ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 31

ராஜிவ் கொலை புலனாய்வு: பொட்டு அம்மானால் அனுப்பி வைக்கப்பட்ட ஆட்கள்

ராஜிவ் காந்தி கொலைவழக்கில், சிவராசன், சுபா ஆகியோர் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தம்மிடம் அகப்பட்ட மற்றையவர்களை சிறப்பு புலனாய்வுக்குழு துருவித் துருவி விசாரிக்கத் தொடங்கியது. சிவராசனின் மறைவிடம் பற்றிய ஏதாவது துப்பு கிடைக்குமா என்று சகல கோணங்களிலும் விசாரித்தார்கள்.

சி.பி.ஐ.-யின் சிறப்பு புலனாய்வுக்குழு சென்னையில் கைது செய்திருந்த ராபர்ட் பயஸை விசாரித்ததில், சிவராசன் அடிக்கடி வந்துபோகும் மடிப்பாக்கம் வீட்டு முகவரி ஒன்று கிடைத்தது. அந்த முகவரியில் இரு இலங்கைத் தமிழர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர், சுமார் 40 வயதான விஜயானந்தன். மற்றொருவர், வாணன் என்ற கடத்தல்காரர்.

இவர்களை விசாரித்தபோது சில விபரங்கள் தெரியவந்தன. அந்த விபரங்களின்படி, ரூசோ, விஜயானந்தன், ஒரு கால் மட்டும் கொண்ட சுரேஷ்குமார் என்ற சிவரூபன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலையின் திட்டமிடலாளர் என்று தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த சிவராசன் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இவர்கள், ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு 3 வாரங்களுக்கு முன், மே 1-ம் தேதி கோடியக்கரையில் வந்து இறங்கிய விபரமும் உறுதி செய்யப்பட்டது.

மடிப்பாக்கம் வீட்டில் கிடைத்த ஆவணங்களில், விடுதலைப் புலிகளின் முக்கியமான ரிக்கார்டுகள் சில கிடைத்தன.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக வெளிநாடுகளில் ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்கிய விவரம், அதற்கான செலவு விவரம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சொந்தமான கப்பல் நிறுவனங்கள், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் தகவல் மையங்களின் விவரங்கள் ஆகியவை அந்த ரிக்கார்டுகளில் இருந்தன.

அந்த வீட்டில் இருந்து, ‘BLACK BOOK Improvised Munitions’ என்ற வெடிகுண்டு தயாரிப்பு நுட்பம் பற்றிய நூலின் சில பாகங்களும், அரிசோனாவின் டெசார்ட் பப்ளிகேஷன் பிரசுரித்த கொலை செய்வது எப்படி (How to kill) என்ற நூலும் கைப்பற்றப்பட்டன. ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட பல்வேறு வகையான வெடிபொருள்களைப் பயன்படுத்துவது பற்றி இந்நூல்களில் விவரிக்கப்பட்டிருந்தன.

முதலாவது நூலின் 3-ம் பாகத்தில் 153-ம் பக்கத்தில், முக்கிய விவரம் ஒன்று அடையாளம் குறிக்கப்பட்டிருந்தது. அதில், 2 சுவிட்சுகளுடன் கூடிய எலக்ட்ரிகல் சர்க்யூட் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜிவ் காந்தி கொலைக்கு இத்தகைய சாதனம்தான் பயன்படுத்தப்பட்டிருந்தது.

(ஆனால், விடுதலைப் புலிகளுக்கு இந்த நூல்களுக்கு தேவையிருக்க சான்ஸ் குறைவு. ஏனென்றால், அந்த சமயத்தில் அவர்களாகவே பல்வேறு வகை வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் நுட்பத்தை அறிந்த நிபுணர்களாகி இருந்தார்கள். இந்த புத்தகங்கள் சும்மா டபுள் செக் பண்ணுவதற்காக வைத்திருந்திருக்கலாம்)

ரூசோ, விஜயானந்தன், சிவரூபன் ஆகிய மூவரையும் விசாரித்ததில், அவர்கள் மூவருமே, விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை தலைவராக இருந்த பொட்டு அம்மான், இவர்கள் அனைவரையும் சிவராசன் தலைமையில் பணிபுரிவதற்காக தமிழகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் சொன்னார்கள்.

விடுதலைப் புலிகளின் தமிழக ஆபரேஷனில், இவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், என்ன செய்ய வேண்டும் என்ற இறுதி உத்தரவு, சிவராசனிடம் இருந்துதான் வரும் என்று பொட்டு அம்மான் கூறி அனுப்பியதாகவும் விசாரணையில் தெரிவித்தார்கள்.

தமிழகத்தில் தங்கியிருந்தபோது, அவர்களுக்குத் தேவையான வசதிகளையும், பணத் தேவைகளையும் சிவராசன் கவனித்துக் கொண்டார்.

ரூசோவை விசாரித்தபோது சில விபரங்கள் தெரியவந்தன.

விசாரணையில் தெரியவந்த விபரங்களின்படி ரூசோ, 1991-ம் ஆண்டு மே 1-ம் தேதி வேதாரண்யம் வந்து இறங்கியிருந்தார். (ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது, மே மாதம் 21-ம் தேதி)

பொட்டு அம்மானிடம் இருந்து அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த உத்தரவு: இலங்கைக் கடத்தல்காரரான மகாலிங்கத்துடன் இவர் வேதாரண்யத்தில் சில நாள்கள் தங்கியிருக்க வேண்டும். அதன் பின்னர், விடுதலைப் புலிகள் ஆதரவாளரான இந்திய கடத்தல்காரர் ஒருவர் வந்து அழைத்துச் செல்வார். (இந்த இந்தியக் கடத்தல்காரர்தான் பின்னர் தற்கொலை செய்துகொண்ட வேதாரண்யம் சண்முகம்)

பொட்டு அம்மானின் உத்தரவுப்படி ரூசோ வேதாரண்யத்தில் சில நாள்கள் தங்கியிருந்தபோதுதான், சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக முருகன் அங்கு வந்து சேர்ந்தார். நளினியின் சென்னை தொலைபேசி எண் மற்றும் நளினி, தாஸ் (முருகன்) பெயர்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டை ரூசோவிடம் கொடுத்தார் முருகன்.

ரூசோ சுமார் 2 வாரங்கள் வேதாரண்யத்தில் தங்கியிருந்த நிலையில், சிவராசனின் உத்தரவு வந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு 5 தினங்களுக்கு முன், மே 16-ம் தேதி இந்தியக் கடத்தல்காரர் சண்முகம், ரூசோவை சென்னைக்கு அழைத்துச் சென்றார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஈஸ்வரி லாட்ஜில் இருவரும் தங்கினர்.

ஈஸ்வரி லாட்ஜில் இவர்களை வந்து சந்தித்தார் சிவராசன். ரூசோவின் செலவுகளுக்கு பணமும், சென்னையில் ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள ஒரு போன் நம்பரும் கொடுத்தார். அந்த போன் நம்பர், ராபர்ட் பயஸின் தொலைபேசி எண்.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் இந்த ரூசோ தமிழகத்துக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், ராஜிவ் காந்தி ஆபரேஷனுக்காக அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வரவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட ஆபரேஷன் வேறு! அவர் செய்ய வேண்டியிருந்த ஆபரேஷன், தமிழகத்திலேயே இல்லை.

இந்த ரூசோ, மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால் அல்லது குவாலியர் நகருக்கு செல்வதற்காக பொட்டு அம்மானால் அனுப்பி வைக்கப்பட்டவர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியத் துருப்புகள் போரிட்ட சமயத்தில், இலங்கையின் வட, கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தவர், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியைச் சேர்ந்த அண்ணாமலை வரதராஜ பெருமாள். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டபோது, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் வரதராஜ பெருமாள்.

அவர், போபால், அல்லது குவாலியரில் இந்திய அரசின் பாதுகாப்பில் தங்கியிருக்கிறார் என்ற தகவல், பொட்டு அம்மானுக்கு கிடைத்திருந்தது. (வரதராஜ பெருமாள் இன்றும், இந்திய அரசின் பாதுகாப்பில் வட இந்தியாவில் பாதுகாப்பான இடம் ஒன்றில் உள்ளார்)

அவரை கொலை செய்ய விடுதலைப் புலிகள் ஏற்கனவே இலங்கையில் சில முயற்சிகள் செய்திருந்தும், கொல்ல முடிந்திருக்கவில்லை. அதையடுத்து, அவரது இருப்பிடம் மத்தியப் பிரதேசத்தில் எங்கே உள்ளது, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி என்ற விபரங்களை அறிவதற்காகவே பொட்டு அம்மான், ரூசோவை அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால், ரூசோ வந்து சேர்ந்த நேரத்தில், மற்றொரு ஆபரேஷனாக, ராஜிவ் காந்தி கொலை நடந்தது.

ரூசோ, சென்னை வந்திறங்கி புரசைவாக்கத்தில் உள்ள ஈஸ்வரி லாட்ஜில் தங்கிய 5-வது நாள், ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அதற்கிடையே அவரை அழைத்து வந்த கடத்தல்காரர் சண்முகம், சொந்த வேலை இருப்பதாக கூறி வேதாரண்யாம் சென்று விட்டார்.

ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில், விடுதலைப் புலிகள் இருப்பதாக பேச்சு எழவே, சென்னை லாட்ஜில் தனித்து தங்கியிருந்த ரூசோ நிலைகொள்ளாமல் தவித்தார். இலங்கைத் தமிழரான ரூசோ, வேதாரண்யம் கடத்தல்காரர் ஒருவருடன் வந்திருந்த காரணத்தால், இவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டார், ஈஸ்வரி லாட்ஜ் உரிமையாளர்.

அவருக்கு ரூசோவை அங்கே தொடர்ந்து தங்க அனுமதிக்க விருப்பமில்லை. ரூமை காலி பண்ண சொன்னார்.

சென்னைக்கு புதியவரான ரூசோவால், சிவராசனையோ அல்லது அவர் கொடுத்த போன் நம்பரில் உள்ளவர்களையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. (அந்த நாட்களில் செல்போன் எல்லாம் கிடையாது)

எனவே, ரூசோ சென்னையில் இருந்து ரயில் ஏறி தஞ்சாவூருக்குப் புறப்பட்டார். அங்கிருந்து அவருக்குத் தெரிந்த ஒரே இடமான வேதாரண்யம் செல்வதே திட்டம். ஆனால், முடியவில்லை. பெரும்பாலான அவரது கூட்டாளிகளைப்போல, ரூசோவும் தமிழகத்துக்குப் புதியவர். தஞ்சாவூரில் இறங்கியபோது, சந்தேகத்துக்கிடமாக நடமாடுவதாக லோக்கல் போலீஸ் அவரை செக் பண்ணியது.

அவரிடம், சயனைட் குப்பி இருந்தது! தமிழக பொலீசார் பிடித்து விட்டனர்!!

சயனைட் குப்பியுடன் அவரிடம் இருந்த துண்டுச்சீட்டு, வேதாரண்யத்தில் வைத்து முருகன் கொடுத்த துண்டுச்சீட்டு. நளினியின் சென்னை தொலைபேசி எண் மற்றும் நளினி, தாஸ் (முருகன்) பெயர்கள் எழுதப்பட்ட அதே துண்டுச்சீட்டு.

ராஜிவ் கொலை வழக்கில் தற்போது ஆயுள் கைதியாக சிறையில் உள்ள நளினி, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக உள்ள முருகன் இருவரும் சிக்கிக் கொண்டது, இந்த துண்டுச் சீட்டில் இருந்துதான்!

இப்படித்தான், சென்னை சிறப்பு புலனாய்வுக் குழுவின் காவலுக்கு வந்து சேர்ந்தார் ரூசோ.

சரி. விஜயானந்தன் எப்படி சிக்கினார்?

மே 1-ம் திகதி சிவராசனுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த விஜயானந்தன், வேதாரண்யத்தில் ஒரு வாரம் தங்கியிருந்தார். பிறகு சிவராசனின் உதவியுடன் சென்னைக்கு வந்து பாரிமுனையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார். சிவராசன் அவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார்.

இவர் பாரிமுனை லாட்ஜில் தங்கியபோது, மதுரை அருகே உள்ள அப்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், தாம் ஒரு இந்தியர் என்றும் பதிவு செய்திருந்தார். (பின்னர் அவர் கைது செய்யப்பட்டபோது, அவரது போட்டோவுடன் கூடிய ஒரு இந்திய பாஸ்போர்ட் கிடைத்தது. ஆனால், அதில் இருந்த பெயர் நாகமுத்து நாராயண பிள்ளை என்றிருந்தது. அது போலி பாஸ்போர்ட் என பின்னர் தெரிந்தது) …

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s