ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 06

ராஜிவ் கொலை வழக்கை புலன் விசாரனை செய்த  அதிகாரி கே ரகோத்மன் அவர்களால் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்ய பட்டு வெளியிடப்பட்ட காணொளி: 2/5

குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கரும் புகை தணியத் தொடங்கியது. அங்கு பீதியும், குழப்பமும் காணப்பட்டன. குண்டு வெடிப்பதற்குமுன் அங்கு இருந்த கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம், ஏராளமான கட்சித் தொண்டர்களும், பொலிசாரும் அச்சத்தால் அங்கிருந்து ஓடிப்போய்விட்டனர்.

அங்கு விபரீதமாக ஏதோ நடைபெற்று விட்டது என்பதைப் புரிந்துகொண்டு, அச்சத்தில் அந்த இடத்தைவிட்டு ஓடியவர்கள் அவர்கள். கடமையில் இருந்த போலீஸாரில் சிலரும் அங்கிருந்து ஓடியவர்களில் அடக்கம் என்பது மறுநாள் விசாரணையில் தெரியவந்தபோது, தமிழக போலீஸ் தலைமை அதிர்ந்து போனது.

ஆனாலும், கட்சித் தொண்டர்கள் சிலரும், பொலிசார் சிலரும் குண்டு வெடிப்பின் பின்னரும் அந்த இடத்தைவிட்டு அகலாமல், அங்கேயே இருந்தனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் இரு தலைவர்களான ஜி.கே. மூப்பனாரும், வாழப்பாடி ராமமூர்த்தியும்அங்கேயே இருந்தனர்.

இவர்கள் இருவரும் அவசர அவசரமாக, ராஜிவ்காந்தி எங்கே எனத் தேடினர்.

குண்டுவெடிப்பு நடைபெற்ற நிமிடத்தில், தமிழக காங்கிரஸின் பிரதான தலைவர்கள் இருவருமே, ராஜிவ் காந்திக்கு அருகில் இருக்கவில்லை – வெடிகுண்டு பாதிக்கும் தொலைவில்கூட இருக்கவில்லை – என்பது ஆச்சரியமான உண்மை.

வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜிவ்காந்தி மேடையை நோக்கி நடந்து வரும்போதே அவரில் இருந்து விலகி, முன்னே சென்று விட்டார். ராஜிவ் காந்தியை சூழ்ந்த ஆதரவாளர்களை விலக்கியபடி முன்னேறிச் சென்ற அவர், பொதுக்கூட்ட மேடையில் ஏறி, அங்கே காத்திருந்தார் .

ராஜிவ் காந்தி மேடையை நோக்கி வருவதற்குமுன், இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் என்று எழுதியிருந்தோம் அல்லவா? அப்போது ராஜிவ்காந்தியுடன் நின்றிருந்தார் மூப்பனார். இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தபின் ராஜிவ் காந்தி மேடையை நோக்கி நடக்கத் தொடங்கியபோது, அவருடன் செல்லாமல் பின்தங்கி, ஒரு மரத்தடியே நின்று விட்டிருந்தார் மூப்பனார்.

இவர்களது இந்த நடவடிக்கைகள், பின்னாட்களில் சில கேள்விகளை எழுப்பியது. குண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது, தமிழக காங்கிரஸ் பிரமுகர்களில் யாருக்குமே, எந்தப் பாதிப்பும் ஏற்படாதது எப்படி? குண்டு வெடித்த நிமிடத்தில், எந்தவொரு தமிழக காங்கிரஸ் பிரமுகரும் ராஜிவ் காந்திக்கு அருகில்கூட நிற்காமல் போனது எப்படி? என்ற கேள்விகள் பின்னாட்களில் எழுந்தன. அவற்றுக்கான பதில்கள், கடைசிவரை கூறப்படவில்லை!

குண்டு வெடித்த உடனேயே அந்த இடத்தை நோக்கி வாழப்பாடி ராமமூர்த்தியும், மூப்பனாரும் ஓடிச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அங்கு கரும்புகை அடங்கத் தொடங்கியபோது, தரையில் தங்கள் தலைவர் ராஜிவ் காந்தியின் சிதைந்துபோன உடலைத்தான் அவர்களால் காணமுடிந்தது.

ராஜிவ்காந்தி அணிந்திருந்த ‘லோட்டோ ஷுக்கள்’தான் அவரது உடலை எளிதாக அடையாளம் காண உதவின.

ராஜிவ்காந்தியின் உடலைத் தனது கைகளால் தூக்க மூப்பனார் முயன்றபோது, சதைப் பிண்டங்கள்தான் கைகளில் வந்தன.

தரையில் வீழ்ந்திருந்த ராஜிவ் காந்தியின் உடல், முகம் தரையை நோக்கி இருக்கும் விதத்தில் குப்புற வீழ்ந்திருந்தது. குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பள்ளத்தில் அவரது முகம் தரையிலுள்ள மண்ணில் ஓரளவுக்குப் புதைந்திருந்தது. இதனால், மூப்பனாரும் மற்றையவர்களுமாகச் சேர்ந்து, அவரது உடலை முகம் தெரியும் வகையில் திருப்பிப் போட்டனர்.

அதன்பின், ராஜிவ் காந்தியின் உடல் மீது, சால்வை ஒன்றைப் போர்த்தினார் மூப்பனார்.

இதெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், குண்டு வெடித்ததால் ஏற்பட்ட தாக்கம் அந்த இடத்தில் இருந்தது. வெடிமருந்தின் மணம் அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது. காற்று அவ்வளவாக அடிக்காத காரணத்தால், கரும் புகை முழுமையாக அகலவில்லை. ராஜிவ் காந்தியின் உடல் கிடந்த சிவப்புக் கம்பள விரிப்பின் ஒரு பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த இடத்துக்கு ஓடிவந்த போலீஸ் ஐ.ஜி. ராகவன், அந்தத் தீயை அணைத்தார்.

இதற்கிடையே தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒரு ஸ்ட்ரெச்சர் கொண்டுவரப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் உடல், பிரதேப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அரசாங்கப் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடல், பொலிஸ் வாகனம் ஒன்றிலேயே கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மற்றையவர்களது உடல்களையும், காயமடைந்தவர்களையும் அங்கிருந்து அகற்றும் பணிகள் தொடங்கின. மற்றவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அகற்றப்பட்ட போது, ஹரிபாபுவின் உடலின்மீது வீழ்ந்து கிடந்தது, அவர் இறுதியாகப் பயன்படுத்திய ‘சினான்’ காமெரா.

காமெராவைக் கவனித்த பொலிஸ் ஐ.ஜி. ராகவன், அதை எடுத்துப் பத்திரப் படுத்துமாறு உத்தரவிட்டபின், அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், மற்றைய பணிகளில் மூழ்கிவிட்டார்.

குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில், பல பொருட்கள் சிதறிக் கிடந்தன. அங்கிருந்து ஓடியவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான செருப்புகள், ஹேன்ட்-பேக்கள், பைகள் என்று தரையெங்கும் பல பொருட்கள் சிதறிக் கிடந்தன.

அந்தப் பொருட்களைப் போல ஒரு பொருளாகவே, இந்த சினான் காமெராவும், பத்தோடு பதினொன்றாக சேகரிக்கப்பட்டது. எவ்வித உயர் பதவியிலுமில்லாத சாதாரண பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த காமெரா பத்திரப்படுத்தப் பட்டது.

இந்த காமெராவுக்கு உள்ளேயுள்ள பிலிம் ரோலில்தான், மனித வெடிகுண்டாக வந்து ராஜிவ் காந்தியைக் கொன்ற பெண்ணின் உருவமும், அவருக்கு துணையாக வந்திருந்த மற்றையவர்களின் உருவங்களும், குண்டு வெடிப்பைத் திட்டமிட்டுக் கொடுத்தவரின் உருவமும், வெவ்வேறு பிரேம்களில் பதிவாகியிருந்தன.

இந்த ஒற்றைக் காமெரா மாத்திரம் புலனாய்வாளர்களின் கைகளில் கிடைக்காதிருந்தால், ராஜிவ் காந்தியை கொன்றது யார் என்பது, இன்றுவரை கேள்விக் குறியாகவே இருந்திருக்கும்!

* * *
ராஜிவ்காந்தியின் உடல் சென்னையிலுள்ள பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. அவர் மரணமடைந்து விட்டார் என்பது அங்கு வைத்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. பிரேதப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின் அவரது உடல், மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதற்கிடையே ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சேதி, டில்லிக்கு அறிவிக்கப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கும் சொல்லப்பட்டது. டில்லியிலிருந்து சென்னை செல்வதற்காக, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சிறப்பு விமானம் ஒன்றை மத்திய அரசு வழங்கியது. அதில், ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, மகள் பிரியங்கா ஆகியோர் சென்னை வந்து சேர்ந்தனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சில நிமிடங்களே நின்றிருந்த அந்த விமானத்தில், ராஜிவ் காந்தியின் உடல் ஏற்றப்பட, அந்த விமானம் டில்லிக்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது மே 22ம் தேதி, அதிகாலை நேரம்.

* * *
ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் நடந்த நேரத்தில், தமிழகத்தில் அரசியல் நிலை குழப்பத்தில் இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறவில்லை. கவர்னர் ஆட்சி (மத்திய அரசின் நேரடி ஆட்சி) நடந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக கவர்னராக இருந்தவர், பீஷ்மநாராயண சிங்.

ராஜிவ் கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், தமிழகத்தில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற காரணத்திற்காக தமிழக அரசு கலைக்கப்பட்டிருந்தது. கலைக்கப்பட்ட ஆட்சி, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு.

ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட விஷயம், நள்ளிரவில் கவர்னரை தூக்கத்தால் எழுப்பிக் கூறப்பட்டது. அவர், டில்லியுடன் தொடர்பை ஏற்படுத்தி, அடுத்து, என்ன செய்வது என்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகத்தின் ஆட்சி என்னதான் கவர்னரின் கைகளில் இருந்தாலும், அது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். ஆட்சியின் முழுமையான செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவது கவர்னர் ஒருவரால் சாத்தியமில்லை. காரணம், எந்தத் துறைக்கும் – போலீஸ் துறை உட்பட – பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் கிடையாது.

சுருக்கமாகச் சொன்னால், போலீஸ் மெக்கானிசத்தை முழுமையாகச் செயற்படுத்த கவர்னரால் முடியாது.

டில்லியுடன் ஆலோசித்த கவர்னர் பீஷ்ம நாராயண சிங், ராஜிவ் காந்தி கொலை விசாரணை பற்றிய தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அதில் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவப் புலனாய்வுப் பணியை தமிழக போலீஸிடம் விட்டுவிடாமல், மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ரெக்கமென்ட் பண்ணியிருந்தார்.

“கவர்னரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, புலனாய்வுப் பொறுப்பு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்தில் கூறிவிட்டு, செல்ல முடியாது. காரணம், சி.பி.ஐ.யிடம் ராஜிவ் கொலை கேஸ் ஒப்படைக்கப்படும் முன்னர், கொலை நடந்த மறுநாள் (மே 22ம் தேதி) நடந்த சில சம்பவங்கள் பற்றிக் கூற வேண்டும்.

சி.பி.ஐ. இந்த கேஸை எப்படி எடுத்துக் கொண்டது, அவர்களது புலனாய்வுக்குழு யாருடைய தலைமையில், எப்படி அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள அந்தச் சம்பவங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். புலன் விசாரணை தொடர்பாக இந்திய அதிகாரிகளிடையே நடைபெற்ற முக்கியமான தொலைபேசிக் கலந்துரையாடல்களைத்தான் இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s