மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : பாகம் 19

குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு!

அந்தக் கணமே குண்டு வெடித்தது!!

குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு!! : அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –19)

ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, வாங்கி வைத்துக்கொண்டார். நளினியும் சுபாவும் மல்லிப்பூ வாங்கிக்கொண்டார்கள்.

முதலில் சாப்பிட்டு விடலாம் என்று சொல்லி, சிவராசன் அவர்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அது ஒரு முனியாண்டி விலாஸ்.

ஏனோ அந்த ஹோட்டல் வேண்டாம் என்று அனைவருமே நினைக்க, அக்கம்பக்கத்தில் விசாரித்து இன்னொரு முனியாண்டி விலாஸ் அதே ஊரில் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே சென்றார்கள். திருப்தியாக பிரியாணி சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடித்ததும் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த மைதானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காந்தி சிலையருகே வந்தபோது சற்று நேரம் நின்றார்கள்.

யார் யார் என்ன செய்யவேண்டும் என்று இறுதியாக ஒருமுறை பேசிக்கொண்டார்கள்.

p30  குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு!! : அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –19) p30

தணுவின் சல்வார் கம்மீஸ் ஆடைக்குள் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது. இரண்டு விசைகள் கொண்ட வெடிகுண்டு. மாலை போடத் தயாராகும்போது அவர் முதல் விசையை அழுத்திவிட வேண்டும். குண்டு வெடிக்கத் தயாராகிவிடும்.

அது தயாராகிவிட்டது தெரிந்ததும் தாமதிக்காமல் குனிந்து, அடுத்த விசையை அழுத்திவிட வேண்டும். தணு தன் வயிற்றைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். ‘நான் தான் பொருத்திவிட்டேன்’ என்று சுபா சொன்னார்.

அனைவருமே பதற்றமுடன் இருந்தார்கள். ஹரி பாபு, தணு ராஜிவுக்கு மாலை இடுவதையும் குண்டு வெடிப்பதையும் போட்டோ எடுக்க வேண்டும்.

தணு, ராஜிவை நெருங்கும் கணத்துக்கு முன்வரை அவரையும் சுபாவையும் அடைகாக்க வேண்டிய பொறுப்பு நளினியுடையது. அவ்வண்ணமே, குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் சுபாவை பத்திரமாகக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தி வெளியே அழைத்து வரவேண்டியதும் நளினியின் பொறுப்பு.

எப்படியும் களேபரமாகும். அனைவரும் சிதறி ஓடுவார்கள். அந்த இடைவெளியில் தப்பித்து விட வேண்டும்.

இந்திரா காந்தி சிலை அருகே பத்து நிமிடங்கள் நளினியும் சுபாவும் காத்திருக்க வேண்டும். சிவராசன் அங்கே வந்துவிடுவார்.

ஹரி பாபுவும் உடன் வந்துவிடுவார். பிறகு நால்வரும் தப்பித்துவிடலாம். ஒருவேளை சிவராசன் வரத் தாமதமாகிவிட்டால், மேற்கொண்டு காத்திருக்காமல் மற்றவர்கள் ஒன்றாகத் தப்பிச்சென்று விட வேண்டும் என்பது திட்டம்.

அந்த இடத்தில், அந்தச் சதித்திட்டத்தில் தாங்கள் ஐந்து பேர் மட்டுமே பங்குகொண்டிருப்பதாக நளினி நினைத்தார்.

ஆனால் ஆறாவதாகவும் ஒரு நபர் அங்கே இருந்த விஷயம் அவருக்கு மட்டுமல்ல. இந்த வழக்கின் புலன் விசாரணை முழுவதுமாக முடிகிறவரை சி.பி.ஐக்குக் கூடத் தெரியாது!

இந்திரா காந்தி சிலையருகே நின்று பேசிவிட்டு அனைவரும் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஹரி பாபுவும் சிவராசனும் தனித்தனியே மேடையை நோக்கிப் போக, சுபா, தணு, நளினி மூவரும் பெண்கள் பகுதியில் சென்று அமர்ந்துகொண்டார்கள்.

மேடையில் சங்கர் கணேஷ் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சிவராசன் பெண்கள் பகுதிக்கு வந்து தணுவை மட்டும் அழைத்து அவர் கையில் அந்த பிரவுன் கவரைப் பிரித்து, சந்தன மாலையை எடுத்துக் கொடுத்தார். போய்விட்டார்.

மீண்டும் திரும்பி வந்து, தணுவை மட்டும் அழைத்துக்கொண்டு மேடையின் பின்புறமாகச் சென்றார்.

அங்கே ஹரி பாபுவும் நின்றுகொண்டிருந்தார். ராஜிவ் காந்தி விழா மேடைக்கு வருகிற வழியெங்கும் கூட்டம் இருந்தது.

அவருக்காக விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளப் பாதையின் இருபுறமும் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்தில் தணுவைச் சொருக சிவராசன் முயற்சி செய்தார்.

ஏனெனில், நேரம் மிகவும் ஆகிவிட்டபடியால் மேடையில் அனைவருக்கும் மாலை போட சந்தர்ப்பம் கிடைப்பது சிரமம் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது.

சொல்லி வைத்தமாதிரி லதா கண்ணன், அவரது பெண் கோகிலவாணி (இவள் ராஜிவை வாழ்த்திக் கவிதை பாடக் காத்திருந்தவள்) ஆகியோரும் மகளிர் வரிசையில் நளினிக்குப் பின்னால் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து ராஜிவ் வரும் பாதையை நோக்கிச் சென்றார்கள்.

தணு சில நிமிடங்களில் அந்தச் சிறுமி கோகில வாணியை நட்பாக்கிக்கொண்டு அவளுடன் சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தார். ராஜிவ் வரும் நேரம் நெருங்கிவிட்டதென்றும் மாலையிடப் பெயர் கொடுத்திருப்பவர்கள் சிவப்புக் கம்பளப் பாதை ஓரம் வரிசையாக நிற்கும்படியும் மைக்கில் அறிவித்தார்கள்.

கூட்டம் இன்னும் முண்டியடித்தது. காவலர்கள் நிறையப் பேர் இருந்தாலும் யாரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்கு செய்யவோ விரும்பாத மாதிரி, அவர்களும் பொதுவில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

வாழப்பாடி ராமமூர்த்தி திடீரென்று மேடை ஏறினார். ராஜிவ் வருகிறார் என்கிற அவரது அறிவிப்புக்குக் கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது.

rajiv_sriperambadu001_3-20060627-copy1  குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு!! : அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –19) rajiv sriperambadu001 3 20060627 copy1

இசைக் குழுவினர் நகர ஆரம்பிக்க, ஹரி பாபு தன்னுடைய கேமராவைத் தயார் செய்துகொண்டு தணு நின்றிருந்த இடத்துக்கு ஃபோகஸ் செய்துகொண்டிருந்தார்.

மாலை போடும்போது ஒரு ஸ்னாப். கணப்பொழுதில் பின்வாங்கி, குண்டு வெடித்ததும் இன்னொரு ஸ்னாப். அவ்வளவுதான்.

இங்கே பெண்கள் வரிசையில் அமர்ந்திருந்த சுபாவும் நளினியும் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தார்கள். ராஜிவின் கார் வந்து நிற்பதைப் பார்த்ததுமே அவர்கள் எழுந்து கொண்டார்கள்.

ராஜிவ் சிவப்புக் கம்பளத்தின்மீது நடந்து வரும்போது நளினி சுபாவின் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டார்.

‘வா’ என்று சொல்லிவிட்டுக் கூட்டத்திலிருந்து வெளியே வந்து விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்கள்.

அத்தனை பேரின் கவனமும் ராஜிவின் மீதே இருக்க, அவர் அந்த இரவுப் பொழுதிலும் முகத்தில் களைப்பேதும் இன்றி, மாறாத புன்னகையுடன் கூட்டத்துக்கு வணக்கம் சொல்வதும், கையாட்டுவதும் மாலைகளை வாங்கிக்கொள்வதுமாக முன்னேறி வந்துகொண்டிருந்தார்.

காங்கிரஸ் பிரமுகர் லஷ்மி ஆல்பர்ட் வழியில் நின்று ராஜிவுக்கு வணக்கம் சொல்ல, அவரை அடையாளம் கண்டு ஒருவரி நலம் விசாரித்தார்.

அதைச் சற்றுத் தொலைவில் நின்றிருந்த மரகதம் சந்திரசேகர் கவனித்துவிட்டார். அவருக்கு ஏனோ அது பிடிக்கவில்லை.

முகம் இருண்டுவிட்டது. கூட்டத்தோடு கலந்திருந்த டரியல் பீட்டர்ஸ் சட்டென்று முன்னால் வந்து மரகதம் சந்திரசேகரின் கையைப் பிடித்து அவரை மேடைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினார்.

ராஜிவ் முன்னேறி வரவர, கூட்டம் ஆரவாரம் செய்துகொண்டே இருந்தது.

அவர் சிறுமி கோகிலவாணியின் அருகே வந்தார். குனிந்து கன்னத்தைத் தட்டினார். சிறுமி கவிதை எழுதியிருப்பதை அவளது தாய் ராஜிவிடம் சொன்னார்.

தணு தயாராக இருந்தார்.

ஆனால் மிகவும் பதற்றமாக இருந்தார். கூட்டம் மிகவும் மோதி, முண்டியடிக்க, எந்தச் சிக்கலும் இல்லாமல் காரியம் முடியவேண்டுமே என்கிற பதற்றம். ஒரு முடிவுக்கு வந்தவராக, சட்டென்று முன்வந்து ராஜிவை நெருங்கினார்.

ஹரி பாபு அவர் மாலை போடுவதற்காக ஃபோகஸ் செய்ய, தணு சடாரென்று நெருங்கியதுமே குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார்.

இதனை எதிர்பார்க்காத ஹரி பாபு, படம் எடுக்க முடியாமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் மேலும் முன்னால் வந்து குனிந்து படமெடுக்கப் பார்க்க, அந்தக் கணமே குண்டு வெடித்தது.

கே. ரகோத்மன்

தொடரும் 

நன்றி : தொகுப்பு :கி.பாஸ்கரன்சுவிஸ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s