ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 43

ராஜிவ் கொலைக்கும் வேதாரண்யம் கடத்தல் புள்ளி சண்முகத்துக்கும் என்ன தொடர்பு?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த தொடரை அப்டேட் செய்யவில்லை. காரணம், கட்டுரையின் கீழுள்ள ஆங்கில கட்டுரையின் லிங்கில் சென்று விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்த வாசகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, இந்த தொடரை நிறுத்தி வைத்து, வாசகர்கள் ஆதரவு அதிகமுள்ள கட்டுரைகளை வெளியிட்டு வந்தோம்.

தற்போது ஆண்டு இறுதியில், நாம் பூர்த்தி செய்யாமல் விட்டுள்ள தொடர்களை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

பூர்த்தி செய்யப்படாமல் விடப்பட்டுள்ள தொடர்களில் ஒவ்வொரு அத்தியாயம் வெளியிட முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வாசகர்கள் ஆதரவு இருந்தால் தொடரலாம். அல்லது, சுருக்கமாக ஒரு இறுதி அத்தியாயம் வெளியிட்டுவிட்டு, வாசகர்கள் ஆதரவு தரும் விஷயங்களை எழுதலாம் எனவும் முடிவு செய்துள்ளோம்.

விளம்பரங்களின் வருமானத்திலேயே இந்த இணையத்தளத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலையில், ஆண்டு இறுதியில் நாம் இப்படியான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. இந்த தொடர் அதிக வாசகர்களுக்கு பிடித்திருக்கிறதா, இந்த தொடர் தொடரவேண்டும் என்று விரும்புகிறார்களா என பார்க்கலாம். (அதற்காக ஏழெட்டு கிளிக் அடித்து விடாதீர்கள்.. எல்லாமே ரத்தாகி, பூச்சியமாகி விடும்!)

கடந்த பாகத்தில், வேதாரண்யம் கடத்தல் புள்ளி சண்முகத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்திய சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவினர், சண்முகத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்று, ஹெலிகொப்டரில் வேதாரண்யத்துக்கு அழைத்துச் சென்றார்கள்” என்று எழுதியிருந்தோம். (கடந்த பாகங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)

அது நடந்தது, ஜூலை 19-ம் தேதி.

வேதாரண்யத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் பொருட்களை அவர் காட்டிக் கொடுத்தபின், அன்றிரவு வேதாரண்யம் இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் வைத்து விசாரிக்கப்பட்டபோது, தப்பியோடினார் சண்முகம்.

மறுநாள், ஜூலை 20-ம் தேதி காலையில், இன்ஸ்பெக்ஷன் பங்களா அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டு தொங்கி கொண்டிருந்தது சண்முகத்தின் உடல்!

எப்படி இறந்தார் சண்முகம்? இந்தக் கேள்விக்கு இன்றுவரை சரியான பதிலை கூறவில்லை சி.பி.ஐ.

இந்தச் சம்பவம் ராஜிவ் காந்தி படுகொலை புலன் விசாரணையில் சி.பி.ஐ.க்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடி.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு சில வசதிகளைச் செய்து கொடுத்தவர் சண்முகம் என்பது நிஜம். ஆனால் அதைத்தவிர, ராஜிவ் காந்தி கொலையில் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகக் காட்டும் சான்று ஏதும் இல்லை. போலீஸில் தாமாகவே சரணடைந்து, நீதிபதி உத்தரவில் போலீஸ் காவலில் விசாரணைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது, இறந்து போனார் அவர்.

அதை ‘தற்கொலை’ என எஸ்டாபிளிஷ் பண்ண சி.பி.ஐ பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது. இச்சம்பவத்திற்காக கார்த்திகேயன் தலைமையிலான சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு மீது நாலாபுறமும் கண்டனக் கணைகள் பாய்ந்தன.

ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ், “பொலீஸ் காவலில் மரணமா? தற்கொலையா?” என்று கேள்வி எழுப்பியிருந்தது. அன்று வெளியான ஹிந்து நாளிதழ், “சிறப்புப் புலனாய்வுக்குழுயின் புலன் விசாரணையில் பின்னடைவு” எனக் கூறியது.

“ராஜிவ்காந்தி கொலை வழக்குக் குற்றவாளி வேதாரண்யத்தில் கொல்லப்பட்டரா?” என்று எட்டு கால செய்தியில் அலறியது தமிழ் நாளிதழ் ஒன்று! என்ன கொடுமை சார்… ‘வேதாரண்யம் கடத்தல் புள்ளி சண்முகம்தான் ராஜிவ் காந்தியை கொலை செய்தார்’ என்ற அளவில்தான் அந்த ‘மெகா சர்க்குலேஷன்’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு புரிந்தது போலும்!

அந்த வாரம் வெளியான தமிழ் புலனாய்வு சஞ்சிகை ஒன்று வெளியிட்ட கட்டுரையில், “சண்முகம் தப்பியதும், பின்னர் தூக்கில் தொங்கியதும் சதி வேலைதான் என்றார் உள்ளூர் கள்ளக் கடத்தல்காரர் ஒருவர்” என்று எழுதியிருந்தார்கள்.

ஜூலை 23-ம் தேதி வெளியான டெக்கான் ஹெரால்ட் நாளிதழில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, அதன் தலைவர் நரசிம்மராவ் தலைமையில் கூடி, ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையை சிறப்புப் புலனாய்வுக்குழு கையாளும் விதத்தைக் கடுமையாகச் சாடியது” என்று செய்தி வெளியிட்டது.
அந்த நாட்களில் இப்போது உள்ளதுபோல ஏராளமான தனியார் டி.வி. சேனல்கள் கிடையாது என்பதால், பத்திரிகை செய்திகளே முக்கியத்துவம் பெற்றிருந்தன. கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளுமே, சண்முகம் மரணமடைந்த விஷயத்தில், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவையே குற்றம் சாட்டின.

வேதாரண்யத்தில் சண்முகம் தப்பியோடிய(தாக கூறப்பட்ட) சமயத்தில், அங்கிருந்த போலீஸ் டி.ஐ.ஜி., எஸ்.பி.யுடன், ஒரு டி.எஸ்.பி.யும், மூன்று இன்ஸ்பெக்டர்களும் அங்கிருந்தார்கள். வேதாரண்யம் இன்ஸ்பெக்ஷன் பங்களா இரு அறைகளில் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டார் சண்முகம்.

“வேதாரண்யம் கடலோரப் பகுதியில் புதைத்து வைத்திருந்த விடுதலைப் புலிகளின் பொருட்களை காட்ட வேண்டும் என சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் நிர்பந்தித்ததை அடுத்து சண்முகம் தப்பியோடி தற்கொலை செய்து விட்டார்” என்பதே சி.பி.ஐ. தரப்பின் ஸ்டான்ட்.

நம்பவே முடியாத கூற்று அது.

ஏனென்றால், அன்றிரவுவரை சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக்குழு அதிகாரிகளுடன் ஒத்துழைத்தார் சண்முகம். அதை சி.பி.ஐ. ஒத்துக்கொள்கிறது.

முதல் நாள் இரவு, அவர் கொடுத்த தகவலின் பேரில், புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிபொருள்களையும், நவீன ஒயர்லெஸ் சாதனங்களையும் கைப்பற்ற முடிந்தது என்றும் கூறுகிறது சி.பி.ஐ.

இந்த மீட்பு நடவடிக்கையில் ஜூலை 18-ம் தேதி மாலை 5 மணி முதல், ஜூலை 19-ம் தேதி காலை 9 மணி வரை சிறப்புப் புலனாய்வுக்குழு குழு ஈடுபட்டது. அந்தளவு நேரம் பொருட்களை மீட்கும் அளவுக்கு பல இடங்களில் மறைத்து வைத்திருந்த பொருட்களை காட்டினார் சண்முகம். இதைச் சொல்வதும் சி.பி.ஐ.தான்.

இந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர், ஏன் தப்பியோட போகிறார்? ஏன் இவர்கள் கூறுவதுபோல தற்கொலை செய்துகொள்ள போகிறார்?

ஒருவேளை சண்முகத்தை ‘மிரள வைக்கும்’ விதத்தில் தகவல் ஏதாவது கூறப்பட்டதா? அப்படி கூறப்பட்டிருந்தால், அதை வேதாரண்யம் இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் இருந்த சி.பி.ஐ. அதிகாரிகளில் யாரோ, அல்லது போலீஸ் அதிகாரிகளில் யாரோதான் கூறியிருக்க வேண்டும்.

ஏனென்றால், அவர்கள்தான் மாறிமாறி சண்முகத்தை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி சண்முகத்தை யாரோ ‘மிரள வைத்திருந்தால்’, அதை எதற்காக செய்தார் அந்த நபர்? சண்முகம் உயிருடன் இருப்பது, யாருக்கோ, அல்லது எதற்கோ சிக்கலாக இருந்ததா?

ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருந்த சண்முகம், ‘மிரண்டு’ ஓடவில்லை என்றால், அடுத்த பாஸிபிளிட்டி, அவர் கொல்லப்பட்டார் என்பதே!

இவ்வளவு சி.பி.ஐ. அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மத்தியில் இருந்த சண்முகத்தை யார் கொன்றிருக்க முடியும்? மாயாவி கதையாக அல்லவா உள்ளது!

இருளாக இருந்தபோதிலும், அந்தப் பகுதி முழுவதையும் நன்றாக அறிந்தவர் சண்முகம். அதற்கு அவர் செய்த கடத்தல் தொழில் ஒரு காரணம். சிறப்புப் புலனாய்வுக்குழு அதிகாரிகளுக்கு அந்தப்பகுதியைப் பற்றி பெரிதாக தெரியாது. அதனால்தான் தப்பியோடிய சண்முகத்தை பிடிக்க முடியவில்லை என்பது, சி.பி.ஐ. சொல்லும் மற்றொரு வாதம்.

இந்த வாதத்திலும் ஒரு ஓட்டை இருக்கிறது.

சம்பவம் நடந்தபோது, வேதாரண்யம் இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் சி.பி.ஐ. மற்றும் பெரிய போலீஸ் அதிகாரிகள் மட்டும் இருக்கவில்லை. உள்ளூர் (வேதாரண்யம்) பொலீசார் இருவரும் அங்கிருந்தனர். அந்த இருவரும் வேறு அலுவல்களில் ஈடுபட்டு இருந்தார்கள் எனவும் கூறமுடியாது. காரணம், அவர்கள்தான், அதிகாரிகளுக்கும், சண்முகத்துக்கும் உணவு பரிமாறினர்.

அவர்கள் உணவு பரிமாறும்போது கிடைத்த சிறு இடைவெளியில் சண்முகம் தப்பிவிட்டார் என்பதே, சி.பி.ஐ.யின் தியரி.

அப்படியானால், சண்முகம் தப்பித்த நிமிடத்தில் அவருக்கு அருகே நின்றிருந்த உள்ளூர் (வேதாரண்யம்) பொலீசார் இருவருக்கும், அந்த பகுதி நன்றாக தெரிந்திருக்குமே! அவர்களின் உதவியுடன் இவர்களால் ஏன் சண்முகத்தை தேடி பிடிக்க முடியவில்லை?

சண்முகம் வேதாரண்யத்தைவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் எனவும் கூற முடியாது. காரணம், மறுநாள் காலை இன்ஸ்பெக்ஷன் பங்களா அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டு தொங்கி கொண்டிருந்தது சண்முகத்தின் உடல்!

சண்முகம் வேதாரண்யத்தைவிட்டு வெளியூர் தப்பியோடி இருந்தால், தற்கொலை செய்வதற்காக மீண்டும் வேதாரண்யம் வருவாரா அவர்?

அதைக்கூட விட்டு விடுங்கள். மிகவும் சிம்பிளான ஒரு கேள்வி…. “இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் இருந்து தப்பியோடிய ஒருவர், மீண்டும் அதே இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு வந்து தற்கொலை செய்திருப்பாரா?”

மேலேயுள்ள கேள்விக்கு பதிலில்லை.

இதையே இன்னொரு விதத்தில் கவிழ்த்துப் போட்டு பார்க்கலாமா? இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் இருந்து தப்பியோடிய சண்முகம், மீண்டும் அதே இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு வந்தார் என்றே வைத்துக் கொள்வோம். தற்கொலை பண்ண அவ்வளவு தூரம் வரமாட்டார் என்றால், எதற்காக வந்திருப்பார்?

ஒரேயோரு பாஸிபிளிட்டி, தப்பியோடியது தப்பு என புரிந்துகொண்டு சரணடைய வந்திருக்க வேண்டும்.

அந்த நேரத்தில் இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் இருந்த அதிகாரிகளில் பெரும்பாலானோர், வேதாரண்யம் முழுவதிலும் சண்முகத்தை தேடிக்கொண்டு இருந்தார்கள் என்கிறது சி.பி.ஐ. சரி… அப்படியே இருக்கட்டும்.

இவ்வளவு உயரதிகாரிகளும் தங்கியிருந்த இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் அனைத்து அதிகாரிகளின் உடமைகளும் இருக்கும் அல்லவா? எனவே, அவற்றுக்கு பாதுகாப்பாக ஓரிரு அதிகாரிகளாவது, இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் தங்கியிருப்பார்கள் அல்லவா? அதாவது, 20 அதிகாரிகள் ருந்திருந்தால், சண்முகத்தை தேட 18 அதிகாரிகள் செல்ல, 2 பேராவது, தமது உடமைகளுக்கு காவலாக இருந்திருக்க வேண்டுமே…

சண்முகம் சரணடையும் நோக்குடன் இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு திரும்பி வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் ஒருவரோ, இருவரோ மட்டும் இருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

நேரமோ, நள்ளிரவு. அக்கம் பக்கத்தில் ஆளில்லை.

மறுநாள் காலை, இன்ஸ்பெக்ஷன் பங்களா அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டு தொங்கி கொண்டிருந்தது சண்முகத்தின் உடல்!

இதற்கு என்னங்க அர்த்தம்?

சரி.. சண்முகத்தின் உடல் வேதாரண்யம் இன்ஸ்பெக்ஷன் பங்களா அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டு தொங்கி கொண்டிருந்த நிலையில் எடுக்கப்பட்ட போட்டோவையும், மேலும் சில சந்தேகங்களையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாமா?

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s