ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 45

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் சி.பி.ஐ. புலனாய்வு அதிகாரி கூறிய சில ரகசியங்கள்!

கடந்த அத்தியாயத்தை, “உண்மையில் சண்முகம் எப்படி இறந்திருக்கலாம்?” என்ற கேள்வியுடன் முடித்திருந்தோம். இதற்கு சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு கொடுத்த, “தற்கொலை செய்துகொண்டார்” என்ற அதிகாரபூர்வ பதிலை நம்புவது கடினம் என்பதற்கு பல காரணங்களை கொடுத்திருந்தோம்.

இந்த புலனாய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளில் யாராவது ஒருவர், பணியில் இருந்து ஓய்வு பெற்றபின், ஏதோ ஒரு காலத்தில், ஒருவேளை உண்மையில் என்ன நடந்தது என்பதை சொல்லக்கூடும். அதற்குமுன், “உண்மையில் சண்முகம் எப்படி இறந்திருக்கலாம்?” என்பதற்கு ஒரு சாத்தியத்தை பார்க்கலாம்.

கவனியுங்கள். நாம் கூறப்போவது, வெறும் ஊகம், அல்லது சாத்தியம் மட்டுமே. இப்படித்தான் நடந்தது என்று அதில் தொடர்புடையவர்கள் மட்டுமே சொல்ல முடியும். அங்கு நடந்த சம்பவங்களின் பின்னணி, அந்த புலனாய்வில் ஈடுபட்ட சில அதிகாரிகளுடன் பேசியபோது கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஊகம் செய்யப்படுகிறது.

சி.பி.ஐ. என்ன சொல்லியது? “சாப்பிட்டு முடிந்த நிலையில் வெளியே கைகழுவ சென்ற சண்முகம், காவலுக்கு வந்த போலீஸ்காரரை தள்ளிவிட்டு தப்பி ஓடினார். அதன்பின் திரும்ப வந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்” என்றல்லவா கூறியது?

ஒரு விஷயம் தெரியுமா? போலீஸ் பாதுகாப்பில் இருந்து ஒரு கைதி தப்பியோடி, தற்கொலை செய்து கொண்டதாக கூறும் போலீஸ், சம்பவம் நடந்தபோது அங்கிருந்த யார் மீதும் ஆக்ஷன் எடுக்கவில்லை!

ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்கூட சஸ்பென்ட் செய்யப்படவில்லை!

சம்பவம் நடந்த இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் அந்த இரவு நேரத்தில், உயர் போலீஸ் அதிகாரிகள் இருந்தார்கள், சி.பி.ஐ. அதிகாரிகள் இருந்தார்கள், சென்னையில் இருந்து வந்த போலீஸ் மற்றும் இரு லோக்கல் போலீஸ்காரர்கள் இருந்தார்கள். நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை கேஸில், மிக முக்கிய சாட்சியான சண்முகம், இவர்கள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியிருந்தால், துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லையா?

யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதன் அர்த்தம் என்னன்றால், வழக்கில் இவர்கள் குறிப்பிடுவதுபோல, சண்முகம் தப்பி ஓடவே இல்லை.

இரவு உணவுக்குப் பின், சண்முகம் அந்த ட்ரவலர்ஸ் பங்களாவை விட்டு வெளியே போகவே இல்லை என்பதே எமது ஊகம். அதாவது, உயிருடன் வெளியே போகவில்லை!

அன்றிரவு, அவரது உயிர் அந்த ட்ராவலர்ஸ் பங்களாவிலேதான், போயிருக்கலாம். அதன்பின், இறந்த உடலை வெளியே கொண்டுபோய் மரத்தில் தொடங்க விட்டிருக்கலாம்.

“சண்முகம் தப்பியோடினார்” என்ற கதைக்கு அங்கிருந்த யாரையாவது பலிக்கடா ஆக்கி, சஸ்பென்ட் செய்திருந்தால், ஏதோ ஒரு காலத்தில் அந்த நபர் வாயை திறக்கக்கூடும் என்பதால், யார் மீதும் நடவடிக்கை எடுக்காது விட்டிருக்கலாம் என்பது எமது ஊகம்.

சென்னையில் சி.பி.ஐ. பாதுகாப்பில் இருந்த சண்முகத்தை வேதாரண்யத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரு ஹெலிகாப்டரில் அழைத்து வந்தார்கள். இந்த ஹெலிகாப்டர் வந்த நேரத்தில் இருந்து சண்முகத்தின் மாமா சீதாராமன் சி.பி.ஐ. அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தார்.

சில தடவைகள் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கியிருந்த இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு வந்து போனார்.

இந்த சீதாராமனும் சண்முகத்தை போலவே விடுதலைப்புலிகள் ஆதரவாளர்தான். ஆனால் இவருக்கும், சண்முகத்துக்கும் விடுதலைப் புலிகளின் விவகாரத்துக்கு வெளியே வேறு தகராறுகள் இருந்தன. கடத்தல் தொழிலில் வெற்றிகரமான நபராக இருந்த சண்முகம், வேதாரண்யத்தில் ஆட்பலம் கொண்ட செல்வந்தராக இருந்தார். சீதாராமன் வட்டிக்கு பணம் கொடுப்பவராக இருந்தார்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியில் அப்போது பல பொருட்களுக்கு தடை விதித்திருந்தது இலங்கை அரசு. பெட்ரோல், டீசல், சிறிய பேட்டரிகள் (AA, AAA ரகங்கள் உட்பட) குறிப்பிட்ட சில மருந்து வகைகள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருட்களில் அடக்கம். இலங்கை அரசு தடை என்பது, கொழும்புவில் இருந்து இந்த பொருட்கள் வடக்கு மாகாணத்துக்கு போகக்கூடாது என்பதுதான்.

ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்கள் தமிழகத்தின் வேதாரண்யம் பகுதியில் இருந்து படகுகள் மூலம் கடத்தி செல்லப்பட்டு, நடுக்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் படகுகளுக்கு மாற்றப்பட்டு, இலங்கை வடக்கு மாகாணத்துக்கு போய்க்கொண்டு இருந்தன. நடுக்கடல் வரை இந்தப் பொருட்களை கடத்தி வரும் ஆட்களுக்கு விடுதலைப் புலிகள் அதிக பணம் கொடுத்து பொருட்களை வாங்கினர்.

சண்முகத்தின் பிரதான கடத்தல் தொழில் வருமானமே இதுதான்.

வட்டிக்கு பணம் கொடுத்து வந்த சீதாராமனிடம் கடன் வாங்குபவர்கள் அப்பகுதி மீனவர்கள்தான். அவர்களை வைத்து, தாமும் விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை கடத்தி, கடத்தல் தொழிலை செய்ய முயன்றார் சீதாராமன். இதனால் சண்முகத்துக்கும், சீதாராமனுக்கும் விரோதம் இருந்தது.

இந்த பின்னணி உடைய சீதாராமன்தான், சண்முகம் வேதாரண்யத்துக்கு கொண்டு வரப்பட்ட போது அடிக்கடி வந்து சி.பி.ஐ. அதிகாரிகளை சந்தித்துக் கொண்டிருந்தார். சண்முகத்தை அவரது வக்கீலே இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் வந்து சந்திக்க அனுமதி மறுத்த சி.பி.ஐ. அதிகாரிகள், சீதாராமன் சந்திக்க அனுமதித்தார்கள்.

இருவரும் சந்தித்தபோது ஆளையாள் குற்றம் சாட்டி வாய்ச்சண்டை போட்டுக் கொண்டார்கள். கடத்தல் தொழில் செய்யும் தமது ஆட்கள் யார் என்பது பற்றி சண்முகம் போலீஸிடம் போட்டுக் கொடுத்து கைது செய்ய வைத்தார் என்று சீதாராமன் திட்டினார்.

இவர்கள் இருவரும் தமக்கிடையே சண்டை போட்டதில் இருந்து பல விஷயங்கள் தெரிய வந்ததால், அதை சி.பி.ஐ. அதிகாரிகளும் விரும்பினார்கள்.

அதனாலோ, என்னவோ, சம்பவ தினத்தன்று சண்முகத்துக்கான இரவு உணவை கொண்டு வரும்படி மாமன் சீதாராமனிடமே சொல்லி வைத்திருந்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

சண்முகம் இரவு உணவை இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு கொண்டுவந்தபோது நேரம் இரவு 9 மணி. அவர் வந்தபோது தம்முடன் டாக்ஸி டிரைவரான தாஸ் என்பவரையும் அழைத்து வந்தார். இந்த தாஸ் உணவு பரிமாற, சண்முகம் சாப்பிட்டு கொண்டிருந்த போதுகூட, சண்முகத்துக்கும் சீதாராமனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது, அங்கிருந்த அதிகாரிகளில் சிலர் இவர்களை சுற்றி அமர்ந்திருந்தனர்.

சண்முகம் சாப்பிட்டு கை கழுவிய பின்னரும் இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை தொடர்ந்தது என்று தெரியவருகிறது. (அதாவது, சி.பி.ஐ. சொல்வதுபோல கை கழுவியபோது சண்முகம் தப்பி ஓடவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்)

சுமார் 10 மணியளவில், இவர்களது வாய்ச்சண்டை கைகலப்பில் முடிந்தது என்று இந்த புலனாய்வில் தொடர்புடைய ஒருவர் பின்னாட்களில் நமக்கு தெரிவித்தார். இருவரும் தமக்கிடையே சண்டை போட்டு ஆளையாள் அடித்துக்கொள்ள தொடங்கிய உடனேயே, அங்கிருந்த அதிகாரிகள் எழுந்து மற்றொரு ரூமுக்குள் தூங்கச் சென்றார்கள் எனவும், எமக்கு தகவல் கொடுத்தவர் சொன்னார்.

அப்போது சண்முகமும் சீதாராமனும் தரையில் புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். டாக்சி டிரைவர் தாஸூம் சண்முகத்துக்கு சில அடிகளை போட்டார். அதிகாரிகள் அனைவரும் (சரியான தருணத்தில்) அங்கிருந்து அகன்றுவிட, இரண்டு ஆயுதமற்ற போலீஸ்காரர்கள் மட்டும் காவல் இருந்தார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட தகவல்கள், ராஜிவ் படுகொலை புலன்விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளில் ஒருவரால், சம்பவம் நடந்து சில ஆண்டுகளின் பின் சென்னையில் வைத்து எமக்கு கூறப்பட்டது. அப்போது எம்முடன் இந்திய உளவுத்துறை ‘ரா’வின் அதிகாரி ஒருவரும் சந்திப்பு நடந்த வீட்டில் இருந்தார்.

இந்த தகவல்களை புலனாய்வு அதிகாரி தெரிவித்தபோது, ரா அதிகாரி ஆச்சரியம் அடையவுமில்லை, கேள்வி ஏதும் கேட்கவுமில்லை.. லேசான சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதிலிருந்து ‘இந்த விவகாரம்’ உளவுத்துறை ‘ரா’வுக்கு ஏற்கனவே தெரியும் என்பது எமது ஊகம். அப்போது அந்த இடத்தில் இருந்த ரா அதிகாரி, இப்போது டில்லியில் ரா அமைப்பின் உயர் அதிகாரிகளில் ஒருவராக உள்ளார்.

வேதாரண்யம் இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் போலீஸ் (மற்றும் சி.பி.ஐ.யின்) பாதுகாப்பில் இருந்த சண்முகமும் சீதாராமனும் தரையில் கட்டிப்புரண்டு சண்டை போட, அதிகாரிகள் அங்கிருந்து அகன்ற போது இரவு 10 மணி என்று சொன்னோம் அல்லவா? அதன்பின் சிறிது நேரத்தில் சண்முகம் உயிரிழந்தார்.

தொங்கிய நிலையில் சண்முகத்தின் உடல்.

அதிகாலை நேரத்தில், வேதாரண்யம் இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு வெளியே இருந்த மரம் ஒன்றில் சண்முகத்தின் உடல் கயிறு ஒன்று கழுத்தில் கட்டப்பட்ட நிலையில் தொங்கியது. அவரது உடலின் கீழ் லுங்கி ஒன்று தரையில் வீழ்ந்திருந்தது. கயிற்றின் நீளம் 14 அடி!

இந்த காட்சிக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் கொடுத்த விளக்கம்:

“கிராமப் பகுதிகளில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கயிறு கட்டியிருப்பார்கள். அதையே சண்முகம் கழட்டி வந்திருக்கலாம். சண்முகம் தப்பியோடும்போது தமது வேட்டியை கழட்டி எறிந்து விட்டு ஓடியிருந்தார். அதன்பின், துணி காயப்போடும் கயிற்றை கழட்டியபோது அந்த கயிற்றில் காயப்போட்டிருந்த லுங்கி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு தற்கொலை செய்ய வந்திருக்கலாம். தற்கொலை செய்தபோது கால்களை உதைத்ததில், அந்த லுங்கி கழன்று அவரது காலடியே தரையில் வீழ்ந்திருக்கலாம்”

சம்பவம் நடந்து சில ஆண்டுகளின் பின் சென்னையில் நாம் சந்தித்த புலனாய்வு அதிகாரியிடம் சி.பி.ஐ.யின் இந்த ஸ்டேட்மென் குறித்து கூறியபோது, அவர் லேசாக சிரித்தார். அதன்பின் அவர் கூறியது:

“அந்த 14 அடி கயிறு, இறந்த சண்முகத்தில் உடலை தாங்கியிருக்கலாம். ஆனால், அதில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முடியாது. தூக்கில் தொங்கும்போது கைகளால்கள் உதைக்க, உடல் துடிக்கும். அந்த இழுவையை இந்த கயிறு தாங்காது. அறுந்து விழுந்திருக்கும்.

மற்றொரு விஷயம், போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவரின் உடலில் இருக்கும் செயின், வாட்ச், மோதிரம் எல்லாவற்றையும் அகற்றி, பதிவு செய்து பத்திரப்படுத்தி வைத்துவிடுவார்கள். இறந்துபோன சண்முகத்தின் தூக்கில் தொங்கிய உடலில் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? அவரது கையில் வாட்ச் கட்டப்பட்டு இருந்தது. (போட்டோ பார்க்கவும்)

கடைசி நேர பதட்டத்தில் கழட்ட மறந்து விட்டார்கள்.

மறுநாள் காலை கயிற்றில் இருந்து இறக்கப்பட்ட சண்முகத்தின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அனுப்பப்பட்டது. சென்னையில் இருந்து விசாரணைக்காக ஹெலிகாப்டரில் வேதாரண்யம் கொண்டுவரப்பட்ட சண்முகம் இறந்தபின் அவரது உடல் போஸ்ட்மார்ட்டத்துக்காக சென்னைக்கு அல்லவா அனுப்பப்பட்டிருக்க வேண்டும்? சென்னையில்தானே வசதிகள் அதிகம்?

ஆனால், அப்படி நடக்கவில்லை.

போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக சண்முகத்தின் உடலை நாகபட்டினம் அனுப்பினார்கள். போஸ்ட்மார்ட்டம் முடிந்த உடனேயே, உடல் சண்முகத்தின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு எரிக்கப்பட்டது. ராஜிவ் கொலை போன்ற சென்சிட்டிவ்வான வழக்கில் முக்கிய சாட்சியான ஒருவரின் உடலை இவ்வளவு அவசரகதியில் எரிக்க அனுமதி கொடுப்பது அசாதாரணமானது” என்று எம்மிடம் கூறிய அந்த அதிகாரி இறுதியாக கூறிய மற்றொரு விஷயம்-

“தூக்கில் தொங்கிய சண்முகத்தில் உடலின் கீழ் லுங்கி ஒன்று தரையில் விழுந்து கிடந்ததாக கூறினீர்களே… துணி காயப்போடும் கயிற்றில் இருந்து சண்முகம் எடுத்து அணிந்து கொண்டு, தற்கொலை செய்ததாக சி.பி.ஐ. ஸ்டேட்மென்டில் குறிப்பிடப்பட்ட அந்த லுங்கி யாருடையது தெரியுமா?

மாமன் சீதாராமனுடன் இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு வந்த டாக்ஸி டிரைவர் தாஸின் லுங்கி”

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s