ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 38

ராஜிவ் கொலை ஆபரேஷனுக்காக வேதாரண்யம் கடற்கரையில் வந்து இறங்கிய போது…

சென்னையில் பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலை சுதந்திர ராஜா கொடுத்ததை அடுத்து, டேவிட் தலைமையில் சிவராசனும் ஜெயபாலி வீட்டில் தங்கியிருந்த மற்றைய விடுதலைப்புலிகளும் நவீன ஏ.கே. 47 ரைஃபிள்கள் மற்றும் கையெறிகுண்டுகளுடன் மின்னல் வேகத்தில் சென்று, சென்னை சூளைமேட்டில் இருந்த அந்த வீட்டில் தாக்குதல் நடத்தினர்.

இந்த அதிரடித் தாக்குதலில் பத்மநாபாவும் 13 ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

பத்மநாபா கொல்லப்பட்ட உடனே இந்தியாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற உத்தரவு விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதனால், உடனடியாகவே தென் தமிழக கடல் பகுதியை நோக்கி தாம் தாக்குதலுக்கு வந்த அதே அம்பாசடர் காரில் விரைந்தனர்.

இதற்கிடையே இவர்கள் ஒரு அம்பாசடர் காரில் தப்பிச் செல்லும் விபரம் தமிழக போலீஸூக்கு தெரிந்து விட்டது. சென்னையில் இருந்து கிளம்பிய சிவராசனும் மற்றையவர்களும் செங்கல்பட்டு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காரின் டிக்கியில், ஆயுதங்கள் இருந்தன.

செங்கல்பட்டு அருகே தடுத்த பொலீசாரை தள்ளிவிட்டு விடுதலைப்புலிகள் நள்ளிரவு 1.30 மணியளவில் விழுப்புரத்தை அடைந்தனர். இனியும் அதே அம்பாசடர் காரில் என்றால் தடுத்து நிறுத்தப்படுவோம் என்று புரிந்து கொண்டு, விழுப்புரத்தில் ஒரு மாருதி வேனை கடத்தி அதிலேயே திருச்சிக்கு சென்றனர்.

திருச்சியில் இருந்து மல்லிப்பட்டினம் கடற்கரைக்குச் சென்று அங்குள்ள தென்னந்தோப்பில் விடுதலைப் புலிகளின் ப்கு வருவதற்காக காத்திருந்தனர். மறுநாள்தான் படகு வந்தது. அதில், யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வுக்காக சுதந்திர ராஜாவை விசாரித்ததில், இந்த விபரங்கள் சி.பி.ஐ.க்கு தெரிய வந்தது. இதனால் ராஜிவ் காந்தி கொலை புலனாய்வில் எந்த தகவலும் கிடையாது என்ற போதிலும், சென்னையில் வைத்து பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை யார் கொலை செய்தார்கள் என்று அதுவரை பதில் தெரியாமல் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது.

அத்துடன் ராஜிவ் கொலை தொடர்பாக முக்கிய சந்தேக நபராக தேடப்பட்டு வந்த சிவராசன், பத்மநாபா கொலையிலும் தொடர்புடையவராக இருந்தார் என்பதை சி.பி.ஐ. தெரிந்து கொண்டது.

சுதந்திர ராஜாவை மேலும் விசாரித்தபோது அவர், 1990-ம் ஆண்டு பிப்வரியிலிருந்து ஜூன் வரை சென்னையில் இருந்தார் என்று தெரியவந்தது. அதன்பின் யாழ்ப்பாணம் வருமாறு சிவராசனிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. 1991-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு சுதந்திர ராஜாவை அழைத்துச் சென்றார் சிவராசன்.

அங்கே, விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் இருந்தார்.

சிவராசன், மற்றும் சுதந்திர ராஜாவை தவிர, வேறு சிலரும் அங்கிருந்தனர். ரூசோ, கீர்த்தி, சிவரூபன், விஜயானந்தன், நேரு ஆகியோர் பொட்டு அம்மானுடன் இருந்தனர். சிறிது நேரத்தில் விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு தலைவி அகிலா வந்தார். அவர் வரும்போது, சுபாவும், தனுவும் அவருடன் வந்தனர்.

அதி முக்கிய ஆபரேஷன் ஒன்று தமிழகத்தில் நடக்கப் போவதாக கூறிய பொட்டு அம்மான், அந்த ஆபரேஷனுக்கு தலைவர் சிவராசன் என்றும், இவர்கள் அனைவரும் சிவராசனுக்குக் கீழ்ப்படிந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

அன்றிரவே தமிழகத்துக்கு புறப்பட்டு செல்லுமாறு பொட்டு அம்மான் கூறியபோதும், அவர்களது படகில் சிறு கோளாறு ஏற்பட்டதால், அன்று அவர்களால் புறப்பட முடியவில்லை.

இறுதியில் ஏப்ரல் 30-ம் தேதி அந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரையில் இருந்து படகு மூலம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்குப் புறப்பட்டனர். அன்று நள்ளிரவில் தமிழகக் கடற்கரைக்கு வந்துவிட்டனர்.

கோடியக்கரை கடற்கரைக்கு அருகில் வந்துகொண்டிருந்தபோது சிவராசன் தன்னிடமிருந்த ஒயர்லெஸ் ரேடியோ சாதனம் மூலம் வேதாரண்யத்தில் இருந்த யாரையோ தொடர்பு கொண்டார். கடற்கரையில் எல்லாம் சரியாக உள்ளதா என்று விசாரித்தார்.

(கரையில் இறங்கிய பின்னர்தான் சுதந்திர ராஜாவுக்கு சிவராசன் வேதாரண்யத்தில தொடர்பு கொண்ட நபர், விடுதலைப் புலிகள் உறுப்பினர் அருணா என்று தெரிய வந்தது.)

கடற்கரையில் நடமாட்டம் இருப்பதால் சிறிது நேரம் படகில் கடலிலேயே இருக்குமாறு, அருணா கூறியதால், இவர்கள் சிறிது நேரம் படகை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். சிவராசன் மட்டும் படகில் இருந்து குதித்து கரையை நோக்கி நீந்திச் சென்றார்.

சில மணி நேரத்தின்பின், வேதாரண்யம் கடத்தல் புள்ளி சண்முகத்தின் ஆட்கள் சுமார் 30 பேருடன் கடற்கரைக்கு வந்தார் சிவராசன். விளக்கு சமிக்கைகள் (சிக்னல்) மூலம் விடுதலைப்புலிகள் வந்த படகை, கோடியக்கரை கடற்கரைக்கு வரச் செய்தார்.

சுபா, தனுவையும் மற்றவர்களையும் சண்முகத்தின் வீட்டுக்கு எதிரில் உள்ள குடிசைகளில் ஓய்வு எடுப்பதற்காக அழைத்துச் சென்றார் சிவராசன். அவரது கட்டளையின்படி விடுதலைப்புலிகள் சிறு குழுக்களாகப் பிரிந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

சிவரூபன் மற்றும் சிவராசனின் மற்றொரு நண்பர் சொக்கன் ஆகியோருடன் திருச்சிக்குச் சென்றார் சுதந்திர ராஜா. திருச்சியில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர் வீட்டில் சிவரூபனை விட்டுவிட்டு, சுதந்திர ராஜாவும் சொக்கனும், ராபர்ட் பயஸ் வீட்டுக்கு வந்தனர்.

ஓரிரு நாள்கள் ராபர்ட் பயஸ் வீட்டில் தங்கியிருந்த பிறகு, சுதந்திர ராஜாவை ராஜிவ் கொல்லப்பட்டபோது உயிரிழந்த போட்டோகிராபர் ஹரிபாபு வீட்டில் தங்கச்செய்தார் சிவராசன். ஒரு வாரம் கழித்து ஜெயக்குமார் வீட்டுக்கு மாற்றப்பட்டார்.

விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவுக்காக தகவல் சேகரிக்கும் பணிக்காகவே சுதந்திர ராஜா அழைத்து வரப்பட்டிருந்தார். இதனால், சிவராசனுக்கு பயன்படக்கூடிய பலரைச் சந்தித்து அவர்களுடன் நன்கு பழகினார். இதற்காக, பல்வேறு நபர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும், அவர்களை எங்கே சந்திப்பது என்பதை அறியவும் சென்னையில் உள்ள விடுதலைப் புலிகள் உளவுப்பிரிவின் அனைத்து இடங்களுக்கும் சுதந்திர ராஜாவை அழைத்துச் சென்றார் சிவராசன்.

இதனால்தான், ராஜிவ் கொலை புலனாய்வில் சுதந்திர ராஜா சிக்கியபின், விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவுடன் தொடர்புடைய பலர் அடுத்தடுத்து சிக்கினர்.

சுதந்திர ராஜாவை விசாரித்தபோது, வேறு சில விபரங்களும் தெரிய வந்தன. சிவராசனின் உத்தரவுப்படி, இலங்கைத் தமிழர் இளைஞர்கள் சிலரால் வாடகைக்குப் பிடிக்கப்பட்டிருந்த மற்றொரு வீட்டில், சிவராசனின் ஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக சுதந்திர ராஜா தெரிவித்தார்.

பல பைகளில் இருந்த இப்பொருட்களை அந்த இளைஞர்களிடம் கொடுக்க சிவராசன் சென்றபோது, சுதந்திர ராஜாவும் சேர்ந்துதான் அந்த பைகளை தூக்கிச் சென்றிருந்தார்.

அந்த பைகளுக்குள் இருந்த பொருட்கள் என்ன என்று தமக்கு தெரியாது என்று கூறிய சுதந்திர ராஜா, அவை அநேகமாக புத்தகங்கள் அல்லது நோட்டுப் புத்தகங்களாக இருக்கலாம் என்றார். அந்த பைகள் வைக்கப்பட்டுள்ள வீட்டை அடையாளம் காட்ட அவருக்கு தெரிந்திருந்தது.

இதையடுத்து சி.பி.ஐ. டீம் ஒன்று சுதந்திர ராஜாவை அழைத்துச் சென்று அந்த பைகளை கைப்பற்றியது. அதற்குள் இருந்த பொருட்களில் இருந்துதான் பல விஷயங்களை தெரிந்து கொண்டது சி.பி.ஐ. புலனாய்வு டீம்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s