ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 40

சிவராசன் தப்பிக்க, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உதவியை நாடினார் பொட்டு அம்மான்!

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் செய்த ஏற்பாட்டின்படி, புலிகளின் தமிழகத்துக்கான அரசியல் பிரிவுத் தலைவரான திருச்சி சாந்தனும், ராஜிவ் கொலையின் திட்டமிடலாளர் என்று சி.பி.ஐ.யால் தேடப்பட்டு வந்த சிவராசனும், சென்னையில் உள்ள விடுதலைப் புலிகள் தீவிர ஆதரவாளரும், இலங்கைத் தமிழருமான பொறியாளர் ஒருவரது வீட்டில் சந்திப்பதாக இருந்தது.

அந்தச் சந்திப்பின்போது திருச்சி சாந்தன், சிவராசன் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவி புரிவார் என்றும், பொட்டு அம்மானிடம் இருந்து சிவராசனுக்கு தகவல் போனது.

ஆனால், தமிழகத்தில் அப்போது நிலைமை இவர்களுக்கு சாதகமாக இல்லை.

நாம் இதுவரை வெளியிட்ட இந்தத் தொடருக்கு வாசகர்கள் அதன் கீழுள்ள லிங்கில் சென்று விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தார்கள். விளம்பரங்களின் வருமானத்திலேயே இந்த இணையத்தளத்தை தொடர்ந்து நடத்த முடியும். தமிழில் அதிகம் வெளியாகாத இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து தர முடியும். இந்தக் கட்டுரைக்கும் வாசகர்கள் ஆதரவு இருந்தால், தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடலாம்.

சிவராசனை போலீஸ் தேடிக்கொண்டு இருந்தது. சிவராசனின் போட்டோக்கள் பத்திரிகைகளிலும் வெளியாகி, தகவல் கொடுப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. திருச்சி சாந்தனை போலீஸ் தேடவில்லை, ஆனால், அவரும் தலைமறைவாக இருந்தார்.

இதையடுத்து, இருவரும் தமது முதல் சந்திப்புக்கு நேரில் செல்லவில்லை.

சிவராசன் தனது பிரதிநிதியாக சுதந்திர ராஜாவை அனுப்பி வைக்க, திருச்சி சாந்தன் தனது பிரதிநிதியாக டிக்சனை அனுப்பி வைத்தார்.

ஜூன் 22-ம் தேதி சென்னையில் உள்ள பொறியாளர் வீட்டில் இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்புக்குப் பின் டிக்சனை விஜயன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சுதந்திர ராஜா. அங்கே சிவராசன் இருந்தார். டிக்சன் சிவராசன் சந்திப்பு நடந்தது.

டிக்சன் சிவராசனிடம் கூறுகையில், தனது ஒயர்லெஸ் தகவல்களை ‘ரா’ உளவுப் பிரிவு ஒட்டுக் கேட்பதாகவும் சில பத்திரிகைகளில் இது பற்றி செய்தி வெளியாகி உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தின் பிரபல சஞ்சிகையில் அந்த செய்தி வெளியாகியிருந்தது.

சிவராசன் ஒயர்லெஸ்சில் தகவல் அனுப்புவதையே நிறுத்திக் கொள்வது நல்லது என்றார் டிக்சன்.

பொட்டு அம்மான் தமது உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்களை, அரசியல் பிரிவினரிடம் இருந்து விலகியே இருக்கும்படி கூறுவது வழக்கம். அப்படியிருந்தும், உளவுப் பிரிவைச் சேர்ந்த சிவராசனும், மற்றையவர்களும் தப்பிச் செல்வதற்கு, அரசியல் பிரிவினரின் உதவியை கோரியிருந்தார் பொட்டு அம்மான்.

இதற்கு காரணம், ராஜிவ் கொலை புலனாய்வாளர்கள் கவனம் முழுவதும், விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவினர் மீதே படிந்திருந்தது. தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் மீது, அவர்கள் கவனம் செல்லவில்லை. அதுவரை அரசியல் பிரிவினர் யாரும் கைது செய்யப்படவும் இல்லை.

பொட்டு அம்மான் உத்தரவுப்படி, உளவுப் பிரிவைச் சேர்ந்த சிவராசன், சுபா, நேரு ஆகிய மூவரை மட்டும் அரசியல் பிரிவினர் அழைத்துச் சென்று தப்ப வைப்பது என்று சிவராசனும், சாந்தனும் முடிவு செய்தனர்.

உளவுப்பிரிவைச் சேர்ந்த சுதந்திர ராஜா, காந்தன், ரமணன் ஆகியோர் தங்கள் சொந்த திறமையிலேயே தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவாகியது.

சண்முகத்தைப் பிடிக்குமாறு தமிழக பொலீசாரை கேட்டுக் கொண்டது, சி.பி.ஐ.

இதற்கிடையே, விடுதலைப்புலிகள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பும் ஒயர்லெஸ் தகவல்கள் ‘ரா’ உளவுப் பிரிவால் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்று தமிழக சஞ்சிகையில் வெளியான தகவல் நிஜம்.

சிவராசனுக்கும், பொட்டு அம்மானுக்கும் இடையேயான ஒயர்லெஸ் தகவல் தொடர்புகள் யாவும் ரகசியக் குறியீட்டு சொற்களிலேயே இருந்தன. எனினும், சில கோட்-வேர்டுகள் ‘ரா’ உளவுப் பிரிவினரால் உடைக்கப்பட்டிருந்தன. வேறு சில உடைக்கப்படவில்லை.

இதற்கு காரணம், புலிகள் ஒயர்லெஸ் தகவல்கள் அனுப்பும்போது, வெவ்வேறு கோட் ஷீட்டுகளை பயன்படுத்துவது வழக்கம். ஒரு தகவல் ஒரு கோட் ஷீட்டில் உள்ள கோட்-வேர்டுகளில் இருக்கும். மற்றைய தகவல் மற்றொரு ஒரு கோட் ஷீட்டில் உள்ள கோட்-வேர்டுகளில் இருக்கும்.

இதில் ஒரு கோட்-ஷீட்டின் ரகசியத்தையே ‘ரா’ உடைத்திருந்தது. உடைக்கப்பட்ட கோட்-ஷீட்டை உபயோகித்து அனுப்பப்பட்ட தகவல்களை ‘ரா’, டீ-கோட் செய்து சில விஷயங்களை தெரிந்து கொண்டது.

அப்படி தெரிந்துகொண்ட விஷயங்களில் ஒன்று, பிரகாசம் என்பவரைப் பற்றியது.

ஒயர்லெஸ் தகவல் தொடர்பில் குறிப்பிடப்பட்ட பிரகாசம் என்ற நபர் பொட்டு அம்மானின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற போதிலும், அவர் இலங்கையை சேர்ந்தவர் அல்ல, இந்தியர் என்பதையும், அவரது உண்மையான பெயர் ரவி என்பதையும் ‘ரா’ தெரிந்து கொண்டது. ரவிக்கு விடுதலைப் புலிகள் வைத்த பெயர்தான் பிரகாசம்.

ஆர்வமுள்ள இந்திய இளைஞர்களைப் பயிற்சிக்காக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு ரவியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த ரவி, சிவராசனுடன் தொடர்பில் இருந்தார்.

தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ள தகவல், ரவி மூலம்தான் தமக்குத் தெரிந்தது என பொட்டு அம்மானுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில் சிவராசன் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், வேதாரண்யம் கடத்தல் புள்ளியான சண்முகத்திடம் பல பொருட்கள் கொடுத்து வைத்திருப்பதாகவும், சிவராசன் அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உளவுப்பிரிவு ‘ரா’, இந்த தகவல்களை சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவிடம் கொடுத்தது.

இதையடுத்து, சண்முகத்தைப் பிடிக்குமாறு தமிழக பொலீசாரை கேட்டுக் கொண்டது, சி.பி.ஐ. புலனாய்வுக் குழு. சண்முகத்தை தேடத் தொடங்கியது தமிழக காவல்துறையின் கியூ பிராஞ்ச்.

ஜூலை 17-ம் தேதி தமிழக பொலீசாரிடம் சரணடைந்தார் சண்முகம். முன்ஜாமீன் கோரி சண்முகம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் வேறு வழியில்லாமல் சரணடைந்தார் அவர். உடனடியாகவே அவரை தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டது, சி.பி.ஐ.

இந்த சண்முகம்தான், விடுதலைப் புலிகள் வேதாரண்யத்துக்கும் இலங்கைக்கும் சென்று திரும்ப உதவும் நபர் என்பதால், அவர் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு, உளவுப் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளுடனும் நெருக்கமாக இருந்தவர்.

இலர் சரணடைந்த காரணத்தால், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு, உளவுப் பிரிவு தொடர்பான பல ரகசியங்கள் புலனாய்வுக் குழுவுக்கு தெரியவந்தன.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s