ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 44

புலிகளுக்கு உதவிய சண்முகம் தற்கொலை செய்து கொண்ட கதை, சி.பி.ஐ.யின் கற்பனையா?

டந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்த இந்த தொடரை கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கினோம். கடந்த வாரம், அதிக எண்ணிக்கையான வாசகர்கள், அந்த அத்தியாயத்தின் கீழிருந்த லிங்கில் சென்று ஆங்கில கட்டுரையின் விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

விளம்பரங்களின் வருமானத்திலேயே இந்த இணையத்தளத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலையில், வாசகர்களின் ஆதரவுக்கு நன்றி. இந்த அத்தியாயத்துக்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என நம்புகிறோம். வாசகர்களின் தொடர் ஆதரவு தொடரும்வரை இந்த தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும்.

ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வில் பதில் தெரியாத கேள்விகள் பலவும், மர்மங்களில் சிலவும் உள்ளன. அவற்றில் முக்கியமானது இந்த சண்முகம் ‘தற்கொலை’.

சண்முகத்தின் மரணத்தை தற்கொலை என்று சொல்ல, நல்ல கற்பனை வளம் தேவை.

புலனாய்வு முடிந்து வழக்கு நடந்தபோது, சண்முகத்தின் மரணம் எப்படி சம்பவித்தது என்று சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்திருந்த ‘கதையை’ எதிர்த் தரப்பினர் மிகச் சுலபமாக உடைத்திருக்கலாம். ஆனால் ஆச்சரியமாக, அதை யாரும் செய்யவில்லை. சண்முகத்துக்கு வேண்டப்பட்டவர்கள் நினைத்திருந்தால், இதை பெரிதுபடுத்தியிருக்க முடியும். அவர்களும் செய்யவில்லை.

ஏன் செய்யவில்லை?

சண்முகத்தின் மரணம் போலவே, மரணம் குறித்து சி.பி.ஐ. கூறிய கதை எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதும், விடை தெரியாத மர்மம்தான். எமது ஊகம், கோர்ட்டுக்கு வெளியே சில ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கலாம், “இந்த விவகாரத்தை பெரிதாக கிளறாதீர்கள்”.

“இரவு வேதாரண்யம் இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் வைத்து விசாரித்தபோது, சண்முகம் அங்கிருந்து தப்பி ஓடினார். மறுநாள் காலை, இன்ஸ்பெக்ஷன் பங்களா அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டு தொங்கி கொண்டிருந்தது சண்முகத்தின் உடல்!” என்பதுதான் சி.பி.ஐ. எஸ்டாபிளிஷ் செய்த கதை.

எப்படி தொங்கியது சண்முகத்தின் உடல்?

தொங்கிய நிலையில் சண்முகத்தின் உடல்

அருகேயுள்ள போட்டோவை பாருங்கள். இந்த போட்டோதான் அப்போது எடுக்கப்பட்ட ஒரேயொரு போட்டோ என போலீஸ் ரிக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுக்காக ஏன் அதிக போட்டோக்களை வெவ்வேறு கோணங்களில் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, “அவசரப்பட்டு தொங்கிய நிலையில் இருந்த உடலை இறக்கி விட்டார்கள்” என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

யாருங்க இறக்கியது?

சட்டம் தெரியாத சாமான்யரா? அந்த இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் இருந்த அனைவரும், சி.பி.ஐ. அதிகாரிகளும், உயர் போலீஸ் அதிகாரிகளும்தான்.

அப்படியிருந்தும் ஏன் அவசரப்பட்டு உடலை இறக்கினார்கள்?

(விசாரணையின்போது) யாரிடமும் பதில் இல்லை. சண்முகம் தற்கொலை செய்து கொண்டார் என்று இவர்கள் சொல்வது நிஜமல்ல என்பதே எமது ஊகம். கழுத்து நெரித்து கொல்லப்பட்டபின், கயிற்றில் தொங்கவிடப்பட்டு இருக்கவே சான்ஸ் அதிகம்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளை கனெக்ட் செய்யும் முக்கிய சாட்சிகளில் ஒருவர், இந்த சண்முகம். ராஜிவ் கொலையின் பிரதான திட்டமிடலாளர் என சி.பி.ஐ. குறிப்பிடும் சிவராசன் இலங்கையில் இருந்து இந்தியா வந்தபோது அவரை இந்திய கரையில் ரிசீவ் பண்ணியவர் இந்த சண்முகம்தான்.

ராஜிவ் கொல்லப்படும் ஆபரேஷன் நடப்பதற்கு முன்பும் சிவராசன் சிவராசன் இந்தியா வந்திருந்தார். அதுவும் ஒரு முக்கிய ஆபரேஷனுக்குதான். அப்போதுதான் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மற்றொரு ஈழ விடுதலை இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவை சிவராசனும் மற்றையவர்களும் சுட்டுவிட்டு இலங்கைக்கு தப்பிச் சென்றார்கள்.

அப்போது, சிவராசனும் மற்றையவர்களும் வேதாரண்யத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவியவரும், இதே சண்முகம்தான். ..

இதுதவிர, விடுதலைப் புலிகளால் வேதாரண்யத்தில் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள், ரேடியோ சாதனங்கள் எல்லாம் எங்கே புதைக்கப்பட்டு இருந்தன என்ற விஷயமும் சண்முகத்துக்கு தெரிந்து இருந்தது. அவர் அந்த இடங்களை காட்டியதை அடுத்தே, சி.பி.ஐ. அவற்றை மண்ணுக்குள் தோண்டி எடுத்தது.

சுருக்கமாக சொன்னால், இந்த சண்முகத்துக்கு பல விஷயங்கள் தெரியும். அப்படியான ஒருவர் ‘தற்கொலை’ செய்து கொண்டார் என்று சுலபமாக சொல்லிவிட்டு, அதை யாருமே கிளற முடியாதபடி வைத்திருக்க முடியும் என்றால், இதில் ‘பெரிய கைகள்’ யாரோ தொடர்பு பட்டிருக்க வேண்டும்.

தூக்கில் தொங்கிய நிலையில் சண்முகத்தின் போட்டோவை பார்த்தீர்கள் அல்லவா? அந்த உடலின் கழுத்துப் பகுதியில் கயிறு வெட்டிய, அல்லது கயிறு இறுக்கிய காயம் எதுவும் கிடையாது. தொங்கிய நிலையில் இருந்த சண்முகத்தின் நாக்கு வெளியே வந்த நிலையில் இல்லை. தொடைகளின் எந்தப் பகுதியிலும் கீறல்கள் இல்லை. தூக்கில் தொங்கும்போது, கைகளை தூக்க முடியாது, வலி தாங்காமல் தொடையில் விரல்களால் கீறுவார்கள்.

கைகளை கட்டியிருந்தால்தான், தொடைகளில் கீறல்கள் இருக்காது. கைகள் கட்டப்பட்டு இருந்தால், சண்முகம் எப்படி தற்கொலை செய்திருக்க முடியும்?

மேலே நாம் குறிப்பிட்ட அத்தனை தடயங்களும் பாதகமாக இருந்த நிலையிலும், இது தற்கொலை என்று கதையை முடித்திருக்கிறார்கள்.

இந்த மரத்தில் சண்முகம் தொங்கிய இடத்தில் நாற்காலியோ, முக்காலியோ, வேறு எந்த பொருளோ கிடையாது. அதாவது தூக்கு கயிற்றை மரத்தில் கட்டிவிட்டு, நாற்காலி போன்ற ஒன்றில் ஏறி குதிக்க மரத்தடியே எந்த பொருளுமில்லை. அப்படியிருந்தும் தற்கொலை செய்ய ஒரேயொரு வழி, மரத்தின் மேலே ஏறி, கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு குதிக்க வேண்டும்.

அந்த இரவு நேரத்தில், தரையில் இருந்து மரக்கிளையின் உயரம், தமது உயரம், தரையில் இருந்து தமது கால் குறைந்த பட்சம் எவ்வளவு உயரத்தில் தொங்க வேண்டும் என்பதையெல்லாம் அந்த இருளில் கணித்து, கயிற்றை கட்டி, கழுத்தில் மாட்டி, குதித்தாரா சண்முகம்?

சண்முகத்தின் கழுத்தில் உள்ள கயிறை பாருங்கள். அதன் நீளம் என்ன தெரியுமா? 14 அடி!

நள்ளிரவு நேரத்தில் இருளில் ஓடிய சண்முகம், ஊரெல்லாம் போலீஸ் தேடிக்கொண்டிருந்த நிலையில், 14 அடி நீள கயிற்றை எங்கிருந்து எடுத்தார்?

சி.பி.ஐ. கூறும் பதில் என்ன தெரியுமா? கிராமப் பகுதிகளில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கயிறு கட்டியிருப்பார்கள். அதையே சண்முகம் கழட்டி வந்திருக்கலாம்” என்பதுதான்!

சண்முகம் போன்ற ஒருவரின் உடலை தாங்கும் அளவுக்கு தடித்த கயிற்றில் துணி காயப்போட எந்த கிராமத்தில் கொடி கட்டுகிறார்கள்?

விசாரணை கைதியான சண்முகத்துக்கு, அன்றிரவு உணவு கொடுத்தது யார்? போலீஸா? சி.பி.ஐ.யா?

இரு தரப்புமே இல்லை.

“சண்முகத்தின் மாமா சீதாராமன் என்பவர் உணவு கொண்டுவந்தார். அவருடன் டாக்சி டிரைவர் தாஸ் என்பவரும் கூட வந்தார். சீதாராமன் எதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, தாஸ் உணவு பரிமாற, சண்முகம் சாப்பிட்டார்.

சண்முகம், சாப்பிடும்போது அனைத்து சி.பி.ஐ., போலீஸ் அதிகாரிகளும் இவர்களை விட்டுவிட்டு மற்றைய அறைக்குள் தூங்க சென்று விட்டார்கள். ஒரேயோரு கான்ஸ்டபிள் காவலுக்கு இருந்தார். அந்த கான்ஸ்டபிளிடம் துப்பாக்கிகூட இல்லை. சண்முகம் தப்பியோடி விட்டார்” என்பதே சி.பி.ஐ.யின் கதை.

நம்ப முடிகிறதா?

இது நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன், சண்முகத்தின் வக்கீல், இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் காவலில் இருந்த சண்முகத்தை பார்க்க வந்தார். சண்முகத்தை பார்க்க அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை சி.பி.ஐ. அதிகாரிகள்.

தடா சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டவரை வக்கீல்கூட சந்திக்க முடியாது என கூறி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அன்று இரவே மாமா சீதாராமன் உணவுடன் வருகிறார். அதை பரிமாற தாஸ் என்றொரு டிரைவர்!

“நீங்க சாவகாசமாக பேசிகிட்டு இருங்க” என்று இவர்களை விட்டுவிட்டு, “குட்நைட்” சொல்லிவிட்டு போய்விட்டார்களாம் சி.பி.ஐ., மற்றும் போலீஸ் அதிகாரிகள்.

“பூ இங்கே.. உங்க காது எங்கே?” என்று சிம்பிளாக கேட்டிருக்கிறது சி.பி.ஐ.

சரி. உண்மையில் சண்முகம் எப்படி இறந்திருக்கலாம்? அதை அடுத்த அத்தியாயத்தில்  பார்க்கலாம்

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s