ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 05

ராஜிவ் கொலை வழக்கை புலன் விசாரனை செய்த  அதிகாரி கே ரகோத்மன் அவர்களால் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்ய பட்டு வெளியிடப்பட்ட காணொளி: 1/5

பொதுக்கூட்ட மேடைக்கருகே இன்னமும் சிறிது நேரத்தில் ராஜிவ் காந்தி வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. ராஜிவ் காந்தியை சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டதால், லதா கண்ணனும், அவருக்குப் பின்னால் நின்றிருந்த அவரது மகள் கோகிலாவும் பரபரப்பாக காணப்பட்டனர்.

அனுமதிக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் அவர்கள் முன் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு அருகே, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண் நின்றிருந்தார். அவரது கையில் ராஜிவ் காந்திக்கு அணிவிப்பதற்காக ஒரு சந்தன மாலை காணப்பட்டது.

இப்போது இந்தக் காட்சி வித்தியாசமாகத் தென்படவில்லை.

சரியாக ஒழுங்கு படுத்தப்படாத அந்தக் கூட்டத்தில், ராஜிவ் காந்தியை நேரில் பார்ப்பதற்காக நெருக்கியடித்துக் கொண்டிருந்த மற்றையவர்களில் ஒருவராகவே அந்த சல்வார் கமீஸ் பெண் காணப்பட்டார்.

சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த விபரம் யாருக்கும் தெரியாதவரை, அவருக்கும் மற்றையவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

அப்போது நேரம் இரவு 10.10 மணி.

ராஜிவ் காந்தி மேடையை நோக்கி வருவது தொலைவில் தெளிவாகத் தெரிந்தது. மேடையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த ராஜிவ்காந்தி பொதுமக்களை நோக்கி கை அசைத்தார். அவருடன் காரில் வந்திருந்த இரு வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார் வாழப்படி ராமமூர்த்தி.

வாழப்படி ராமமூர்த்தி, ராஜிவ் பயணம் செய்த காரில் வந்திருக்கவில்லை. ராஜிவ் வந்த காருக்கு பின்னால் வந்த ஜீப்பில், ஒரு விடியோ கிராபருடன் வந்திறங்கியிருந்தார். ராஜிவ் காந்திக்கு கூட்டத்தில் வழியேற்படுத்திக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அகன்று மேடையருகே சென்ற வாழப்படி ராமமூர்த்திதான், முதல் ஆளாகப் பொதுக்கூட்ட மேடையில் ஏறினார்.

வாழப்படி ராமமூர்த்தி மேடையிலிருந்து பார்த்தபோது, சற்றுத் தொலைவில் சவுக்குக்கட்டைத் தடுப்பு வேலி அருகே ராஜிவ் காந்தி செல்வது தெரிந்தது. தடுப்பு வேலிக்கு அப்பாலுள்ள பொதுமக்கள் சிலருடன் ராஜிவ் கை குலுக்குவதும் தெரிந்தது.

வயதான மரகதம் சந்திரசேகரால், காரிலிருந்து சற்று மெதுவாகத்தான் இறங்க முடிந்தது.

அதற்குள் காரிலிருந்து இறங்கி சில மீட்டர் தொலைவுக்கு ராஜிவ் காந்தி நடந்து சென்றுவிட்டார். எனினும், வேக நடையில் ராஜிவ் காந்தி அருகே நெருங்கிவிட்ட மரகதம் சந்திரசேகர், தனது தொகுதி ஆதரவாளர்களை ராஜிவ் காந்தியிடம் அறிமுகப்படுத்த முயன்றார்.

கூட்டத்தினர் மரகதம் சந்திரசேகரை நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர். லோக்கல் கட்சித் தொண்டர் ஒருவர், ராஜிவ்காந்திக்கு சால்வை அணிவித்துவிட்டு போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார். அப்போது அந்தத் தொண்டர் தம் இரு கைகளினாலும் ராஜிவ் காந்தியை பிடித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட மரகதம் சந்திரசேகர், அந்தத் தொண்டரைத் தள்ளிவிட முயன்றபோது, .நிலைதடுமாறி கீழே விழ இருந்தார். அருகிலிருந்த மற்றையவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.

இந்த நிமிடத்தில் யார் பேசுவதும் யாருக்கும் கேட்காத வகையில் ஒரே இரைச்சலாக இருந்தது. யார் பொதுமக்கள், யார் கட்சித் தலைவர்கள், யார் அனுமதி பெற்றவர்கள், யார் அனுமதி பெறாதவர்கள் என்றல்லாம் கண்டுபிடிக்க முடியாத நிலை.

ராஜிவ் காந்தியை சுற்றிலும் சீருடை அணியாத பொலிசார் பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். ஆனால், மக்களின் நெரிசலிலிருந்து ராஜிவ் காந்தியை பாதுகாப்பதே அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.

கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் சூழ மேடையை நெருங்கிவிட்டார் ராஜிவ்காந்தி.

விடியோ கிராபர்களுக்கு, பிரதான மேடைக்கருகே சிறியதாக ஒரு மேடை போடப்பட்டிருந்தது. ஓரளவு உயரமான இடத்தில் இருந்துதான் வீடியோ எடுக்க முடியும் என்பதால்தான் அப்படி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை கவர் பண்ண வந்திருந்த வீடியோ கிராபர்கள் அனைவரும் அந்தச் சிறிய தற்காலிக மேடையில் நின்றிருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் நின்றிருந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. விடியோ கேமெராக்களுக்கான மின் இணைப்பு, அந்த ஓரிடத்திலிருந்துதான் கிடைத்தது.(தற்போது இருப்பது போன்ற பாட்டரி பவர் காம்பாக்ட் வீடியோ கேமெராக்கள் அந்த நாட்களில் கிடையாது. அந்த நாளைய பரொஃபெஷனல் வீடியோ கேமராக்களுக்கு மின் இணைப்பு அவசியம்)

கட்டுப்பாடு இல்லாமல் கூட்டம் அலை மோதியதில், இந்த சிறிய மேடையிலும் பொதுமக்கள் வந்து ஏறத் தொடங்கினர். ஊடகவியலாளர்கள் பொதுமக்களைத் துரத்தினர். இந்த இழுபறியில் எல்லா வீடியோ கேமராக்களும் ஒரே நேரத்தில் திடீரென ஷட்-ஆஃப் ஆகின.

காரணம், அந்தச் சிறிய மேடையில் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு ஏறி இறங்கியதால், விடியோ கேமெராக்களுக்கு வழங்கப்பட்ட மெயின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. (இதனால்தான், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிமிடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் ஏதும் கிடையாது. வெறும் ஸ்டில் போட்டோக்கள் மாத்திரமே இன்று உள்ளன)

மேடையை நோக்கி நடந்துவந்த ராஜிவ் காந்தி, முதலில் ஆண்கள் இருந்த பகுதிக்குச் சென்றார்.

ஆண்கள் பகுதியிலிருந்த கட்சித் தொண்டர்களைப் பார்த்த பின், பெண்கள் பகுதிக்கு வந்த ராஜிவ்காந்தியை அங்கிருந்த கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் வணங்கி வரவேற்றனர்.ராஜிவ் பதிலுக்கு வணக்கம் செலுத்தினார்.

ராஜிவ் காந்தியை வரவேற்க வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த பெண்களில், முன்வரிசையில் தனது தாயுடன் நின்றிருந்தார் கோகிலா. ராஜிவ் காந்தி அவரை நெருங்கியபோது, “ஒரு கவிதை வாசிக்க வேண்டும்” என்று ஹிந்தியில் தெரிவித்தார் கோகிலா.

புன்சிரிப்புடன் ராஜிவ் காந்தி அந்த இடத்தில் தாமதிக்க, தனது ஹிந்தி, மொழி பெயர்ப்புக் கவிதையை ராஜிவ்காந்தியிடம் வாசித்துக் காண்பித்தார் கோகிலா.

அவரது கவிதை முடியும் நேரத்தில்-

கோகிலாவுக்கு பின்னால் நின்றிருந்த கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், ராஜிவ்காந்தியை நோக்கி அடியெடுத்து வைத்தார்.

வரிசையில் நிற்காமல், பின்னாடி நின்றிருந்த பெண் ஒருவர் மாலையுடன் முன்னே வருவதைக் கவனித்து விட்டார் சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா. உடனே வேகமாகச் செயற்பட்ட சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க முயன்றார்.

சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா செய்ய முயன்றதைச் செய்திருந்தால், அன்று கதையே மாறியிருக்கும். ஆனால், விதி வேறு விதமாக இருந்தது.

கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க வேண்டாம் என ராஜிவ்காந்தி சைகை காட்டினார்.
ஒரு கணம் தாமதித்த அனுசுயா, ராஜிவ் காந்தியின் உத்தரவை ஏற்று, அந்தப் பெண்ணைத் தடுக்காமல் இரண்டு அடிகள் பின்னால் எடுத்து வைத்து, நின்று கொண்டார்.

இப்போது கண்ணாடி அணிந்த பெண் நகர்ந்து சென்று ராஜிவ்காந்தி முன்னால் நின்றார்.

ராஜிவ்காந்தியின் கழுத்தில் சந்தன மாலையை அணிவித்தார். பின்னர் அவரது காலைத் தொட்டு வணங்குவதைப் போல அந்தப் பெண் கீழே குனிந்தார்.

இது நடந்தது ராஜிவ்காந்தி குண்டு துளைக்காத காரிலிருந்து இறங்கிய 10 நிமிடங்கள் கழித்து. அப்போது நேரம் இரவு 10.20 மணி.

கண்ணாடி அணிந்த பெண் கீழே குனிந்தவுடன், அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ட்ரிக் செய்யப்பட்டது. ட்ரிக் செய்யப்பட்ட கணத்திலிருந்து சரியாக இரண்டு விநாடிகளில்-

அந்தக் குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது.

அப்போது வெடித்தது கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணின் உடலில் இருந்த குண்டு மாத்திரம் அல்ல. ஈழத் தமிழரின் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டமும், அந்தஒற்றை வெடிகுண்டால் வெடித்துச் சிதறியது.

ராஜிவ்காந்தி நின்றிருந்த இடத்தில் தீயுடன் 20 அடி உயரத்துக்குக் கரும்புகை காணப்பட்டது. புகை தணிந்ததும் பார்த்தால், ராஜிவ்காந்தி நின்றிருந்த இடத்தில் எவரும் உயிருடன் இருந்த அறிகுறியே இல்லை. எங்கு பார்த்தாலும் இரத்தமும், சதைத் துணுக்குகளும் சிதறிக் கிடந்தன.

கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், லதா கண்ணன், கோகிலா, ஹரிபாபு, ராஜிவ்காந்தியின் தனிப் பாதுகாப்பு அதிகாரி உட்பட 15 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் வைத்தியசாலையில் இறந்தனர்.

இறந்தவர்களில் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் முகமது இக்பால் உட்பட 9 பொலிசாரும் அடங்குவர். 44 பேர் காயமடைந்தனர். இவர்களில் 20 பேருக்குப் பலத்த காயம்.

ராஜிவ்காந்தியின் கடைசி நிமிடங்களைப் படம் பிடித்த காமெரா, அதை இரவல் வாங்கிவந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் உடல்மீது, ‘மௌனமாக சாட்சியாக’க் கிடந்தது.

தொடரும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s