ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 33

விடுதலை புலிகள் பெண் உறுப்பினரை சென்னை டில்லி ரயிலில் பின்தொடர்ந்தது சி.பி.ஐ.!

ராஜிவ் கொலை புலனாய்வில், கொலைத் திட்டத்தின் சூத்ரதாரி என கருதப்பட்ட சிவராசனை பிடிக்க எந்த உளவுத் தகவலும் கிடைக்காத நிலையில்தான், சபாபதி பிள்ளை என்ற முதியவர் பற்றிய தகவல் புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்தது. புலனாய்வு குழுவுக்கு கிடைத்த தகவல்களின்படி, அவரது முழுப்பெயர் கனகசபாபதி முத்தையா சிவகுருநாதன் எனத் தெரிந்தது. இவரது மகன் ஹரிசந்திரா, விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண தளபதி.

இந்தியரான வாணன் என்ற கடத்தல்காரரை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தபோது, 1991 மே முதல் வாரத்தில் சபாபதி பிள்ளை என்ற முதியவரை தம்மிடம் அழைத்து வந்ததாக கூறினார். இவரது இல்லத்தில்தான் விஜயானந்தனை புலனாய்வுக்குழு கைது செய்திருந்தது.

சிவராசன், “சபாபதி பிள்ளையை டில்லிக்கு அழைத்துச் சென்று அங்கு வாடகைக்கு ஒரு வீடு பிடிக்க வேண்டும். டில்லியில் சபாபதி பிள்ளை தனது மருமகளுடன் தங்கியிருக்க போகிறார்” என்று வாணனிடம் சொன்னார்.

இதையடுத்து, மே 20-ம் தேதி விமானம் மூலம் சபாபதி பிள்ளையை டில்லிக்கு அழைத்துச் சென்றார் வாணன். அதற்கான பணத்தை வழக்கம்போல சிவராசன்தான் கொடுத்தார்.

டில்லி பஹர்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலில் வாணனும், சபாபதி பிள்ளையும் தங்கினர்.

நேபாளத்தில் தங்கிக்கொண்டு சட்டவிரோத வழிகளில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழ் வர்த்தகர் ஒருவரை இருவரும் சந்தித்தனர். இந்த வர்த்தகரின் செல்வாக்கினால், மோதிபாகில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடித்தனர். அதற்கான முன்பணம் கொடுக்கப்பட்டது.

சென்னைக்குச் சென்று தனது மருமகளை அழைத்து வருவதாகக் கூறிய சபாபதி பிள்ளை, வாணனையும் அழைத்துக் கொண்டு சென்னை கிளம்பினார்.

இதற்கிடையே, ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். மே 29-ம் தேதி சிவராசனின் புகைப்படம் முதல்முறையாக பத்திரிகைகளிலும் டி.வி.களிலும் வெளியானது.

மே 30-ம் தேதி டில்லியிலிருந்து வாணனுடன் சென்னை வந்து சேர்ந்தார் சபாபதி பிள்ளை. சென்னை வந்த இடத்தின் வாணன் ராஜிவ் கொலை புலனாய்வு குழுவிடம் சிக்கிக் கொண்டார்.

விசாரணையில் வாணன், சபாபதி பிள்ளை பற்றி கூறியதுடன், சென்னைப் புறநகர்ப்பகுதியான சேலையூரில் உள்ள சகோதரியின் மகள் வீட்டில் சபாபதி பிள்ளை தங்கியிருக்கும் தகவலையும் வாணன் கூறினார்.

சபாபதி பிள்ளையில் சகோதரி மகளும், அவரது கணவரும் ஏற்கனவே மிரண்டு போய் இருந்தனர். இவர்கள் இருவரும், இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வசிக்க வந்தவர்கள். இவர்கள் மிரண்டு போன காரணம், ராஜிவ்காந்தி கொலை புலனாய்வில் ‘தேடப்படுபவர்’ என்று சிவராசன் போட்டோவை பத்திரிகைகளில் பார்த்ததுதான்.

சிவராசனின் போட்டோவை பார்த்து இவர்கள் என் மிரள வேண்டும்? காரணம், அவர்களது இல்லத்தில் சபாபதி பிள்ளையை சந்திப்பதற்காக சிவராசன் 3 முறை வந்துள்ளார்.

இப்போது, டில்லியில் இருந்து வந்த சபாபதி பிள்ளை தமது வீட்டில் தங்குவதை இவர்கள் விரும்பவில்லை. அவர்கள் வற்புறுத்தியதால், சபாபதி பிள்ளை அவர்களது வீட்டை விட்டு வெளியேறி சென்னை சூளைமேட்டில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டுக்கு மாறிச் சென்றார்.

சேலையூரிலும் பின்னர் சூளைமேட்டிலும் சபாபதி பிள்ளையின் இருப்பிடங்களை சிறப்பு புலனாய்வுக் குழு தேடிக் கண்டுபிடிப்பதற்குள், சபாபதி பிள்ளை, தாம் டில்லியில் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்குவதற்காக சென்னையில் இருந்து மருமகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

இந்திய முதியவருக்கும், அவரது மருமகளுக்கும் பின்னணியில் உள்ளது வேறு கதை.

சபாபதி பிள்ளையின் முழுப்பெயர் கனகசபாபதி முத்தையா சிவகுருநாதன். இவரது மகன் ஹரிசந்திரா விடுதலை புலிகளின் யாழ்ப்பாண தளபதியாக இருந்தவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்த அவரது சொந்த பெயர் பலருக்கு தெரியாது இருக்கலாம். ஆனால், விடுதலை புலிகள் இயக்கத்தில் அவரது பெயரான ‘ராதா’ என்பது தெரிந்திருக்கும்.

பின்னாட்களில் அவரது பெயரில், ‘ராதா படையணி’ என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் படையணி ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த ராதா (ஹரிசந்திரா) 1987-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார். ராதாவின் தந்தைதான், சபாபதி பிள்ளை.

டில்லியில் வீடு வாடகைக்கு பிடிப்பதற்கு கடத்தல்காரர் வாணனுடன் விமானத்தில் சென்ற சபாபதி பிள்ளை, வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்குவதற்காக மருமகளை அழைத்து செல்லும்போது, ரயிலில் சென்றார். இவரது மருமகள்தான் ஆதிரை. இவர் சென்னையில் இருந்து டில்லிக்கு ரயிலில் சென்றார் என்று விளக்கமாக ஏன் சொல்கிறோம் என்றால், அந்த ரயிலில் வைத்தே இவர்களை கைது செய்தது சிறப்பு புலனாய்வுக் குழு.

சபாபதி பிள்ளையும், ஆதிரையும் சென்னையில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிய பின்னர்தான், இவர்கள் சென்னையில் இருந்து டில்லி கிளம்பி விட்டார்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிந்து கொண்டது. இருவரும் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கும்போது அவர்களைப் பிடிப்பதற்கான ஆயத்த நடவடிக்கைக்காக, சென்னையிலிருந்து சிறப்பு புலனாய்வு அதிகாரி ஒருவர் விமானம் மூலம் டில்லிக்கு பறந்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இ.டி. எக்ஸ்பிரஸ் முன்பதிவுப் பட்டியலைப் பார்த்தபோது, சபாபதி பிள்ளையும், ஆதிரையும் பயணம் செய்த கம்பார்ட்மென்ட் எது என்று அறிந்த சிறப்பு புலனாய்வுக் குழு, சி.பி.ஐ.யின் நாகபுரி பிரிவு அதிகாரி ஒருவரை, பாதி வழியில் அந்த ரயிலில் ஏற ஏற்பாடு செய்தது. எந்த இடையூறும் செய்யாமல் அதே பெட்டியில் பயணம் செய்து டில்லி வரை செல்லும்படி அந்த அதிகாரிக்கு சொல்லப்பட்டது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா ரயில் நிலையத்துக்கு அந்த வண்டி வரும்போது, அதில் டி.ஐ.ஜி. தலைமையிலான ஒரு குழு ஏறுவதற்காக காத்திருந்தது. மற்றொரு குழு டில்லி ரயில்வே ஸ்டேஷனில் தயாராக இருந்தது.

இவ்வளவு முன்னேற்பாடுகளுக்கும் காரணம் என்ன? ஆதிரை என்ற இளம்பெண், சிவராசனுடன் தலைமறைவாகிய சுபாவாக இருக்கலாம் என தொடக்கத்தில் புலனாய்வுக்குழு நம்பியது. அது நிஜமல்ல, ஆனால் இந்த ஆதிரை என்ற பெண்ணும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய நபர் என்பது பின்னர் தெரியவந்தது.

முதலில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் வைத்து இவர்களை கைது செய்வதாக இருந்தது. அந்த திட்டத்தை மாற்றி, இவர்கள் டில்லியில் வேறு யாரை சந்திக்கிறார்கள் என பார்க்க முடிவு செய்தார்கள். இதனால், டில்லி ரயில் நிலையத்திலும் இவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகளால் பின்தொடரப்பட்டனர்.

சபாபதி பிள்ளையையும், ஆதிரையையும் டில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியபோது, சிறப்புப் புலனாய்வுப் படையினரால் கைது செய்யப்பட்டனர். சபாபதி பிள்ளை, முதலில் கடத்தல்காரர் வாணனுடன் டில்லி வந்தபோது தங்கியது இந்த ஹோட்டலில்தான்.

இவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

அப்போது, யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் கட்டளையின்படி, ஏப்ரல் கடைசி வாரத்தில் இருவரும் படகு மூலம் இந்தியா வந்ததாக தெரியவந்தது. சிவராசன் அறிவுரையின்படி டில்லியில் விடுதலைப் புலிகளுக்கு அலுவலகம் அமைக்குமாறு இருவருக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆதிரையின் உண்மையான பெயர் சந்திரலேகா. விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் இவரை சோனியா என்றுதான் அழைப்பார்கள். இவர் இந்தியாவுக்கு வந்த பின்னர் மேலும் இரு பெயர்களை (ஆதிரை, கௌரி) சூட்டிக்கொண்டார்.

ஆதிரை, பயிற்சி பெற்ற உறுதி வாய்ந்த விடுதலைப்புலி. வாகனங்கள் ஓட்டுவதில் திறமைவாய்ந்த சாரதி. அதைவிட மற்றொரு திறமையும் அவருக்கு இருந்தது. ரகசியக் குறியீடுகளை டீகோடிங் செய்வதில் நிபுணர். அதையடுத்தே பொட்டு அம்மானின் உளவுப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்.

டில்லியில் விடுதலை புலிகள் தங்குவதற்கான மறைவிடத்துடன், அலுவலகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் டில்லியிலும், விடுதலை புலிகளின் செயல்பாடுகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. டில்லியில் இருந்து நேபாளம் வழியாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது என விசாரணையின்போது ஆதிரை தெரிவித்தார்.

சென்னையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த மற்றொருவர், தமிழகத்தில் அந்த நாட்களில் பிரபலமாக இருந்த புகைப்படப் பத்திரிகையாளர் சுபா சுந்தரம்.

இவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். தமிழகத்தில் அரசியல் ரீதியாகப் பலருடன் நல்ல தொடர்புடையவர். 1990-ம் ஆண்டில் சக சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவருடன் சுபா சுந்தரம் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார். 1991 ஜனவரியில் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் தலைவரான கிட்டு, சுபா சுந்தரத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது அலுவலகத்தில் கிடைத்தது.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட மே 21-ம் தேதி சிவராசன், சுபா, தனு, நளினி ஆகியோருடன் ஸ்ரீபெரும்புதூர் சென்றவர் போட்டோகிராபர் ஹரிபாபு (குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்). இவர் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு செல்வதற்கு முன், சுபா சுந்தரத்தை போய் சந்தித்தார். ராஜிவ் காந்தியின் படுகொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை எடுத்தவர், ஹரிபாபு. அந்த காமராவை கொடுத்தவர், சுபா சுந்தரம்.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது, சற்று தொலைவில் விழுந்து கிடந்த ஹரிபாபுவின் உடலின் மேல் கிடந்தது, அந்த காமரா.

ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 2 மணி நேரத்தின்பின், சுபா சுந்தரத்துக்கு ‘குண்டுவெடிப்பில் ஹரிபாபுவும் உயிரிழந்தார்’ என்ற தகவல் கிடைத்தது. ராஜிவ் காந்தி படுகொலையுடன் கொலையாளிகளை தொடர்புபடுத்தக்கூடிய மிக முக்கிய தடயம் உள்ள ஹரிபாபுவின் காமராவை கைப்பற்ற வேண்டும் என்பதே சுபா சுந்தரத்தின் எண்ணமாக இருந்தது.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் மைதானத்தில் ஹரிபாபுவின் சடலம், சிறிது நேரம் அடையாளம் காணப்படாமல் கிடந்தது. அந்த நேரத்தில், ஹரிபாபுவின் மரணம் குறித்து அவரது பெற்றோருக்கு சுபா சுந்தரம் தகவல் கொடுத்து, ஹரிபாபுவின் உடலைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியும்.

ஆனால் அப்படி செய்யாமல், ஹரிபாபுவின் உடலின் மேல் இருந்த காமராவை கைப்பற்ற முயற்சி செய்தார். அது முடியவில்லை.

ஹரிபாபுவின் மரணம் குறித்து அவரது தந்தைக்கு நண்பர்கள் மூலமாக மிகத் தாமதமாகவே தெரிய வந்தது. அதன் பின்னரே ஹரிபாபுவின் தந்தையுடன் பேசினார் சுபா சுந்தரம்.

ராஜிவ் கொலை நடந்த ஓரிரு தினங்களின் பின் ஹரிபாபுவுக்கு விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்புகள் பற்றி பத்திரிகைகள் எழுதத் தொடங்கியதும் சுபா சுந்தரம் வேகமாகச் செயல்பட்டார். ஹரிபாபுவின் தந்தையை தொடர்பு கொண்ட சுபா சுந்தரம், விடுதலைப் புலிகளுக்கும் ஹரிபாபுவுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க செய்தார்.

போட்டோ பத்திரிகையாளரான சுபா சுந்தரத்துக்கு அனைத்து பத்திரிகையாளர்களையும் தெரியும் என்பதால், இதற்கு ஏற்பாடு செய்வது சுலபமாக இருந்தது.

ஹரிபாபு ஒயிரிழந்ததற்கு தனக்குத் தெரிந்த அதிகாரி மூலம் இழப்பீடு பெற்றுத்தர முயல்வதாக ஹரிபாபுவின் தந்தையிடம் தெரிவித்த சுபா சுந்தரம், அதற்காக ஹரிபாபுவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்பது குறித்து மறுப்பு வெளியிடுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார். (ஆனால், இழப்பீடு பெற்று தருவதற்கு அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஹரிபாபுவின் காமிராவை கைப்பற்ற மட்டுமே இவர் முயற்சி செய்தார்)

ராஜிவ் படுகொலை நடந்த மறுநாள், ஹரிபாபுவை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தக்கூடிய அனைத்து ஆவணங்களையும் தடயங்களையும் அப்புறப்படுத்திவிடுமாறு ஹரிபாபுவின் தந்தையிடம் சுபா சுந்தரம் கூறினார். ஹரிபாபுவின் வீட்டில், விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள், காலன்டர்கள், சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் எழுதிய கடிதங்கள், விடுதலைப் புலிகளின் போட்டோக்கள் இருந்தன.

அவை அனைத்தும் அருகிலிருந்த ஹரிபாபுவின் சகோதரி வீட்டுக்கு மாற்றப்பட்டன.

இவ்வாறு ஹரிபாபுவின் வீட்டிலிருந்து அகற்றப்பட்டவை முற்றிலும் எதிர்பாராத வகையில் சிறப்பு புலனாய்வு குழுவின் கையில் சிக்கியதுதான் எதிர்பாராத திருப்பம்.

ஹரிபாபு உயிரிழந்த தகவல் அறிந்த அவரது நண்பர்கள் சிலர், ஹரிபாபுவுக்கு கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடிக்க விரும்பினர். அதற்கு ஹரிபாபுவின் போட்டோ தேவைப்பட்டது. போட்டோ பெறுவதற்காக ஹரிபாபுவின் வீட்டுக்குச் சென்றார் அவரது நண்பர் ஒருவர்.

ஹரிபாபுவின் பொருட்கள் அனைத்தும், அவரது சகோதரி வீட்டில் உள்ள ரூம் ஒன்றில் போட்டிருப்பதாகவும், அங்கே போய் தேடினால் போட்டோ கிடைக்கும் எனவும் ஹரிபாபுவின் தந்தை கூறினார்.

ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் இந்த நண்பருக்கு ரூமை திறந்து விட்டார்கள். அங்கு விடுதலைப்புலிகளுடன் ஹரிபாபுவைத் தொடர்பு படுத்தும் ஏராளமான பிரசுரங்களும், ஆவணங்களும் இருப்பதை கண்டு திகைத்துப் போய்விட்டார் அந்த நண்பர். உடனடியாக தமிழக போலீஸூக்கு தகவல் கொடுத்தார் அந்த நண்பர்!

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s