ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 21

 Sivarasan’ Dairy Revealed the intricate details of plot to kill Rajiv Gandhi

ராஜிவ் கொலை: முருகன்-நளினி இணைக்கப் பட்டது இப்படிதான்!

இந்திய அமைதிப் படையுடன் புலிகள் யுத்தம் புரிந்தபின், தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கிக் கொண்டிருந்தது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

தமிழகத்தில் இருந்து புலிகள் வெளியேறத் தொடங்கிய நேரத்தில், தமக்கு உதவிகரமாக இருந்த இந்தியர்களில் யாராவது இலங்கை சென்று வர விரும்பினால், அனுப்பி வைக்குமாறு புலிகள் தலைமையிடம் இருந்து தகவல் வந்திருந்தது.

1990-ம் ஆண்டு மே மாதம் பேபி சுப்பிரமணியம் இலங்கை திரும்பினார். அவருடன் இந்திய இளைஞர்களான அறிவு மற்றும் இரும்பொறை ஆகியோர் படகு மூலம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றனர். அதற்குச் சற்று முன்னதாக, முத்துராஜாவும் அங்கு சென்றிருந்தார்.

1990-ம் ஆண்டு அக்டோபரில் முத்துராஜா, அறிவு, இரும்பொறை ஆகியோர் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பினர்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் இவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தன. அங்கே எடுக்கப்பட்ட ஏராளமான போட்டோக்கள், மற்றும் விடியோ கேசட்டுகளை அவர்கள் தம்முடன் தமிழகத்துக்கு கொண்டு வந்தனர். விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் பிரபாகரன், மாத்தையா, பேபி சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு விடுதலைப்புலிகளுடன் முத்துராஜா, அறிவு, இரும்பொறை எடுத்துக்கொண்ட பல போட்டோக்களும் இவற்றில் இருந்தன.

யாழ்ப்பாணத்தில் புலிகளைச் சந்தித்துவிட்டு திரும்பியபின், விடுதலைப் புலிகள் மீதான இவர்களது அபிமானமும் பிரமிப்பும் அதிகமாகியிருந்தது. முன்பைவிட முழுமூச்சாக விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைச் செய்யத் தொடங்கினர்.

1990-ம் ஆண்டு டிசம்பரில் முத்துராஜா புதிய நபர் ஒருவரை அழைத்து வந்து பாக்கியநாதனுக்கும், அறிவுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவின் முக்கிய நபரான அவர்தான், நிக்சன்! முதல்நாள் இவர்களைச் சந்தித்துப் பேசிய நிக்சன் மறுநாள் மற்றொருவரையும் அழைத்து வந்தார். அவரது பெயர் காந்தன். அவரும் பொட்டம்மான் தலைமையிலான உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்.

இவை ஆச்சரியமான அறிமுகங்கள். காரணம், விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் மற்றையவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்படுவது வழக்கம். உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தம்மை விடுதலைப் புலிகள் என்றே அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. அநேக சமயங்களில் அரசியல் பிரிவில் உள்ள விடுதலைப் புலிகளுக்கே, தமது இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்களை தெரிந்திருப்பதில்லை.

இப்படியான நடைமுறை இருந்த போதிலும், நிக்சனும் காந்தனும் உளவுப் பிரிவின் ஆட்கள் என்றே பாக்கியநாதனுக்கும், அறிவுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதற்கு காரணமும் இருந்தது.

பாக்கியநாதனும், அறிவும் தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகளில் அநேகருடன் நேரடித் தொடர்பில் இருந்தனர். அவர்கள் அனைவருமே அரசியல் பிரிவு ஆட்கள். நிக்சன், காந்தன் ஆகிய இருவரும் உளவுப் பிரிவின் ஆட்கள் என்று கூறப்பட்டு, அவர்களைப் பற்றியோ அல்லது அவர்களது நடவடிக்கைகள் பற்றியோ சென்னையில் உள்ள மற்ற விடுதலைப் புலிகளிடம் தெரிவிக்கக் கூடாது என்று கூறப்பட்டது.

1991-ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் நிக்சன், மற்றொரு இளைஞரை பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அவரும் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என அறிமுகம் செய்து வைத்தார். அந்த இளைஞர்தான், ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள முருகன்!

நிக்சன், பாக்கியநாதனிடம் முருகனை அழைத்து வந்ததற்கு காரணம் இருந்தது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்ததாக கூறப்பட்டு, 1991 ஜனவரியில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. கவர்னர் ஆட்சி ஆரம்பித்தது. தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், தமிழகத்தில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என அறியப்பட்ட முத்துராஜாவை இந்திய உளவுப்பிரிவு கண்காணித்து வந்தது.

இதனால், முருகனை தனது வீட்டில் முத்துராஜாவால் வைத்திருக்க முடியவிலலை. இதனால் முருகனை, இந்தியர் வீட்டில் உறவினர் என்று தங்க வைப்பதே பாதுகாப்பானது என்று நிக்சன் முடிவெடுத்தார். அதற்காகவே பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். விடுதலைப்புலிகள் மீது உச்ச அபிமானத்தில் இருந்த பாக்கியநாதன், மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

அப்போது பாக்கியநாதனின் சகோதரி நளினி (ராஜிவ் கொலை வழக்கில் ஆயுட் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருப்பவர்) வில்லிவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு, அடையாறில் இருந்த ‘அனபான்ட் சிலிகான் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

முருகன் நளினியுடன் நன்கு பழகி, அவரது நம்பிக்கையைப் பெற்றார். நளினியின் அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று வந்த முருகன், நளினிக்குப் பாதுகாப்பாக மார்க்கெட்டுக்கும் அவரது வீட்டுக்கும் உடன் சென்று வந்தார். பாக்கியநாதனின் தாயார் பத்மாவின் நம்பிக்கையையும் பெற்ற முருகன், அவரது வீட்டுச் செலவுக்கும், கடன்களை அடைப்பதற்கும் பண உதவி செய்து வந்தார்.

ஆரம்ப நாட்களில் முருகன் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்ற விஷயம் அந்த வீட்டில் பாக்கியநாதனுக்கு மட்டுமே தெரியும். அவரது தாயாருக்கோ, சகோதரி நளினிக்கோ தெரியாது. முருகன் ஆங்கிலம் கற்கப் போவதாகக் காட்டிக்கொண்டு, சென்னையில் உள்ள இரு டியூட்டோரியல் கல்லூரிகளில் சேர்ந்திருந்தார்.

இப்படியே சில நாட்கள் கழிந்த பின்னர்தான் முருகன், தாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், விடுதலைப் புலிகள் வேலையாகச் சென்னைக்கு வந்திருப்பதாகவும் நளினியிடம் உண்மையைக் கூறினார்.

முருகனை பாக்கியநாதன் இல்லத்தில் தங்குவதற்காக கொண்டுவந்து விட்டு ஒரு மாதத்தில், நிக்சன் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவருடன் முத்துராஜாவும் சென்றுவிட்டார். அதற்குப் பின் தமிழகத்தில் அவர்களுடைய நடமாட்டமே இல்லை. அவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை முருகன் செய்யத் தொடங்கினார்.

இந்தியரான முத்துராஜா, முதல் தடவை இலங்கை சென்று வந்தபின் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தானும் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரை இணைத்துக் கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதி வருவதற்காக காத்திருந்த நிலையில், இயக்கத்தில் சேர அவரை அழைத்து வருமாறு தகவல் வந்தது. அதையடுத்தே நிக்சனுடன் யாழப்பாணம் புறப்பட்டுச் சென்றார் முத்துராஜா.

இலங்கையில் யுத்தம் புரிய வேண்டும் என்பதால் அதன்பின் தம்மால் தமிழகத்துக்கு வர முடியாதுகூட போகலாம் என்று யோசித்த முத்துராஜா, இலங்கைக்குப் புறப்படுவதற்கு முன் தாம் சேகரித்து வைத்திருந்த விடுதலைப்புலிகளின் பிரசுரங்கள், போட்டோக்கள், விடியோ கேசட்டுகள் அனைத்தையும் தமது வீட்டில் இருந்து அப்புறப்படுத்த விரும்பினார். பாக்கியநாதனை அழைத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வேறு பத்திரமான இடத்துக்கு அவற்றையெல்லாம் கொண்டு செல்லுமாறு கூறினார்.

அவர் விரும்பியதுபோல, பாக்கியநாதன், அறிவு, ஹரிபாபு ஆகியோர் மேற்கு மாம்பலம் வீட்டுக்குச் சென்று, அங்கு இருந்த விடுதலைப் புலிகள் தொடர்பான அனைத்தையும் எடுத்துச் சென்று, செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஒருவரின் வீட்டுக்கு மாற்றிவிட்டனர்.

நிக்சனும் முத்துராஜாவும் யாழ்ப்பாணம் கிளம்பிச் செல்லும்வரை, விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவின் சென்னை செயற்பாடுகள் அனைத்துக்கும் நிக்சனே பொறுப்பாக இருந்தார். அவர் கிளம்பிச் சென்றதும், தற்காலிகமாக முருகன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக் கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர் வருவார் என்று முருகனிடம் கூறப்பட்டிருந்தது.

மார்ச் மாத தொடக்கத்தில் முருகன், புதிதாக ஒருவரை பாக்கியநாதன் வீட்டுக்கு அழைத்து வந்தார். விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் சென்னைச் செயற்பாடுகளுக்கு பெறுப்பேற்க யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருப்பவர் என அவரை பாக்கியநாதனுக்கும் நளினிக்கும் அறிமுகம் செய்து வைத்தார் முருகன்.

அந்த நபர்தான், சிவராசன்.

பின்னாட்களில், ராஜிவ் காந்தி கொலையை திட்டமிட்டு நடத்தி முடித்த நபராக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு ஆவணங்களில் ‘ஒற்றைக் கண் சிவராசன்’ என்று குறிப்பிடப்பட்ட அதே சிவராசன்தான்!

தொடரும் …

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s