ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 32

பொட்டு அம்மான் சிவரூபன் என்ற ஒரு நபரை மட்டும் ஏன் விசேடமாக கவனித்தார்?

ராஜிவ் காந்தி கொலை திட்டமிடலின் பிரதான நபர் என கருதப்படும் சிவராசனுடன், மே 1-ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த விஜயானந்தன், வேதாரண்யத்தில் ஒரு வாரம் தங்கியிருந்தார். பிறகு சிவராசனின் உதவியுடன் சென்னைக்கு வந்து பாரிமுனையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார். சிவராசன் அவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார்.

விஜயானந்தன் பாரிமுனை லாட்ஜில் ஒரு சில நாள்கள் இருந்த பின்பு, சிவராசனின் கட்டளையின்பேரில் அவரை வந்து சந்தித்தவர், இந்தியரான அறிவு. விஜயானந்தனை ஒரு நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் அறிவு. இந்தியத் தமிழரின் வீடுகளில் தங்கியிருந்ததால் யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பதுதான் இதற்குக் காரணம்.

அந்த நண்பர் விடுதலைப்புலி ஆதரவாளர். விடுதலைப் புலிகளின் பிரசார புத்தகங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் அச்சிட்டுத்தரும் பொறுப்பில் இருந்தார்.

அந்த வீட்டில் தங்கியிருந்தபோது, விஜயானந்தன் ஏராளமான புத்தகங்களை வாங்கினார். ஒரு வாரம் கழித்து, அந்த நண்பர் குடும்பத்துடன் யாத்திரை புறப்பட்டுச் செல்லவிருந்ததால், விஜயானந்தனை வேறு இடத்தில் தங்க வைக்கும்படி அறிவிடம் கூறினார்.

ஒரு சில நாள்கள் கழித்து, சிவராசன், விஜயானந்தனை அழைத்துச் சென்று, அவரது கடத்தல்கார நண்பர் வாணனின் மடிப்பாக்கம் இல்லத்தில் கொண்டுபோய் தங்க வைத்தார். ராஜிவ் படுகொலைச் சம்பவம் நடந்த ஒரு மாதம் கழித்து அந்த வீட்டை சிறப்பு புலனாய்வு குழு ரெயிடு பண்ணியபோது, விஜயானந்த கைது செய்யப்பட்டார்.

மற்றொரு விஷயம், ராஜிவ் காந்தி ஆபரேஷன் நடத்திய குழுவினருடன் விஜயானந்தன் ஒன்றாக வந்து சேர்ந்தாலும், இவர் எந்த ஆபரேஷனுக்கும் அனுப்பப்பட்டவர் அல்ல. அந்த நாட்களில் ரூ.50,000 மதிப்புள்ள புத்தகங்களை வாங்குவதற்காகத் தன்னை புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் அனுப்பியதாக, விஜயானந்தன் விசாரணையில் கூறினார்.

ராஜிவ் காந்தி ஆபரேஷனுக்காக பொட்டு அம்மான் அனுப்பிய குழுவுடன் அனுப்பி வைக்கப்பட்ட ஒருவருக்கு இத்தகைய சாதாரணப் பணி ஒதுக்கப்பட்டிருக்கும் என பின்னாட்களில் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. பலரையும் துருவித் துருவி விசாரித்தார்கள்.

ஆனால் இறுதியில், இவர் புத்தகம் வாங்க அனுப்பப்பட்டவர் என்றே ஏற்றுக் கொண்டார்கள், புலனாய்வுக் குழுவினர்.

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வு குழுவிடம், விடுதலைப் புலிகள் உறுப்பினர் சிவரூபன் எப்படி சிக்கினார்?

சிவரூபன், இலங்கையில் விடுதலைப் புலிகளின் போராளியாக யுத்தம் புரிந்தபோது, கண்ணிவெடி வெடித்ததில் இடது காலை இழந்தார். ராஜிவ் காந்தியை கொல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட சிவராசன் அணியுடன், இவரையும் ஒன்றாக அனுப்பி வைத்தவர், பொட்டு அம்மான்.

அந்த நாட்களில், காயமடைந்த விடுதலைப்புலிகளைக் கவனித்துக் கொள்வதற்காக தமிழகத்தில், விடுதலைப் புலிகள் ஒரு தனிப்பிரிவை வைத்திருந்தனர். இந்தப் பிரிவுக்கு திராவிடர் கழக அணிகளின் ஆதரவு இருந்தது. சென்னை விஜயா ஹெல்த் சென்டர், சேலம் கோகுலம் மருத்துவமனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை உட்பட தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் விடுதலைப்புலிகள் சிகிச்சை பெற, திராவிடர் கழக அணிகளை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

ஜெய்ப்பூரில் தயாராகும் செயற்கைக் கால்கள், தமிழகத்தின் நெய்வேலியில் கிடைக்கும். யுத்தத்தில் கால் இழந்த விடுதலைப் புலிகள் இவற்றைப் பெற்றுப் பயனடைந்தனர். ஆனால், சிவரூபனின் கால், மிக மோசமாக பாதிப்படைந்து இருந்ததால், ஜெய்ப்பூருக்கு நேரில் சென்று, பிரத்தியேகமாக செய்கை கால் தயாரிக்க வேண்டியிருந்தது.

மே 1-ம் திகதி சிவராசனுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த சிவரூபன், வேதாரண்யத்தை விட்டுப் புறப்பட்டு, திருச்சிக்கு வந்து சேர்ந்தார். அவருடன் சுதந்திர ராஜாவும் சிவராசனின் மற்றொரு கூட்டாளியான சொக்கன் என்பவரும் வந்தனர். திருச்சியில் சுதந்திர ராஜா, சொக்கன் ஆகியோருடன், திராவிடர் கழக ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கினார் சிவரூபன்.

பின்னர் சுதந்திர ராஜாவும் சொக்கனும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர். சிவரூபனை யார், எப்படி ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்வது என்பதில் குழப்பம் இருந்தது. சில நாட்கள் கழித்து திருச்சியில் இருந்து சென்னை போரூரில் உள்ள ராபர்ட் பயஸின் வீட்டுக்கு சிவரூபன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிவராசனையும், சுதந்திர ராஜாவையும் அவர் சந்தித்தார்.

இதற்கிடையே, சிவரூபனை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை தமிழ் நடிகர் மற்றும் கவிஞரான ஒருவரை சிவராசன் ஏற்பாடு செய்தார்.

அவருடன் புறப்பட்டுச் சென்ற சிவரூபன், ஜெய்ப்பூர் கோல்டன் ஹோட்டலுக்கு சென்று தங்கினார். ராஜிவ்காந்தி படுகொலை என்ற செய்தி கிடைத்ததும், கோல்டன் ஹோட்டலை காலி செய்துவிட்டு, விக்ரம் ஹோட்டலுக்கு மாறிச்சென்றார்.

சிவரூபன் ஜெய்ப்பூரில் தங்கியிருப்பதற்கான பணத்தை சிவராசன்தான் கொடுத்தார்.

சிவரூபன், ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் தனது பெயரை சுரேஷ்குமார் எனப் பதிவு செய்து கொண்டார். போலியான தமிழக முகவரி ஒன்று கொடுத்திருந்தார்.

இங்கே சென்னை மடிப்பாக்கத்தில் முருகன் மறைந்திருந்த இடத்திலிருந்து நிறையக் கட்டுரைகளும், ஆவணங்களும் சிக்கின. அவற்றில் ஒன்று, முகவரி எழுதப்பட்ட ஒரு துண்டுக் கடிதம். அதில் எழுதப்பட்டிருந்த முகவரி: சுரேஷ்குமார், கோல்டன் ஹோட்டல், ஜெய்ப்பூர் (ராஜஸ்தான் மாநிலம்).

சென்னை சி.பி.ஐ அலுவலகத்தில் இருந்து உடனடியாக சி.பி.ஐ.யின் ஜெய்ப்பூர் கிளையை தொடர்பு கொண்டு, கோல்டன் ஹோட்டலை செக் பண்ணச் சொன்னார்கள். சுரேஷ்குமார் என்ற நபர் அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு, பின் அறையை காலி செய்துகொண்டு, அருகில் உள்ள விக்ரம் ஹோட்டலுக்கு மாறிச் சென்றது தெரியவந்தது. அங்கு வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரை விசாரித்தபோது, அவருக்கு சென்னையிலிருந்து, “ராஜிவ் கொல்லப்பட்டு விட்டதால், தங்கியிருக்கும் இடத்தை மாற்றவும்” என்று கடிதம் எழுதி அனுப்பியவர் சுதந்திர ராஜா என்பதை சிறப்பு புலனாய்வுக்குழு தெரிந்து கொண்டது.

இந்த இடத்தில், சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

இலங்கையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏராளமானோர் யுத்தத்தில் கால்களை இழந்திருந்தனர். ஆனால், யாருக்கும் இல்லாத சிறப்பு கவனிப்பாக சிவரூபனை மட்டும் பொட்டு அம்மான் சிரத்தை எடுத்து அனுப்பி வைத்தார்? அதுவும் முக்கிய ஆபரேஷனுக்கு அனுப்பப்பட்ட டீமுடன், சிகிச்சைக்காக சென்ற இவர் ஏன் அனுப்பி வைக்கப்பட்டார்?

இவருக்கு என்ன முக்கியத்துவம்?

இதையடுத்து, கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அனைவரிடமும், சிவரூபன் என்ற நபர் யார் என விசாரித்தார்கள். விடுதலைப் புலிகளின் ஆவணங்களில் எல்லாம், சிவரூபன் என்ற நபர் ஏதாவது முக்கிய பொறுப்பில் இருந்தாரா என்று துருவினார்கள்.

இறுதியில், உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்தது. அந்த தகவல் என்னவென்றால், பொட்டு அம்மானின் பிரத்தியேக ஒயர்லைஸ் கருவியை இயக்குபவரின் பெயர் சிவரூபன் என்பதுதான். இதையடுத்து, விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவின் ரகசியங்களை, குறிப்பாக சர்வதேச நடவடிக்கை தொடர்பானவற்றை இந்த சிவரூபன் அறிந்திருக்கக் கூடும் என்று தனியாக விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

இவருக்கும், ராஜிவ் கொலைக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்ததும், சிவரூபனை சி.பி.ஐ. புலனாய்வு டீமிடம் இருந்து, மத்திய உளவு அமைப்பு ரா விசாரணைக்காக அழைத்துச் சென்றது.

ரூசோ, விஜயானந்தன், சிவரூபன் ஆகியோரிடம் செய்யப்பட்ட விசாரணைகளில், இவர்கள் சிவராசன், சுபா, தனு (ராஜிவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டு) உள்ளிட்டவர்களுடன் தமிழகம் வந்தவர்கள் என்பது தெரிந்தது. ஆனால், அவர்கள் யாருக்கும், அப்போது சிவராசன், சுபா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ள இடம் எது என்பது தெரியவில்லை.

இவர்கள் மூவரையும் விசாரித்ததில், மற்ற விடுதலைப் புலிகளைப் போலவே, சிவராசனும், சுபாவும் தங்கள் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்க விட்டிருப்பது தெரிய வந்தது.

அவர்களைப் பிடிக்கும்போது சயனைடை தின்றுவிட்டால் அவர்களைப் பிழைக்கச் செய்வதற்கான சயனைட் முறிவு மாற்று மருந்து வேண்டும் என டில்லிக்கு தகவல் அனுப்பியது சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு.

அமைல் நைட்ரேல், சோடியம் நைட்ரேட், சோடியம் தயோசல்பேட் கரைசல் உள்ளிட்டவற்றின் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சில யோசனைகளை தமிழ்நாடு தடய அறிவியல் சோதனைக்கூட இயக்குநர் தெரிவித்தார். எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்குகிறோமோ அதற்கேற்பத்தான் சிகிச்சை வெற்றி பெறும் என்றார்.

இதற்கிடையே, வெளிநாட்டிலிருந்து சயனைட் முறிவு மருந்துகளைப் பெற்றுக் கொடுத்தது, டில்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை. இந்தியா, பரோடாவில் சி.பி.ஐ. கிளை மூலம் இந்திய பெட்ரோல் கெமிக்கல் நிறுவனத்திடமிருந்தும் சயனைட் விஷ முறிவு மருந்தும் கிடைத்தது.

மருந்து ரெடி. ஆனால், சிவராசனையும், சுபாவையும் பிடிக்க வேண்டுமே… அதற்கான உளவுத் தகவல் ஏதும் அதுவரை கிடைக்க இல்லை.

இந்த நிலையில்தான், சபாபதி பிள்ளை என்ற முதியவர் பற்றிய தகவல் புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்தது. புலனாய்வு குழுவுக்கு கிடைத்த தகவல்களின்படி, அவரது முழுப்பெயர் கனகசபாபதி முத்தையா சிவகுருநாதன் எனத் தெரிந்தது. இவரது மகன் ஹரிசந்திரா, விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண தளபதி.

தொடரும்…
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s