மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : பாகம் 13

ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

கூட்டத்துக்கு ராஜிவ் காந்தி வந்ததும் நேரே மேடைக்குப் போய்விடுவார். வழியில் மாலை போடுகிற திட்டம் முதலில் கிடையாது. மேடையில்தான் மாலைகள்.

எனவே மாலை போட அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை முதலில் மேடைக்கு அருகே பின்புறம்தான் நிற்க வைத்திருந்தார்கள்.

ஆனால் ராஜிவ் வருவது மிகவும் தாமதமாகிப் போனதால் (எட்டு மணிக்கு வருவதாக இருந்தவர், வந்து சேர்ந்தபோது மணி பத்து.) மேடையில் வரிசையாக மாலை போட்டுக்கொண்டிருக்க முடியாத சூழல்.

ஒப்புக்கு ஒரு மூன்று பேரை மட்டும் மேடையில் மரியாதை செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, மற்றவர்களை, அவர் வரும்போதே மாலை போட்டுவிடச் சொல்லி ஏ.ஜே. தாஸ் என்னும் நிர்வாகி சொல்லியிருந்தார்.

மைக்கிலேயே இதனை அறிவித்தார் அவர். இந்த திடீர் மாற்று ஏற்பாட்டில் கூட்டம் சற்று கலகலத்துப் போனது.

மாலை போடும் ஆர்வத்தில் மேடைக்குப் பின்னால் காத்திருந்த முழுக் கூட்டமும் முண்டியடித்துக்கொண்டு முன்புறம் ஓடிவரத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கூட்டத்தில், லஷ்மி ஆல்பர்ட், ரமா தேவி மற்றும் பலர் பட்டியலில் இல்லாதவர்கள் ஆவார்கள்.

இந்த மாலை விவகாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கெனவே ராஜேந்திரன் என்னும் சப் இன்ஸ்பெக்டரை நியமித்திருந்தார்கள்.

துண்டுக் காகிதம்.

ராஜிவ் வரும்போது யார் யார் அவருக்கு மாலை போடவேண்டும் என்று முன்கூட்டியே நிகழ்ச்சி நிர்வாகிகளைக் கேட்டு, பட்டியல் தயாரித்து, அவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டியது அவரது பணி.

அதே மாதிரி அனுசூயா என்கிற பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம், அப்படி ராஜிவை நெருங்கி மாலையிட வருகிற அனைவரையும் முன்கூட்டியே பரிசோதித்து வைக்க வேண்டுமென்றும் உத்தரவு இருந்தது.

ஆனால் இரண்டும் நடக்கவில்லை. சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மாலை போடுகிறவர்களின் பட்டியலை எழுதி வைத்திருந்த லட்சணத்தைப் பின்னால் நாங்கள் பார்க்க நேர்ந்தபோது அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றோம்.

ஒரு கசங்கிப் போன துண்டுக் காகிதத்தில், ஒரு வரிசையில்லாமல், சீரியல் நம்பர் இல்லாமல், மாலை போடுகிறவர் யார் என்ன என்கிற விவரம் இல்லாமல் ஏதோ சொல்லிவிட்டார்களே என்பதனால் கீழே கிடந்த குப்பைக் காகிதத்தில் நாலு பெயர்களைக் கிறுக்கி வைத்திருந்தார்!

இம்மாதிரி விவிஐபிக்கள் பொதுக்கூட்டத்துக்குப் பாதுகாப்புக்குச் செல்லும் காவலர்களுக்கென்று இதற்கெல்லாம் தனியான விதிமுறைகளே உண்டு.

மாலை போடுகிறவர்களின் பெயர்களை எழுதி வை என்று சொன்னால், பெயர், முகவரி, அவர் யார், என்ன வேலை பார்க்கிறவர், அவரை சிபாரிசு செய்தவர் யார் என்று  அனைத்து விவரங்களையும்  ஒழுங்காக ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதியாக வேண்டும்.

போலீஸ் டைரி என்றே சொல்வார்கள். ஒவ்வொருவரும் தமக்கு ஒதுக்கப்படும் பணிகளைத் துல்லியமாக நோட்டுப்புத்தகத்தில் குறிப்பிட்டாக வேண்டியது அவசியம்.

சப் இன்ஸ்பெக்டர்கள் ஒழுங்காகக் கடமையைச் செய்கிறார்களா என்று உள்ளூர் எஸ்.பி கவனிக்க வேண்டும்.

ஆனால் அத்தனை ஹைஅலர்ட் தரப்பட்டு செக்யூரிடிக்கு நாநூறு பேரைப் போட்டு நடத்தப்படும் பொதுக்கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டர், சற்றும் பொறுப்பில்லாமல் ஒரு துண்டுச் சீட்டில் மாலை போடுகிறவர்கள் பெயர்களை மட்டும் கிறுக்கி வைத்திருந்தார்!

ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொள்ளும்  ஒரு நிகழ்ச்சியில் முப்பது நாற்பது பேர் மாலையிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

சும்மா குப்புசாமி, கோவிந்தசாமி என்று பெயர்களைக் கிறுக்கி வைப்பதால் என்ன பயன்? பின்னால் பிரச்னை என்று வரும்போது யாரைத் தேடிப்போய் எப்படி விசாரிப்பது?

அப்புறம் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று பக்கம் பக்கமாக ஐ.பி. ரிப்போர்ட் அனுப்பி என்ன பிரயோஜனம்?

மாநில போலீஸ் என்றில்லை. பொதுவாக அரசு இயந்திரம் செயல்படும் லட்சணம், பெரும்பாலும் இதுதான்!

இங்கு மட்டுமல்ல. அநேகமாக தேசம் முழுவதுமே. 1984ம் வருடம் ஜூன் மாதம் 19ம் தேதி அன்று டெல்லியில் இண்டெலிஜென்ஸ் ப்யூரோ அதிகாரிகளின் உயர் மட்டக் கூட்டம் ஒன்றில் ஒரு விஷயம் பேசப்பட்டது.

IndiaTv381462_gandhi1 "ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13) IndiaTv381462 gandhi1இந்திரா காந்தி 

சீக்கியர்களால் இந்திரா காந்திக்கு ஏதாவது அபாயம் நேரலாம் என்று அந்தக் கூட்டத்தில் எச்சரிக்கை செய்தார்கள். இதைக் கேட்டதுமே கோபமுற்று மான்சிங் என்றொரு ஐ.பி.எஸ். ஆபீசர் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போனார்.

பல சீக்கியக் காவல் துறை அதிகாரிகளும்  ஊழியர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யும் விதமாக டிபார்ட்மெண்டுக்குள் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள்.

ஒருவாறு அதையெல்லாம், வெளியே தெரியாதவாறு அடக்கிவிட்டார்கள் என்றாலும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமானதொரு முடிவு இந்திரா காந்தி பாதுகாப்புக்கு இதுநாள் வரை நியமிக்கப்பட்டிருக்கும் அத்தனை சீக்கியர்களையும் உடனடியாகப் பணிமாற்றம் செய்ய வேண்டும் என்பது.

அவரது வீடு, அலுவலகம் இரண்டு இடங்களிலும். அதன்படி இந்திரா காந்தி வீட்டில் இருந்த சீக்கியக் காவலர்களை இடம் மாற்றி உத்தரவுகள் அனுப்பப்பட்டுவிட்டன.

பல்பீர் சிங் என்றொரு சப் இன்ஸ்பெக்டர் அப்போது அப்பணியில் இருந்தார். அவர் தனது பணிமாற்ற உத்தரவை எடுத்துக்கொண்டு நேரே ஆர்.கே. தவானிடம் சென்றார்.

‘எத்தனை நாளாக நான் இந்தப் பணியில் இருக்கிறேன்! மேடமுக்கு ஒரு கெடுதல் செய்ய நினைப்பேனா? இப்படி அசிங்கப்படுத்துகிறார்களே! நீங்களாவது கேட்கக் கூடாதா?’ என்று முறையிட்டார்.

தவான் யோசித்தார். அடடா, அப்படியா உத்தரவிட்டிருக்கிறார்கள்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அந்த சப் இன்ஸ்பெக்டரை அனுப்பிவிட்டு, Put them all back என்று உத்தரவைத் திருத்த உத்தரவிட்டுவிட்டார்!

தவானே எடுத்துச் சொன்னபடியால் இந்திரா காந்தியும் அதைக் கண்டுகொள்ளாமல்  இருந்துவிட்டார்.

இத்தனைக்கும் 81ல் இந்திரா ஆட்சிக்கு வந்த சமயம் தவான் அத்தனை ஒன்றும் அவருக்கு நெருக்கமானவரில்லை.

முன்பொரு காலத்தில் – 1977க்கு முன்னர் தவானுக்கு இந்திரா குடும்பத்துடன் இருந்த நெருக்கத்துடன் ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

உடனிருப்பவரின் விருப்பம் என்கிற அளவில் மட்டுமே இந்திரா தவானின் கருத்துக்கு அப்போது உடன்பட்டார்.

உளவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் ஒரு விஷயம் பேசப்படுகிறது. உடனடி நடவடிக்கை கோரப்படுகிறது.

உத்தரவும் அனுப்பப்படுகிறது. அதைப் பிரதமர் அலுவலகப் பிரமுகர் ஒருவர் மாற்றி அமைத்துவிட முடிகிறது!

ஐ.பி. இயக்குநர் என்பவர் தினசரி பொழுது விடிந்ததும் பிரதமரை அவரது வீட்டில் சந்தித்துப் பேசக் கடமைப்பட்டவர்.

நேரடியாக அவர் இந்திராவிடம் பிரச்னையை எடுத்துச் சொல்லி, சீக்கியர்களை மாற்றச் சொன்னதன் அவசியம் பற்றி விளக்கியிருக்க முடியாதா?

ஏன் செய்யவில்லை? பின்னால் அதற்கு எத்தனை பெரிய விலை கொடுக்கவேண்டியதாகிப் போனது!

இந்தச் சம்பவத்தை இங்கே நினைவுகூர்ந்ததன் காரணம், ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபெரும்புதூரில் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதற்காக.

ஐ.பி. இயக்குநர் வரைக்கும் அதே வித மனோபாவம்தான் வேரோடியிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காக.

அலட்சியம். ஒவ்வொரு முறையும் அதற்கு நாம் கணிசமான விலை கொடுத்து வந்திருக்கிறோம்.

இந்திரா படுகொலைக்குப் பிறகு நியமிக்கப்பட்ட தாக்கர் கமிஷனில் தவான் மீது சந்தேகம் எழுப்பப்பட்டு இந்த விவகாரத்தை ஆராயச் சொல்லிக் கோரப்பட்டது.

உண்மையில் தவான் உள்நோக்கம் ஏதுமின்றித்தான் சீக்கியக் காவலர்கள் இந்திராவின் பாதுகாப்புப் பணியில் தொடரலாம் என்று சொல்லியிருப்பார்.

பிரச்னையின் தீவிரத்தை உணராததும் உளவுத்துறையின் எச்சரிக்கையை மதிக்காததும்தான் அவர் செய்த பிழைகள்.

இதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

1977 சமயத்தில் இந்திரா காந்திக்கு எதிரான வழக்குகளை ஜனதா அரசு ஒன்றன்பின் ஒன்றாக எங்களிடம் அனுப்பிவைத்துக்கொண்டிருந்த சமயத்தில், தவானை நான் சந்தித்திருக்கிறேன்.

இந்திராவுக்கு எதிராக அவர் அப்ரூவராக வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்பதற்காக அந்தச் சந்திப்புகள் நிகழ்ந்தன. ‘என்ன ஆனாலும் சரி. இந்திரா காந்தி எனக்கு என் தாயைப் போன்றவர்.

அவருக்கு எதிராகக் கனவிலும் என்னால் சாட்சி சொல்ல முடியாது’ என்று சொல்லிவிட்டவர் அவர். இந்திராவும் தன் மூத்த மகன் ராஜிவிடம் காட்டிய அன்பைத்தான் அவரிடமும் காட்டினார்.

7 "ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13) 7

ராஜிவும் தவானும் மிக நெருங்கிய தோழர்கள். ஆனால் ஐ.பி. சொன்னபடி சீக்கியக் காவலர்களால்தான் இந்திராவின் உயிர் பறிக்கப்பட்டது என்பதனால் தவானைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துவிட முடியாது.

மீண்டும் அலட்சியம் மற்றும் உளவுத்துறையின் எச்சரிக்கையைப் புறக்கணித்த தவறுகள் மட்டும்தான்! ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்துக்கும் இதே காரணம்தான். அலட்சியம். பல மட்டங்களில். பல விதமாக. பலவேறு நபர்கள் காட்டிய அலட்சியம். பார்க்கலாம்.

ஆறாவது நபர்

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கைப் புலனாய்வு செய்யும் அதிகாரியாக நான் சென்றபோது, குற்றவாளிகள் விடுதலைப் புலிகள்தாம் என்று ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்ததைக் காட்டிலும் நமது நிர்வாகத் தளங்களில் புரையோடிப் போயிருக்கும் அலட்சிய மனோபாவம், பொறுப்பற்ற தன்மை, எதிலும் மேம்போக்கான அணுகுமுறை, உயரதிகாரிகளின் திடுக்கிடச் செய்யும் சில முடிவுகள், அரசியல் சூழ்ச்சிகள், ரகசிய பேரங்கள் போன்றவற்றை நேருக்கு நேர் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்ததை மிக முக்கியமாகக் கருதுகிறேன்.

பணியிலிருந்து ஓய்வு பெற்று வருடங்கள் ஆகிவிட்ட பிறகும், இன்னமும் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும் விஷயம் இது. மாபெரும் ஜனநாயக தேசம் என்று மார் தட்டிக்கொள்கிறோம்.

அடிப்படை ஒழுக்கங்களில் பெரும்பாலும் கோட்டை விட்டுவிடுகிறோம்!

அன்றைக்கு, 21ம் தேதி மாலை நடைபெற்ற சம்பவங்களிலிருந்தே மீண்டும் தொடங்குகிறேன். ராஜிவ் காந்தி விசாகப்பட்டணத்திலிருந்து புறப்படுவதற்குத் தாமதமாகிறது.

ஏதோ ரேடார் கோளாறு. ஆறு மணிக்கு இங்கே  வந்து சேர்ந்திருக்க வேண்டியவர், ஆறு மணிக்குத்தான் அங்கே புறப்படுகிறார்.

இந்தத் தகவல், ஸ்ரீபெரும்புதூருக்கு எப்போது வந்திருக்க வேண்டும்? ராஜிவ் வருகிறார், வருகிறார், வந்து விடுவார், வந்துகொண்டே இருக்கிறார் என்று அரசியல்வாதிகள் சொல்வது போலத்தான் காவல் துறையினரும் காத்திருந்திருக்கிறார்களே தவிர, யாருக்கும் தகவல் தெரியாது.

மொபைல் போன்கள் புழக்கத்துக்கு வராத காலம்தான். ஆனாலும் தகவல் தொடர்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது?

போலீஸ் வயர்லெஸ் என்ன ஆனது? போன் செய்து கேட்டிருக்கலாமே? சென்னையிலிருந்து ஆந்திர மாநிலக் காவல் துறையின் மூலம் தொடர்பு கொண்டிருந்தால் சொல்லியிருப்பார்களே, விமானக் கோளாறு பற்றியும், புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும்? நூற்றுக்கணக்கான போலீசாரும் மாநில காவல்துறை அதிகாரிகள் பலரும் ஸ்ரீபெரும்புதூரில்தான் அன்று முழுதும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

ஒருவருக்காவது இந்தத் தாமதத்தின் காரணம் தெரியாது என்பதுதான் விஷயம்.

இதே இடத்தில் இன்னொன்றைக் குறிப்பிட வேண்டும். சம்பவம் நடந்த இடத்தில் அன்று மாலை சுமார் ஏழு மணி முதல் இரவு பத்தரை மணிவரைக்கும் சுற்றிக்கொண்டிருந்த சிவராசன் தன் பாக்கெட்டில் ஒரு சிறிய போட்டோ ஸ்டுடியோ கவர் வைத்திருந்திருக்கிறார்.

இது எங்களுக்குப் பின்னால் கிடைத்த ஓர் ஆதாரம். கொடுங்கையூர் ஜெயக்குமார் வீட்டில்  இருக்கும்போது எடுத்த பாஸ்போர்ட் போட்டோக்கள் சில அந்த கவருக்குள் இருந்தன.

அந்த உள்ளங்கை அளவே இருந்த கவரின் பின்புறம் பொடி எழுத்தில் சில விவரங்கள் எழுதியிருப்பதை நாங்கள் பார்த்தோம். ராஜிவ் புறப்படும் நேரம் 4.30 – சென்னையை அடையும் நேரம் 6 மணி என்று எழுதியிருந்தது.

அப்படி எழுதியிருந்ததை அடித்துவிட்டு சிவராசன் தன் கையெழுத்தில் எழுதியிருந்தது புறப்படும் நேரம் 6 மணி!

காவல் துறைக்கு மட்டுமல்ல, சிவராசனுக்கும் அன்றைக்கு மொபைல் வசதி கிடையாதுதான். ஆனால் அவர்களது இண்டலிஜென்ஸ் செயல்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் வெட்கப்படாமல் என்ன செய்வது?

kadithammm "ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13) kadithammm1

காவல் துறைக்குத் தெரியாத விஷயம், காங்கிரஸ்காரர்களுக்கும் தெரியாத விஷயம், சிவராசனுக்குத் தெரிந்திருக்கிறது!

சிவராசன் பதுங்கியிருந்த கொடுங்கையூர் ஜெயக்குமார் வீட்டின் சமையல் அறையில் புதைத்து வைத்த பொருள்களில் அவரது டைரியும் ஒன்று.

அந்த டைரியை வாசித்தபோது இன்னும் பல அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்கள் கிடைத்தன. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்துகள், வெளியூர்களிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியே சென்னைக்குச் செல்லக்கூடிய பேருந்துகள், இரவு பதினொரு மணிக்குப் பிறகு என்னென்ன, அவற்றின் வழித்தட எண்கள், எந்த வண்டி எத்தனை மணி, எத்தனை நிமிடத்துக்கு ஸ்ரீபெரும்புதூரைக் கடக்கும் என்று வரிசையாக, சுத்தமாக எழுதி வைத்திருந்தார்!

வந்த காரியம் முடிந்த பிறகு தப்பிச் செல்வதற்கான வழிகள் வரை தீர்மானமாக யோசித்து, தகவல் திரட்டி, கையோடு வைத்திருந்திருக்கிறார்!

இந்த முன்னேற்பாடும் முன்னெச்சரிக்கையும் நமது காவல் துறைக்கும் உளவுத்துறைக்கும் அல்லவா இருந்திருக்க வேண்டும்?

Last-moments-of8865 "ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13) Last moments of8865ஏராளமான சிறு இரும்புக் குண்டுகள் அடைக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸை ஒரு பெண் இடுப்பில் கட்டிக்கொண்டு பொதுக்கூட்டத்துக்கு வந்திருக்கிறாள்.

பெரிதாக எந்த செக்யூரிடி சோதனையும்கூட வேண்டாம். கூட்டத்துக்கு வருகிறவர்களை சும்மா ஒரு மெட்டல் டிடெக்டர் வைத்து ஒரு தடவு தடவி அனுப்பியிருக்க முடியாதா?

அது அலறியிருக்குமே? காட்டிக்கொடுத்திருக்குமே? ஏன் செய்யத் தோன்றவில்லை?

RAJIV_SEP_9_1 "ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13) RAJIV SEP 9 1

சிவராசன் ஒரு துப்பாக்கி வைத்திருந்தாரே? அது மாட்டியிருக்குமல்லவா? அவர் ஒரு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்தார்.

தமிழகக் காவல் அதிகாரிகளுக்குத் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களை அடையாளம் தெரியாதா? அத்தனை முக்கியமான தலைவர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் முன் வரிசையில் போய் இருக்கப்போகிறவர்களை ஒப்புக்காவது பரிசோதிக்க மாட்டார்களா?

குற்றம் சாட்டுவதல்ல என் நோக்கம்.

அனைத்து மட்டங்களிலும் பரவியிருக்கும் அலட்சியம் எப்படிப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே இதனைக் குறிப்பிடுகிறேன்.
கீழ்த்தளத்தில் அலட்சியம் என்றால், மேலிடங்களில் பூசி மழுப்பல் மற்றும் மூடி மறைத்தல்.

இதையும் பார்த்தேன். ஹரி பாபு எடுத்த அந்தப் பத்து புகைப்படங்கள்தாம் இந்த வழக்கின் ஒரே பெரிய சாட்சி என்பதையும் அதன் அடிப்படையில்தான் விசாரணையே ஆரம்பமானது என்பதை முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

அந்தப் படங்கள் சி.பி.ஐ வசம் வருவதற்கு முன்னால் ஹிந்து பத்திரிகைக்குச் சென்றுவிட்ட மர்மத்தையும் சொல்லியிருந்தேன்.

அது எப்படிப் போனது? இது குறித்து என்ன விசாரணை நடந்தது? சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டது? ராஜிவ் காந்தி கொலை வழக்கின் பரபரப்பில் இந்த மிக முக்கியமான தவறு மறைக்கப்பட்டுவிட்டது வருத்தத்துக்குரிய விஷயம்.

கே. ரகோத்மன்

தொடரும் 

நன்றி : தொகுப்பு :கி.பாஸ்கரன்சுவிஸ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s