ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 25

மே 21-ம் தேதி இரவு. ராஜிவ் காந்திக்கு அருகே குண்டு வெடித்ததும், ஏற்கெனவே திட்டமிட்டபடி நளினியும், சுபாவும் இந்திரா காந்தி சிலையை நோக்கி ஓடினர். குண்டு வெடித்த அதிர்ச்சியில் மைதானத்தில் இருந்த பலரும், இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டு இருந்ததால், இவர்கள் ஓடுவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.

இந்திரா காந்தி சிலையருகே இவர்கள் சில நிமிடங்கள் காத்திருந்த நிலையில், வந்து சேர்ந்தார் சிவராசன்.

“திட்டம் நிறைவேறிவிட்டது. எதிர்பார்த்தபடி தனுவும் இறந்து போனார். ஆனால், துரதிருஷ்டமாக ஹரிபாபுவும் இறந்து விட்டார்” என்று தணிந்த குரலில் சுருக்கமாக தெரிவித்தார் சிவராசன்.

விரைவாக அங்கிருந்து அகன்று, சென்னைக்கு திரும்பலாம் என்று சிவராசன் கூறினார். இவர்கள் நின்றிருந்த இடம், அப்போதுதான் குண்டு வெடித்த மைதானத்துக்கு அருகில் இருந்தது. அந்த இடத்தில் எந்த வாகனமும் கிடைக்காது. எனவே நடக்கத் தொடங்கினார்கள். உடல் சோர்வு, பதற்றம், ஆகியவற்றால் அவர்களுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. ஏதாவது வாகனம் வருமா எனப் பார்த்துக் கொண்டே நடந்தனர்.

நடந்த பாதையில், ஒரு மூதாட்டி தனது வீட்டு வாசலில் காத்திருந்ததைப் பார்த்தனர். அந்த மூதாட்டி அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தார். தண்ணீரைக் குடித்துவிட்டு தொடர்ந்து நடந்தபோது, சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஆட்டோ கிடைத்தது.

ஆனால், ஆட்டோகாரர் பூந்தமல்லி வரை மட்டுமே வரமுடியும் என்று கூறிவிட்டார். பூந்தமல்லியில் இறங்கிக் கொண்டனர். சென்னை புறநகர் பகுதியான கொடுங்கையூரில் சிவராசனின் நண்பர் வீட்டுக்குப் போவதற்குள் மேலும் 2 ஆட்டோக்களை மாற்ற வேண்டியதாயிற்று.

கொடுங்கையூரில் நண்பர் வீட்டுக்குப் போன பின்னரே, என்ன நடந்தது என்பதை சிவராசன் நளினியிடம் விளக்கினார். “தனுவின் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு இரு சுவிட்சுகளை ஆன் செய்ய வேண்டும். தனு, முதல் சுவிட்சை அழுத்தியதும்தான் என்னை (சிவராசனை) அங்கிருந்து விலகிப் போய்விடுமாறு கூறினார்” என்றார் சிவராசன்.

மே 22-ம் தேதி.

முதல் நாள் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், வெளியே பதட்டமான சூழ்நிலை நிலவியது. பகல் முழுவதும் இவர்கள் வெளியே செல்லவில்லை. சிவராசனின் உதவியாளர்களில் ஒருவரான சாந்தன் என்கிற சுதந்திர ராஜா, பல்வேறு பத்திரிகைகளை அங்கு கொண்டு வந்தார். அவற்றில் வெளியான ராஜிவ் காந்தி கொலை தொடர்பான செய்திகளைப் படித்தனர்.

கொடுங்கையூரில் நண்பர் வீட்டில் டி.வி. கிடையாது. சிவராசன், சுபா, நளினி ஆகிய மூவரும், பக்கத்து வீட்டில் டி.வி. செய்திகள் பார்க்க சென்றனர். ராஜிவ் காந்தி கொலை தொடர்பான செய்திகளை கேட்டனர்.

அன்று இரவும் கொடுங்கையூர் வீட்டிலேயே தங்கினர். மறுநாள் 23-ம் தேதி காலையில், நளினியை அவரது அலுவலகத்தில் கொண்டுபோய் விட்டு வந்தார் சிவராசன். அன்று மாலை அனைவரும் கொடுங்கையூரை விட்டு கிளம்பி, தத்தமது வீடுகளுக்கு வந்து விட்டனர். 23-ம் தேதி இரவு தத்தமது பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். அதுவரை எல்லாமே சிக்கல் இல்லாமல் நடந்தன.

அதற்கு அடுத்த நாள்தான் சிக்கல் தொடங்கியது.

மே 24-ம் தேதி காலையில் வெளியான, ஹிந்து ஆங்கில நாளிதழில், தனுவின் போட்டோ முதல்முதலாக பிரசுரமாகியிருந்தது! அதன் பின்னர்தான், ஓட்டம் தொடங்கியது.

இப்போது பிளாஷ்-பேக்கில் இருந்து விலகி, தொடரை நாம் எங்கே விட்டோமோ, அங்கே செல்லலாம். (இந்தத் தொடரில் வரும் சம்பவங்களை முன்னும் பின்னுமாக நாம் மாறிமாறி தருவதற்கு காரணம் உள்ளது. ராஜிவ் கொலையுடன் தொடர்புடைய நபர்கள் அதிகம். 2-ம் அத்தியாயத்தில் வரும் ஒருவர் அடுத்து 22-ம் அத்தியாயத்தில்தான் வந்தால், அவர் யார் என்றே மறந்துபோகும். அதனால், முடிந்தவரை ஒவ்வொரு குரூப் குருப்பாக கான்சாலிடேட் பண்ணியிருக்கிறோம். இந்த பாணி, புரிவதற்கு சுலபமாக இருக்கும்)

தொடர், பிளாஷ்-பேக்குக்கு செல்லுமுன், நளினியும், முருகனும் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களுக்கு புலனாய்வுக்குழு வலை விரித்தது. அவர்கள் இருவரைப் பற்றியும் எந்த தகவலும் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை. இதனால், அவர்களுடன் தொடர்புடையவர்களை முதலில் கைது செய்து விசாரிப்பது என்ற முடிவுக்கு வந்தது சி.பி.ஐ. குழு.

ஜூன் 11-ம் தேதி பாக்கியநாதனும், பத்மாவும் கைது செய்யப்பட்டனர்.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு, சரியாக 3 வாரங்கள் முடிந்தபின், இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நாள் கணக்கை ஏன் சொல்கிறோம் என்றால், ராஜிவ் கொலை வழக்கில், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவால் செய்யப்பட்ட முதலாவது கைது நடவடிக்கை இதுதான்! (தஞ்சாவூர் அருகே கைது செய்யப்பட்ட ரூசோ, மற்றும் கடத்தல்காரர் ஆகியோர் தமிழக போலீஸால் கைது செய்யப்பட்டவர்கள்)

நளினியின் குமுடும்பத்தைச் சேர்ந்த இவர்களில், பாக்கியநாதனுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு உள்ளதை புலனாய்வுக்குழு ஏற்கனவே அறிந்திருந்தது. ஆனால், பத்மா பற்றி ஏதும் தெரியாதிருந்தது. அப்படியிருந்தும் பத்மாவை கைது செய்த காரணம், தற்செயலாக தெரியவந்த ஒரு விஷயம்தான்.

சென்னையில் உள்ள நர்ஸிங் ஹோம் ஒன்றின் நிர்வாக இயக்குனரிடம் இருந்து கிடைத்த தகவல் அது.

பத்மா அந்த நர்ஸிங் ஹோமில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். கைது செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன் அவர் பணிபுரிந்த நர்ஸிங் ஹோமில் உடன் பணியாற்றிய தனது தோழியான மற்றொரு நர்ஸிடம் ஒரு கவரை பத்திரமாக வைத்திருக்கும்படி பத்மா கொடுத்து வைத்திருந்தார். ராஜிவ் காந்தி கொலை விசாரணையில் நளினியை போலீஸ் தேடுகிறது என்று தெரிய வந்தவுடன், கவரை பத்திரமாக வைத்திருந்த நர்ஸ், பயந்து விட்டார்.
தன்னிடமுள்ள கவரில் ஏதாவது சிக்கல் இருக்குமோ என்று பயந்த அந்த நர்ஸ், நர்ஸிங் ஹோம் தலைமை அதிகாரியிடம் பத்மாவின் கவர் பற்றி தெரிவித்தார். அந்த விபரம், நர்ஸிங் ஹோமின் நிர்வாக இயக்குனருக்கும் கூறப்பட, அவர் பத்மா கொடுத்த கவரை எடுத்துச் சென்று ‘மல்லிகை’யில் இயங்கிய சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஆபீஸில் ஒப்படைத்தார்.

அந்த கவரில் ஒயர்லெஸ் ரகசியக் குறியீட்டுச் செய்திகள் இரண்டு இருந்தன.

இந்த இரு செய்திகளும் டீகோட் செய்யப்படாமல் இருந்தன. ஆனால், அவை எழுதப்பட்ட கடதாசியில் அவை யாருக்கு அனுப்பப்பட்டவை என்று ஒரு பெயர், பென்சிலால் தமிழில் எழுதப்பட்டிருந்தது. அதில் இருந்த பெயர் – “இந்து மாஸ்டர்”

யார் இந்த இந்து மாஸ்டர் என்று தலையை உடைத்துக் கொண்டது சி.பி.ஐ. ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ரூசோவிடம் விசாரித்தார்கள். அத்துடன், தமிழக அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த விடுதலைப் புலிகளிடமும் (இவர்கள் ராஜிவ் கொலைக்கு முன்னரே கைது செய்யப்பட்டவர்கள்) இந்து மாஸ்டர் பற்றி விசாரித்தார்கள்.

கிடைத்த விபரங்களில் இருந்து, இந்து மாஸ்டர் என்ற பெயருடைய ஒரு நபர், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடுகளில் இருந்தார் என்று தெரிய வந்தது. அவரது உருவம் தொடர்பாக மேலும் விசாரணையைத் தொடரவே, ஒரு கட்டத்தில் இந்து மாஸ்டர் யார் என்பது புரிந்து விட்டது.

யாழ்ப்பாணத்தில், விடுதலைப்புலிகள் வட்டாரத்தில் இந்து மாஸ்டர் என அழைக்கப்பட்டவர் முருகன்தான் என்று தெரிந்து கொண்டார்கள்.

முருகன், நளினியுடன் தலைமறைவாகி விட்டார். அவருக்கு வந்த ஒயர்லெஸ் ரகசியக் குறியீட்டுச் செய்திகளை, பத்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் என்ற கோணத்தில், ஜூன் 11-ம் தேதி பாக்கியநாதனுடன், பத்மாவும் கைது செய்யப்பட்டார். பத்மாவை விசாரித்தபோது, நளினி எங்கே என்ற விபரம் அவருக்கு நிஜமாகவே தெரியாது என்று புரிந்தது.

மறுநாள் ஜூன் 12-ம் தேதி, சி.பி.ஐ. புலனாய்வுக் குழு இரு போட்டோக்களை பத்திரிகைகளுக்கு கொடுத்து, பிரசுரிக்கும்படி கேட்டுக் கொண்டது.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட தினத்தில், பொதுக்கூட்ட மைதானத்தில் ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட 2-வது போட்டோவில் இருந்து, நளினியையும், சுபாவையும் பெரிதுபடுத்தி, அவர்களுடைய முகங்கள் தெளிவாக தெரியுமாறு செய்யப்பட்ட போட்டோக்கள் இவை.

இந்த போட்டோக்கள் பத்திரிகைகளில் வெளியாகின. இதிலுள்ள இருவரில் யாரையாவது கண்டால் உடனே தெரிவிக்கவும் என்று மல்லிகை அலுவலக போன் நம்பரும் கொடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து சென்னை மல்லிகை அலுவலகத்துக்கு வந்த முதலாவது போன் கால் மதுரையில் இருந்து வந்தது.

மதுரையில் வசித்த, நளினியின் நண்பர் ஒருவரது வீட்டுக்கு நளினியும், அவருடன் மொட்டையடித்த இளைஞர் ஒருவரும் வந்ததாக அந்த தகவல் சொல்லியது. இதை விசாரிப்பதற்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஒரு பிரிவு மதுரை விரைந்தது.

அந்தப் பிரிவு ‘மல்லிகை’ அலுவலகத்திலிருந்து புறப்படுப்பதற்கு முன் மற்றொரு போன்கால் வந்தது. நளினியும், அவருடன் மொட்டையடித்த ஒரு இளைஞரும் விழுப்புரத்தில் உள்ள மற்றொரு நண்பரின் வீட்டுக்குப் போனதாகத் தகவல் கிடைத்தது. இரண்டாவது டீம் விழுப்புரத்துக்கு அனுப்பப்பட்டது.

இவர்கள் போய் சேர்வதற்குமுன், விழுப்புரத்தில் இருந்தும் நளினியும், முருகனும் புறப்பட்டு விட்டனர். அப்படியிருந்தும், மதுரைக்கும் விழுப்புரத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்ட டீம்களை அங்கேயே தங்கியிருக்குமாறு மல்லிகையில் இருந்து உத்தரவு போனது. ஒருவேளை நளினியும் முருகனும் மீண்டும் அங்கே வந்தால் பிடிக்கலாம் என்ற நினைப்பில் செய்யப்பட்ட ஏற்பாடு அது.

ஜூன் 14-ம் தேதி மாலை. விழுப்புரம் சென்றிருந்த சிறப்பு புலனாய்வுக் குழு டீமிடம் இருந்து சென்னை மல்லிகை அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நளினியும், முருகனும் மீண்டும் ஒரு முறை விழுப்புரம் வந்திருப்பதாக தெரிவித்தார்கள்.

அவர்களை கைது செய்ய சென்னையில் இருந்து ஆட்களை அனுப்புவதா, அல்லது விழுப்புரம் போலீஸின் உதவியுடன் கைது செய்வதா என்று மல்லிகையில் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்க, விழுப்புரம் டீமிடம் இருந்து அடுத்த போன் கால் வந்தது. “நளினியும், முருகனும் சற்றுமுன் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பஸ் ஒன்றில் ஏறியிருக்கிறார்கள்”

அவர்கள் பயணம் செய்த பஸ் இலக்கம் தெரிந்தும், பஸ்ஸை மறித்து அவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு விரும்பவில்லை. பெரிய பப்ளிசிட்டி கொடுக்காமல், காதும் காதும் வைத்தது போல கைது செய்ய விரும்பினார்கள்.

அதையடுத்து, சென்னையில் உள்ள பல்வேறு பஸ் நிலையங்களுக்கும், நளினி வீட்டுக்கும், விழுப்புரம்-சென்னை பஸ் வழித்தடத்தில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களுக்கும் பல குழுக்களை அனுப்பி வைத்தது மல்லிகை.

இரவு 10 மணிக்குப்பின் சென்னை நகருக்குள் பிரவேசித்தது அந்த பஸ். அதுவரை நளினியும், முருகனும் பஸ்ஸில் இருந்து இறங்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட புலனாய்வுக் குழு, அந்த பஸ்ஸின் பின்னாடியே தமது வாகனம் ஒன்றில் பின்தொடர்ந்தனர்.

இரவு 11 மணியளவில், சென்னை சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது, நளினியும், முருகனும் இறங்கினர். இறங்கிய இருவரும் ஆட்டோ ஒன்றை அழைத்து ஏறிக் கொண்டனர். அந்த ஆட்டோ கிளம்புவதற்குமுன், சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவினர் ஆட்டோவை சூழ்ந்து கொண்டனர்……

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s