ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 37

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு சென்னையில் பத்மநாபாவை கொன்றது எப்படி?

கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட சுதந்திர ராஜவை சி.பி.ஐ. புலனாய்வுக் குழு விசாரித்தபோது, அவர் விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. ராஜிவ் கொலை வழக்கில் சி.பி.ஐ. வலை வீசி தேடிக்கொண்டு இருந்த சிவராசனும், விடுதலைப் புலிகளின் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவை சேர்ந்தவர்தான் என்பதை இவர் உறுதி செய்தார்.

விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவில் சிவராசனால் தேர்வு செய்யப்பட்டவர் சுதந்திர ராஜா.

தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் ராணுவப் பிரிவில் இருந்த சிவராசன், பின்னர் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப்பிரிவுக்கு மாறினார். அதன்பின் அவரது செயல்பாடுகளில் திருப்தியடைந்த பொட்டு அம்மான், சில சிக்கலான ஆபரேஷன்களில் சிவராசனை ஈடுபடுத்தினார்.

அதில் அவர் வெற்றியடையவே, விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவின் இலங்கையில் நடைபெற்ற முக்கிய ஆபரேஷன்கள் சிலவற்றை சிவராசன் தலைமையில் நடத்த உத்தரவிட்டார் பொட்டு அம்மான். அந்த ஆபரேஷன்களில் ஈடுபடுத்த சரியான நபர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் சிவராசனுக்கு கொடுக்கப்பட்டது.

அப்படி விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவுக்கு சிவராசனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சுதந்திர ராஜா.

1990-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய அமைதிப்படை துருப்புகள் வாபஸ் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது சுந்திர ராஜா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். சிவராசன்தான் அவரை சென்னைக்கு அழைத்து வந்தார்.

சுதந்திர ராஜாவுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட், சென்னையில் தங்கியிருந்த மற்றொரு ஈழ விடுதலை இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எப்.க்குள் ஊடுருவி, விடுதலைப் புலிகளுக்கு தகவல் கொடுப்பது.

(சுதந்திர ராஜாவுக்கும் ராஜிவ் கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், அவரை விசாரித்தபோது, சென்னையில் விடுதலைப் புலிகள் நடத்திய சில ஆபரேஷன்கள் பற்றிய தகவல்கள் சி.பி.ஐ.க்கு தெரியவந்தது. அதில் முக்கிய ஆபரேஷனையும் இந்த தொடரில் சேர்த்துக் கொள்ளலாம்.)

சென்னையில் இருந்த ஹவாலா வர்த்தகரும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளருமான ‘தம்பி அண்ணா’ உதவியுடன் சுதந்திர ராஜவை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சென்னை பொறியியல் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.இ.டி.) சேர்த்தார் சிவராசன்.

அந்தக் கல்வி நிறுவனத்தை நடத்தியவர் இலங்கைத் தமிழர். எம்.ஐ.இ.டி. இருந்த பகுதியில் உள்ள தனியார் மாணவர் விடுதியில் சுதந்திர ராஜா தங்கினார். சிவராசன் பெயர் குறிப்பிட்டு கூறிய சிலருடன் நெருங்கிப் பழகி நட்பை தேடிக் கொண்டார்.

சிவராசன் குறிப்பிட்ட நபர்கள், எம்.ஐ.இ.டி. உள்ள கோடம்பாக்கம் பகுதியில் அமைந்திருந்த கமலா அபார்ட்மென்டின் வசித்தனர். அந்த அப்பார்ட்மென்ட் பில்டிங்கில் 3 ஃபிளாட்களை வாடகைக்கு எடுத்திருந்தது ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம். அந்த பிளாட்களில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க போராளிகளின் நண்பரானார் சுதந்திர ராஜா.

ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகமும் கோடம்பாக்கத்திலேயே ஜகாரியா காலனியில் அமைந்திருந்தது. அதனால், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களும், இந்த அப்பார்ட்மென்ட்களில் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு தமது புதிய நண்பர் சுதந்திர ராஜா, விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்தவர் என்று தெரிந்தே இருக்கவில்லை.

சரி. சுதந்திர ராஜாவை ஏன் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்குள் ஊடுருவ விட்டது விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு?

இந்திய அமைதிப்படை துருப்புகள் இலங்கையில் இருந்து வெளியேறும் இறுதிக் கட்ட காலம் அது. இலங்கையில் இந்திய அமைதிப் படையின் ஆதரவுடன் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்தது ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம். இந்த இயக்கத்தின் சார்பில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முதல்வராக இருந்தார் வரதராஜ பெருமாள்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கிளம்பி விட்டால், விடுதலைப் புலிகள் தம்மை கொன்று விடுவார்கள் என்று புரிந்து கொண்ட வரதராஜ பெருமாளும், அவருடன் இலங்கையில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களும், இந்திய அமைதிப் படையின் இறுதி பேட்ஜ் இலங்கையை விட்டு புறப்படும்போது அவர்களுடன் இந்தியா செல்ல போகிறார்கள் என்ற தகவல் விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவுக்கு கிடைத்தது.

அவர்கள் இந்தியாவில் எங்கே தங்கியிருக்கப் போகிறார்கள், அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுக்கு இருந்த ஒரே வழி, ஈ.பி.ஆர்.எல்.எப். சென்னை அலுவலகத்துக்குள் தமது ஆள் ஒருவரை ஊடுருவ விடுவதுதான்.

தமிழக அரசு எதிர்ப்பாக இருந்தபோதிலும், ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகம் சென்னையில் செயல்பட்டது. அவர்களின் சென்னை அலுவலகத்தில் ஊடுருவும் பணிக்கு, சுதந்திர ராஜா முற்றிலும் பொருத்தமானவராக அமைந்தார்.

அனைவரிடமும் எளிதாகப் பழகிய சுதந்திர ராஜா, ஜகாரியா காலனியில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இளம் போராளிகளிடம் தமது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், அங்கிருந்து செலவுக்கு பணம் அனுப்புவதாகவும் கூறினார்.

அவரது கையில் ஏராளமாக பணம் புழங்கியது. ஜகாரியா காலனியில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். போராளிகளுக்காக நிறையச் செலவு செய்தார். அதற்குப் பலன் கிடைத்தது.

ஜூன் 3-வது வாரம் பத்மநாபா, சென்னை அலுவலகத்துக்கு வரப்போகிறார் என்ற தகவல் கிடைத்தது. அதை உடனே சிவராசனுக்கு தெரியப்படுத்தினார் சுதந்திர ராஜா.

இதற்கிடையே இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைமை, பத்மநாபாவையும், முக்கிய ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களையும் ‘போட்டுத் தள்ளுவது’ என்ற முடிவை எடுத்தது. அந்தப் பொறுப்பு உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானிடம் கொடுக்கப்பட்டது.

இந்தக் காரியத்தை செய்வதற்கு தமது ஆட்களை முழுமையாக பயன்படுத்த விரும்பாத பொட்டு அம்மான், கடல் புலிகள் தலைவர் சூசையுடன் பேசி, அந்தப் பிரிவில் இருந்து உதவி பெற்றுக் கொண்டார்.

கடல் புலிகளின் உறுப்பினர் டேவிட் தலைமையில், பொட்டு அம்மானின் ஆளான சிவராசனும், உளவுப்பிரிவைச் சேர்ந்த 3 விடுதலைப்புலிகளும் அடங்கிய குழு சென்னை வந்தது. சென்னை சூளைமேட்டில் இருந்த விடுதலைப் புலிகள் ஆதரவாளர் ஜெயபாலி என்பவரது வீட்டில் இவர்கள் தங்கினர்.

சரியான தருணத்துக்காக காத்திருந்தனர்.

ஜூன் 19-ம் திகதி மாலையில் சுதந்திர ராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். நண்பர்களைச் சந்திக்கச் சென்றார். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜகாரியா காலனியில் உள்ள பவர் அபார்ட்மென்டில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகத்தில் முக்கிய கூட்டம் ஒன்று நடப்பதையும், அதில் பத்மநாபா கலந்து கொண்டிருந்ததையும் அறிந்தார்.

இக்கூட்டத்தில் இலங்கையில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைத்த மாநில அரசில் நிதி அமைச்சராக இருந்த கிருபாகரன், யாழ்ப்பாண எம்.பி. யோக சங்கரி ஆகியோரும் கலந்துகொண்ட விபரமும் கிடைத்தது.

கிடைத்த தகவலை உடனே சிவராசனுக்கு தெரியப்படுத்தினார் சுதந்திர ராஜா.

இதையடுத்து டேவிட் தலைமையில் சிவராசனும் ஜெயபாலி வீட்டில் தங்கியிருந்த மற்றைய விடுதலைப்புலிகளும் நவீன ஏ.கே. 47 ரைஃபிள்கள் மற்றும் கையெறிகுண்டுகளுடன் மின்னல் வேகத்தில் தயாராகினர்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s