ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 23

Questions About Unknown Answers In The Rajiv Gandhi’s Assassination-Part 2

ராஜிவ் காந்தி கொலைக்கு, வி.பி.சிங் பொதுக்கூட்டத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது மே 7-ம் தேதி (அந்த விபரம் தெரியாதவர்கள் கடந்த அத்தியாயத்தைப் பார்க்கவும்) அதிலிருந்து இரண்டு தினங்களில், மே 9-ம் தேதி காலை, யாழ்ப்பாணத்தில் இருந்து சிவராசனுக்கு தகவல் ஒன்று வந்தது.

“முருகனை தொடர்ந்தும் தமிழகத்தில் தங்க விட வேண்டாம். உடனடியாக அவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கவும்” என்று இருந்தது அந்த தகவல்.

இந்த தகவல் சிவராசனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. காரணம், முருகனும் நளினியும் நெருக்கமாக பழகுகின்றனர் என்ற தகவலை சிவராசன்தான் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவருக்கு அனுப்பியிருந்தார். அப்படியான சூழ்நிலையில், இயக்க ரகசியங்கள் முருகன் மூலம் நளினிக்கு தெரிய வந்து விடலாம் என்ற சாத்தியம் இருந்தது.

அதனாலேயே, முருகனை சென்னையில் இருந்து அகற்றும் முடிவு யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டது. முருகனை வேதாரண்யம் செல்லுமாறும், அங்கேயிருந்து முருகனை அழைத்துச் செல்ல இலங்கையில் இருந்து ஒரு படகு அனுப்புவதாகவும் சிவராசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மே 9-ம் தேதி காலையே முருகனை யாழ்ப்பாணத்துக்கு போகுமாறு சிவராசன் சொல்லிவிட்டார். மறுநாள் மாலை சென்னையில் இருந்து கிளம்பிச் செல்வதாக முருகனும் கூறிவிட்டார். இந்தியர்களாக அறிவு, பாக்கியநாதன் ஆகிய இருவருக்கும், “முருகன் ஒரு அவசர வேலையாக இலங்கை செல்கிறார்” என்ற தகவல் மட்டும் கூறப்பட்டது. (மற்றொரு இந்தியரான முத்துராசா, ஏற்கனவே யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்)

பாக்கியநாதனும், அறிவும், பேபி சுப்பிரமணியத்துக்கு முருகன் மூலம் பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்பினார். விடுதலைப் புலிகளுக்காக சென்னையில் தாம் செய்து வரும் பணி விவரங்கள் பற்றிய சுருக்கத்தை எழுதி அனுப்பினார் பாக்கியநாதன்.

இவற்றைத் தவிர, வேறு முக்கியமான இரு கடிதங்களும் முருகனிடம் கொடுக்கப்பட்டன. அவை மனித வெடிகுண்டாக மாறி ராஜிவ் காந்தியை கொல்வதற்காக அழைத்து வரப்பட்ட தனு எழுதிய கடிதங்கள். முருகன் யாழ்ப்பாணம் செல்வதால், அவரிடம் அந்தக் கடிதங்கள் கொடுத்து விடப்பட்டன.

மே 11-ம் திகதி கடலோரப் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற முருகன், இரண்டு நாட்கள் அங்கே காத்திருந்தார். தமிழகத்தின் தெற்கு கரையோர நகரங்களில், புலிகளுக்கு பாதுகாப்பான வீடுகள் அந்த நாட்களில் இருந்தன. அவை பெரும்பாலும், புலிகளுக்கு பொருட்களை கடல் மூலம் அனுப்பி வைக்கும் கடத்தல்காரர்களுக்கு சொந்தமானவை.

அப்படியொரு வீட்டில்தான் தங்கியிருந்தார் முருகன். அவர் வந்து இரு தினங்கள் ஆகியும், அவரை அழைத்துச் செல்வதற்காக இலங்கையில் இருந்து வரவேண்டிய விடுதலைப் புலிகளின் படகுகள் வரவில்லை. படகு எப்போது வருகிறது என்று விசாரிக்க ஒயர்லெஸ் செட் ஏதும் அவரிடம் இருக்கவில்லை. (அந்த நாட்களில் செல்போன் கிடையாது)

முருகன் அதற்கு மேலும் சில தினங்கள் தாமதித்து படகு வருகிறதா என்று பார்த்திருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.

இரண்டாவது நாள் படகு வரவில்லை என்றவுடன், தாம் சென்னை திரும்ப போவதாக வீடு கொடுத்த கடத்தல்காரரிடம் கூறினார் முருகன்.

“சென்னை திரும்பி, படகு வரும் தேதியை உறுதி செய்துகொண்டு மீண்டும் வருகிறேன். நான் கொண்டுவந்த ட்ராவலிங் பேக் இங்கேயே இருக்கட்டும்” என்று கூறி, யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக சென்னையில் இருந்து கொண்டுவந்த ட்ராவலிங் பேக்கை கடத்தல்காரரிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னைக்கு கிளம்பிவிட்டார் முருகன்.

இந்த கடத்தல்காரரிடம் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் சில பொருட்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறி கொடுத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அவர், கரையோரக் கிராமத்தின் தோப்பு ஒன்றில் புதைத்து வைத்திருந்தார். முருகன் தனது ட்ராவலிங் பேக்கை விட்டுவிட்டு செல்லவே, அதையும் அதே தோப்பில் கொண்டுபோய் புதைத்து வைத்தார் கடத்தல்காரர்.

இந்த பேக்கினுள் முருகனின் ஓரிரு உடைகள், பாக்கியநாதனும், அறிவும், பேபி சுப்பிரமணியத்துக்கு கொடுத்து அனுப்பிய பரிசுப் பொருட்கள் ஆகியவற்றுடன், ராஜிவ் காந்தியைக் கொல்லப்போகும் தனு எழுதிய இரு கடிதங்களும் இருந்தன.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின், இந்த ட்ராவலிங் பேக் புலனாய்வுக் குழுவின் கைகளில் சிக்கிக் கொள்ளப்போகிறது என்றோ, அவர்களது விசாரணைக்கு முக்கிய ஆதாரங்களை கொடுக்கப் போகிறது என்றோ முருகனுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், அந்த பேக்கை விட்டுவிட்டு சென்றிருக்க மாட்டார்.

அது மட்டுமல்ல. இரு நாட்கள் படகுக்காக காத்திருந்துவிட்டு முருகன் சென்னை திரும்பிய தினத்துக்கு மறுநாள் இரவு, அவரை அழைத்துச் செல்ல வேண்டிய படகு இலங்கையில் இருந்து வந்து சேர்ந்தது.

முருகன் கரையில் தயாராக இல்லாத காரணத்தால், படகு உடனடியாகவே திரும்பிச் சென்றுவிட்டது.

இரண்டு நாட்கள் காத்திருந்த முருகன், மூன்றாவது நாளும் படகுக்காக வெயிட் பண்ணியிருந்தால், அவர் அன்று இந்தியாவை விட்டே வெளியேறியிருப்பார். ராஜிவ் கொலை கேஸில் கைதாகியிருக்க மாட்டார். இப்போது தமிழகத்தில் ஒரு தூக்கு தண்டனை கைதியாகவும் இருந்திருக்க மாட்டார்.

24 மணி நேரத்தில் வாழ்க்கையே மாறியதுதான், அவரது விதி!

முருகனை இந்தக் காட்சிக்குள் கொண்டுவந்தவர் நிக்சன். முத்துராஜா இலங்கைக்கு புறப்பட்டு செல்லுமுன், நிக்சன் என்பவரை பாக்கியநாதனுக்கு அறிமுகம் செய்து வைத்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தோம் (அத்தியாயம் 21). இந்த நிக்சன் விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய முக்கிய தளபதி. அவரால் பாக்கியநாதனுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு நபர், காந்தன் என்பதையும் அதே அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.

இந்த காந்தனும், புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்தான். காந்தன் ராஜிவ் காந்தி ஆபரேஷனில் இல்லை.

காந்தனும் பாக்கியநாதனை அவ்வப்போது சந்தித்து வந்தார். அவர் பாக்கியநாதனை சந்திக்க வரும்போது, மற்றொரு இளைஞரையும் தம்முடன் அழைத்துவர தொடங்கினார். ரமணன் என்று அந்த புதிய இளைஞரை அறிமுகம் செய்து வைத்தார். ரமணனுக்கும் யுத்தத்தின்போது ஏற்பட்ட காயத்தால் ஒரு கண் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த ரமணன்தான், அந்த நாட்களில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்த புலிகளின் தொலைத் தொடர்பு மையத்துக்கும் இடையே, ஒயர்லெஸ் ஆபரேட்டராக இருந்தவர்.

காந்தனும், ரமணனும், சென்னையில் வசித்து வந்த இலங்கைப் பிரஜையான ராபர்ட் பயஸ் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தனர். ராபர்ட் பயஸ் புலிகளின் நேரடி உறுப்பினர் அல்ல. ஆனால், தன்னுடன் தங்கியிருந்தவர்கள் யார் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. காந்தன், ரமணன், பயஸ் ஆகிய மூவரும் பாக்கியநாதன் வீட்டுக்கும், நளினி அலுவலகத்துக்கும் அடிக்கடி சென்று வந்தனர்.

புலிகளின் உளவுப் பிரிவில் காந்தன், ரமணன், ஆகிய இருவரையும் விட உயர்ந்த பதவிநிலையில் இருந்த சிவராசன், இவர்களுடன் வருவதில்லை. பாக்கியநாதனையும் அறிவுவையும் தனியே வந்துதான் சந்திப்பார். காரணம், அவர் ‘ராஜிவ்’ ஆபரேஷனில் இருந்தார். காந்தன், ரமணன் ஆகியோர் வேறு ஆபரேஷனில் இருந்தனர். (கடைசியில் எல்லோரையும் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்பு படுத்தியது சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு)

பாக்கியநாதனை சிவராசன் ஒருதடவை சந்தித்தபோது, சென்னையில் தான் சென்று வருவதற்கு ஒரு மோட்டார் சைக்கிளும், வேறு பணிகளுக்காக ஒரு கார் பெட்டரியும் தேவை என்று கூறியிருந்தார். சென்னையில் பாக்கியநாதனும், அறிவும், தமக்கு தெரிந்தவர்கள் ஊடாக சிவராசனுக்காக ஒரு ‘கவாஸாகி பஜாஜ்’ மோட்டார் சைக்கிள் வாங்க உதவி செய்தனர்.
சிவராசன் பணம் கொடுத்த போதிலும், மோட்டார் சைக்கிள் அறிவு பெயரில், பத்மாவின் முகவரி குறிப்பிட்டு வாங்கப்பட்டது. ஒரு கார் பெட்டரியையும் அறிவு வாங்கி சிவராசனிடம் அளித்தார்.
பின்னாட்களில் ராஜிவ் கொலை விசாரணையின்போது, புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்பு கொள்வதற்காகவே கார் பெட்டரி வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது. சிவராசன் இலங்கையிலிருந்து வரும்போது, லேட்டஸ்ட் ஒயர்லெஸ் கருவி ஒன்றை தம்முடன் எடுத்து வந்திருந்தார். அதை இயக்குவதற்காகத்தான் இந்த கார் பெட்டரி வாங்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது.

ஆனால், குறிப்பிட்ட பெட்டரி எதற்காக வாங்கப்படுகிறது என்பது அறிவுக்கோ, பாக்கியநாதனுக்கோ தெரியாது. இருந்தபோதிலும், கார் பெட்டரி வாங்கிக் கொடுத்ததும் ஒரு குற்றமாக, அறிவு பேரில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் பதிவாகியது.

அதேபோல, வேறு ஒரு விஷயத்திலும் அறிவு தம்மை அறியாமல் சிக்கிக் கொண்டார். சிவராசன், கோல்டன் பவர் 9 வோல்ட் பெட்டரிகள் வாங்க வேண்டும் என்று சொன்னபோது, அதை வாங்கிக் கொடுத்ததும் அறிவுதான். 9 வோல்ட் பெட்டரிகளை சென்னையில் எந்த மின்சார உபகரணங்கள் விற்கும் கடையிலும் சிவராசனே வாங்கியிருக்க முடியும். ஆனால், அறிவு சிவராசனிடம் பணத்தை வாங்கிச் சென்று பெட்டரிகளை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தார் என்பதும் விதிதான்.

காரணம், கோல்டன் பவர் 9 வோல்ட் பெட்டரிகள்தான், தனு தனது உடலில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் கருவிக்கு மின்சக்தி ஊட்டப் பயன்படுத்தப்பட்டது.

இந்த கோல்டன் பவர் 9 வோல்ட் பெட்டரிகள் வாங்கிய விவகாரமும் ராஜிவ் கொலை வழக்கில் அறிவுக்கு எதிராக பதிவாகியது.

ராஜிவ் கொலை நடந்த பின்னர் சிவராசனை புலனாய்வுக் குழு தேடத் தொடங்கியபோது, கவாஸாகி பஜாஜ் மோட்டார் சைக்கிளை பாக்கியநாதனிடம் விட்டுச் சென்றுவிட்டார் சிவராசன். இந்த மோட்டார் சைக்கிளை பாக்கியநாதனின் பி.பி.எல். ஆல் ரவுண்டர்ஸ் அச்சக வளாகத்திலிருந்து புலனாய்வுக் குழு கைப்பற்றியது.

மோட்டார் சைக்கிளை வைத்திருந்த குற்றம் பாக்கியநாதன் மீது விழுந்தது.

ராஜிவ் காந்தி மே 21, 1991-ல் கொல்லப்பட்டார். அதற்கு முன் தினம், சிவராசன் இறுதி ஏற்பாடுகளை சரிபார்க்க தொடங்கினார்.

மே 20-ம் தேதி, பாக்கியநாதன், அறிவு, நளினி, ஹரிபாபு ஆகியோர் பாக்கியநாதன் இல்லத்தில் சிவராசனைச் சந்தித்தனர். போட்டோக்கள் எடுப்பதற்காக, ஹரிபாபுவிடம் கோடக்ஃ பிலிம் ரோல் அளிக்கப்பட்டது. அடுத்த நாள், ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி பேசவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், அங்கு முக்கிய நிகழ்வு ஒன்று நடக்கலாம் என்றும் தெரிவித்தார் சிவராசன்.

போட்டோ எடுப்பதற்காக ஹரிபாபு மட்டும் தம்முடன் வந்தால் போதும் எனவும், பாக்கியநாதன், அறிவு ஆகியோர் வரத் தேவையில்லை என்றும் கூறிவிட்டார். ஏதோ நடக்கப் போகிறது என்பதைத் தவிர அவர்கள் இருவருக்கும் வேறு ஏதும் தெரியாது.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி பேசவிருக்கும் பொதுக்கூட்டம் மே 21-ம் தேதி இரவு நடக்கவிருந்தது. பாக்கியநாதன், அறிவு ஆகிய இருவரும் நைட் ஷோ சினிமா பார்க்க சென்றுவிட்டனர். மறுபுறம், முருகன் இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டார்.

சினிமா பார்த்துவிட்டு திரும்பும்போது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்ததையும், ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டதையும் பாக்கியநாதனும், அறிவும் அறிந்து கொண்டனர். வீட்டுக்குச் சென்றதும் முருகனை எழுப்பி இந்தச் செய்தியைத் தெரிவித்தனர்….

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s