ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 36

ராஜிவ் கொலை வழக்கு புலன் விசாரணையில் பள்ளி சீருடை காட்டிக் கொடுத்து சிக்கிய ராஜா!

ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே, ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையில் கூறிய தகவல்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டனர்.

80களிலும், 90களிலும் தமிழகத்தில் இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது நடமாட்டங்களையும், உறுப்பினர்களையும் அப்-டு-டேட் ஆக அறிந்து வைத்திருந்த உளவு அமைப்புகள், மத்தியில் ரா, மாநிலத்தில் கியூ பிராஞ்சும்தான். ஆனால், சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வுக் குழுவே, ராஜிவ் கொலை புலன்விசாரணையில் இறக்கி விடப்பட்டது.

சி.பி.ஐ., அதுவரை ஈழ விடுதலை அமைப்புகளின் விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருந்த காரணத்தால், ராஜிவ் கொலை புலனாய்வின் ஆரம்பத்தில் திணறித்தான் போனார்கள். யார் விடுதலைப்புலி உறுப்பினர், யார் ஆதரவாளர், யாருக்கு எங்கே லிங்க் உள்ளது என்பதை புரிந்து கொள்ளவே நீண்ட காலம் எடுத்தது.

இவர்களுக்கு உளவுத்துறைகள் ரா, கியூ பிராஞ்ச் ஆகியவை பெரிதாக உதவவில்லை. ஏதாவது தகவல் கேட்டால், பட்டும் படாமலும் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டன இந்த இரு உளவுத்துறைகளும்.

இதனால், ஒருவரை கைது செய்து, அவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில் மற்றொருவரை பிடித்து… என்ற ரூட்டில் போய்க்கொண்டிருந்தது சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழு.

கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட சுதந்திர ராஜாவை பிடித்ததும் அப்படித்தான்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணைகளில் இருந்து, சிவராசனுக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் உள்ளார். அவர் பெயர் ராஜா என்று தெரிந்து கொண்டது புலனாய்வுக்குழு.

தமிழகத்தில் தங்கியிருந்த விடுதலைப்புலிகளிடையே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தகவல்களைப் பரிமாறுவது, பணப் பட்டுவாடா, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, மறைவிடத்திலிருந்து ஒருவரை மற்றோர் மறைவிடத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற முக்கிய பணிகளில் சிவராசன் உத்தரவுப்படி ஈடுபட்டிருந்தவர் இந்த ராஜா என்றும் தெரிந்து கொண்டார்கள்.

ராஜிவ்வை கொல்ல அனுப்பி வைக்கப்பட்ட டீம், மே 1-ம் திகதி வேதாரண்யம் வந்து இறங்கியது (ராஜிவ் கொல்லப்பட்டது மே 21-ம் தேதி) அன்றைய தினத்தில் ஒரே படகில் சிவராசன், சுபா, தனு உள்ளிட்டோருடன் இந்தியா வந்தவர்களில் ராஜாவும் ஒருவர் என்றும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.யின் ஒரு டீம் ராஜா என்ற நபரை தமிழகம் எங்கும் வலைவீசி தேடி வந்தது.

ஜெயக்குமார் வீட்டில் கிடைத்த இலங்கை பாஸ்போர்டுக்கு (கடந்த அத்தியாயம்) சொந்தக்கரரரான தில்லையம்பலம் சுதந்திர ராஜா என்பவரை வலை வீசி தேடிக்கொண்டு இருந்தது, சி.பி.ஐ.யின் மற்றொரு டீம்.

இந்த நிலையில்தான் ஒருநாள், கைது செய்யப்பட்ட ஆதிரையிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்கள் இரு சி.பி.ஐ. அதிகாரிகள்.

சென்னை ராயப்பேட்டையில் ஆன்ட்டியின் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த ஆதிரையை மீனம்பாக்கம் விமான நிலையத்தை அடுத்துள்ள பல்லாவரம் அருகேயுள்ள மற்றொரு மறைவிட வீட்டுக்கு அழைத்துச் சென்றவர் ராஜாதான் என்று சொன்னார் ஆதிரை.

ஆதிரையை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர், “உங்களை ராஜா அழைத்துச் சென்றார் சரி. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சுதந்திர ராஜா என்பவர் உங்களுடன் தொடர்பு கொண்டாரா?” என்று போகிற போக்கில் ஒரு கேள்வியை வீசியிருக்கிறார்.

இதில் திகைத்துப்போன ஆதிரை, “சுதந்திர ராஜாவா? நான் கூறும் ராஜாதான், சுதந்திர ராஜா” என்றார்.

அதன் பின்னர்த்தான் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தாம் இரு டீம்களாக பிரிந்து தேடிக் கொண்டிருக்கும் ராஜாவும், சுதந்திர ராஜாவும் ஒரே நபர் என்பது தெரியவந்தது. உடனே, சி.பி.ஐ. அதிகாரிகள் ஆதிரையிடம் மேலும் விசாரிக்க தொடங்கினர்.

இலங்கையில் இருந்து புதிதாக வந்திருந்த ஆதிரைக்கு, சென்னையில் இடங்கள் பெரிதாக தெரிந்திருக்கவில்லை. சுதந்திர ராஜா தம்மை அழைத்துச் சென்ற வீடு எங்கே உள்ளது என்பதோ, அதன் முகவரியோ தெரியவில்லை. செல்லும் வழியும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால், அவருக்கு மற்றொரு விஷயம் தெரிந்திருந்தது. தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் இரு பெண்கள் அணிந்திருந்த பள்ளிச் சீருடையின் நிறத்தையும், அவர்களின் பெயர்கள், மற்றும் அவர்கள் படிக்கும் வகுப்புகளையும் ஆதிரை அறிந்திருந்தார்.

இந்த பள்ளிச் சீருடை நிறத்தில் இருந்து சில பள்ளிகளை கண்டுபிடித்தது புலனாய்வுக்குழு. அந்தப் பள்ளிகளில் ரகசியமாக விசாரித்ததில், ஒரு பள்ளியில் குறிப்பிட்ட வகுப்புகளில், குறிப்பிட்ட இரு பெண்கள் படிப்பதும், அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் தெரியவந்தது.

பள்ளி ஆவணங்களில் இருந்து அவர்களது முகவரியையும் கண்டுபிடித்தார்கள்.

எடனே அந்த முகவரிக்கு செல்லவில்லை. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அந்த முகவரியில் உள்ள வீட்டை சுற்றி வளைத்தது புலனாய்வுக் குழு. அந்த வீட்டில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த ராஜாவை மடக்கினார்கள். ராஜா, தனது தலையணைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சயனைட் குப்பியை எடுக்க முயன்றார். ஆனால், விரைவாகச் செயல்பட்டு அவரது சயனைட் குப்பியை பறித்தார்கள்.

சிவராசனின் உதவியாளர் சுதந்திர ராஜா, தான்தான் என்பதை விசாரணையில் ஒப்புக்கொண்டார் ராஜா. தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் பொட்டு அம்மானின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதையும் சொன்னார் அவர்.

விசாரணையில் சுதந்திர ராஜாவிடமிருந்து பல தகவல்களை அறிய முடிந்தது. புலனாய்வுக்குழு அதுவரை ‘சிவராசன்’ என்ற பெயரையும், அவருக்கு ஒரு கண் இல்லை என்ற அடையாளத்தையும், அவரது இரு போட்டோக்களையும் மட்டுமே வைத்து தேடிக்கொண்டு இருந்தது.

இப்போது, சிவராசன் பற்றிய பல தகவல்களை கூறினார், சிவராசனின் உதவியாளராக இருந்த சுதந்திர ராஜா.

அந்த தகவல்களின்படி, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிவராசனின் பெயர் ரகுவரன். சிவராசனின் உண்மையான பெயர் சிவராசன் அல்ல, ரகுவரனும் அல்ல, பாக்கியநாதன். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, வீரபத்ர கோயிலடியைச் சேர்ந்த சந்திரசேகரன் பிள்ளை என்பவரின் மகன். சிவராசனின் தந்தை ஆங்கில வழிப்பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

சுதந்திர ராஜா, எப்படி சிவராசனின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஆனார்?

சிவராசனின் தம்பியின் பெயர் ரவிச்சந்திரன். விடுதலைப்புலிகளின் மாணவர் அமைப்பின் (ஸோல்ட்) தலைவராக இருந்தார் ரவிச்சந்திரன். 1988ல் இந்திய அமைதிப்படை அவரைப் பிடித்துக் காவலில் வைத்திருந்து, பின்னர் விடுவித்தது. இந்த ரவிச்சந்திரனின் வகுப்புத் தோழர் சுதந்திர ராஜா.

இலங்கை மட்டக்களப்பில் இலங்கை அரசின் மின் வாரிய ஊழியராக இருந்தவர் சிவராசன் என்பதை சுதந்திர ராஜா மூலம் அறிந்தார்கள். சிவராசன் தொடக்கத்தில் டொலோ இயக்கத்தில்தான் சேர்ந்தார். பின்னர், அதிலிருந்து விலகி, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். அத்துடன் சிவராசன், இந்தியாவில் ராணுவப் பயிற்சி பெற்றதாக சுதந்திர ராஜா கூறினார்.

1987 மே மாதம் இலங்கை ராணுவத்துடன் நடந்த சண்டையில் சிவராசன் தனது இடது கண்ணை இழந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சிகிச்சைக்காக இந்தியாவுக்கு இந்திய அமைதிப்படையின் ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்ட காயமுற்ற விடுதலைப்புலிகளில் சிவராசனும் ஒருவர் என்றார் சுதந்திர ராஜா. அப்போது சிவராசனுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆனால், இதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சுதந்திர ராஜாவை மேலும் விசாரணை செய்தபோது, சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர்கள் – பத்மநாபா உட்பட – கொல்லப்பட்டது எப்படி என்பது விலாவாரியாக தெரியவந்தது. பத்மநாபா கொலையில் சுதந்திர ராஜாவும் முக்கிய பங்கு வகித்ததால், அது தொடர்பான அனைத்து விவரங்களும் அவருக்கு தெரிந்திருந்தது.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s