ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 30

ராஜிவ் கொலை திட்டத்துக்காக, மே 1-ம் தேதி படகில் வந்து இறங்கிய டீம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பொட்டு அம்மானுக்கு, சிவராசன் சென்னையில் இருந்து அனுப்பிய மெசேஜில், “மல்லிகை அலுவலகம் மீது திடீர் தாக்குதல் நடத்தி, குறைந்தது ஒரு டஜன் ஆட்களையாவது கொல்ல திட்டமிட்டிருக்கிறோம்” என்று எழுதப்பட்டு இருந்ததில், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு டீம் உஷாரடைந்தது. இதையடுத்து, ‘மல்லிகை’க்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

புலிகளால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் இந்த மெசேஜ் விவகாரம், எப்படியோ மீடியாக்களுக்கும் கசிந்தது. “சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் மல்லிகை அலுவலகம் புலிகளால் தாக்கப்படலாம்” என்று பத்திரிகை தலைப்புச் செய்திகள் அலறின.

மல்லிகை அலுவலகத்தின் பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு பொலீஸ் படையுடன், இந்திய பாதுகாப்புப் படையின் 2 குழுக்களும், ஒரு தீயணைப்பு இன்ஜினும் வழங்கப்பட்டன. (ஆனால், இறுதிவரை அலுவலகத்தை தாக்குவதற்கு யாரும் வரவில்லை)

பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருந்தாலும், புலனாய்வுக் குழுவினரின் விசாரணைகளில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் இருக்கவில்லை. ஒற்றைக்கண்’ சிவராசன் பற்றிய விவரம் அறிய புலாய்வுக் குழு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் இருந்தன.

பாக்கியநாதன், பத்மா, நளினி, முருகன், அறிவு, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரிடம் விசாரித்ததிலும், சிவராசன் இருக்கும் இடம் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததை புலனாய்வுக் குழுவால் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால், ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்துவதற்கான தடயங்கள் ஏதும் இல்லை.

அவர்கள் வெறும் சாட்சிகளாக வேண்டுமானால் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு புலனாய்வுக்குழு வந்திருந்தது. அவர்கள் அனைவருக்கும் சிவராசனை தெரிந்திருந்தது.

ஆனால், சிவராசனின் நடமாட்டங்கள் குறித்து அவர்களுக்கு நிஜமாக ஏதும் தெரியாது என்பதை புலனாய்வுக்குழு புரிந்து கொண்டது.

இதனால், புதிய கோணம் ஒன்றில் விசாரணையை துவங்க முடிவு செய்த புலனாய்வுக் குழு, தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கடந்தகால தொடர்புகள் பற்றிய விபரங்களை சேகரிக்க துவங்கியது.

விடுதலைப்புலி போராளிகளின் கடந்தகால நடமாட்டங்கள் பற்றிய விபரங்களை சேகரித்த போது, புலிகள் இலங்கையில் இருந்து படகுகளில் வருகையில், பெரும்பாலும் நாகப்பட்டினம் அருகேதான் கரையிறங்கியது தெரியவந்தது.

ராமேஸ்வரம், தொண்டி ஆகிய மற்ற இடங்களிலும் புலிகளின் படகுகள் வந்து சேர்ந்த விபரங்கள் கிடைத்தாலும், நாகப்பட்டினம் அருகே கோடியக்கரையில் கரையிறங்கியதுதான் அதிகம் என்பதை சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவு நோட் பண்ணியது.

இதையடுத்து, சி.பி.ஐ. டீம் ஒன்று கோடியக்கரை சென்று, சந்தேகம் ஏற்படாத வகையில் தகவல்களை திரட்டியது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் தரையிறங்குவதற்கு புலிகள் கோடியக்கரையை பெரிதும் விரும்பியதன் காரணம், அந்தப் பகுதியில் அவர்களுக்கு இருந்த செல்வாக்குதான் என்பதை புரிந்து கொண்டனர்.

புலிகளுக்கு கோடியக்கரையில் இருந்த செல்வாக்குக்கு காரணம், சண்முகம் என்ற தனி மனிதர் ஒருவர்தான்.

இந்த சண்முகம், அந்த நாட்களில் கோடியக்கரையில் மிக முக்கிய நபராக இருந்தார். அவரது தொழில் கள்ளக் கடத்தல்தான் என்ற போதிலும், ஊரே அவருக்கு கட்டுப்பட்டு இருந்தது. அவர்தான் புலிகளுக்கு கோடியக்கரையில் பெரும் பலமாகவும், ஆதரவாகவும் இருந்தார் என்பதை புலனாய்வுக் குழு தெரிந்து கொண்டது.

இதற்கிடையே கோடியக்கரையில், புலனாய்வுக் குழுவின் ஆட்கள் வந்த விசாரித்ததை, சண்முகம் தெரிந்து கொண்டார். உடனே அவர் தலைமறைவாகி விட்டார்.

சண்முகத்தை மடக்கலாம் என்று புலனாய்வுக்குழு மீண்டும் கோடியக்கரை சென்றபோது அவர் அங்கே இல்லை. அவரது இடங்களை சோதனையிட்டது புலனா்வுக்குழு. அப்போதுதான், சண்முகம் எவ்வளவு பெரியதொரு நெட்வேர்க்கை அங்கு வைத்திருந்தார் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

தொழில் முறையில் கடத்தல்காரரான வண்முகம் பல படகுகளுக்கு சொந்தக்காரராக இருந்தார். அவரிடம் பலர் ஊழியர்களாக இருந்தனர்.

படகுகளை செலுத்தும் நபர்களைத் தவிர, சண்முகத்தின் கடத்தல் பொருட்களை கோடியக்கரைக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கும், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து பொருட்களை கோடியக்கரைக்கு கொண்டு வருவதற்கும் என பல ஊழியர்கள் சண்முகத்திடம் இருந்தனர்.

இவர்களை சி.பி.ஐ. புலனாய்வுக்குழு விசாரித்தபோது, சண்முகத்தின் ஊழியர்களில் சிலர் இலங்கைத் தமிழர்கள் என்பதும் தெரியவந்தது.

அவர்களில் ஒருவர் மகாலிங்கம். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் என்ற இடத்தைச் சேர்ந்த கடத்தல்காரர். சண்முத்தின் படகுகளை செலுத்தும் ஊழியர்களில் அவரும் ஒருவர். அவரை விசாரித்தபோது, சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன.

இந்த மகாலிங்கம், இலங்கையில் 1983-ம் ஆண்டு இனப் பிரச்னை ஏற்பட்டபோது, படகு மூலம் தமிழகம் வந்தவர். 1984-ம் ஆண்டிலிருந்து சண்முகத்திடம் வேலை பார்த்து வந்தார். நன்கு படகு ஓட்டத் தெரிந்த அவர், சண்முகத்திடம் பணியில் சேருமுன், விடுதலைப் புலிகளின் படகுகளை அடிக்கடி ஓட்டி வந்துள்ளார்.

அதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரல்ல, அவர்களது சிவிலியன் ஊழியராக இருந்திருக்கிறார்.

அந்த வகையில் தமிழகத்துக்கு வந்து போன புலிகளில் அநேகமான ஆட்களை இந்த மகாலிங்கம் தெரிந்து வைத்திருந்தார். அத்துடன் கோடியக்கரைக்கு வரும் புலிகள் சில மணிநேரம் களைப்பாறிச் செல்ல கடற்கரை ஓரமாக இரண்டு வீடுகளை ஒதுக்கி கொடுத்திருந்தார் சண்முகம். அந்த இரு வீடுகளையும் பராமரிக்கும் பணியைச் செய்தது இலங்கைத் தமிழரான மகாலிங்கம்.

இதனால், கோடியக்கரைக்கு வரும் புலிகளில் யார் எப்போது வந்தார்கள், யார், யாருடன் வந்தார்கள் என்ற விபரங்களும் மகாலிங்கத்துக்கு தெரிந்திருந்தது.

சண்முகத்தைப் பிடிக்கச் சென்ற இடத்தில் அகப்பட்ட மகாலிங்கத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது புலனாய்வுக்குழு. அவரிடம் இருந்து கிடைத்த தகவல்கள், புலிகளின் தமிழக நடவடிக்கைகள் பற்றிய சில விபரங்களை புலனாய்வுக்குழுவுக்கு தெரிய வைத்தது.

விடுதலைப்புலிகளின் கடல்புலிகள் பிரிவைச் சேர்ந்த டேவிட், மற்றும் சிலருடன், முதல்தடவையாக சிவராசனைச் சந்தித்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் மகாலிங்கம்.

சிவராசனும் மற்றையவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருவதற்காக மகாலிங்கமும், இரு படகோட்டிகளும், படகு செலுத்தி வந்தபோதே முதல் சந்திப்பு நடந்தது.

தமிழகம் வந்த அவர்கள், சில தினங்களிலேயே யாழ்ப்பாணம் திரும்பியபோது, அவர்களை படகில் அழைத்துச் சென்றதும் மகாலிங்கம்தான்.

அப்போது நடைபெற்ற உரையாடல்களில் இருந்து, டேவிட் மற்றும் சிவராசன் டீம் தமிழகம் வந்ததே, ஈ.பி.ஆர்.எல்.எஃப் (மற்றொரு ஈழ விடுதலை இயக்கம்) தலைவர் பத்மநாபாவை கொல்வதற்கு என்பதை மகாலிங்கம் தெரிந்து கொண்டார்.

பத்மநாபாவை சுட்டுக் கொன்றுவிட்டு அந்த டீம் யாழ்ப்பாணம் திரும்புகிறது என்பதையும் புரிந்து கொண்டார்.

பத்மநாபாவை கொன்றவர்களை தமிழக போலீஸ் வலைவிரித்து தேடிவருகிறது என்ற செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த கொலையை செய்தவர்கள் கோடியக்கரையில் இருந்து சாவகாசமாக யாழ்ப்பாணம் புறப்பட்டுச் சென்றிருந்தனர். தமிழகத்தில் அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அது 1990-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற சம்பவம். பத்மநாபாவும், அவரது கட்சி முக்கியஸ்தர்கள் 14 பேரும் ஜூன் 19-ம் தேதி, சென்னை சூளமேடு பகுதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி உதவவில்லை என்று தற்போது கூறும் ஆட்களில் எத்தனை பேருக்கு, பத்மநாபாவை கொன்றவர்களை தமிழகத்தில் மடக்காமல், தப்பிச் செல்ல அனுமதிக்கும்படி அன்றைய தி.மு.க. ஆட்சியில் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரியுமோ, தெரியவில்லை. தற்போது ஓய்வு பெற்றுள்ள சில தமிழக உளவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டு அதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் புலிகளுக்கு உதவி செய்ததையும் ஒரு காரணமாக வைத்துதான், அன்றைய தி.மு.க. ஆட்சி பாதியில் கலைக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்று காரணம்காட்டி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 356-ம் பிரிவின்படி தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, பிரதமர் சந்திரசேகர் தலைமையில் இருந்த மத்திய அரசால் 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கலைக்கப்பட்டது.

பத்மநாபாவை கொலை செய்த டீமை யாழ்ப்பாணத்தில் கொண்டுபோய் விட்ட பின்னர் மகாலிங்கம், புலிகளுக்காக படகு ஓட்டவில்லை.

கோடியக் கரையில் நிரந்தரமாக தங்கிவிட்டார். சண்முகத்தின் ஊழியராக இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் புலிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

கருணாநிதி ஆட்சி கலைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் 1991 ஜனவரியில், இந்த தொடரில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட நிக்சன் (புலிகளின் உளவுப் பிரிவு), சென்னையில் இருந்து கோடியக்கரை வந்தார். இலங்கையில் இருந்து படகு வருவதற்காக இரு தினங்கள் கோடியக்கரையில் காத்திருந்தார்.

சண்முகம் புலிகளுக்காக ஏற்பாடு செய்து கொடுத்திருந்த வீட்டில்தான் நிக்சன் தங்கியிருந்தார். அவரது தேவைகளை கவனித்துக் கொண்டார் மகாலிங்கம்.

நிக்சன் வந்து 2 தினங்களில், அவரை ஏற்றிச் செல்ல யாழ்ப்பாணத்தில் இருந்து படகு வந்து சேர்ந்தது. அந்தப் படகு, யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவரை கொண்டுவந்து இறக்கிவிட்டு, நிக்சனை ஏற்றிச் சென்றது.

படகில் வந்து இறங்கியவரையும் மகாலிங்கத்துக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர், இந்தத் தொடரில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த ரமணன். (காந்தனின் ஒயர்லெஸ் ஆபரேட்டர்)

ரமணன் தம்முடன் ஒரு பெட்டியை கொண்டு வந்திருந்தார்.

படகில் இருந்து இறங்கியபின், சண்முகத்தில் வீட்டில் வைத்து அந்த பெட்டியை திறந்து, அதற்குள் இருந்த பொருள் ஈரம் படாமல் வந்திருக்கிறதா என்று ரமணன் செக் பண்ணிப் பார்த்தபோது, மகாலிங்கமும் அருகில்தான் இருந்தார். அந்தப் பெட்டியில் இருந்த பொருள், ஒரு புத்தம் புதிய லேட்டஸ்ட் ஒயர்லெஸ் கருவி.

ராஜிவ் கொல்லப்பட்டபின், புலிகள் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒயர்லெஸ் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தது இந்தக் கருவியின் மூலமாகத்தான்! (கடந்த அத்தியாயத்தில் விபரங்களை பார்க்கவும்)

அதன்பின் சிறிது காலத்துக்கு புலிகளின் படகுகள், மகாலிங்கத்துக்கு தெரிந்து கோடியக்கரைக்கு வரவில்லை.

மே 1-ம் தேதி, புலிகளின் படகு ஒன்று, 8 பேருடன் கோடியக்கரைக்கு வந்தது. படகு வந்த அந்தத் தேதி மகாலிங்கத்துக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. காரணம், அன்று கோடியக்கரையில் மே தின ஊர்வலம் ஒன்று சிறிய அளவில் நடைபெற்றது அவருக்கு ஞாபகம் இருந்தது.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து கோடியக்கரைக்கு வந்த படகில் இருந்த 8 பேரில்தான், ராஜிவ் காலை ஆபரேஷனுக்காக அனுப்பப்பட்ட டீமும் இருந்தது.

மகாலிங்கம் கூறிய தகவலின் அடிப்படையில் இவர்கள்தான் அந்த 8 பேர்:

1) சிவராசன்
2) ரூசோ
3) கீர்த்தி
4) நேரு
5) சுதந்திர ராஜா
6) மகாலிங்கத்துக்கு பெயர் தெரியாத, ஒரு கால் மட்டும் உடைய இளைஞர்
இவர்களுடன் வந்த மற்றைய இருவரும், மகாலிங்கத்துக்கு அறிமுகமில்லாத இரு இளம் பெண்கள்.

“இந்த 8 பேரும், சண்முகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் சில மணிநேரம் தங்கி ஓய்வெடுத்து விட்டு, சென்னை புறப்பட்டுச் சென்றனர்” என்றார் மகாலிங்கம்.

படகில் வந்த 8 பேரில் இருந்த இளம் பெண்களும் யார் என்று மகாலிங்கத்துக்கு தெரியவில்லை. ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன் ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்களை மகாலிங்கத்திடம் காட்டியபோது, அதில் இருந்த தனுவும், சுபாவும்தான் படகில் வந்த இரு பெண்கள் என்பதை அடையாளம் காட்டினார் அவர். (தனு, சுபா ஆகிய இருவரது போட்டோக்களும் அதற்கு முன்னரே பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. ஆனால், தாம் பத்திரிகை படிப்பதில்லை என்றார் மகாலிங்கம்)

ராஜிவ் கொலை ஆபரேஷனுக்காக வந்திறங்கிய டீமுடன் வந்த ஒரு கால் மட்டும் உடைய இளைஞர் யார் என்பது, எந்தவித முயற்சியும் இல்லாமல், மறுநாளே சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தெரியவந்தது.

புலனாய்வுக் குழுவின் ஒரு டீம் கோடியக்கரைக்கு சென்றபோது, மற்றொரு டீம், ஏற்கனவே கைது செய்யப்பட்ட முருகன் அடையாளம் காட்டிய வீடுகளை சோதனையிட்டுக் கொண்டிருந்தது. அந்த ரெயிடுகளில், சென்னை மடிப்பாக்கத்தில் முருகன் மறைந்திருந்த இடத்திலிருந்து நிறையக் கட்டுரைகளும், ஆவணங்களும் சிக்கின.

அவற்றில் ஒன்று, முகவரி எழுதப்பட்ட ஒரு துண்டுக் கடிதம். அதில் எழுதப்பட்டிருந்த முகவரி: சுரேஷ்குமார், கோல்டன் ஹோட்டல், ஜெய்ப்பூர் (ராஜஸ்தான் மாநிலம்).

சென்னை மல்லிகை அலுவலகத்தில் இருந்து உடனடியாக சி.பி.ஐ.யின் ஜெய்ப்பூர் கிளையை தொடர்பு கொண்டு, கோல்டன் ஹோட்டலை செக் பண்ணச் சொன்னார்கள். சுரேஷ்குமார் என்ற நபர் அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு, பின் அறையை காலி செய்துகொண்டு, அருகில் உள்ள விக்ரம் ஹோட்டலுக்கு மாறிச் சென்றது தெரியவந்தது.

விக்ரம் ஹோட்டலில், சுரேஷ்குமாரின் அறையை தட்டியபோது, அவரே கதவைத் திறந்தார்.

அவருக்கு ஒரு கால் கிடையாது.

சி.பி.ஐ., அவரது அறையை சோதனையிட்டபோது, டைரி ஒன்றில் எழுதப்பட்டிருந்த இரு சென்னை தொலைபேசி எண்கள் கிடைத்தன. அத்துடன் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட இன்லேன்ட் லெட்டர் ஒன்றும் கிடைத்தது.

ராஜிவ் காந்தி, மே 21-ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். ஜெய்ப்பூர் ஹோட்டலில் கிடைத்த இன்லேன்ட் கடிதம், ராஜிவ் கொல்லப்பட்டதற்கு மறுதினம் மே 22-ம் தேதி எழுதப்பட்டிருந்தது. மிகச் சுருக்கமான அந்தக் கடிதத்தில் இருந்த வாசகங்கள்:

“குடும்பத்தில் ‘நல்ல காரியம்’ நேற்று நடந்தது. விருந்தினர்கள் தேடிவரலாம் என்பதால், நீ உடனே இடத்தை மாற்றுவது நல்லது” ……

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s