ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 24

Questions About Unknown Answers In The Rajiv Gandhi’s Assassination-Part 3

மே 21-ம் தேதி இரவு ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். மே 22-ம் தேதி தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மோசமான நாள்.

அன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.-வினர் மற்றும் அவர்களது உடமைகளுக்கு எதிரான வன்செயல்கள் நடந்துகொண்டிருந்தன.

தி.மு.க.-வுக்கும் ராஜிவ் கொலைக்கும் என்ன தொடர்பு? இந்தக் குண்டுவெடிப்பை செய்தவர்கள் யார் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சிலரின் கோபம், தி.மு.க. மீது திரும்பியிருந்தது. காரணம், அதுவரை ஆட்சியில் இருந்தது தி.மு.க. அரசுதான்.

ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று காரணம்கூறி, தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதனால், இந்தக் கொலைக்கும் தி.மு.க.-வுக்கும் இடையே ஏதோ தொடர்பு இருக்கலாம் என்று சிலருக்கு ஏற்பட்ட கோபம்தான் தி.மு.க.-வுக்கு எதிரான வன்முறையாக மாறியிருந்தது.

சென்னையின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், பாக்கியநாதன், அறிவு, முருகன் ஆகியோர் எதுமே நடக்காதது போல, தங்களது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

ராஜிவ் கொலையின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவரான முருகனுக்கு தெரிந்திருந்தது. இந்தியப் பிரஜைகளான பாக்கியநாதன், அறிவு ஆகியோருக்கு ஊக அடிப்படையில் தெரிந்திருந்தது. சிவராசனும் அவருடன் சென்றவர்களும் அதில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் என்பதை ஊகிப்பது அவர்களுக்கு அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியமாக இருந்திருக்காது.

பாக்கியநாதன் இல்லத்திலிருந்து தனது விடியோ கேசட் ரிக்கார்டர்கள், விடியோ கேசட்டுகள், மற்றும் விடுதலைப் புலிகளின் பிரசுரங்களை மூட்டை கட்ட ஆரம்பித்தார் அறிவு.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்துக்கு சென்றிருந்த நளினி, ஹரிபாபு, சிவராசன் ஆகியோர் பற்றி அன்று (22-ம் தேதி) முழுவதுமே ஒரு தகவலும் இல்லை. அவர்கள் வந்தால்தான் நிஜமாக என்ன நடந்தது என்பது தெரியும் என்பதால், அவர்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள் இந்த மூவரும்.

மே 23-ம் திகதி பாக்கியநாதன் வீட்டுக்கு வந்தார் சிவராசன். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட குண்டுவெடிப்பில், தனுவும், ஹரிபாவும் இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

ஹரிபாபு தவறுதலாக இறந்து விட்டதாக கூறிய சிவராசன், ஹரிபாபு குடும்பத்துக்கு ஏதேனும் பண உதவி செய்ய வேண்டும் என விரும்பினார். உடனடிச் செலவுகளுக்காக ஹரிபாபுவின் தாயாரிடம் கொடுக்குமாறு பாக்கியநாதனிடம் கொஞ்சம் பணம் கொடுத்தார். யார் பணம் கொடுத்தார்கள் என்பது அவர்களுக்கு (ஹரிபாபு குடும்பத்தினருக்கு) தெரிய வேண்டாம் என்றும் கூறினார்.

“ஸ்ரீபெரும்புதூரில் என்ன நடந்தது?” என்று அறிவு கேட்டதற்கு சிவராசன் விளக்கமாக பதில் கூறவில்லை. “ராஜிவ் காந்தியை கொன்றதன் மூலம் தனு சரித்திரத்தில் இடம்பெற்று விட்டார்” என்று மட்டுமே சொன்னார் சிவராசன்.

அதற்குமேல், பாக்கியநாதன், அறிவு ஆகியோருக்கு ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்ற விபரங்களை சிவராசன் தெரிவிக்கவில்லை.

அன்று மாலை நளினியும் வீடு திரும்பி விட்டார். ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது நடந்தவற்றை அவர் விவரித்தார். அப்போதுதான், ஹரிபாபு, அறிவு ஆகிய இருவருக்கும் விபரங்கள் முழுமையாக தெரியவந்தன.

சரி. நளினிக்கு எந்தளவுக்கு விஷயங்கள் தெரியும்? தம்முடன் ஸ்ரீபெரும்புதூர் வரை வந்தவர்கள் ராஜிவ் காந்தியைக் கொல்லும் திட்டத்துடன்தான் வருகிறார்கள் என்ற விஷயம், கொலை நடப்பதற்கு முன்னரே அவருக்கு தெரியுமா?

அதை தெரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கிச் செல்லலாம். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட தினமான மே 21-ம் தேதி நடந்த சில சம்பவங்களைப் பார்க்கலாம். இதோ, அந்த பிளாஷ்பேக்-

மே 21-ம் தேதி காலை.

வழமைபோல அடையாறில் உள்ள அலுவலகத்துக்கு நளினி புறப்பட்டபோது, அன்று ராஜிவ் காந்தியை கொல்லும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது என்பது அவருக்கு தெரியாது. நளினி அலுவலகம் புறப்படுமுன் அவரை அணுகிய சிவராசன், அலுவலகத்தில் அன்று அரை நாள் விடுப்பு எடுக்குமாறு கூறினார். அன்று மாலை ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறவுள்ள ராஜிவ் காந்தியின் பிரசாரக் கூட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்தார்.

சிவராசன் விரும்பியவாறே நளினி, மே 21-ம் தேதி அலுவலகத்தில் அரை நாள் விடுப்புச் சொல்லிவிட்டு வந்துவிட்டார். அவர் வீடு திரும்பியபோது மணி 3 ஆகி விட்டது. வீட்டில் தனு, சுபா ஆகிய இருவரும் வெளியே கிளம்ப தயாராக உடையணிந்து காணப்பட்டனர்.

தனு பச்சை ஆரஞ்சு சல்வார் கமீஸ் அணிந்திருந்தனர். (ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் தனு அணிந்திருந்த அதே சல்வார் கமீஸ்)

நளினியின் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுபா, “உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” என்று ரூமுக்குள் வருமாறு நளினியை அழைத்தார். நளினி உள்ளே சென்றபோது, தனுவும் அந்த ரூமுக்குள் இருந்தார்.

சுபா, மிகத் தெளிவாக நளினியிடம், “இன்றைய தினம் எமக்கு முக்கியமான தினம். இன்று, தனு வரலாறு படைக்கப்போகிறாள். தனு இன்று தனது உயிரைக் கொடுத்து ராஜிவ் காந்தியை கொல்லப் போகிறாள். இந்த நடவடிக்கையில் நீங்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்” என்றார்.

நளினியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

தனு ஏதோ கருவியை தனது உடலில் இணைத்து இருப்பதை நளினி கவனித்தார். ஆனால், அது பற்றிய விபரஙகள் டெக்னிகலாக அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

இவர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியே வந்தபோது, சிவராசன் இவர்களுக்காக காத்திருந்தார். சிவராசன் வெள்ளை குர்தா பைஜாமாவும் அணிந்திருந்தார்.

இவர்கள் நால்வரும் சென்னை பாரிஸ் கார்னருக்கு சென்றனர். அங்கு கேமிரா மற்றும் சந்தன மாலையுடன் ஹரிபாபு காத்திருந்தார். பாரிஸ் கார்னரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்வதற்காக இவர்கள் பஸ் பிடித்தனர். பாரிஸ் கார்னரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்ற டவுன் பஸ்ஸில், ராஜிவ் காந்தியைக் கொல்லப் போகும் வெடிகுண்டும் பயணித்தது.

ஸ்ரீபெரும்புதூரை பஸ் சென்றடைந்தபோது, இரவு 7.30 மணி.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் அது. அன்றைய தினம்தான், ஈழப் போராட்டத்தில் முக்கியமான திருப்பு முனை. 18 ஆண்டுகளின்பின் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரப்போகும் குண்டு வெடிப்பு, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய நாள்.

பல சமயங்களில், விடுதலைப் புலிகளால் வெடிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டுகள், அவர்களது ஆயுதப் போராட்டத்தில் பல திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி வெடித்த ஒற்றை வெடிகுண்டு, 18 ஆண்டுகளின் பின் 2009-ம் ஆண்டு அதே மே மாதத்தில், அந்த விடுதலை இயக்கத்தையே படு குழியில் தள்ளியது.

இரவு 7.30-க்கு இவர்கள் ஐவரும் ஸ்ரீபெரும்புதூரில் இறங்கி, ராஜிவ் காந்தியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடத்தை அடைந்தபோது, அங்கே பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பொதுக்கூட்ட மைதானத்தில் இவர்கள் ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் பிரிந்து கொண்டனர்.

உடலில் வெடிகுண்டு பொருத்தியிருந்த தனு, சுபா, மற்றும் நளினி ஆகிய மூவரும், முதலில் பெண்களுக்கான பகுதிக்குச் சென்றனர். அங்கு லதா கண்ணனையும், அவரது மகள் கோகிலாவையும் சந்தித்தனர். இந்த மூவரும், லதா கண்ணன், கோகிலாவுடன் சேர்ந்து கொண்டனர்.

சிவராசனும், ஹரிபாபுவும் ராஜிவ் காந்தி நடந்து வருவதற்காக விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்துக்கு சற்று அருகே வரை செல்லக்கூடியதாக இருந்தது. அப்போது அந்த இடத்தில் காவல் பலமாக இருக்கவில்லை. ஹரிபாபு தன்னிடமிருந்த கேமராவால், போட்டோக்களை எடுக்கத் துவங்கினார். அந்த போட்டோக்கள்தான் பின்னாட்களில் இவர்கள் அனைவரையும் மாட்டிவிடப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

சிவராசன் ஹரிபாபு அருகே முதலில் நின்றிருந்தவர், பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்று, தனுவுக்கு அருகே சென்றார். சிவராசன், தனு அருகே நிற்கும் காட்சியையும் ஹரிபாபு தனது கேமராவில் பதிவு செய்து கொண்டார். அந்த ஒற்றை போட்டோதான் பின்னாட்களில், சிவராசனின் உருவத்தை புலனாய்வுக் குழுவுக்கு காட்டிக் கொடுத்தது.

விடுதலைப் புலிகளுக்கும், தனுவுக்கும், குண்டுவெடிப்புக்கும், ராஜிவ் கொலைக்கும் இருந்த தொடர்பை பின்னாட்களில் நிரூபிக்கும் பிரதான சாட்சியமாக இருந்தது எது தெரியுமா? ஹரிபாபுவுக்கு அருகே நின்றிருந்த சிவராசன் நகர்ந்து சென்று தனு அருகே நின்றபோது, ஹரிபாபு தனது கேமராவின் கிளிக் பட்டனை தட்டி பதிவு செய்த சிங்கிள் போட்டோதான்!

(இந்த சிங்கிள் போட்டோவில் இருந்து, அனைத்தையும் எப்படி தொடர்பு படுத்தினார்கள் என்பது இந்தத் தொடரின் பின் பகுதியில் வரும்)
தனுவை சிவப்பு கம்பள பகுதியில் விட்டுவிட்டு, நளினியும், சுபாவும் பெண்கள் பகுதிக்கே திரும்பிச் சென்றிருந்தனர். அவர்கள் பெண்கள் பகுதியில் இருப்பதையும் தனது கேமராவில் பதிவு செய்துகொண்டார் ஹரிபாபு. இந்த விவகாரத்தில் நளினியை தொடர்பு படுத்தியது அந்த போட்டோ ஆதாரம்தான்!

ராஜிவ்காந்தி வருவதற்கான நேரம் நெருங்கியது. தனுவுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினார் சிவராசன். ராஜிவ்காந்திக்கு அருகில் சென்று மாலை அணிவிக்க அனுமதி பெற்றவர்களை வரிசையாக நிற்குமாறு அறிவித்தார்கள். அப்போது தனு அந்த வரிசைக்கு செல்லவில்லை. சிவராசனுக்கு அருகிலேயே நின்றிருந்தார்.

காரணம், தனுவுக்கு தனிப்பட்ட அனுமதி கிடைத்திருக்கவில்லை. அனுமதி பெற்ற லதா கண்ணனுடன் கடைசி நேரத்தில் சேர்ந்து கொண்டு ராஜிவ் காந்தியை நெருங்குவதுதான், அவரது திட்டமாக இருந்தது.

தனுவும், சிவராசனும் நின்றிருப்பதை பெண்கள் பகுதியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் நளினியும், சுபாவும். இன்னமும் சிறிது நேரத்தில் தனு வெடித்துச் சிதறப் போகிறார் என்பது அவர்கள் இருவருக்கும் தெரிந்திருந்தது.

குண்டு வெடித்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று சுபாவுக்கும் நளினிக்கும் சிவராசன் கூறியிருந்தார். “குண்டு வெடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 மீட்டருக்கு அப்பால் நின்று கொள்ளுங்கள். குண்டுவெடிப்பு அதைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தாது. குண்டு வெடித்த மறு நிமிடமே அந்த இடத்தில் தாமதிக்காமல், இந்திரா காந்தி சிலை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுங்கள். (பொதுக்கூட்ட மைதானத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தது இந்திரா காந்தி சிலை) அங்கே எனக்காக காத்திருங்கள்” என்பது அவர் கொடுத்திருந்த விளக்கமான இன்ஸ்ட்ரக்ஷன்.

ராஜிவ் காந்தி வந்திறங்கினார்.

முதலில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பொதுக்கூட்ட மேடையை நோக்கி நடந்து வரத் துவங்கினார்.

தனுவும் சிவராசனும் நின்றிருந்த இடத்தில் இருந்து, ராஜிவ் காந்தி நடந்து வருவதை பார்க்கக் கூடியதாக இருந்தது. நளினியும் சுபாவும் இருந்த இடத்தில் இருந்து ராஜிவ் காந்தி வருவதையும் பார்க்க முடிந்தது. சிவராசன், தனு நின்றிருந்த இடத்தையும் காண முடிந்தது.

ராஜிவ்காந்தி வருவதைக் கண்டவுடன் தனு தயாராகி விட்டார். ஒரு தலையசைப்பின் முலம் சிவராசனிடமிருந்து விடைபெறுவதையும், சிவராசனை அந்த இடத்தில் இருந்து அகன்று விடுமாறு தனு சைகை செய்வதையும், நளினியும் சுபாவும் கண்டனர். குண்டு வெடிப்பதற்கு இன்னமும் சில நிமிடங்களே இருந்ததால், 50 மீட்டருக்கு அப்பால் சென்று விடுவதற்கு தனு சிவராசனுக்கு கொடுத்த கால அவகாசம் அது.

அந்தப் பதட்டத்தில் ஹரிபாபுவுக்கு இப்படி ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கவில்லை. குண்டு வெடிக்கப் போவதே அவருக்கு தெரிந்திருக்கவில்லை. தனு சைகை செய்தவுடன் விரைவாக அந்த இடத்தைவிட்டு அகன்ற சிவராசனும், கடைசிநேர அவசரத்தில் ஹரிபாபுவைக் கவனிக்கவில்லை. ஹரிபாபு, குண்டுவெடிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு நெருக்கமான தொலைவில் நின்று, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

குண்டு வெடிக்கும் நேரம் நெருங்கி விட்டதை தெரிந்துகொண்டு சிவராசன் அங்கிருந்து அகன்றபோது, ஹரிபாபுவையும் அழைத்துச் சென்றிருந்தால் அவர் உயிர் தப்பியிருப்பார். அவரது கையில் இருந்த கேமராவும், அதில் இருந்த பிலிம் ரோலும் புலனாய்வுக் குழுவின் கைகளில் சிக்காது போயிருக்கும்!

ஆனால், கடைசி நிமிடத்தில் சிவராசன், ஹரிபாபுவை மறந்தவராக அங்கிருந்து அகன்றார். ராஜிவ் காந்தி தனு இருந்த இடத்தை நெருங்கினார். குண்டு வெடித்தது.

பெண்கள் பகுதியில் இருந்த சுபாவும், நளினியும் இந்திராகாந்தி சிலையை நோக்கி ஓடத் துவங்கினார்கள்…..

தொடரும் …

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s