ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 29

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், ஜூன் முதல் 3 வாரங்களில் சென்னைக்கு அருகே இயங்கிய ரகசிய நிலையத்துக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையத்துக்கும் இடையிலான ஒயர்லெஸ் தகவல்களை, இந்திய உளவுத்துறை றோ குறுக்கிட்டு அறிந்து கொண்டது.

அதில் ஒரு முக்கிய தகவல் இருந்ததை பார்த்த றோ, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்தது.

இந்த தகவல் கிடைத்ததும், சென்னையிலிருந்து இயங்கிய புலிகளின் ரகசிய ஒயர்லெஸ் நிலையத்தைக் கண்டுபிடிக்க சிறப்புப் புலனாய்வுக்குழு களத்தில் குதித்தது.

புலனாய்வுக் குழுவி, டில்லியிலிருந்து உயர் அலைவரிசை திசைகாட்டிச் சாதனங்கள் சிலவற்றை, குறிப்பாக நடமாடும் (மொபைல்) சாதனங்களை பெற்றார்கள்.

அவற்றை ஒரே இடத்தில் டெஸ்ட் பண்ணாமல், பெங்களூர், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் இயக்கிப் பரிசோதித்துப் பார்த்தார்கள்.

அதில் பெரிதாக பலன் ஏற்படவில்லை. காரணம், டில்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாதனங்கள் 30 ஆண்டுகள் பழமையானவை. தகவல் சென்றுகொண்டு இருக்கும்போது புலிகள் செய்யும் அலைவரிசை மாற்றங்களை, இவற்றால் கண்டறிய இயலவில்லை.

புலனாய்வுக் குழுவுக்கு உதவ வந்த நிபுணர்கள், விடுதலைப் புலிகள் தகவல் அனுப்பும் முறையில் இருந்து, அவர்களிடம் உள்ளவை அதி நவீன ஒயர்லெஸ் சாதனங்கள் என்றார்கள்.

இந்திய அரசின் உளவுத்துறைகளிடமே அந்தளவு லேட்டஸ்ட் சாதனங்கள் இருக்கவில்லை. இவர்கள் நாடு முழுவதும் தேடி, இரவல் பெற்றுவந்த கருவிகள், விடுதலைப் புலிகளின் கருவிகளுக்கு இணையாக இல்லை.

இந்தியாவில், வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் இருந்த நாட்கள் அவை. விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் இருந்து புதிதுபுதிதாக கருவிகளை பெற்றார்கள்.

இந்திய உளவுப் பிரிவுகளுக்கு அந்தக் கருவிகளை வாங்க, ஏகப்பட்ட இடங்களில் அனுமதி பெறவேண்டியிருந்தது.

இதனால், ரகசிய ஒயர்லெஸ் நிலையத்தை தேடும் இவர்களது முயற்சி முடியாமல் இழுத்துச் சென்றது.

ஆனால், சென்னை ரகசிய ஒயர்லெஸ் நிலையத்தில் இருந்து புலிகள் அனுப்பிய தகவல்களை உளவுப்பிரிவு றோ ஒட்டுக்கேட்டு பதிவு செய்ய முடிந்தது.

அந்தப் பதிவுகளில் இருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.

சென்னையில் எங்கோ ஒரு இடத்தில் இருந்து இயங்கிய ரகசிய ஒயர்லெஸ் நிலையம் ‘ஸ்டேஷன்-910’ மூடப்படுவதற்கு முன்னர், புலிகள் அனுப்பிய ஒயர்லெஸ் தகவல் ஒன்றை றோ ஒட்டுக் கேட்டது.

முக்கிய அந்தத் தகவலை றோ, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தெரிவித்தது.

சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இலங்கைத் தமிழரான பொறியாளர் ஒருவரது வீட்டில், ஜூன் 21, அல்லது 22-ம் தேதி முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கப் போகின்றது என்பதே அந்த தகவல்.

றோ ஒட்டுக்கேட்டது, புலிகளின் ‘ஸ்டேஷன் 910’ யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய தகவல். சென்னையில் தலைமறைவாக இருந்த சிவராசனிடம் இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்த பொட்டு அம்மானுக்கு (புலிகளின் உளவுப்பிரிவு தலைவர்) அந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

சிவராசன், தாமும் சுபாவும் தமிழகத்தில் இருந்து தப்பிச் செல்வதில் சிரமங்கள் இருப்பதாகவும், தமிழகத்தில் ரகசியமாக இயங்கிய (புலிகளின்) அரசியல் பிரிவின் உதவியை கோரியுள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.

அதற்காக சிவராசன், தமிழகத்தில் இருந்து ரகசியமாக இயங்கிய புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திருச்சி சாந்தனை சந்திக்கப் போகிறார். அந்தச் சந்திப்பே என்பதுதான் அந்தத் தகவல்.

சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இலங்கைத் தமிழரான இஞ்ஜினியர் ஒருவரது வீட்டில், ஜூன் 21, அல்லது 22-ம் தேதி, சாந்தனை சந்திக்கப் போவதாக சிவராசன், பொட்டு அம்மானுக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

மேலேயுள்ள தகவல் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். “தமிழகத்தில் இருந்து இயங்கும் புலிகள், தமக்கிடையே சந்திப்பது தொடர்பாக ஏன் யாழ்ப்பாணத்துக்கு அறிவிக்க வேண்டும்?” என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கலாம். அதற்கு சிறியதாக ஒரு விளக்கம்:

ராஜிவ் கொலை தொடர்பாக தேடப்பட்ட சிவராசன், சுபா ஆகியோரும், மனித வெடிகுண்டாக செயல்பட்டு கொல்லப்பட்ட தனுவும், புலிகளின் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் பிரிவினர் ரகசிய ஆபரேஷன்களுக்காக அனுப்பி வைக்கப்படும்போது, புலிகளின் மற்றைய பிரிவினருக்குகூட தெரியாமல் ரகசியம் காக்கப்படும். இரு பிரிவினரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள மாட்டார்கள்.

முக்கிய தேவை கருதி உளவுப் பிரிவு, மற்றைய பிரிவிடம் உதவி கோர வேண்டியிருந்தால், உளவுப் பிரிவின் தலைமைக்கு அறிவிப்பார்கள்.

ராஜிவ் கொலை தொடர்பாக தமிழகம் எங்கும் வலைவீசித் தேடப்பட்ட சிவராசன், தமிழகத்தில் இருந்து தப்பி யாழ்ப்பாணம் செல்வது சிரமமாக இருந்தது. அதற்காக அரசியல் பிரிவு தலைவர் திருச்சி சாந்தனின் உதவியை நாடப் போவதையே பொட்டு அம்மானுக்கு ஒயர்லெஸ் மெசேஜில் தெரிவித்திருந்தார்.

சிவராசன், திருச்சி சாந்தனை சந்திக்க திட்டமிட்டிருந்த சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்துவந்த இலங்கைத் தமிழ் இஞ்ஜினியர், புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பது உளவு அமைப்புகளுக்குத் தெரியும். அவர் புலிகளின் அரசியல் பிரிவினருடன் மட்டும் தொடர்பு வைத்திருந்த காரணத்தால், ராஜிவ் கொலை தொடர்பான கண்காணிப்பு வளையத்தில் அதுவரை அவர் இருக்கவில்லை.

இந்த ஒயர்லெஸ் தகவல் கிடைத்தவுடன், அவரது வீடு இருந்த பகுதியில் இரவும் பகலும் தொடர்ந்து கண்காணிப்பு துவங்கியது.

செல்வந்தர்கள் வாழும் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில் அந்த இஞ்ஜினியரின் வீடு இருந்தது. அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் பல குடியிருப்புகள் இருந்தன.

ஏராளமானோர் வந்து போய்க்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும், குறிப்பாகப் பகல் நேரத்தில் இடைவிடாமல் கவனிப்பது சுலபமான காரியம் அல்ல.

விடுதலைப் புலிகளின் உளவுத்துறை ஆட்கள் மிகுந்த புத்திசாலிகள். ஓர் இடத்துக்குச் செல்வதற்கு முன் நன்கு அலசி ஆராய்ந்த பின்பே செல்வார்கள்.

அவர்களை கண்காணிப்பது என்றால், அதிகாரிகளின் எந்தவொரு நடமாட்டமும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்கள் வர மாட்டார்கள்.

அந்த வீட்டுக்குள் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய ‘சென்னை மெட்ரோ வாட்டர்’ ஊழியர்கள் சிலரை அனுப்பியது புலனாய்வுக் குழு. அங்கே வீட்டுக்காரர்களை தவிர புதிதாக யாரும் இருந்ததாக தெரியவில்லை.

சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பல அதிகாரிகள் அந்த அடுக்குமாடி கட்டடத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்தார்கள். பில்டிங்கின் முன்புறம், பின்புறம், அனைத்து வாயில்கள் எல்லாமே கண்காணிக்கப்பட்டன.

அந்த அடுக்குமாடி கட்டடத்துக்கு உள்ளே செல்லும் அனைவரையும், அவர்கள் அறியாமலேயே, இவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

இதிலுள்ள ஒரேயொரு சிக்கல், இவர்களிடம் இருந்தது சிவராசன் மற்றும் சுபாவின் போட்டோக்கள் மட்டுமே. அந்த போட்டோக்களை வைத்துக் கொண்டு சிவராசன் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

ஜூன் 21, 22-ம் தேதிகளில், 24 மணிநேரமும் கண்காணிப்பு இருந்தது. ஆனால், சிவராசன் அங்கு வரவில்லை.

வேறு வழியில்லாமல், 23-ம் தேதி, இஞ்ஜினியரின் வீட்டுக்குள் புகுந்தனர் புலனாய்வுக் குழு அதிகாரிகள். இஞ்ஜினியரிடமும் அவரது மனைவியிடமும் பேசினார்கள். டிக்சன் என்ற இளைஞர் ஒருவர்தான் ஜூன் 22-ம் தேதி தங்கள் வீட்டுக்கு வந்ததாகப் பொறியாளரின் மனைவி கூறினார்.

டிக்சன் யார் என்று புலனாய்வுக் குழுவுக்கு தெரிந்திருக்கவில்லை. இதனால், “வேறு யாரும் வரவில்லையே” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு, மல்லிகை அலுவலகத்துக்கு திரும்பியது புலனாய்வு டீம்.

அலுவலகம் திரும்பிய சி.பி.ஐ. அதிகாரிகள், இஞ்ஜினியரின் வீட்டுக்கு டிக்சன் என்பவர் மட்டுமே வந்தார் என்று சொன்னபோது, அங்கு வந்திருந்த றோ அதிகாரி ஒருவர் தலையில் கையை வைத்தார்.

“டிக்சன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர். திருச்சி சாந்தனுக்கு கீழ் பணிபுரிந்து வந்தார். ஒயர்லெஸ் தகவல் தொடர்பில் நிபுணர் இந்த டிக்சன்” என்றார்.

அத்துடன் தமது சென்னை அலுவலகத்தில் இருந்து டிக்சனின் போட்டோ ஒன்றையும் தருவித்துக் கொடுத்தார்.

இப்போது, சிவராசன், சுபா ஆகியோரின் போட்டோக்களுடன், டிக்சனின் போட்டோவையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, மீண்டும் அடுக்குமாடி கட்டடத்தை கண்காணிக்க கிளம்பியது புலனாய்வு அதிகாரிகள் டீம்.

இம்முறை அவர்களுக்கு அதிஷ்டம் அடித்தது. அன்று மாலையே, டிக்சன் அடுக்குமாடி கட்டடத்துக்குள் செல்வதை புலனாய்வுக்குழு அதிகாரிகள் கண்டார்கள். ஆனால், சிவராசன் வரவில்லை. இவர்கள் கைது செய்ய வந்ததோ, சிவராசனைத்தான். அதனால், டிக்சனை தடுக்கவில்லை.

அத்துடன், டிக்சன் யாரென்று இப்போது தெரிந்து விட்டதால், அவரை வெளியே விட்டு வைத்திருந்தால்தான், அவர் யார் யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பதை கண்காணிக்க முடியும். அப்படித்தான், சிவராசனையும் பிடிக்க முடியும்.

அடுக்குமாடி பில்டிங்குக்குள் சென்ற டிக்சன், சுமார் அரை மணி நேரத்தின் பின் வெளியே வந்தார். அவருடன் மற்றொரு நபரும் இருந்தார். புதிய நபர் யார் என்று புலனாய்வுக் குழுவுக்கு தெரிந்திருக்கவில்லை.

என்னதான் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள புலனாய்வுக் குழுவுக்கு ஒரெயொரு சாய்ஸ்தான் இருந்தது.

மீண்டும் இஞ்ஜினியரின் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டியதுதான். டிக்சனும், மற்றைய நபரும் வெளியேறி ஒரு மணி நேரத்தின்பின், இஞ்ஜினியரின் வீட்டில் போய் விசாரித்தார்கள்.

அங்கே கிடைத்த தகவலில் இருந்து, அன்று காலையே, திருச்சி சாந்தனைத் தேடி இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் வந்தார்.

சாந்தன் அங்கு வரவில்லை என்று இஞ்ஜினியரின் மனைவி கூறியதும், சாந்தன் வருவதாக சொல்லியிருக்கிறார் என்று கூறி காத்திருந்தார்.

திருச்சி சாந்தன் வரவில்லை, ஆனால் அவரது உதவியாளர் டிக்சன் வந்தார். காத்திருந்த பெண்ணுக்கு டிக்சனை தெரிந்திருந்தது.

அந்த பெண், டிக்சனிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். டிக்சன் பதிலுக்கு தாமும் ஒரு கடிதத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

கடிதத்தை பெற்றுக்கொண்டு அந்தப் பெண் வெளியேறிவிட்டார். சிறிது நேரத்தில் புதிய இளைஞர் ஒருவர் டிக்சனை தேடி வந்தார்.

அவரது பெயர் ராஜா என்பது, டிக்சன் அவரை அழைத்ததில் இருந்து இஞ்ஜினியர் தெரிந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து டிக்சனும், ராஜாவும் சேர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த விபரங்களை இஞ்ஜினியரிடமும் அவரது மனைவியிடமும் இருந்து தெரிந்து கொண்டது புலனாய்வுக்குழு. டிக்சனுடன் ஒன்றாக வெளியேறிய நபர் ராஜாதான் என்பதை புலனாய்வுக்குழு அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.

இப்போது இவர்களுக்கு கதைச் சுருக்கம் சுமாராகப் புரிந்தது.

திருச்சி சாந்தனின் பிரதிநிதியாக டிக்சன் இருந்ததால், சிவராசனின் பிரதிநிதியாக அங்கு வந்த இலங்கைப் பெண் இருக்க வேண்டும்.

ஆனால், அந்தப் பெண் சுபா அல்ல. சிவராசனும், திருச்சி சாந்தனும் நேருக்கு நேர் சந்திக்காமல், தத்தமது பிரதிநிதிகளை அனுப்பி கடிதங்களை பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.

இதற்குள் புதிதாக வந்து சேர்ந்த நபரான ராஜா, யார் என்று தெரியவில்லை.

விடுதலைப் புலிகளின் உளவு அமைப்பு செயல்படும் விதம் எப்படியென்றால், அவர்களது ஆள் ஒருவர் ஒரு இடத்துக்கு சென்றால், வேறு ஒருவர் அதற்கு முன்னும், பின்னும், அந்த இடத்தை கண்காணிப்பார்கள்.

இந்த விஷயம் சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாமல்கூட இருந்திருக்கலாம்.

அவர்களது ஆள் இஞ்ஜினியர் வீட்டுக்கு போய் திரும்பிய அரை மணி நேரத்திலேயே, புலனாய்வுக் குழு அதிகாரிகள் அங்கு விசிட் அடித்ததை அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

சரி. புலிகள் அதைத் தெரிந்து கொண்டதை புலனாய்வுக் குழு எப்படி தெரிந்து கொண்டார்கள்?

மறுநாள் காலை, றோ அதிகாரி ஒருவர் பரபரப்பாக மல்லிகை அலுவலகத்துக்கு வந்தார். புலிகள் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் அனுப்பிய புதிய ஒயர்லெஸ் மெசேஜ் ஒன்றை அவர் கொண்டுவந்தார்.

சிவராசன், பொட்டு அம்மானுக்கு அனுப்பிய அந்த மெசேஜ், “மல்லிகை அலுவலகம்மீது திடீர் தாக்குதல் நடத்தி, குறைந்தது ஒரு டஜன் ஆட்களையாவது கொல்ல திட்டமிட்டிருக்கிறோம்”……

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s