடன் மிக அன்பாக உரையாடுவார்.  என்னுடைய மேடைப் பேச்சுக்களைக் கேட்டுப் பலமுறை என்னைப் பாராட்டியிருக்கிறார்; நிறைய புத்தகங்களை வாசிக்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார்.
‘லெனின்கிராட், ஸ்டாலின்கிராட்’ போன்ற உலகப்போர் வரலாறு பற்றிய புத்தகங்களை வாசிக்கும்படி கொடுத்துவிட்டு, போராளிகளைக் காணும் இடங்களில் கேள்விகள் கேட்பதால் இவரைக் கண்டதும் பல போராளிகள் சத்தமில்லாமல் நழுவிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
இவருடைய இழப்பு இயக்கத்திற்கும், போராட்டத்திற்கும் ஒரு பேரிழப்பாக இருந்தது.   இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரின் கைகளில் புலிகளின் மிக முக்கியமான இடங்கள் பற்றிய அனைத்துத் தரவுகளும் மிகத் துல்லியமாக இருக்கின்றன என்கிற விடயம் புலிகளுக்கு வெளிப்படத் தொடங்கியது.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முன்னணிக் களமுனையிலிருந்து எத்தனையோ கிலோமீற்றர் உட்புறமாகப் புலிகளின் உயர்பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட இத்தகைய மறைமுகத் தாக்குதல் நடவடிக்கைகளிலிருந்தும், சில முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டுகளை வைத்தும் இயக்கத்தால் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
மன்னார் பகுதியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புதுக்குடியிருப்பு வல்லிபுனம் காட்டுப் பகுதியில் ஆழ ஊடுருவும் அணியினரின் தடயங்களையும் புலிகள் கண்டெடுத்திருந்தனர்.

அன்றைய நிலையில் அந்த விடயம் இயக்கத்தின் உள்வட்டத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இறுதிப்போரின் பிரதான இலக்காக இயக்கத்தின் தலைவரே குறி வைக்கப்பட்டிருந்தார் என்பது புலிகளால் புரிந்துகொள்ளப்பட்டது.

எனவே சமாதான காலத்தில் ஓரளவு வெளிப்படையாக இடம்பெற்ற தலைவரின் சந்திப்புகள் இறுதியுத்தம் நடந்துகொண்டிருந்தபோது முற்றாக நிறுத்தப்பட்ட நிலையில் முக்கியத் தளபதிகளுடன் மாத்திரம் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை அவருடைய பாதுகாப்பும் அணிகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.
ஆழ ஊடுருவும் அணியினரின் இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களின் உள்ளகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இயக்கத்தின் ஆளணிப் பற்றாக்குறை மிகமோசமாக இருந்த காரணத்தால், உள்ளகப் பாதுகாப்புப் பணிகளுக்கு அதிக அளவு பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டனர். புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இரவு நேரங்களில் வீதிக் கண்காணிப்பு அணிகள் நிறுத்தப்பட்டுப்பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
புலிகளின் விசேட அணிகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இரகசிய நிலைகளை அமைத்துக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆங்காங்கு ஆழ ஊடுருவும் அணியினரின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன் மோதல்களும் இடம்பெற்றன. ஆனாலும் ஆழ ஊடுருவும் அணியின் நகர்வுகளைப் புலிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஏ9 நெடுஞ்சாலை உட்பட அதிகம் பயன்பாட்டிலிருந்த வன்னியின் பிரதான வீதிகளின் இருபுறமும் ஐம்பது மீற்றர் அகலத்தில் காடுகள் அழிக்கப்பட்டு நிலம் சமப்படுத்தப்பட்டு, மக்கள் படையணியினரின் காவலரண்கள் வீதிகள் நீளத்திற்கும் அமைக்கப்பட்டன.
முறிகண்டியிலிருந்து இரணைமடுவரை மக்கள்படையில் சேர்ந்த பெண்களும் காவலரண்களை அமைத்திருந்தார்கள்.  போராளிகளே இதற்குப் பொறுப்பாகச் செயற்பட்டார்கள்.  வன்னியின் காடுகளைப் பற்றிய அனுபவம் கொண்ட ஒரு தளபதி இந்த உள்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
எப்படியிருந்தபோதும் இயக்கம் எதிர்பார்க்கும் இடங்களைத் தவிர்த்து வேறு முக்கியமான இடங்களில் ஆழ ஊடுருவும் அணியினர் தமது கைவரிசையைக் காண்பித்துப் பல அதிர்ச்சி வைத்தியங்களைச் செய்தார்கள்.
இறுதிப்போரின் கடைசிக் கட்டம்வரை ஆழ ஊடுருவும் அணியினரின் நடவடிக்கைகளைப் புலிகளால் தடுத்துநிறுத்த முடியவில்லை.

தமிழினி

தொடரும்…

நன்றி : இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s