ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 27

ராபர்ட் பயஸை கைது செய்து மல்லிகைக்கு கொண்டுபோய் சிவராசனைப் பற்றி விசாரித்தது சிறப்பு புலனாய்வு பிரிவு டீம். அவருடன் ஒன்றாகச் சென்று டிரைவிங் லைசென்ஸ் எடுத்த சிவராசனை எப்படித் தெரியும் என்று பயஸிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில், “எனது மைத்துனர் ஜெயக்குமாரின் வீட்டில் சிவராசன் தங்கியிருந்ததால் ஏற்பட்ட பரிச்சயம்”

இதையடுத்து, பயஸின் மைத்துனர் ஜெயக்குமாரும் கைது செய்யப்பட்டார்.

இந்த ஜெயக்குமார், இந்தியாவில் செட்டிலாகியிருந்த ஒரு இலங்கைத் தமிழர். 1984-ம் ஆண்டிலேயே இந்தியாவுக்கு வந்துவிட்டார். இந்தியாவில் தங்கியிருந்தபோது, இந்தியரான சாந்தி என்பவரைச் சந்தித்து 1987-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்பின் ஜெயக்குமாரும் சாந்தியும் யாழ்ப்பாணம் சென்றனர். அங்கேயே வாழத் துவங்கினார்கள்.

ஜெயக்குமாரின் சகோதரியின் பெயர் பிரேமா. அவரும் யாழ்ப்பாணத்தில்தான் வசித்தார். பிரேமாவின் கணவர்தான், ராபர்ட் பயஸ்.

இவர்கள் அங்கு வசித்த காலத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் சென்று இறங்கியது. ஏற்கனவே இந்தியாவில் வசித்த ஜெயக்குமாரும், இந்தியரான சாந்தியும் இந்திய அமைதிப்படை இலங்கை வந்ததை ஆரம்பத்தில் ஆதரித்தார்கள். ஆனால், இந்திய அமைதிப்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் யுத்தம் துவங்கியபோது, அவர்களது மனப்போக்கு மாறியது.

யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில், விடுதலைப் புலிகள் என்ற  ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய இருவருமே இந்திய அமைதிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய அமைதிப் படையினர், தாம் கைது செய்து வைத்திருந்தவர்களை விசாரித்து விசாரித்து, அவர்கள் புலிகள் உறுப்பினர்கள் அல்ல என்று தெரிந்தால், விடுவித்துக் கொண்டிருந்தனர். உண்மையிலேயே புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இல்லாத இவர்கள் இருவரும் விடுதலை ஆயினர்.

இந்திய அமைதிப் படையால் அடித்து, உதைத்து, விசாரிக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரும், ராபர்ட்டும், முற்று முழுதாக விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். லோக்கல் லெவலில் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். புலிகளுக்கு உதவிகளை செய்யவும் துவங்கினர்.

1989-ம் ஆண்டு இறுதியில் இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்து படிப்படியாக வெளியேறத் துவங்கியது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் தமது தமிழக ஆபரேஷனை முற்றாக மாற்றினார்கள். இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களில், பேபி சுப்ரமணியம் மற்றும் அவருடன் இருந்த பலரும் சென்னையில் இருந்து இலங்கைக்கு அழைத்துக் கொள்ளப்பட்டதை எழுதியிருந்தோம்.

அந்த விதத்தில், தமிழகத்தில் தங்கியிருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறைந்து போனது.

இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு கிளம்புவது உறுதியானதும், புலிகளின் உளவுப் பிரிவு, புதிதாக தமிழகத்தில் தமது மறைவிடங்களை (சேஃப் ஹவுஸ்களை) ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அதற்காக, புலிகளின் நேரடி உறுப்பினர்களாக இல்லாத, ஆனால் ஆதரவாளர்களாக உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தது. அப்படியான நபர்களுக்கு, ஏற்கனவே தமிழகத்தில் தொடர்பு இருந்தால் நல்லது என்றும் நினைத்தது.

இந்த ரிக்கொயர்மென்ட்ஸில் கச்சிதமாக பொருந்தினார்கள், ஜெயக்குமாரும், ராபர்ட்டும். ஜெயக்குமார் ஏற்கனவே தமிழகத்தில் வசித்தவர். அவரது மனைவி சாந்தி இந்தியர். ராபர்ட், அவரது தங்கையின் கணவர்.

தமிழகத்தில் போய் தங்கியிருந்து தமக்கு செய்யும் உதவிகளை தொடருமாறு இவர்களை கேட்டுக்கொண்டது புலிகளின் உளவுப் பிரிவு.

இந்திய அமைதிப்படையின் கடைசி படைப்பிரிவு இலங்கையில் இருந்து 1990-ம் ஆண்டு, மார்ச் மாதம் வெளியேறியது. அதிலிருந்து 6 மாதங்களின்பின், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் படகு மூலம் தமிழகம் புறப்பட்டனர். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 1990, செப்டெம்பர் 20-ம் தேதி ராமேஸ்வரம் வந்திறங்கி, தம்மை இலங்கை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர்.

ராமேஸ்வரத்தில் அகதிகளாக பதிவு செய்தபின் அவர்கள் அங்கிருந்த அகதி முகாமுக்கு செல்லவில்லை. நேரே சென்னைக்கு புறப்பட்டனர்.

சென்னையில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கும், இதர செலவுகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கம் இவர்களுக்கு பணம் கொடுத்தது. ஜெயக்குமாரும், ராபர்ட்டும் வெவ்வேறு இடங்களில் வீடுகளை எடுத்துக்கொண்டு வசிக்கும்படி அவர்களிடம் கூறப்பட்டிருந்தது. (வெவ்வேறு ஏரியாக்களில் சேஃப் ஹவுஸ்களை வைத்திருப்பதற்காக இந்த ஏற்பாடு)

முதலில் போரூரில் ஒரு வீட்டைப் பிடித்தார்கள். பயஸும், ஜெயக்குமாரும் போரூரில் வீடு பிடித்தவுடனே, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நிக்சனுடன் தொடர்பு கொண்டனர். அவரும் ஏற்கெனவே, சென்னை வந்திருந்தார். (பயஸும், நிக்சனும் உறவினர்கள் என்று சிலர் கூறுகின்றனர். அது உண்மையா என்பது சரியாக தெரியவில்லை)

இலங்கையில் இருந்து தமிழகம் வந்திருந்த, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நிக்சனும் போரூர் அருகேதான் மற்றொரு வீட்டில் தங்கியிருந்தார். சரவணன் என்பவரின் வீடு அது.

விடுதலைப் புலிகளின் ஆரம்பகால வரலாறு தெரிந்தவர்களுக்கு, இந்த சரவணன் யார் என்பது யார் என்று இலகுவாகப் புரியும். சரவணனுக்கும் புலிகளுக்கும் இடையிலுள்ள தொடர்பு என்னவென்றால், இவரது மைத்துனர்தான் கலாபதி.

விடுதலைப் புலிகள் இயக்கம் துவங்கப்பட்ட நாட்களில் பிரபாகரன், ஒரேயொரு கைத்துப்பாக்கியை வைத்து அப்போதைய யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை சுட்டுக் கொன்றார். பிரபாகரனால் சுட்டுக்கொல்லப்பட்ட முதலாவது நபர் இவர்தான். அந்த இயக்கத்தின் முதலாவது தாக்குதலும் அதுதான். இது நடந்தது, 1975-ம் ஆண்டு ஜூலையில்.

துரையப்பாவைக் கொல்வதற்காக பிரபாகரனுடன் கூட சென்றவர் கலாபதி! புலிகளின் ஆரம்பகால உறுப்பினர். அவருடைய மைத்துனர்தான் போரூரில் வசித்த சரவணன்.

பயஸும், ஜெயக்குமாரும் போரூர் பகுதியில் வீடு எடுக்கும் முன்னரே அங்கு வசித்தவர் சரவணன். போரூரில் இருந்த பலசரக்குக் கடை உரிமையாளர் மூலம் இவர்களுக்கு வாடகை வீடு கிடைக்க உதவிய நபரும் சரவணன்தான். ஜெயக்குமாரின் பெயரில் அந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது.

போரூரில் இருந்த இந்த வீடுதான், விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் ஆட்களான நிக்சன், காந்தன், அவரது ஒயர்லெஸ் ஆபரேட்டர் ரமணன், முருகன், சிவராசன் ஆகியோர் சந்தித்துப் பேசும் இடமாக இருந்தது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் உளவுப் பிரிவின் புதிய ஆட்களும் முதலில் இந்த வீட்டுக்குத்தான் வந்தனர்.  மொத்தத்தில் இந்த வீடு கிட்டத்தட்ட உளவுப் பிரிவின் பிரதான முகாம் போலவே இயங்கியது.

எனினும், உளவுப் பிரிவின் மற்றைய உறுப்பினர்களுக்கே தெரிந்திராத படு ரகசியமான “ராஜிவ் காந்தி ஆபரேஷனுக்கு” மற்றொரு இடம் தேவை என சிவராசன் கருதினார். அங்கு அவர் மட்டுமே தங்கி நடவடிக்கைகளைத் திட்டமிடலாம் என எண்ணினார்.

மீண்டும் சரவணனின் உதவியுடன், போரூர் பகுதியில் இருந்த பலசரக்குக் கடை உரிமையாளர் மூலம் 1990 டிசம்பரில் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்தார்கள். இந்த வீடு ஜெயக்குமாரின் மாமானார் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டது. 1990 டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஜெயக்குமாரும், அவரது மனைவியும் இந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர்.

அந்த வீடுதான் சிவராசனின் செயல்பாட்டு மையமாக இருந்தது.

1990-ம் ஆண்டு முடியும் முன்னரே, புலிகளின் உளவுப் பிரிவினர் சென்னையில் இரு தளங்களை ஏற்படுத்திவிட்டனர். ஒன்று போரூரில், உளவுப் பிரிவின் போராளிகள் அனைவருக்கும் பொதுவான இடம். மற்றொன்று முத்தமிழ் நகரில், உளவுப்பிரிவில் இருந்த பலரும் அறிந்திராத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த வீடு.

ராஜிவ் ஆபரேஷனுக்கென பிரதியேகமாக ஏற்படுத்தப்பட்ட வீடு அது. சிவராசன் தங்கியதும் அந்த வீட்டில்தான்.

வெளிப் பார்வைக்கு அந்த வீட்டில் ஜெயக்குமாரும், இந்தியரான அவரது மனைவி சாந்தியும் அங்கு வசித்தனர். ஜெயக்குமாரை சாதாரண நபராகக் காட்டுவதற்காக அந்த ஏரியாவில் காபி கொட்டை அரவைக் கடை வைக்கவும், புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு பண உதவி செய்தது.

1990 டிசம்பரில் ஜெயக்குமார் அந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அவரது உறவினர் போல சிவராசன் தங்கியிருந்தார். 1991 மே மாதத்தில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். எனவே கிட்டத்தட்ட 5 மாதங்கள், இந்த முத்தமிழ் நகர் வீடுதான், ராஜிவ் கொலை திட்டமிடலின் ரகசிய ஆபரேஷன் சென்டராக விளங்கியது.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட மே மாதம் வரை வேறு யாரையும் அந்த வீட்டுக்கு சிவராசன் அழைத்து வந்ததில்லை. புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த தமது சகாக்களைக்கூட அழைத்து வந்ததில்லை. மே மாதத் துவக்கத்தில் முதல் தடவையாக, தனு, சுபா ஆகிய இருவரையும் அந்த வீட்டுக்கு அழைத்து வந்தார்.

மனித வெடிகுண்டாக மாறி ராஜிவ் காந்தியை கொல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட தனுவும், ஒருவேளை தனுவால் முடியாமல் போய்விட்டால் என மாற்று நபராக அனுப்பி வைக்கப்பட்ட சுபாவும், இலங்கையில் இருந்து படகில் கோடியக்கரைக்கு வந்தனர். அங்கிருந்து மே மாதம், 2-ம் தேதி, சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.

மே 2-ம் தேதி அப்போதுதான் சென்னை வந்திறங்கிய சுபாவையும் தனுவையும், கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு அழைத்து வந்தார் சிவராசன்.

ராஜிவ் காந்தி மே 21-ம் தேதி கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படவதற்கு 19 நாட்களின் முன்னர்தான், தனு சென்னையில் காலடி எடுத்து வைத்தார். தனு சென்னைக்கு வந்திறங்கிய போது, ராஜிவ் காந்தி சென்னைக்கு 21-ம் தேதி வரப்போகிறார் என்று சென்னையில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கேகூட தெரியாது……

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s