ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 42

விடுதலை புலிகளின் ஆயுதங்களை காட்டிவிட்டு தப்பி ஓடினார், கடத்தல் புள்ளி சண்முகம்!

வேதாரண்யம் கடத்தல் புள்ளி சண்முகத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, பொலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றதும், ஹெலிக்கொப்டரில் அவரை வேதாரண்யத்துக்கு அழைத்துச் சென்றார்கள், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவினர்.

அந்தச் சமயத்தில், வேதாரண்யம் பகுதியில் வேறொரு முக்கியமான நடவடிக்கைக்கான ஆயத்தப்பணியில் தமிழக பொலீஸ் ஈடுபட்டிருந்தது. இப்பணிக்காக, மத்திய பாதுகாப்பு படையினரும் திரப்பட்டிருந்தனர்

வேதாரண்யம் சென்ற சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவினர், வெடிபொருள்களையும், ஒயர்லெஸ் சாதனங்களையும் மீட்பதில் கவனம் செலுத்தினர். இந்தப்பணி ஜூலை 18-ம் திகதி மாலை தொடங்கியது. மறுநாள் காலை வரை நீடித்தது. சண்முகம் காட்டிய இடங்களில் தரையை தோண்டி பார்த்ததில், 121 பெட்டிகளில் சக்தி வாய்ந்த வெடிபொருள்கள், 66 டிரம்கள், பிளாஸ்டிக் கேன்களில் பெட்றோல், டீசல் மற்றும் ஜப்பான் தயாரிப்பான ஒயர்லெஸ் சாதனம் ஆகிவை ஆழக்குழிகளில் இருந்து மீட்கப்பட்டது.

கடும் இருட்டாக இருந்தபோதிலும், அப்பொருட்களைப் புதைத்து வைத்திருந்த இடங்களைத் துல்லியமாகக் காட்டினார் சண்முகம்.

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான பொருட்கள் மீட்கப்பட்டதை அடுத்து, சண்முகத்தை அவரது மனைவி, குழந்தைகளைச் சந்திக்க அனுமதித்தனர், சி.பி.ஐ. அதிகாரிகள். சண்முகத்தை, அவரது இல்லத்தில் மதிய உணவு சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டது.

சண்முகம் மதிய உணவை முடித்தபின், அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்றனர். சண்முகம், தனது வீட்டில் உண்ட இறுதி உணவு அதுதான் என்பது அவருக்கு தெரிந்திருக்காது.

சண்முகத்தை அவரது வீட்டில் இருந்து நேரே வேதாரண்யத்தில் உள்ள ஆய்வு மாளிகைக்கு (இன்ஸ்பெக்ஷன் பங்களா) அழைத்துச் சென்று, மேலும் விசாரணை நடத்தினர். முருகன் கொடுத்த பைகள் மட்டுமின்றி விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்க பிஸ்கட்டுகள் பற்றி சண்முகத்துக்குத் தெரிந்திருக்கும் என சி.பி.ஐ. நம்பியது. இதனால், அவர் மூலம் மேலும் பொருட்களை மீட்க முடியும் என்ற நோக்கத்தில், சி.பி.ஐ. விசாரணை குழுவினர் அவரை மேலும் நிர்பந்தித்தனர்.

வேதாரண்யத்தில் உள்ள ஆய்வு மாளிகையில் இரு அறைகள் இருந்தன. சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவினர் தங்குவதற்கு வேதாரண்யத்தில் ஹோட்டல் ஏதும் இல்லாத காரணத்தால், அவர்கள் ஆய்வு மாளிகையில்தான் தங்கியிருந்தனர்.

ஓர் அறையில் சி.பி.ஐ. மூத்த அதிகாரிகள் இருவர் தங்கியிருந்தனர். மற்றொரு அறையில் ஒரு டி.எஸ்.பி., 3 பொலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருந்தனர். உள்ளூர் பொலீசார் இருவர் சிறப்புப் புலனாய்வுப்படை அதிகாரிகளுக்கு உதவியாக இருந்தனர்.

இந்த சண்முகத்தின் மாமா சீதாராமனும் பிரபல கள்ளக் கடத்தல்காரர்தான். முன்பு, இவரும் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். தொழிலில் வீழ்ச்சியடைந்த அவர், அப்போது பொலீஸ் காவலில் இருந்தார். அவரை அழைத்து வந்து சண்முகத்துடன் பேச வைத்தால், சண்முகத்தின் வாயில் இருந்து மேலும் உண்மைகள் வெளிவரலாம் என உள்ளூர் பொலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சீதாராமனை ஆய்வு மாளிகைக்கு அழைத்து வரச் செய்து சண்முகத்துடன் பேசச் செய்தனர்.

ராஜிவ்காந்தி கொலையாளிகளுக்கு உதவியதாக சண்முகத்தைத் திட்டினார் சீதாராமன். “விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், தங்க பிஸ்கட்கள் பற்றி தெரிந்த அனைத்தையும் சி.பி.ஐ.யிடம் தெரிவித்தால், உன்னை விட்டுவிடுவார்கள். முழுவதையும் சொல்லிவிடு” என்று சண்முகத்துக்கு அட்வைஸ் செய்தார் சீதாராமன்.

இருப்பினும், சண்முகத்திடமிருந்து மேற்கொண்டு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

அவரை விசாரித்த மூத்த சி.பி.ஐ. அதிகாரி, தனது உதவியாளர்களை அழைத்து, சண்முகத்தைக் கைவிலங்கிட்டு உள்ளூர் பொலீஸ் நிலையத்தில் வைத்திருக்குமாறு கூறினார். அதற்கு முன்னதாக, சண்முகம் இரவு உணவு சாப்பிட வேண்டியிருந்தது. அப்போது இரவு 9 மணி.

இரவு உணவு ஏற்கனவே தருவிக்கப்பட்டிருந்தது. தரையில் அமர்ந்து சாப்பிட்டார் சண்முகம். உணவு உண்டபின் கை கழுவுவதற்காகச் வெளியே சென்றார். அவருடன் காவலுக்கு ஒரு பொலீசும் சென்றார். கதவுக்கு வெளியே நின்று கையை கழுவினார் சண்முகம். போலீஸ்காரர் கதவுக்கு உள்ளே நின்றுகொண்டார்.

சண்முகம் திடீரென செயல்பட்டு, கதவை மூடி வெளியே தாள்பாள் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்.

ஒருவர் இருளில் ஓடும்போது, அவர் அணிந்திருந்த உடைகள்தான் தொலைவில் இருந்து பார்க்கும்போது கண்களுக்கு தென்படும் என்பது, அனுபவம் மிக்க கடத்தல்காரரான சண்முகத்துக்கு தெரியும். இதனால், வேட்டியையும், சட்டையையும் கழற்றி எறிந்துவிட்டு இருளில் தப்பி ஓடினார்.

சண்முகத்துக்கு காவலாக அனுப்பப்பட்ட போலீஸ்காரர் என்ன செய்தார்? சண்முகத்தைப் பின் தொடர்ந்து துரத்திச் செல்வதற்குப் பதிலாக, அதிகாரிகள் தங்கியிருந்த அடுத்த அறைக்குள் சென்று சண்முகம் தப்பியோடிவிட்டதாகக் கூறினார்.

என்ன நடந்தது என்பதைப் புரிவதற்கு ஓரிரு நிமிடங்கள் ஆயின. இந்த நேரம் போதுமானதாக இருந்தது; அப்பகுதியின் மூலை முடுக்கெல்லாம் நன்கறிந்த சண்முகத்துக்கு!

சிறப்புப் புலனாய்வுப்படை அதிகாரிகள் முதலில் சண்முகம் ஓடிச் சென்ற பகுதியை நோக்கி ஓடினர். வழியில் அவரது வேட்டி, சட்டை கிடந்ததைக் கண்டனர். சண்முகத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் நடவடிக்கையில் உள்ளூர் பொலீசாரையும், மத்திய பாதுகாப்பு படையினரையும் ஈடுபடுத்தினர்.

அந்த இரவு நேரத்தில், வேதாரண்யம் முழுவதிலும் சண்முகத்தை பிடிக்க உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டும் பொலீஸ் வேனில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. பொலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சண்முகத்தின் வீடு, அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

அவரது உறவினர்களையெல்லாம் பிடித்து வந்து, சண்முகத்தைத் தேடிப்பிடிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இதெல்லாம் இரவோடு இரவாக நடந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில், சண்முகம் தப்பிச்சென்றது பற்றி சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. பொலீஸ் காவலில் இருந்து தப்பியோடியதாக, சண்முகம் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்றிரவு முழுவதும் வேதாரண்யத்தில் இருந்த சிறப்புப் புலனாய்வுப்படை அதிகாரிகளும், உள்ளூர் பொலீசாரும் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.

மறுநாள், ஜூலை 20-ம் திகதி காலையில், இன்ஸ்பெக்ஷன் பங்களா அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டு தொங்கி கொண்டிருந்தது சண்முகத்தின் உடல்!

எப்படி இறந்தார் சண்முகம்?

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s