சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 14

விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளும் தாக்கங்களும்

விடுதலைப்  புலிகளின்  இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளும் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-14)

ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கம் புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனைகள் குறித்து பதிலளிக்கும் பொருட்டு குறிப்பாக அரசியல் அமைப்பிற்கு பொருத்தமான வகையில் அவ் யோசனைகளை இணைக்கும் பொருட்டு அரசியல் அமைப்பு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ரணில், சட்ட மா அதிபர் கமலசபேசன் ஆகியோர் இலண்டன் சென்றனர்.

பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக வெளியேறியுள்ளதாக அறிவித்த புலிகள் அரசின் புதிய யோசனைகள் புதிய வாய்ப்பைத் தரலாம் எனக் காத்திருந்தனர்.

இவ்வேளையில் இலண்டனில் பாலசிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்த எரிக் சோல்கெய்ம் ரணிலையும் சந்தித்து விபரங்களை அறிந்து அவற்றையும் பாலசிங்கத்திற்குத் தெரிவித்து வந்தார்.

அதாவது அரசாங்கத்தின் அணுகுமுறைகளின் அடிப்படைகள் எவ்வாறு அமையப்போகிறது? என்பதை சோல்கெய்ம் மறைமுகமாக பாலசிங்கத்திற்கு உணர்த்தி வந்தார்.

அரசின் போக்கின் தாற்பரியத்தை நன்கு உணர்ந்துகொண்ட பாலசிங்கம் மீண்டும் தமது பழைய பல்லவியைப் பாடத் தொடங்கினார்.

அதாவது பேச்சுவார்த்தைக்கான கோட்பாடுகள், பாதைகள், மைல்கற்கள், வழிகாட்டிகள் என்பன ஓர் கற்பனையிலுள்ள தீர்வை நோக்கிய அணுகுமுறைகள் எனவும், பதிலாக யதார்த்தத்தில் கள நிலவரங்களை மேம்படுத்துவதற்கான அம்சங்களைப் பேச்சுவார்த்தைகள்  தொடரவேண்டும்  என வற்புறுத்தத் தொடங்கினார்.

இத் தருணத்தில் அதாவது 2003ம் ஆண்டு யூன் 27ம் திகதி சுமார் 30,000 மக்கள் பிரபாகரனின் உருவப்படத்தைத் தாங்கிய வண்ணம் ‘பொங்கு தமிழ்’ என்ற பெயரில் பெரும் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தினர்.

050901killinochchiS  விடுதலைப்  புலிகளின்  இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளும் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-14) 050901killinochchiS

1995 இல் ராணுவம் யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்றிய பின் இடம்பெற்ற மிகப்பெரிய கூட்டமாக அது அமைந்திருந்தது. மிக அமைதியாக அக் கூட்டம் நடைபெற்றது.

அதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துவதாக வெளியில் காட்டப்பட்ட போதிலும் அவை புலிகளால் வழிநடத்தப்பட்டதாகவும், அவர்களின் நோக்கங்களை வெளிப்படுத்துவதாகவும் காணப்பட்டது.

அரச தரப்பில் புலிகளின் இடைக்கால யோசனைகளைத் தீவிரமாக ஆலோசிப்பதாக காணப்பட்டது.

அதன் பிரகாரம் 2003ம் ஆண்டு யூலை மாதம் 17ம் திகதி அரசு ‘வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாக கட்டுமானம்’ என்ற பெயரில் தனது யோசனைகளை நோர்வே மூலமாக கிளிநொச்சிக்கும், லண்டனில் பாலசிங்கத்திற்கும் அனுப்பி வைத்தார்கள்.

இவ் இடைக்கால நிர்வாக கட்டுமானத்தில் புலிகளின் அங்கத்தவர்களே பெரும்பான்மையாக இருப்பர்.

அக் காலகட்டத்தில் செயற்பட்ட பிராந்திய நிர்வாகத்தின் அதிகாரங்களை பொலீஸ், பாதுகாப்பு, காணி, நிதி நீங்கலாக ஆனால் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள் குடியேற்றம் எனபனவற்றை இந் நிர்வாகம் கொண்டிருக்கும்.

இவ் யோசனைகள் குறித்த தமது ஏமாற்றங்களை தமிழ்ச்செல்வன் மட்டக்களப்பில் யூலை 27ம் திகதி நடைபெற்ற பகிரங்க கூட்டத்தில் வெளியிட்டார்.

இருப்பினும் தமது அரசியல் அமைப்பு நிபுணர்கள் அவ் யோசனைகளை பிரான்ஸ் தலைநகரான பாரிசில் ஆழமாக பரிசீலித்து வருவதாகவும், மாற்று யோசனைகளை முன்வைப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசனைக் குழுவினர் பிரான்சில் ஆகஸ்ட் 23 முதல் 26 வரையான மூன்று நாட்கள் ஆலோசனை நடத்தினர்.

இவ் ஆலோசனைகளின் போது தமிழ்ச்செல்வன், புலித்தேவன், கருணா என்போருடன் எரிக்சோல்கெய்ம், கனடா ரொறன்ரோ முன்னாள் தலைவர் பொப் றே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவற்றின்போது பாலசிங்கம் தவிர்க்கப்பட்டிருந்தார். இதற்கான பிரதான காரணம் அவரின் அணுகுமறையில் காணப்பட்ட மென்மைப்போக்கு எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

புலிகளின் பிரான்ஸ் சந்திப்பின் முடிவில் யோசனைகள் தயாரிக்கப்பட்ட போதிலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் அவை சமஷ்டி அடிப்படையிலான தமது கட்டப்பாட்டுப் பிரதேசத்தின் நிலமைகளைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அரசின் யோசனைகள் மிகக் குறைந்த தீர்வுகளைக் கொண்டிருப்பதாகவும், புலிகளின் யோசனைகள் அதிக பட்ச தீர்வுகளைக் கொண்டிருந்ததாகவும் அரசியல் அவதானிகள் அப்போது தெரிவித்தனர்.

இப் பின்னணியில் ஜே வி பி இனர் தெற்கில் புலிகளின் பிடியிலிருந்து தாய் நாட்டைக் காப்பாற்றுங்கள், சமஷ்டி இப் பிரச்சனைக்குத் தீர்வு அல்ல எனக் கோரி பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பாரிஸ் சந்திப்பிற்கு 6 வாரங்களின் பின்னர்  இதே குழுவினர் அயர்லாந்தில்   இரண்டாவது தடவையாக சந்தித்தனர்.

இச் சந்திப்பின்போது வெளியான தகவல்கள் புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் எவ்வாறு புலிகளைப் பேச்சுவார்த்தைகளில் இறுக்கமான போக்கிற்கு தள்ளினார்கள்? என்பது தெளிவாகியது.

இது குறித்து பிரித்தானியாவைச் சேர்ந்தவரும், அயர்லாந்து சந்திப்பினை ஏற்பாடு செய்தவரும், இப் பிரச்சனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பீற்றர் போலிங் ( Peter Bowling) கூறுகையில் 2003ம் ஆண்டு தாம் வன்னிக்குச் சென்று புலிகளைப் பேச்சுவார்த்தையில் மீண்டும் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாகவும்,

அப்போது  அவர்கள்  அரசியல்  அமைப்பு  விவகாரங்களில் காட்டிய ஆர்வத்தை விட புலம்பெயர் மக்களைச் சந்திப்பது, பணம் திரட்டுவது என்பதே அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான காரணமாக புலப்பட்டது எனவும்….,

ஓரு சில குறிப்பிட்ட அம்சங்களைத் தவிர அவர்களது அரசியல் நோக்கங்களை அரசியல் அமைப்பு வழிகளில் மேலும் விருத்தி செய்யவில்லை என தாம் அவர்களுக்கு உணர்த்தியதாகவும், ஒரு அரசியல் கட்சியாக செயற்படுமாறும், அரசியல் அமைப்பில் எவ்வாறான மாற்றங்கள் தேவை? எனத் தான் கோரியதாகவும் தெரிவித்திருந்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளாகவே வன்னியிலிருந்து தொலைபேசி அழைப்பு தனக்குக் கிடைத்ததாகவும், பிரான்ஸிலுள்ள புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நிகழ்த்த விரும்புவதாகவும், அதில் ஒன்றினை அயர்லாந்தில் நடத்தவும் யோசனை தெரிவித்திருந்தனர்.

அதன் பிரகாரம் அயர்லாந்தில் நான்கு நாட்கள் ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளிலுள்ள சிறந்த அரசியல் அமைப்பு நிபுணர்களை அங்கு அழைத்து விவாதித்தனர்.

அப் பேச்சுவார்த்தைகளில் தமிழச்செல்வன் சிங்கள மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வினை அடைய தீவிரமாக ஈடுபட்டதோடு ஆங்கில மொழி மூலம் உரையாடியதாகவும் குறிப்பிடுகிறார்.

இப் பேச்சுவார்த்தைகளின் போது புலம்பெயர் அமைப்புகள் அப் பேச்சுவார்த்தைகளில் அதிக ஆர்வம் கொண்டிருக்காதது புலப்பட்டதாகவும் கூறுகிறார்.

இப் பின்னணியில் புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனைகள் 2003ம் ஆண்டு அக்டோபர் 31ம் திகதி வெளியிடப்பட்டன.

Geneva-II-Talks  விடுதலைப்  புலிகளின்  இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளும் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-14) Geneva II Talks

இவ் யோசனைகள் குறித்த பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ்ச்செல்வன் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் கவனத்திற்குரியதாக இருந்தது.

அதாவது அரசின் இடைக்கால நிர்வாக யோசனைகளுக்கு மாற்றுத் திட்டமாக இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை முன்வைத்த தமிழச் செல்வன் இவ் யோசனைகளை அரசு அரசியல் அமைப்பிற்கு அப்பாலிருந்து பார்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இக் கூற்று மிகவும் தெளிவாகவே அவ் யோசனைகள் அரசியல் அமைப்பிற்கு அப்பால் செல்வதாகவே காணப்பட்டன. புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நிர்வாகத்தில் முஸ்லீம்களுக்கும், சில இட ஒதுக்கீட்டை வழங்கியதோடு நிதி, நீதி, சட்டத்துறை, சட்டம் ஒழுங்கு என்பனவற்றை பராமரிக்கும் சுயாதீனமாக இயக்கும் ஓர் நிர்வாகமாகவே அது வரையறுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நிதி உதவிகளை எதிர்பார்த்து இப் பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு புலிகளின் இவ் யோசனைகளை உடனடியாக நிராகரிக்கவில்லை.

நிபுணர்களிடம் கையளித்து ஆலோசனைகளைப் பெறப் போவதாகவும் அதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வருமாறு தெரிவித்தனர்.

மறு பக்கத்தில் ரணில் அரசு பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்கியது. ஜனாதிபதி சந்திரிகா அடிப்படையில் அதிகார பரவலாக்கலை ஆதரித்த போதும் புலிகளின் யோசனைகள் அவற்றிற்கு அப்பால் சென்றுள்ள நிலையில் தனது கட்சியுடன் கலந்து பேசப்போவதாக தெரிவித்தார்.

புலிகளின் இவ் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் முற்றிலும் சுயாதீனமாக இயங்கும் ஓர் அமைப்பாகவும், சமஷ்டி குறித்த எந்த அம்சமும் அங்கு காணப்படவில்லை எனவும் அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் வெளியிட்டனர்.

புலிகள் தமது யோசனைகளை வெளியிட்டதை வரவேற்ற அமெரிக்கா, இரு சாராரும் பேச்சவார்த்தையில் ஈடுபட்டு பேசித் தீர்க்கவேண்டுமென வற்புறுத்தியது.

தொடரும்

 Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட   TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s