சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 21

கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!!

கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம்

சுனாமி அழிவுகள், அரசியல் படுகொலைகள் தொடர்ந்த வேளை சர்வதேச அரசுகள் சுனாமி உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசுடன் விவாதித்து வந்தன.

இருப்பினும் ஐ நா செயலாளர் கோபி அனன் அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சுனாமி பாதிப்பு இடங்களைப் பார்வையிட அரசு தடுத்த காரணத்தால் புலிகள் மிகவும் கொதிப்படைந்திருந்தனர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசியல் தடைகள் தொடர்ந்து காணப்பட்ட நிலையில் இறுதியில் மூன்று பிரதான இணைப்பாளர்களைக்கொண்ட பொறிமுறை தயாரானது.

அதற்கு மூன்று சமூகத்தினரையும் சேர்ந்தவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் அடுத்த கட்டுமானத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்ட சபையும், அவ் உறுப்பினர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களைச் சார்ந்தவர்களாகவும், அதில் ஆறு உறுப்பினர்களை புலிகள் தரப்பினர் நியமிப்பதாகவும், மூவர் முஸ்லீம் தரப்பினருக்கும், இரு சிங்களவர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இனக் குழும விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கிலிருந்து ஆறு பேரும், வடக்கிலிருந்து ஐவராகவும் மொத்தமாக 11பேர் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் பற்றியே பேச வேண்டும் என வற்புறுத்தியும், முஸ்லீம் உறுப்பினர்களை நியமிப்பதில்  மிகவும் கடின போக்கினைக் கொண்டிருந்த புலிகள் தற்போது ஓரளவு நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்ததைப் போல அரசாங்கம் நிவாரண  உதவிகள்  அனைத்தையும்  அவர்களிடம்  தரப்போவதில்லை என்ற யதார்த்தம் புரிந்துள்ள நிலையில் அவர்கள் கீழிறங்கிச் சென்றிருப்பதாக கருத்துக்கள் வெளியாகின.

இவ் அபிவிருத்திப் பொறிமுறை சகல பிரதேசங்களுக்கும் சமமான விதத்தில் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் எனவும், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவை தொடரும் எனவும், புலிகள் அமைப்பு அரச கட்டுப்பாட்டிற்குள் இல்லாமையால் அவர்களிடம் பணம் வழங்க முடியாது எனவும் அமைச்சர் கதிர்காமர் தெளிவுபடுத்தினார்.

 

HoMUOmyu  கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம் HoMUOmyu

முன்னாள்  அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன்

2005ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் சுனாமி உதவிகளை மேற்பார்வை செய்யும் ஐ நா சபையின் விசேட தூதுவராக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்ரன் நியமிக்கப்பட்டார்.இந் நியமனம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சர்வதேச முயற்சி என பலர் கருதினர்.

gowsalyan  கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம் gowsalyan

கௌசல்யன்

இப் பொறிமுறை தொடர்பான அறிவித்தலை நோர்வே தரப்பினர் அறிவிக்கும் வேளையில் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் அரச கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து சென்றபோது கடத்தப்பட்டு  07-02-2005 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

இவர் கருணாவின் விலகலைத் தொடர்ந்து அங்கு நியமிக்கப்பட்டிருந்தார். 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின் நடைபெற்ற உயர்மட்ட கொலை என இச் சம்பவம் கருதப்பட்டது.

இக் கொலையின் பின்னணியில் “கருணாவின் தலைமையிலான தமிழ் தேசிய விசை”  என்ற குழுவே பொறுப்பு எனக் கருதப்பட்டது. இச் சம்பவத்தினை அரச தரப்பினர் உடனடியாக கண்டித்தனர்.

இருப்பினும் அரசு இதன் பின்னயில் இருப்பதாக புலிகள் குற்றம் சாட்டினர்.

இப் பின்னணியில் எரிக் சோல்கெய்ம் அபிவிருத்திக்கான பொறிமுறை திட்டத்துடன் கிளிநொச்சி சென்றார். சமாதான முயற்சிகளை மேலும் பலப்படுத்த இத் திட்டம் உதவும் என அவர் தெரிவித்தார்.

இருப்பினும் கௌசல்யனின் கொலை புலிகள் தரப்பில் சமாதானத்தின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்திருந்தன. ஏனெனில் அரசு மறைமுகமாக தம்முடன் போர் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் கருதினர்.

ஆனாலும் அரசாங்கம் தமக்குள் பெரும் நெருக்கடியை சமாளிக்க வேண்டியிருந்தது.

அதாவது ஒரு புறத்தில் அபிவிருத்தி பொறிமுறை தொடர்பாக புலிகளைச் சம்மதிக்க வைப்பது அடுத்தது ஜே வி பி இனரின் கெடுபிடிகள்.

குறிப்பாக அபிவிருத்திப் பொறிமுறையில் புலிகள் இணைவது குறித்து தமது கடுமையான எதிர்ப்புகளை அவர்கள் வெளிப்படுத்தினர். புலிகள் தரப்பினர் வடக்கு, கிழக்கு இணைந்த ஒன்றாக அப் பொறிமுறையில் கருதப்பட வேண்டுமென வற்புறுத்திய போது அரசு தரப்பினர் தனித்தனியாக இருக்கவேண்டுமென வற்புறுத்தினர்.

கௌசல்யனின் படுகொலை குறித்து அரசாங்கம் நியமித்திருந்த விசாரணைக்குழு தனது விசாரணைகளை மார்ச் பிற்பகுதியில் ஆரம்பித்திருந்தது.

இவ் விசாரணையின் போது தமக்கும் இப் படுகொலைக்கும் சம்பந்தம் இல்லை எனவும், தமது பகுதியிலிருந்து கருணா தரப்பினர் செயற்படவில்லை எனவும் ராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால் மட்டக்களப்பின் கண்காணிப்புக் குழுத் தலைவரின் கருத்துப்படி கருணா தரப்பினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்ததை உறுதிப்படுத்தினார்.

அதற்குச் சாட்சியமாக பொலநறுவைப் பகுதியிலுள்ள சிங்கள மக்களிடம் அவர்கள் வரி வசூலித்ததாக வெளிவந்த செய்திகளை ஆதாரம் காட்டினர்.

நோர்வேயினால் தயாரிக்கப்பட்ட அபிவிருத்திப் பொறிமுறை யோசனைகளை புலிகள் தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளதாக சந்திரிகாவைச் சந்தித்த நோர்வே தூதுவர் தெரிவித்தார்.

இதனால் அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. ஒரு புறத்தில் ஜே வி பி இனர் அரசாங்கத்தைக் கவிழ்க்கலாம் என்ற நிலமை, மறுபுறத்தில் பொறிமுறையை ஏற்காவிடில் சர்வதேச அளவில் அரசின் பலவீனம் அம்பலமாகிவிடும்.

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அமெரிக்காவின் உதவி ராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரோக்கா மீண்டும் இரண்டாவது தடவையாக இலங்கை வந்தார்.

சுனாமி பொறிமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் ஒரே குரலில் பேச வேண்டும் எனவும் மக்களைத் தொடர்ந்து துன்பத்தில் தள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் புலிகள் தரப்பையும் வேண்டிக்கொண்டார்.

தற்போது எரிக் சொல்கெய்ம் இனது கவனம் கிழக்கு மாகாணத்தை நோக்கி குறிப்பாக முஸ்லீம் மக்களை நோக்கிச் சென்றது.

இணைந்த பொறிமுறைத் திட்டத்தை வகுத்த வேளையில் சுனாமியால் பாதிக்கபட்ட மக்களில் பாதிக்கு அதிகமானவர்கள் முஸ்லீம் மக்களாக இருந்த போதிலும் அம் மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்படவில்லை என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கிம் நேரடியாக அவருக்குத் தெரிவித்தார்.

அப் பகுதியிலிருந்த முஸ்லீம் மக்களில் பெரும்பாலோர் சோல்கெய்ம் இன் வருகையை அவ்வளவாக மதிக்கவில்லை என்பது அங்கு புலனாகியது. சுனாமி அபிவிருத்திப் பொறிமுறையில் தமக்கென தனியான பொறிமுறையின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்க ராஜாங்க உதவி அமைச்சர் கிறிஸ்ரினா ரோக்கா, எரிக் சோல்கெய்ம் ஆகியோர் இலங்கையை விட்டுப் புறப்பட்ட சில நாட்களில் மற்றொரு முக்கியஸ்தர் படுகொலை செய்யப்பட்டார்.

tharaki  கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம் tharaki

சிவராம்

தராக்கி என அழைக்கப்படும் சிவராம் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் மிக மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

10 நாட்களுக்குப் பின்னர் சிங்கள குழு ஒன்று அப் படுகொலைக்கு உரிமை கோரியது. கிழக்கு மாகாணம் சுயமாக இயங்கவேண்டுமென கருணாவை வற்புறுத்தி வந்த சிவராம் காலப் போக்கில் கருணாவை மிகவும் கடுமையாக விமர்ச்சிப்பவராக மாறினார்.

சிங்களக் குழு ஒன்று உரிமை கோரிய போதிலும் கருணாவே ராணுவத்தின் உதவியுடன் இப் படுகொலையை மேற்கொண்டிருக்கக் கூடும் என பிரபல அரசியல் விமர்சகர் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார்.

சுனாமிக்கான இணைப்புப் பொறிமுறை தொடர்பான சர்வதேச அபிவிருத்தி ஒன்றிய மாநாடு கண்டியில் இடம்பெற்ற போது அங்கு 30 லட்சம் அமெரிக்க டொலர் உதவிக்கான ஒப்புதல்கள் கிடைத்தன.

இதனை ஜாதிக கெல உறுமயவினைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் மிகவும் கடுமையாக விமர்ச்சித்ததோடு, விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு அரசு சலுகைகளை வழங்குவதாக குற்றம் சாட்டினார்.

மறு பக்கத்தில் இப் பொறிமுறை என்பது அவ்வளவு பெரிய சங்கதி அல்ல எனவும், இது தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான திட்டம் அல்ல எனவும் தெரிவித்து தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் எனவும், அரசாங்கமும் அதன் படைகளும் இவ்வாறு நடந்து கொள்வார்களாயின் எமது மக்கள் பொறுமையாக இருக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

2005ம் ஆண்டு சிக்கலான காலமாக அமைந்தது.

இந்தியாவின் ஆதரவை பெறும் பொருட்டு சந்திரிகா இந்தியா சென்றிருந்தார். சந்திரிகாவின் அரசின் அமைச்சர்கள், ஜே வி பி போன்றன இப் பொறிமுறைக்கு எதிராக செயற்பட்ட  நிலையில் அவர் அங்கு சென்றிருந்தார்.

அப் பொறிமுறையைச் செயலாக்குவதென அவர் தீர்மானித்திருந்தார். இதனால் ஜே வி பி இனர் 2005ம் ஆண்டு யூன் மாதம் 15ம் திகதி அரசாங்கத்திலிருந்து விலகினர்.

இருப்பினும் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 6 மாதங்களின் பின் அரசிற்கும், புலிகளுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.

இதனை சர்வதேச அரசுகள் வரவேற்றபோது ஜே வி பி இனர் பெரும் ஆர்பாட்டங்களை நடத்தினர்.

விடுதலைப்புலிகள் இலங்கையின் இறைமை அதிகாரத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக இவ் ஒப்பந்தம் இருப்பதாக வெளிவந்த செய்திகளை புலிகள் மறுத்தனர்.

ஓப்பந்த விபரங்களில் சட்டவிரோத அம்சங்கள் இருப்பதாக ஜே வி பி இனர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

அதன் காரணமாக அவ் ஒப்பந்தத்தின் முக்கிய நான்கு அம்சங்கள் குறித்து நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்து அதன் செயற்பாட்டை யூலை 14ம் திகதி நிறுத்தியது.

நீதிமன்ற உத்தரவு அந்த முயற்சியையும் தோற்கடித்தது. சிங்களத் தலைவர்களால் வாக்களித்த எதனையும் நிறைவேற்ற முடியாது என தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

சமாதானம் குறித்த பெரும் எதிர்பார்ப்பிலிருந்த கூட்டுத் தலைமை நாடுகள் பாதுகாப்பு நிலமைகள் மிகவும் மோசமாக செல்லலாம் என எச்சரித்தன.

சகல கொலைகளையும் நிறுத்துமாறு புலிகளை நோக்கியும், துணைப்படைகளின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும்படி அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.

பி ரொம் என அழைக்கப்படும் சுனாமி அனர்த்த நிவாரண பொறிமுறை   நோர்வே தரப்பினரால் தயாரிக்கப்பட்ட போது பெரும் அனுபவங்கள் கிடைத்ததாக அதன் அனுசரணையாளர் ஹன்ஸ் பிறற்ஸ்கர் (Hans Brattskar)   தெரிவித்தார்.

தான் சந்திரிகா அவர்களைச் சந்தித்து அபிவிருத்திக்கான பொறிமுறையை செயற்படுத்துவதற்கு அதிக காலம் எடுப்பதாகவும், அதனைச் செயற்படுத்துவது சாத்தியமாகுமா? என்பது சந்தேகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது போர்நிறுத்த ஒப்பந்தத்தில் பெரும் தவறு நேர்ந்ததாகவும், நாட்டினை அரசியல் ரீதியாக அதற்குத் தயாராக வைத்திருந்திருக்க வேண்டுமென சந்திரிகா தெரிவித்துள்ளார்.

அதற்கு நீங்கள் ஜாதிக கெல உறுமய மற்றும் சில சக்திகளை உங்கள் பக்கம் இழுப்பதை விடுத்து சகலவற்றையும் அவர்கள் இழுத்து வீழ்த்தும் நிலை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Chandri_CI2  கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!!  (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம் Chandri CI2

இவ் ஆபத்துக்களை தாம் தெளிவாக காணக்கூடியதாக இருந்ததாகவும், ஆனால் சந்திரிகா தனது அரசியல் வலிமையால் அவர்களை தனது வழிக்கு எடுக்க முடியும் என நம்பினார் எனவும் குறிப்பிடுகிறார்.

தேசியவாத சக்திகள் இவற்றைக்  குழப்புவார்கள் எனபது ஏன்கெனவே தெரிந்த ஒன்று என்ற போதிலும், உயர் நீதிமன்ற தீர்ப்பும் அதற்குச் சாதகமாக அமைந்ததால் அவர்கள் மக்களுக்கு எது நல்லது? அல்லது சமாதானத்திற்கு எது உபயோகமானது? என்பதை விட அடுத்த தேர்தலுக்கு எது தேவை? என்பதில் அவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர்.

அப்போதைய கால கட்டத்தில் ராஜபக்ஸ ஆதரவாளர்கள் பிரதம நீதியரசர் பி ரொம் பொறிமுறையைச் செயற்படுத்த விடாமல் செய்யக்கூடும் என நம்பிக்கை கொண்டிருந்தாக வதந்திகள் பரவியிருந்தன.

ஏனெனில் அப் பொறிமுறை சாத்தியமாகினால் தனது தேர்தல் வாய்ப்புகளை அது பாதிக்கக்கூடும் என ராஜபக்ஸ எண்ணியிருந்திருக்கலாம்.

மிகவும் திட்டமிட்ட வகையில் மகிந்த ராஜபக்ஸ, ஜே வி பி போன்ற தேசியவாத சக்திகள் பலமான தடைகளை போட்ட காரணத்தால் சந்திரிகாவால் விரும்பிய விதத்தில் செயற்பட முடியவில்லை.

வாசகர்களே,

தற்போதும் அவ்வாறான ஒரு சூழல் நிலவுவதையும் அதன் பின்னால் மகிந்த செயற்படுவதையும் நாம் காண்கிறோம். எனவே சுனாமி பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் மகிந்த இன் அரசியல் எவ்வாறு செயற்பட்டது? என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்

 Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட   TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s