பின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச்
செல்ல விரும்பிய மகிந்த! நிராகரித்த பிரபாகரன்!!

• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார்.
• பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த தயாராக இருந்த மகிந்த.
• ஒரு புறத்தில் சந்திப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்கையில் மறு புறத்தில் குறிப்பாக 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி முதல் 22ம் திகதிக்குள் ராணுவத்தின் மீது குறைந்த பட்சம் 9 தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து….
கிழக்கு மாகாணம் கொலைக் களமாக மாறிக் கொண்டிருந்த போது புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க நோர்வே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
ராஜபக்ஸ அரசு நோர்வேயின் ஈடுபாட்டினை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆதரித்தது. எரிக் சோல்கெய்ம் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சராக அவ் வேளையில் நியமிக்கப்பட்டிருந்தமை அவரது பங்களிப்பை மேலும் வலுவாக்கியிருந்தது.
இப் பின்னணியில் 2005ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ம் திகதி பிரசல்ஸ் இல் கூட்டுத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இச் சந்திப்பு வழமையை விட மிக உயர்மட்ட சந்திப்பாக அமைந்தது.
அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரீனா றோக்கா, ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் பெரேரோ வோல்ட்னர் ( Ferero Waldner) யப்பான் விசேட பிரதிநிதி அகாசி அதில் கலந்துகொண்டனர்.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இடம்பெற்ற இவ் உயர் மட்ட சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாக அமைந்தது.
இச் சந்திப்பின்போது சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு மிகவும் ஊக்குவிக்கப்பட்டதோடு, அதன் முயற்சிகளில் நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யவேண்டுமென இலங்கை வற்புறுத்தியபோதும், அதற்குப் பதிலாக அவ் ஒப்பந்த விபரங்களை முழமையாக அமுல்படுத்துவதே பொருத்தமானது என அங்கு தீர்மானிக்கப்பட்டது.
இத் தருணத்தில் இன்னொரு ஆசிய நாட்டில் பேச்சுவார்த்தைகளை நடத்த தாம் தயார் என இலங்கை அறிவித்தது. ஆனால் நோர்வேயில் நடத்தப்படவேண்டுமென தமிழ்ச்செல்வன் இறுக்கமாக தெரிவித்தார்.
சோல்கெய்ம் பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டபோது நோர்வே அல்லது ஐரோப்பிய நாடு ஒன்றிலே சந்திப்பது இல்லையேல் சந்திப்பு நடைபெறாது என அவரும் தெரிவித்தார்.
ஒரு புறத்தில் சந்திப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்கையில் மறு புறத்தில் குறிப்பாக 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி முதல் 22ம் திகதிக்குள் ராணுவத்தின் மீது குறைந்த பட்சம் 9 தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தன.
அதில் 2 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு 6 பேர் காயமடைந்தனர்.
டிசம்பர் 22ம் திகதி கடற்புலிகள் மன்னார் கடலில் தாக்கி 3 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அரசாங்கம் மிகவும் கடுமையான செய்தி ஒன்றினை கூட்டுத் தலைமை நாடுகளின் மூலம் கிளிநொச்சிக்கு அனுப்பியிருந்தது.
இச் செய்தி புலிகளின் போக்கை மாற்ற உதவவில்லை. பேச்சுவார்த்தைக்கான இடத் தெரிவே தமது பிரச்சனை எனவும், வன்முறைகளைத் தடுக்க தாமும் முயற்சிப்பதாகவும், பல்கலைக்கழக மாணவர் மீது ராணுவம் தாக்கியதால் மக்கள் கோபம் கொண்டிருப்பதாகவும் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இத் தருணத்தில் கிறிஸ்மஸ் தினத்தின்று நள்ளிரவுப் பூஜைக்குச் சென்றிருந்த புலி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இப் படுகொலை அப் போராட்டத்தின் கொடூர முகத்தினை மீண்டும் உணர்த்தியது.
(ஜோசப் பரராஜசிங்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அஞ்சலி)
2006ம் ஆண்டின் ஆரம்பம் மீண்டும் போருக்கான புறச் சூழலை உணர்த்தியது எனத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், சமாதான முயற்சிகளைப் பலப்படுத்த ஏதாவது முயற்சிகள் எடுத்தாக வேண்டும் எனத் தெரிவித்தார்.
புலிகள் சமாதானத்தில் கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்த போதிலும் போர் ஒன்று ஏற்படப்போகிறது என்பதை மக்கள் உணர்ந்தனர்.
கிழக்கில் கொலைகள் தொடர்ந்தன. ஜனவரி 2ம் திகதி மாணவர்கள் சிலர் அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
அதே மாதம் 7ம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் கடற்படைப் படகு தாக்கப்பட்டு 12 கடற்படையினர் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பிலுள்ள கண்காணிப்பக் குழு அலுவலகத்திற்கு முன்னால் வாகன குண்டு வெடிப்பு, ராணுவ வண்டி மீது புலிகளின் தாக்குதல் என நிலமைகள் தொடர்ந்த நிலையில் தமது பணிகளை நிறுத்துவதாக 2006ம் ஆண்டு ஜனவரி 19ம் திகதி கண்காணிப்புக் குழு அறிவித்தது.
இச் சிக்கலான பின்னணியில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான இடத் தெரிவு குறித்து சோல்கெய்ம் முயற்சித்தார்.
ஜனவரி 25ம் திகதி கிளிநொச்சியில் பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் இடம்பெறுமென தமிழ்ச்செல்வனிடம் சோல்கெய்ம் தெரிவித்தார்.
படுகொலைகள் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து சென்ற நிலையில் பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்திய சோல்கெய்ம் இன் பணி வெகுவாக பேசப்பட்டது. வழமையாக அவரது கொடும்பாவியை எரிக்கும் பௌத்த பிக்குகள் அமைதியானார்கள்.
ஜெனீவா சந்திப்பிற்கு முன்பதான நிகழ்வுகளை எரிக் சோல்கெய்ம் இவ்வாறு நினைவு கூருகிறார்.
ஒருநாள் தானும், மகிந்தவும் தனியாக பேசிக்கொண்டிருந்த வேளையில் பிரபாகரனுடன் ஏதாவது ஒரு வகையில் பின்கதவு வழியாக ஒரேயடியான உடன்பாட்டிற்குச் செல்ல விரும்புவதை தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் ஜனநாயகம் மலர்வது குறித்து அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த அவர் தயாராக இருந்தார்.
பிரிவினைக்குச் செல்லாத எந்த தீர்வையும் மேற்கொள்ள தயாராக இருந்த அவர் அதற்கான திட்டம் பற்றிய எந்த கவலையும் அவருக்கு இருக்கவில்லை.
அதே வேளை காலத்தை நீடிக்கும் பேச்சுவார்த்தையை அவர் விரும்பவில்லை. ஏனெனில் அது சிங்கள மக்கள் மத்தியில் தமது செல்வாக்கைச் சரித்துவிடும் எனக் கருதினார்.
இச் சந்திப்பிற்குப் பின்னர் இச் செய்திகளை பிரபாகரனிடம் தெரிவித்த போது மகிந்தவின் இவ் யோசனைகள் எதுவும் அவரை ஈர்ப்பதாக இருக்கவில்லை. பின்கதவு வழிகளை பிரபாகரன் நிராகரித்தார்.
அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் நடைபெற்ற போதிலும், ராணுவ நிலமைகள் வேறுவிதமாக இருந்தன.
ராணுவ துணைக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படும் வரை சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்திமில்லை என மட்டக்களப்பு புலிகளின் தளபதி ஒருவர் தெரிவித்தார்.
புலிகள் கருணா குழுவினரைக் குறியாக வைத்து இவ்வாறான நிபந்தனைகளைப் போட, அரசாங்கமோ இப் பிரச்சனைக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் சம்பந்தமில்லை என நிராகரித்தது.
இவ் இழுபறிகளுடன் 2006ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதி ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை எவ்வாறு ஆரம்பிப்பது? என்பது நோர்வே தரப்பினருக்குப் பெரும் சவாலாக அமைந்தது.
இச் சந்திப்பின்போது அரச தரப்பில் கலந்துகொண்டு அமைச்சர் சிறீபால டி சில்வா பேசுகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் சட்ட விரோதமானது எனவும், பிரதமருக்குப் பதிலாக ஜனாதிபதியே அதில் ஒப்பமிட வேண்டும் எனவும், அவ் ஒப்பந்தத்தின் சில பகுதிகள் அரசியல் அமைப்பு விதிகளுக்கு முரணாக உள்ளது எனவும், அதனால் அவற்றில் திருத்தம் தேவை என வாதிட்டார்.
இருப்பினும் ஒப்பந்தம் சில நன்மைகளைத் தந்திருப்பதாகவும், அவ் ஒப்பந்தம் பேசித் தீர்ப்பதற்கான ஆரம்பத்தினைத் தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் இவ் உரை அரசின் முரண்பட்ட நிலையைப் புலப்படுத்தியது. இருப்பினும் இரு சாராரும் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர்.
ராணுவ துணைக் குழுக்கள் தொடர்பாக புலிகள் எழுப்பிய பிரச்சனைகளின் போது அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் துணைக்குழுக்கள் செயற்படுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை எனவும், கருணா தரப்பினரின் பிரச்சனை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அமைச்சரின் இக் கருத்து கருணா தரப்பினர் சுதந்திரமாக செயற்படுவதற்கான அனுமதியாக காணப்பட்டது. புலிகளும் தாம் பொலீஸ், ராணுவத்திற்கு எதிராக தாக்குவதில்லை எனத் தெரிவித்தனர்.
இம் மாநாட்டினைத் தொடர்ந்து ஜெனீவாவில் ஏப்ரல் 19ம் திகதி முதல் 21 வரை சந்திப்பது எனவும், அச் சந்திப்பில் சிறுவர்களை ஆயுதக் குழுக்களில் இணைப்பது தொடர்பாக பேசுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இச் சந்திப்பு தொடர்பாக சோல்கெய்ம் தனது நினைவுகளை மீட்கும்போது அச் சந்திப்பில் மிக அதிக அளவிலான பிரதிநிதிகள் அரச தரப்பில் கலந்துகொண்டார்கள் எனவும், அக் குழுவில் மிக மோசமான சிங்கள தேசியவாத பேராசிரியர் ஒருவர் கலந்துகொண்டார் எனவும், அவர் தனது முழ நேரத்தையும் புலிகளை அவமானப்படுத்துவதிலேயே செலவிட்டார் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் சிறிபால டி சில்வா இலங்கை அரசியல்வாதிகளிடையே மிகவும் நேர்மையானவர் எனவும், 1999 இல் புலிகளால் அவரும் தாக்கப்பட்டார் எனவும் கூறுகிறார்.
இத் தருணத்தில் அமைச்சரான பஸில் ராஜபக்ஸ அங்கிருந்தார். அவ்வப்போது தாம் அவருடன் உரையாடியதாகவும், அவரே பேச்சுவார்த்தைகளை வழி நடத்தியதாகவும் கூறுகிறார்.
மகிந்தவினால் அனுப்பப்பட்ட குழுவினரின் தன்மை அவரின் நோக்கத்தை வெளிப்படுத்தியது. பிரச்சனை குறித்து அவருக்கு தெளிவான கருத்து இருக்கவில்லை.
அக் குழுவில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் தனியான கருத்தைக் கொண்டிருந்ததால் சிறீபால டி சில்வா இனால் ஒரே குரலில் பேச முடியவில்லை என்கிறார்.
இத் தூதுக் குழுவில் வந்திருந்த ஒருவரின் மகிந்த பற்றிய பார்வை இவ்வாறாக இருந்தது. மகிந்த ஒரு கிராமிய தலைவர். அவர் ஓர் அறையின் மத்தியில் உட்கார்ந்திருப்பார். ஏனையோர் அவரைச் சுற்றி இருப்பர். ஓவ்வொருவரும் தமது குறைகளைக் கூறுவார்கள். அவர் அதனைத் தீர்ப்பதாக உறுதியளிப்பார்.
அவரிடம் ஒட்டு மொத்தமான திட்டம் ஒன்று இருக்காது. அவர் இன்று உங்களோடு ஒரு உடன்பாட்டிற்கு வருவார். அடுத்த நாள் அதற்கு எதிரான ஒன்றுக்கு இன்னொருவருடன் உடன்படுவார்.
கிராமம் மகிழ்ச்சியாக இருக்கலாம். அவரைப் பெரும் தலைவராக கருதலாம். அவர் எல்லோரிடமும் இரக்கமுள்ளவராக எண்ணலாம். அதனால் அவர் எல்லோருக்கும் நல்லவராக தெரியலாம்.
இதன் வெளிப்பாடே அரச தரப்பின் ஜெனிவா பிரதிநிதிகளின் உள்ளார்ந்த வெளிப்பாடு என்கிறார் அப் பிரதிநிதி.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் விளைவு என்ன?
தொடரும்
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.
தொகுப்பு : வி. சிவலிங்கம்