ஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 28

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்!

• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தேன். சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?

• உயிருடன் இருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.

• வார்த்தைகளால் விபரிக்க முடியாதபடி இரத்தமும் தசையுமாக இதயத்தை அறுத்துக் கொல்லும் வலிகளோடு முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய அந்தச் சூழ்நிலையை இலகுவில் புரிய வைக்க முடியாது.

images

கடற்புலிகளின் பெரிய படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கடற்புலித் தளபதி ஸ்ரீராம் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன்.

அவர் மிக இளவயது போராளியாக இயக்கத்தில் இணைந்து ஒரு திறமையான தளபதியாக வளர்ந்தவர். எப்போது என்னைக் கண்டாலும் அன்போடு அக்கா என அழைத்து உரையாடும் அவரிடம் “என்ன நிலைப்பாடு சிறிராம்” எனக் கேட்டேன்.

“இனியென்னக்கா இருக்குது, பேசாமல் சனத்தோடு சனமாக வெளியேறத்தான் வேணும்” எனக் கூறினார். இந்தப் படகை எரிப்பதற்குப் பெற்றோல் கொண்டு வருவதற்காகப் பொடியள் போயிருக்கிறாங்கள் அதுதான் பாத்துக்கொண்டு நிற்கிறன்” எனக் கூறினார்.

அவரது மனைவியான இசைப்பிரியா எங்கே எனக் கேட்டேன். பக்கத்தில் எங்கேயோ ஒரு இடத்தில் நிற்பதாகவும் விரைவில் வந்துவிடுவாள் என்றும் குறிப்பிட்டார்.

thamilini

நான் எனது நேரடிப் பொறுப்பாளரான நடேசனின் தொடர்பை எடுப்பதற்குப் பல தடவைகள் தொடர்ந்து முயற்சித்தேன்; எந்தப் பதிலுமே கிடைக்கவில்லை.

அதற்குப் பின்பும் பொறுப்பாளர்களது தொடர்பை எதிர்பார்த்துக் கொண்டு, என்னுடனிருக்கும் போராளிகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது ஆபத்தானதாகப் பட்டது.

காயமடைந்த சில போராளிகளும் திருமணமான போராளிகளும் ஏனைய சில போராளிகளும் என்னுடன் இருந்தனர். அவர்கள் அனைவரையும் சாதாரண உடைகளை அணிந்துகொண்டு, மக்களோடு சேர்ந்து வெளியேறிச் செல்லும்படி கூறினேன்.

பல போராளிகள் கதறியழுதார்கள். ஒரே குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் பிரிந்து, அடுத்து என்ன நடக்கும் என்று புரியாத ஒரு சூனிய வெளிக்குள் நுழையும் மன நிலையில் அவர்கள் இருந்திருப்பார்கள் போலும்.

காயமடைந்த போராளிகளுக்கு அவர்களுடைய குடும்பத்தவர்களின், அறிந்தவர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முயன்றுகொண்டிருந்தேன். நேரம் செல்லச்செல்ல பெரும்பாலானவர்கள் வெளியேறி விட்டிருந்தனர்.

பூரணியும் அவருடன் சில போராளிகளும் என்ன செய்வதென்றே புரியாத சூழ்நிலையில் நின்றிருந்தார்கள்.

பூரணி நடக்க முடியாதவாறு தனது காலில் பலமான காயமடைந்தவர். சுழிபுரத்தில் பிறந்த இவர் மூத்த தமிழ் அரசியல் தலைவரான திரு. அமிர்தலிங்கத்தின் நெருங்கிய உறவினர்.

திரு. அமிர்தலிங்கத்தைப் போன்றே பூரணியும் மிகுந்த பேச்சுவன்மை கொண்டவர். பூரணியின் பெற்றோர் காலமாகியிருந்தனர். சகோதரர்களும் நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்திருந்தனர்.

“நாங்கள் வாழத்தெரியாமல் இயக்கத்திற்கு வரயில்லை, மக்களுக்காகப் போராட வேணும் எண்டுதான் வந்தனாங்கள்.

நாங்களும் மற்றைவையைப் போல வாழ்ந்திருந்தால் எப்பிடியோ வாழ்ந்திருக்கலாம். என்ன செய்யிறது எங்களைப் போல எத்தினை பேரை இழந்திட்டம், இயக்கத்தை நம்பி கையைக் காலை குடுத்திட்டு இண்டைக்கு என்ன செய்யிறதெண்டே தெரியாமல் நிக்கிறம்” என மிகவும் மனங்கசந்து வருந்திக் கொண்டிருந்தார்.

இயக்கத்தின் தளபதிகளில் சூசையின் தொடர்பு மாத்திரம் கிடைக்கக் கூடியதாக இருந்தது. தளபதி சூசையைச் சந்திப்பதற்காகப் பூரணி செல்லத் தயாரானார்.

index

பதினாறாம் திகதி மாலை நெருங்கத் தொடங்கியது.

முள்ளிவாய்க்கால் வீதியில் முல்லைத்தீவு நோக்கி நகரத் தயாரான நிலையில் மக்கள் நிறைந்து நின்றார்கள். இயக்கத்தின் உயர்மட்டத்தில் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாத நிலையில், போராளிகள் இயக்கத் தலைமையால் முற்றிலுமாகக் கைவிடப்பட்டிருந்தார்கள்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆங்காங்குச் சிதறிக் கிடந்தன. காயப்பட்டுக் கிடந்தவர்களுக்குக் கூட யாருமே உதவி செய்ய முடியாத நிலைமையாக இருந்தது.

உயிருடன் இருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களோடு இணைந்து வெளியேறத் தயாராகியிருந்தார்கள்.

ஆபத்துக் காலத்தில் கோழி தனது சிறகுகளுக்குள் குஞ்சுகளை இழுத்துக்கொள்வதுபோலத் தமிழ் மக்கள் தம்முடனே போராளிகளையும் பாசத்துடன் அரவணைத்து உள்வாங்கிக் கொண்டார்கள்.

காயமடைந்து அனாதரவாகக் கிடந்த சில போராளிகளையும் மக்களில் சிலர் தூக்கிச் சுமந்துகொண்டு வெளியேறத் தயாரானார்கள்.

பல போராளிகளுக்கு வெளியேறிச் செல்வதற்கான விருப்பம் இருந்தும் அடுத்து என்ன நடக்கும் என்ற மனப் பயம் காரணமாகத் தயக்கத்துடன் பின்வாங்கினார்கள்.

கட்டுமீறிய வெள்ளம் கரை தாண்டத் துடிப்பதுபோல மக்கள் அலையலையாக முள்ளிவாய்க்கால் வீதியில் திரண்டிருந்தனர்.

மாலையாகும் வரை மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்திவைக்க வேண்டுமெனத் தளபதி சூசை குறிப்பிட்டிருந்த தாகவும், அதற்காக இரண்டொரு போராளிகளை வீதியில் நிறுத்தி வைத்திருப்பதாகவும் போராளிகள் மத்தியில் பேசிக் கொண்டார்கள்.

மதியத்திற்குப் பின்னரான பொழுதில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒருசில போராளிகளையும் தள்ளி விழுத்திக் கொண்டு, அலைபோல மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள்.

யார்தான் ஏற்றுக்கொண்டாலென்ன, மறுத்தாலென்ன? விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் படுபயங்கரமான முறையில் தோல்வியடைந்துவிட்டது என்ற உண்மையை அக்கணத்தில் உணர்ந்துகொண்டேன்.

முள்ளிவாய்க்காலில் சன நெருக்கடி குறையத் தொடங்கியது.

இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும்.

இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தேன்.

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா? உணர்ச்சிக்கும் புத்திக்குமான போராட்டத்தில் சிக்கித் திணற ஆரம்பித்தேன்.

ஒரு குடும்பமாக வாழ்ந்த விடுதலைப் போராட்ட வாழ்வும் உயிரைப் பிழிந்தெடுத்த சக போராளிகளின் மரணங்களும் இலட்சியத்திற்காக மரணிக்கத் தயாராகவிருந்த மனத்துணிவும் இதயத்தில் இரும்பாகக் கனத்தது.

book1_080114114410
எதிரிகளாகிய இலங்கைப் படையினரிடம் சரணடைவதை முற்றிலுமாக மனம் ஏற்க மறுத்தது. என்னை நானே அழித்துக் கொள்வது பயனற்ற சாவு எனப் புரிந்தாலும், உணர்ச்சிப்பூர்வமாக உயிரை மாய்த்துக்கொள்வதுதான் ஒரு விடுதலைப் புலிக்குரிய பண்பு என்பதை உணர்ந்திருந்தேன்.

உறுதியும் வீரமும் மிக்க போராளி என்பதை நிரூபிப்பதற்காகச் செத்துப்போவதா? உயிரைக் காத்துக்கொள்ளும் கோழையாகத் தப்பியோடுவதா?

நெஞ்சு வெடித்துவிடுவதுபோல அடைத்துக்கொண்ட நிலையில் கண்ணீர் மட்டுமே பொங்கிக்கொண்டிருந்தது.

அதேவேளை எனது உள்ளுணர்வு தற்கொலை மரணத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் புரிந்தது. அந்தக் கணத்தில் நான் தற்கொலை செய்துகொள்வது எவ்விதத்திலும் பயனற்ற ஒரு செயலாகவே மனதுக்குப்பட்டது.

என்ன என்பது தெளிவில்லாத அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிச் சென்று இன்னதென்றே தெரியாத அதன் விளைவுகளுக்குள் பயணிப்பது எந்த அளவுக்கு ஒரு பெண் போராளிக்குப் பாதுகாப்பான முடிவாக அமையும் என்று சிந்திக்கத் தொடங்கினேன்.

இப்போதிருக்கும் இருண்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும் திராணியற்று தற்கொலை செய்துகொள்வதைவிட, உயிரோடிருந்து எதிர்வரப்போகும் சூழ்நிலைகளைக் கடந்து செல்வதற்குத்தான் அதிக மனோபலம் தேவைப்படும் என்பதை அறிவு உணர்த்தியது.

உணர்ச்சியும் புத்தியும் குறிப்பிட்ட அளவு விகிதங்களில் கலந்ததாகவே முடிவுகள் இருக்கவேண்டும் எனக் கருதுவதுதான் என்னுடைய தனிப்பட்ட இயல்பு.

தனிப்பட்ட உணர்ச்சிகளின் உந்துதலினால் மட்டுமே நான் போராளியாக இணையவில்லை. உயர்தர வகுப்பு படிக்கின்ற மாணவியாக அன்றைய சூழ்நிலையில் எனக்கிருந்த அறிவுக்கேற்ற வகையில் சமூகத்திற்கான சேவை செய்யும் மனப்பாங்குடனேயே நான் இயக்கத்தில் இணைந்தேன்.

அன்றிருந்த புறச்சூழ்நிலையில் ஆயுதம் ஏந்திப் போராடுவதுதான் எனது மக்களுக்கு ஆற்றக்கூடிய உயர்ந்த சமூகச் சேவையென நான் கருதினேன்.

ஒவ்வொரு போராளிகளினதும் மரணத்திற்குப் பின்னாலும் ஆக்கப்பூர்வமான நன்மை ஒன்று எனது சமூகத்திற்குக் கிடைக்கும் என மனப்பூர்வமாக நம்பினேன்.

அப்படியொரு பொது நன்மைக்காக உயிரை அர்ப்பணிப்பதென்பது எனக்கு முற்றிலும் சம்மதமாயிருந்தது.

அந்தக் காலகட்டத்தில் வேறெந்த தெரிவுகளுக்கும் இடமில்லாதவாறு விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்று பலம் பொருந்திய ஒரு விடுதலை இயக்கமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காரணத்தால் நானும் ஒரு விடுதலைப் புலியாக இணைந்துகொண்டேன்.

மக்களின் விடுதலைக்காகப் போர் புரியும் கனவுடன் இயக்கத்தில் சேர்ந்த எனக்கு, நான் நினைத்துக்கூடப் பார்த்திராத வகையில் மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்யும் பணி தரப்பட்டது.

நான் மக்களை மிகவும் நேசித்த காரணத்தால் மிகுந்த விருப்பத்துடன் கடினமாக உழைத்தேன். எல்லா மக்களும் நிம்மதியும் சமத்துவமுமாக வாழும் வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதே ஆனந்தமாயிருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் வெற்றியடைந்து அப்படி ஒரு நாட்டை உருவாக்குவார்கள் என உறுதியாக நம்பினேன். அதற்காக எனது உள்ளம், உடல், உயிர், ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்துப் போராடுவது எனத் திடசங்கற்பம் கொண்டேன்.

அதன் பின்னரான காலங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் படிப்பினைகளும் போராட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திய நிலைமைகளும் அவநம்பிக்கையை ஏற்படுத்திய முடிவுகளும் மக்கள் நலனை முன்னிறுத்தாத செயற்பாடுகளும் எனக்குள் பலமான உணர்ச்சிக் கொந்தளிப்புக்களையும், சுய விமர்சனத்தையும் ஏற்படுத்தின.

ஆனாலும் ஆயிரமாயிரம் உயிர்களின் அர்ப்பணிப்பு வீண் போகாதபடி, கனிந்துவந்த அரசியல் சூழ்நிலைகளைத் தலைவர் பயன்படுத்தி மக்களுக்கு ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவார் என அனைத்துப் போராளிகளையும் போல் நானும் உறுதியாக நம்பினேன்.

இறுதிப் போருக்கான முடிவைத் தலைமை எடுத்தபோது எனது சிறிதான அறிவுக்கெட்டிய வகையில் அது ஒரு சிறந்த முடிவாகப்படவேயில்லை.

அதன் பின்னரான காலகட்டத்தில் வெல்லப்பட முடியாத யுத்தமொன்றுக்காகப் போராளிகளுடைய உணர்ச்சிகளும் உயிர்களும் கையாளப்பட்ட விதங்கள், மக்களுடைய நம்பிக்கையைப் பொய்யாக்கிய செயற்பாடுகள் எனக்கு மட்டுமல்ல பல போராளிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகளுக்கும் உடன்பாடானதாக இருக்கவில்லை.

ஆனாலும் தலைமையின் கட்டளைக்குக் கீழ்ப்பணிந்து செயற்படுவதே எமது கொள்கைப் பிடிப்புக்கும் இயக்க விசுவாசத்திற்குமான அடையாளமாயிருந்தது.

அப்படியானதொரு இராணுவ பண்பாட்டின் அடிப்படையில்தான் நாம் வளர்க்கப்பட்டிருந்தோம்.

புதுக்குடியிருப்பில் நடந்த இறுதியான சந்திப்பில் பொட்டு அம்மான் கூறியதுபோலத் தலைவர் ஒரு அதிசயம் நிகழ்த்துவார் என்று நம்பிக்கொண்டு, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து செயற்படுவதைத் தவிர எமக்கு வேறு வழி இருக்கவில்லை.

மே பதினாறாம் திகதி மாலை, நானும் அங்கிருந்த போராளிகளுடன் சேர்ந்து வெளியேறுவது எனத் தீர்மானித்தேன்.

tamil-people

வார்த்தைகளால் விபரிக்க முடியாதபடி இரத்தமும் தசையுமாக இதயத்தை அறுத்துக் கொல்லும் வலிகளோடு முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய அந்தச் சூழ்நிலையை இலகுவில் புரிய வைக்க முடியாது.

என்னுடனிருந்த போராளிப் பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்த நாங்கள், நடந்துபோனதாக எனக்கு நினைவில்லை. கரைகடந்த மாபெரும் மக்கள் வெள்ளத்தினூடே இழுத்துச் செல்லப்படுவதாகவே உணர்ந்தோம்.

29.07.1991 விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததிலிருந்து 16.05.2009 வரையான எனது பதினெட்டு வருடப் போராட்ட வாழ்க்கை அக்கணத்தில் முடிவடைந்து போனது.

அடுத்து என்ன நடக்கும் என நினைத்துப் பார்ப்பதே பயங்கரமாக இருந்தது. எமக்குப் பின்புறமாக இன்னமும் வெடிகள் அதிர்ந்து கொண்டேயிருந்தன.

phoca_thumb_l_Children waiting to get kanchchi at TRO center..
கன்னங் கரிய புகை மண்டலங்கள் வானளாவி எழுந்துகொண்டிருந்தன. போர்க்களத்தின் வாழ்வை ஒன்றாகப் பகிர்ந்துகொண்ட, உறவுகளின் உயிர்வலி நிரம்பிய ஏக்க விழிகளின் இறுதி விசும்பல்கள் வங்கக்கடலின் பேரலைகளாக எனது நெஞ்சுக்குள் மோதித் தெறித்துக் கொண்டிருந்தன.

உயிரற்ற சடலத்தைப் போல என்னைச் சுமப்பதே எனக்குப் பெரும் பாரமாயிருந்தது. மக்களால் நிறைந்துபோயிருந்த முல்லைத்தீவு மைதானத்தில் மின் விளக்குகள் பகலைப் போல ஒளி சிந்திக் கொண்டிருந்தன.

இராணுவத்தினர் மைதானத்தைச் சூழ்ந்து நின்றனர். மனதிற்குள் ஆழ்ந்த இருட்டாகத் தென்பட்ட அடுத்த கட்டத்துக்குள்ளே நானும் பிரவேசித்தேன்.

தமிழினி

தொடரும்…

நன்றி : இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s