அம்மு முதல் அம்மா வரை : பகுதி 3

‘அம்மு’வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ”ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3)

அம்மு.

ரங்கசாமி ஐயங்காருக்குச் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். பிழைப்புக்காக ஆந்திராவில் உள்ள நெல்லூருக்குச் சென்றவர் , அங்கேயே தங்கிவிட்டார்.

அடுத்தடுத்து மூன்று பெண்களைப் பெற்றுவிட்டு , ஏகப்பட்ட மன உளைச்சலோடு இருந்தவருக்கு நாற்பது வயதில் ஒரு நல்ல செய்தி வந்தது.

அது , பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் கிடைத்த குமாஸ்தா வேலை. இதுதான் அந்தக் குடும்பத்துக்கே ஒரு திருப்புமுனை. வேதா , அம்புஜா , பத்மா மூன்று பெண்களும் சரி , மூத்த பையன் ஸ்ரீநிவாசனும் சரி , அப்பா பேச்சைத் தட்டாத பிள்ளைகள்.

படித்து முடித்ததும் எச்.ஏ.எல். ஃபேக்டரியில் ஸ்ரீநிவாசன் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர் அந்தக் குடும்பத்துக்கு ஓரளவு வசதி வர ஆரம்பித்தது.

வேதாவுக்குப் பத்து வயது இருக்கும்போது அந்த வரன் வந்தது. மைசூரிலேயே பிரபல டாக்டர் ரங்காச்சாரி வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள்.

அப்போது வேதா , பெங்களூரில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இன்னும் திருமண வயதுக்கு வராத பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்க ரங்கசாமிக்கு இஷ்டமேயில்லை.

ஆனால் , தேடி வந்த அதிர்ஷ்டத்தையும் விடமுடியவில்லை. மூன்று பெண்களைப் பெற்ற ஏழை குமாஸ்தா என்ன முடிவெடுப்பாரோ , அதைத்தான் ரங்கசாமியும் எடுத்தார்.

ஒரு நல்ல நாளில் வேதா , ரங்கச்சாரி குடும்பத்து மருமகளானார்.

சாண்டலியர்ஸ் விளக்குகளும் , சிப்பெண்டேல் ஃபர்னிச்சர்களும் நிறைந்த அந்த மினி அரண்மனைக்குப் பெயர் ஜெயவிலாஸ்.

வீட்டைச் சுற்றி ஏக்கர் கணக்கில் பழத் தோட்டம். கைதட்டினால் முன்னால் வந்து கைகட்டி நிற்கும் வேலைக்காரர்கள்.

எடுக்க ஒரு ஆள். பிடிக்க ஒரு ஆள். அப்படிப்பட்ட பணக்காரக் குடும்பத்துக்குத்தான் மருமகளாக ஆகியிருந்தார் வேதா.

மாமியார் இல்லை. இறந்துவிட்டிருந்தார். தழையத் தழையப் பட்டுப் புடைவை கட்டிக்கொண்டு நாள் முழுக்க வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவதுதான் வேதாவின் ஒரே பொழுதுபோக்கு.

மைசூரில் டாக்டர் ரங்காச்சாரியின் குடும்பத்தைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மைசூர் மகாராஜா கிருஷ்ண ராஜேந்திர உடையாருக்கு நெருக்கமான குடும்பம்.

ராஜாவுக்குக் குடும்ப டாக்டர் என்பதால் மைசூரின் வி.ஐ.பி. லிஸ்ட்டில் ரங்கச்சாரியும் ஒருவர்.

மைசூர் , பெங்களூர் , ஊட்டி என கண்ணுக்கெட்டிய தூரம் முழுதும் ஏகப்பட்ட சொத்துகள் கணக்கு வழக்கில்லாமல் இருந்ததால் , வீட்டில் பணத்துக்கும் பகட்டுக்கும் குறைவே இருந்ததில்லை.

ரங்காச்சாரிக்குத் தன்னுடைய மகனைப் பற்றித்தான் கவலை. ஜெயராமன் , பி.ஏ. படித்திருந்தார். ஆனால் பொறுப்பு கிடையாது.

சும்மா சுற்றிக்கொண்டிருந்த பணக்கார வீட்டுப் பிள்ளை. திருமணத்துக்குப் பின் திருந்திவிட வாய்ப்புண்டு என்று அவரது தந்தை நினைத்தார்.

ஆனால் , குடி , சூதாட்டம் என்றிருந்த ஜெயராமனின் வாழ்க்கையில் திருமணம் எந்தத் திருப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. மகனைப் பற்றி நினைத்து , நினைத்து ரங்காச்சாரி படுத்த படுக்கையாகிப் போனார்.

பதிமூன்று வயதில் வேதாவுக்கு முதல் குழந்தை பிறந்தது. துறுதுறுவென்று இருந்த பேரனைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளியெழுந்தது தாத்தாதான்.

பேரனின் பெயர் சூட்டு விழா மைசூரில் தடபுடலாக நடந்தது. கொஞ்ச நாட்கள் பேரனைக் கொஞ்சி விட்டு , அவன் பெயரில் இரண்டு பங்களாக்களை எழுதி வைத்துவிட்டு , ரங்காச்சாரி சந்தோஷமாகவே இறந்து போனார்.

jeya 'அம்மு'வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ''ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3) jeya1948, பிப்ரவரி 24. மைசூர். ஜெயராமனுக்கு அடுத்த குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. கருகருவென்ற தலைமுடி , தட்டையான மூக்குடன் செக்கச் செவேல் என்று கொலு பொம்மை மாதிரி இருந்த அந்தப் பெண் குழந்தைக்கு கோமளவல்லி என்று பெயரிட்டாலும் வீட்டில் அம்மு என்றுதான் கூப்பிட்டார்கள்.

அந்தக் குறுகுறு கண்களையும் , உப்பலான கன்னங்களையும் பார்த்தவர்களில் பாதிப் பேர் கன்னத்தைக் கிள்ளாமல் போக மாட்டார்கள்.

இரண்டு வயதான அண்ணன் பப்புவுக்குத் தங்கச்சிப் பாப்பாவை ரொம்பவே பிடித்திருந்தது.

சாயந்திரமானால் அம்முவுக்கு பவுடர் அடித்து , மை தீட்டி , ஸ்வெட்டர் மாட்டி , தள்ளுவண்டியில் உட்கார வைத்து , தள்ளிக்கொண்டே வாக்கிங் போவது பப்புவுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் ஜெயராமனின் வாழ்க்கையில் எந்த மாற்றமுமில்லை. வெளியில் அலைவது கொஞ்சம் குறைந்திருந்தது.

ரங்காச்சாரியின் மறைவுக்குப் பின்னர் வீட்டின் முன் ஹால் , பாராக மாறியிருந்தது. போதை தலைக்கேறியதும் ஜெயராமனும் வேதாவும் சண்டை போட்டுக் கொள்வது  அந்த வீட்டில் சகஜமான விஷயம்.

ஏகப்பட்ட பிரச்னைகள். மனக்கஷ்டம் முக்கியம். குறிப்பாக , வேதாவுக்கும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும். ரங்காச்சாரியின் சொத்தெல்லாம் கரைய ஆரம்பித்திருந்தது.

நாற்பது வயது வரை எதற்கும் கஷ்டப்படாமல் இஷ்டம் போல் இருந்த ஜெயராமனுக்கு அப்போதுதான் யதார்த்தம் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கை மிகவும் வலித்தது.

ஜெயராமனுக்கு அம்மு மீது தனிப்பாசம். அம்முவுக்கும் அப்பாவை மிகவும் பிடிக்கும். ஜெயராமனுக்குச் சோதிடத்தில் நம்பிக்கை அதிகம்.

14-1426334179-1thingsaboutjayalalithathatyoumighthaveneverknown 'அம்மு'வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ''ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3) 14 1426334179 1thingsaboutjayalalithathatyoumighthaveneverknownஅம்முவுக்கு ஒரு வயதானபோது ஜாதகம் கணித்துவிட்டு சந்தோஷப்பட்டார். அம்மு படித்துவிட்டு ஐ.ஏ.ஏஸ். ஆபீஸராக , ஒரு விஜயலட்சுமி பண்டிட்போல வரவேண்டும் என்பதுதான் அவரது ஆசை.

ஜெயராமனுக்கு அடிப்படையில் சினிமா என்றாலே பிடிக்காது! இது ஒருபுறமிருக்க , பெரும் பணக்காரக் குடும்பமாக இருந்த அவர்களது குடும்பம் , நடுத்தரக் குடும்பமாகிக்கொண்டிருந்த நேரம் அது.

சொல்லிக்கொள்ளும்படியான பண வரவு இல்லை. ஆனால் சொல்லிப் புலம்பும்படியான செலவு மட்டும் ஏறிக்கொண்டே போனது. குடும்பத்தைக் காப்பாற்ற , எங்கேயாவது போய் கைகட்டி வேலை பார்க்க ஜெயராமனுக்குக் கூச்சம்.

விடமுடியாத விஸ்கி பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அவரை விழுங்கிக்கொண்டிருந்தது. சொத்து கிடைக்காத அதிருப்தியில் ஜெயராமனின் உடன்பிறப்புகள் நீதிமன்றத்துக்குப் போனார்கள்.

இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற , தான் வேலைக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை வேதாவும் புரிந்துகொண்டார்.

மதிய நேரத்தில் அம்முவையும் பப்புவையும் தூங்க வைத்துவிட்டு சுருக்கெழுத்து , டைப்ரைட்டிங் வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தார். 1950. அம்முவுக்கு அப்போது ஒன்றரை வயதிருக்கும். வேதாவுக்கு உடம்பு சரியில்லை.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மனைவியைப் பார்க்க ஜெயராமன் மைசூரிலிருந்து வந்திருந்தார். அம்முவை தூக்கி ரொம்ப நேரம் கொஞ்சிக்கொண்டிருந்தவர் , அம்முவுக்குப் பிடித்தமான பொம்மை வாங்கி வருவதாக கிளம்பினார்.

அப்போது போனவர்தான் திரும்பி வரவேயில்லை. மைசூர் வீட்டில் மர்மமான முறையில் விழுந்து கிடந்த ஜெயராமனை மறுநாள் பிணமாகத்தான் பார்க்க முடிந்தது.

கதவை உடைத்து ஜெயராமனின் உடலை ஸ்டிரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். ஜெயராமின் மரணத்துக்குக் காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதாவதா என்பது நீண்ட நாள் மர்மமாகவே இருந்தது.

பப்புவின் பெயரில் ரங்காச்சாரி எழுதி வைத்த வீட்டைத் தவிர , வேறு எதுவுமே வேதாவுக்குக் கிடைக்கவில்லை. குழந்தை குட்டிகளோடு பெங்களூரிலிருந்த தன் தாய் வீட்டுக்கே வந்து தங்கிவிட்டார் வேதா.

ஒரு நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பம் எப்படியிருக்குமோ , அப்படித்தான் அம்முவின் பாட்டி வீடும் இருந்தது. மிகவும் ஆசாரமான குடும்பம்.

அதிகாலை நாலு மணிக்கே வீடு பரபரப்பாகிவிடும். பூஜை புனஸ்காரங்களெல்லாம் முடித்துவிட்டு , ரங்கசாமி ஐயங்கார் சாப்பிட உட்காரும்போது , ஆறரை மணியாகிவிடும். அதற்குள் சாம்பார் , ரசம் , பொரியல் , கூட்டு சகிதம் முழுச் சாப்பாடு தயாராகியிருக்க வேண்டும். அம்முவும் தாத்தாவோடு கூடவே எழுந்து , குளித்துவிட்டு சாப்பிட உட்கார்ந்துவிடுவாள்.

தாத்தா சாப்பிட்டு முடிந்ததும் வாசல் வரை போய் அவருக்கு டாட்டா காட்டிவிட்டுத் திரும்பவும் , மாமாவுடன் உட்கார்ந்து , விட்டதைத் தொடருவாள்.

மாமாவுக்கு ஒரு டாட்டா. அடுத்து , சித்தி பத்மாவோடு. சித்திக்கும் அதே டாட்டா. கடைசியாக அம்முவின் அம்மா.

ஆறரைக்குச் சாப்பிட ஆரம்பித்த அம்மு , காலைச் சிற்றுண்டியை முடிப்பதற்குள் மணி எட்டைத் தாண்டியிருக்கும். பிறந்த வீட்டில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்றுதான் வேதா வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தார்.

வருமானவரி அலுவலகத்தில் ஒரு செயலாளர் வேலை. கூடப் பிறந்தவர்கள் எல்லாம் கல்யாண வயதில் இருந்தார்கள். எதற்காகவும் வீட்டையே நம்பியிருக்க முடியாது.

வேதாவின் கவலையெல்லாம் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமே என்பதுதான். பக்கத்திலிருந்த கிண்டர் கார்டன் ஸ்கூலில் அம்மு சேர்க்கப்பட்டாள்.

பன்னிரண்டு மணி வரை பள்ளி உண்டு. நாலு நாள் அழுகை , ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் அந்தப் பள்ளி அம்முவுக்குப் பிடித்துவிட்டது. வேதாவின் இரண்டாவது தங்கை அம்புஜா , சென்னையில் விமானப் பணிப் பெண்ணாக இருந்தார்.

எப்போதாவது விடுமுறைக்கு பெங்களூருக்கு வரும் அம்புஜாவை அம்முவுக்கு மிகவும் பிடிக்கும். பஞ்சு பொம்மை மாதிரி இருப்பதால் அம்முவையும் அம்புஜாவுக்கும் நிறைய பிடிக்கும்.

அம்புஜா , வேதாவுக்கு நேரெதிராக இருப்பார். தலையை பாப் வெட்டி , குட்டைப் பாவாடை , இறுக்கமான பிளவுஸ் , உயரமான குதிகால் செருப்பு சகிதம் படு நவீனமாக இருப்பார்.

ஒரு தடவை பெங்களூர் ஏர்போர்ட்டில் மேக்கப் ரூமில் இருந்த சித்தியை எட்டிப் பார்த்துவிட்டு அம்மு கத்தினாராம். ‘ ஐயோ .. அம்மா… இங்கே வாயேன்.

சித்தி வாயில நெருப்பு இருக்குதும்மா… வாயிலயிருந்து ஏதோ புகை , புகையா வருதும்மா! ’ அப்போது அம்முவுக்கு நான்கு வயது.

நெற்றியில் தாராளமாகப் புரளும் முடி , நீளமான ஸ்டிக்கர் பொட்டு , காதில் ஜிமிக்கி , மை தீட்டிய பெரிய கண்கள் , கொழுகொழு கன்னங்கள்.

அப்படித்தான் இருந்தார் அம்மு. யார் என்ன கேட்டாலும் அம்முவிடமிருந்து பதிலே வராது. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு எப்போதும் உர்ரென்றுதான் இருப்பார்.

ஆனால் , சிரித்தாலும் முறைத்தாலும் குழந்தை அம்மு எப்போதும் அழகுதான். அதை எல்லோரும் ரசித்தார்கள். விரும்பினார்கள்.

லீவு கிடைத்தால் அம்புஜா சித்தி , அம்முவை அள்ளிக்கொண்டு சென்னைக்கு வந்துவிடுவார். அம்முவுக்கு அரை பிளேட் சாக்லேட் இருந்தாலே போதும். உலகமே மறந்துவிடும்.

ஒரே நாளில் ஒரு டஜன் டிரெஸ் மாற்றிக்கொண்டு சித்தியோடு சேர்ந்து பீச் , சினிமா , ஹோட்டல் என்று ஊர் சுற்றியாக வேண்டும். ஒவ்வொரு தடவை சென்னைக்கு வரும் போதும் ஒரு டஜன் புது டிரெஸ் அம்முவுக்கு நிச்சயம்.

வீட்டில் அம்முதான் எல்லோருக்கும் செல்லம். வீட்டுக்கு வெளியேயும் சரி , தாத்தா ராமசாமி ஐயங்கார் புலிதான்.

எல்லோருமே பயப்படுவார்கள் , பேரன் , பேத்திகள் உள்பட. ஆனால் , அம்முவுக்கு அந்தப் பயமெல்லாம் கிடையாது. தாத்தாவுக்குப் பரிசாக வந்த அந்த டயரி மேல் அம்முவுக்கு ஒரு கண்.

தோலினால் பைண்ட் செய்யப்பட்ட அந்த டயரியை பீரோவில் யார் கையும் படாமல் வைத்திருந்தார். ஒரு தடவை தாத்தா பீரோவைப் பூட்ட மறந்து வெளியே போனது , அம்முவுக்கு வசதியாகிவிட்டது.

வெள்ளை வெளேரென்று வழுவழுப்பாக இருந்த அந்த டைரி அம்முவுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதில் ஏதாவது எழுத நினைத்தார்.

பீரோவுக்கு அடியில் கையைவிட்டுத் துழாவியதில் உடைந்து போன பென்ஸில் சிக்கியது. அதை வைத்து படு உற்சாகமாக டைரி எழுத ஆரம்பித்தார். வீடு திரும்பிய தாத்தா வீட்டையே சல்லடை போட்டு டைரியைத் தேடிக் கொண்டிருந்தார்.

டைரி கிடைக்காத ஆத்திரத்தில் தாத்தா போட்ட சத்தத்தில் வீடே அதிர்ந்தது. கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த அம்மு , சத்தத்தைக் கேட்டு உள்ளே வந்தார் , கையில் டைரியோடு.

‘ என்ன தாத்தா ? டைரியா , நானே டைரி தெகுத்து கொண்டித்து ’. அப்போதெல்லாம் அம்முவின் பேச்சில் பாதி தமிழ் , பாதி கன்னடம்தான். ‘ நீதான் எடுத்தியா ? எதுக்கு எடுத்தே ?’

‘ இதுல எய்தினேன் தாத்தா! ’

அம்முவிடம் கெஞ்சி நைஸாக டைரியை வாங்கி புரட்டிப் பார்த்த தாத்தாவுக்கு அதிர்ச்சி. ஆனாலும் , சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

டைரியின் முதல் பக்கத்தில் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை அங்கிங்கெனாதபடி எங்கும் பூஜ்ஜிய பகவான்.

ஏர்ஹோஸ்டஸ் சித்தி அம்புஜாவுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. தெலுங்கு நடிகர் நாகையாவின் சொந்தப் படமான ‘ என் வீடு ’ படத்தில் கதாநாயகி. அம்புஜா , சினிமாவுக்காக வித்யாவதியாகப் பெயரை மாற்றிக் கொண்டார்.

அடுத்தடுத்து வந்த படவாய்ப்புகளால் வித்யாவதி பிஸியாகிவிடவே , அவருக்குத் துணையாக இருக்க வந்த வேதாவுக்கும் சென்னை ரொம்பவே பிடித்துவிட்டது.

வந்த ஒரு வாரத்திலேயே பப்புவையும் அம்முவையும் ஹோலி ஏஞ்சல்ஸ் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். வேதாவுக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசையும் வந்திருந்தது.

வித்யாவதியைத் தனது படத்துக்காக ஒப்பந்தம் செய்ய வந்த கன்னட தயாரிப்பாளர் கெம்பராஜ் அர்ஸ் , ‘ கற்கோட்டை ’ படத்தில் வேதாவுக்கும் ஒரு சின்ன பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

jeya-2 'அம்மு'வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ''ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3) jeya 2சினிமாவுக்காக வேதாவின் பெயர் சந்தியா ஆனது. வருமானவரி அலுவலக வேலையைவிட சினிமாவில் அதிக சம்பளம் கிடைத்தது.

சின்ன வயதில் தனக்குக் கிடைக்காத வசதி , வாய்ப்பெல்லாம் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று சந்தியா நினைத்தார். நினைத்ததை முடிக்க சினிமாதான் உதவி செய்தது. படிப்பு மட்டுமல்ல , மற்ற விஷயங்களிலும் பிள்ளைகள் கெட்டிக்காரர்களாக இருக்க வேண்டுமென்று நினைத்தார் சந்தியா.

அம்முவுக்கு ஐந்து வயதானபோது நாட்டியம் கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார். தனது மகளை பெரிய நாட்டியக் கலைஞராகப் பார்க்க அவருக்கு ஆசை. ஆனால் , அம்முவுக்கோ அதில் இஷ்டமில்லை.

சின்ன வயதிலிருந்தே அம்மு யாருக்கும் பயந்ததில்லை. பிடிவாதம் , அம்முவின் கூடவே பிறந்தது. அதட்டல் , உருட்டல் , மிரட்டலுக்கெல்லாம் அம்மு என்றுமே பயந்ததில்லை.

முரட்டு மீசையும் , வறட்டுக் குரலுமாக இருந்த அந்த டான்ஸ் மாஸ்டரை ஆரம்பத்திலிருந்தே அம்முவுக்குப் பிடிக்கவில்லை. டான்ஸ் மாஸ்டருக்கு அம்முவைவிட முன்கோபம் அதிகம்.

மாஸ்டர் பிடிக்காமல் போனதால் டான்ஸே அம்முவுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அம்முவுக்குப் பிடிக்காததை அவரது அம்மா செய்ததேயில்லை. நாட்டிய வகுப்புக்கு இடைவேளை போட்டுவிட்டார்.

அப்போது அடையாறு காந்திநகரின் நான்காவது மெயின் ரோட்டில் ஒரு வாடகை வீட்டில்தான் குடியிருந்தது சந்தியாவின் குடும்பம். பெங்களூரில் இருந்தவரை பப்புவும் அம்முவுதான் கிரிக்கெட் விளையாடுவார்கள்.

அம்முவை விட்டால் பப்புவுக்கு வேறு வழியில்லை. அம்முவும் ரொம்ப பிகு பண்ணிக்கொண்டுதான் ஆட்டத்துக்கு வருவாள். ஆடும்போது ஒரு தடவையாவது அம்மு ஜெயித்தாக வேண்டும்.

இல்லாவிட்டால் , ஆட்டம் எந்தக் காரணமும் இல்லாமல் நிறுத்தப்படும். பப்புவுக்கு இதுவொரு பெரிய பிரச்னையாக இருந்தது. எத்தனை நாள்தான் அம்முவுக்காகத் தோற்பது போலவே நடிப்பது ? சென்னைக்கு வந்தபின்பு பப்புவுக்கு ஏகப்பட்ட புது நண்பர்கள்.

அம்முவைக் கண்டுகொள்வதே இல்லை. வலியப் போய் விளையாட சான்ஸ் கேட்டாலும் ‘ பொம்பளை பிள்ளைக்கு கிரிக்கெட் என்ன வேண்டிக்கிடக்கு ?’ என்று கிண்டல் வேறு.

அம்முவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு வாசல்படியில் அழுது கொண்டிருந்த அம்முவின் மூக்கை விர்ரென்று தாக்கியது அந்தப் பந்து.

பாபு அடித்த சிக்ஸரால் அம்முவின் மூக்கு உடைந்தது. அந்த கிரிக்கெட் மட்டையை பப்பு அதற்கு பின்னர் கையிலெடுக்கவே முடியவில்லை.

எதுவாக இருந்தாலும் தைரியமாகக் களத்தில் இறங்கி ஒரு கை பார்த்துவிடுவதுதான் அம்முவின் பழக்கம். கொஞ்சம்கூட யோசிக்கவே மாட்டார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நல்ல ராகு கால நேரத்தில் சித்தியின் அறையிலிருந்த டேபிள் ஃபேன் அம்முவின் கண்ணில் பட்டது. ஸ்விட்சைப் போட்ட வேகத்தில் வரும் கிர்கிர் சத்தம். அம்முவுக்கு ஆச்சரியம்.

‘ ஃபேன் சுற்றுவதைத் தடுத்தால் அந்தச் சத்தம் வருமா ?’ என்று ஆராய்ந்து பார்க்க முடிவு செய்துவிட்டாள். ஃபேனுக்கும் கம்பிக்கும் இடையே கையை விட , ரத்தக் களறியான விரலில் நாலு தையல் போட வேண்டியிருந்தது.

எப்போதும் இப்படித் துறுதுறுவென்று இருக்கும் வால் குழந்தையை எப்படிச் சமாளிப்பது ? சந்தியாவால் முடியவில்லை. அக்கா , தங்கை இரண்டு பேருமே சினிமாவில் பயங்கர பிஸி.

எனவே அம்முவையும் பப்புவையும் திரும்பவும் பெங்களூருக்கு அனுப்பி வைத்துவிட்டார். பெங்களுரின் இதயப் பகுதியிலிருக்கும் பிஷப் கார்டன் மேல்நிலைப் பள்ளிக்கு அம்மு படிக்கப் போனாள்.

பெங்களூரில் இருந்த வரைக்கும் அம்முவை அக்கறையோடு பார்த்துக்கொண்டவர் பத்மா சித்திதான். லீவு விட்டால் அம்மாவைப் பார்க்க சென்னைக்கு வந்துவிடுவாள் அம்மு.

jeya-3 'அம்மு'வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ''ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3) jeya 3படப்பிடிப்பு இல்லாத நாள்களில் சந்தியாவே பெங்களூருக்கு வந்துவிடுவார். சந்தியா காரை எடுத்துக்கொண்டு பெங்களூருக்கு வந்துவிட்டால் அம்முவுக்கு ஒரே குஷிதான்.

அம்மாவுடன் பள்ளிக்கு காரில்தான் போவாள். தன்னுடன் படிக்கும் மாணவிகள் எல்லாம் , அம்மு காரில் வந்து இறங்குவதைக் கவனித்தாக வேண்டும்.

தப்பித் தவறி மற்ற மாணவிகள் வரும் முன்பே பள்ளிக்கு காரில் போய் இறங்கிவிட்டால் , அவர்கள் எல்லோரும் வரும் வரை ஒரு காலை காருக்குள்ளேயும் இன்னொரு காலை தரையிலும் வைத்து அம்மாவுக்கு டாட்டா சொல்லியே நேரத்தைக் கடத்துவார். ‘

சினிமாவில் நான் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான் ’ என்று எல்லா நடிகைகளும் பத்திரிகை பேட்டிகளில் சொல்வது வழக்கம்.

ஆனால் , அம்முவின் வாழ்க்கையில் அதுதான் நிஜம். ஒரு முறை விடுமுறைக்குச் சென்னை வந்திருந்தாள் அம்மு.

ஒரு கன்னடப் படப்பிடிப்பில் இருந்த அம்மாவுக்காக வீட்டில் காத்திருந்து வெறுத்துப் போனாள். அம்மாவைத் தேடி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்துக்கே போய்விட்டாள்.

அன்றைக்குப் படத்தில் குட்டி பார்வதியாக நடிக்க வேண்டிய குழந்தை நட்சத்திரத்துக்கு மூடு சரியில்லை. ஒருஅவசரத்துக்கு அம்முவுக்கு மேக்கப் போட்டு குட்டி பார்வதியாக்கிவிட்டார்கள்.

‘ ஸ்ரீசைல மகாத்மியம் ’ என்கிற அந்த கன்னடப் படத்தில் நடித்ததைக் கொஞ்ச நாளில் ஒரு குட்டிக்கனவுபோல மறந்துவிட்டாள் அம்மு.

அம்முவுக்கு காமிக்ஸ் புத்தகம் இருந்தால் போதும். சென்னையிலிருந்து சந்தியா வரும்போதெல்லாம் டஜன் கணக்கில் காமிக்ஸ் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வருவார்.

எல்லாமே ஆங்கிலம்தான். அதையெல்லாம் அம்மு ஒரே நாளில் படித்து தள்ளிவிடுவாள். நினைவு தெரிந்து அவர் ரசித்துப் படித்த முதல் தமிழ் புத்தகம் , ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன்.

பெங்களூரில் பள்ளியை விட்டு வந்தால் , பத்மா சித்தியுடன் ஒரே கும்மாளம்தான். இந்திப் பாட்டெல்லாம் ரொம்பவே இஷ்டம். இதெல்லாம் தாத்தா ஆபீஸிலிருந்து வரும் வரைதான்.

தாத்தா தெருமுனையைத் தாண்டி வீட்டுக்குள் வருவதற்குள் ரேடியோ உயிரை விட்டிருக்கும். வீட்டுக்குள் வந்ததும் தாத்தா அந்தக் காலத்து கஞ்சிராவை எடுத்துத் தாளம் போட்டவாறே ராகத்தோடு பாடுவார்.

இன்னொரு பக்கம் பாட்டி ஸ்லோகம் சொல்ல ஆரம்பிப்பார். அம்முவுக்குத் தப்பிக்க வழியே இருக்காது. ‘ ஸ்ரீசைல மகாத்மியம் ’ படத்தைத் தொடர்ந்து இன்னொரு வாய்ப்பு.

‘ ஸ்த்ரீ ரத்னா ’ என்கிற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரத்துக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள். அம்முவுக்கு அந்தப் படத்தில் நடிக்கப் பிடிக்கவில்லை.

வேண்டவே வேண்டாமென்று சொல்லிவிட்டாள். அம்முவுக்குப் பதிலாக பப்பு நடிக்க வேண்டியிருந்தது. பப்பு நடித்த ஒரே படமும் அதுதான். அம்முவுக்குப் பத்து வயதானபோது , பத்மா சித்திக்குத் திருமணம் ஆனது.

குழந்தைகளோடு அம்மா ,அப்பா மட்டும் எதற்காக பெங்களூரில் தனியாக இருக்கவேண்டும் என்று நினைத்த சந்தியா , எல்லோரையும் சென்னைக்கே வரச் சொல்லிவிட்டார்.

அம்மு , சர்ச் பார்க் கான்வெண்டில் சேர்க்கப்பட்டாள். எப்போதும் அம்மா கூடவே இருக்கலாமே என்கிற குஷியோடு வந்த அம்முவுக்கு படு ஏமாற்றம். சந்தியா படப்பிடிப்பில் படுபிஸியாக இருந்தார்.

அம்மு எழுவதற்கு முன்னாலே படப்பிடிப்புக்குக் கிளம்பிவிடுவார். திரும்பி வரும்போது அம்மு தூங்கிப் போயிருப்பாள்.

14-1426334184-2thingsaboutjayalalithathatyoumighthaveneverknown 'அம்மு'வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ''ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3) 14 1426334184 2thingsaboutjayalalithathatyoumighthaveneverknown1960, மே மாதம். மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபா. அம்முவின் நாட்டிய அரங்கேற்றம். அப்போது அம்முவுக்கு வயது பன்னிரெண்டு.

நடிகை வீட்டு விசேஷம் என்பதால் பாராட்டிப் பேச ஏகப்பட்ட சினிமாப் பிரபலங்கள் வந்திருந்தார்கள். விழாவுக்குத் தலைமையேற்றது சிவாஜி கணேசன்.

அம்முவை தங்கச்சிலை என்று பாராட்டிப் பேசியவர் , ‘ பிற்காலத்தில் அம்மு சினிமாவில் நடிக்க வரணும். நிச்சயம் வருவாள்.

வந்து பெரிய நடிகை என்கிற பெயரெடுப்பாள் ’ என்று வாழ்த்தினார். சிவாஜி சொன்னது நான்கே ஆண்டுகளுக்குள் நடந்துவிட்டது.

சினிமாத் தொழிலில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் சந்தியாவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. என்னதான் அம்முவுக்கு அழகு , திறமை இருந்தாலும் சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம்.

தான் ஒருத்தி நடிப்பதே போதும் என்பதில் சந்தியா தெளிவாக இருந்தார். படித்துவிட்டு பெரிய வக்கீலாக வரவேண்டும் என்றுதான் அம்முவுக்கும் ஆசை.

சினிமாவுக்கு வருவது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் புரிந்து கொண்டார். அம்மாவுக்குப் பிடிக்காத எதையும் அம்மு செய்ததில்லை.

அப்போது தியாகராய நகர் மாசிலாமணி தெருவில்தான் சந்தியாவின் வீடு. சர்ச் பார்க்கில் உடன் படிக்கும் ஒரு சீனியர் மாணவிக்கும் அம்முவின் பக்கத்து வீட்டு சேட்ஜி பையனுக்கும் காதல். தூது சென்றவர் அம்மு.

மொட்டை மாடியில் கன ஜோராக வளர்ந்த காதல் , கிளைமாக்ஸை நெருங்கியது. எதுவுமே தெரியாத அந்த அப்பாவிப் பெண்ணை அம்முதான் ஏதோதோ சொல்லிக் கெடுத்துவிட்டதாகப் பெண் வீட்டார் புகார் பட்டியல் வாசித்தார்கள்.

‘ சினிமாக்காரங்களாச்சே… அப்படித்தான் ’ இருக்கும் என்று வந்து விழுந்த வசவு வார்த்தைகளைக் கேட்டு அம்மு நொந்தே போனார். அம்முவுக்கு சினிமாவே அலர்ஜியாகி போனதற்கு இந்தச் சம்பவம்கூட காரணமாக இருக்கலாம்.

பொதுவாக தமிழ் சினிமா என்றாலே அம்முவுக்குப் போரடித்தது. பார்க்கவே பிடிக்காது என்கிறபோது அதில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் வரும் ?

பதினைந்து வயதில் கிரிக்கெட் பைத்தியமாகவே ஆகிவிட்டார் அம்மு. கிரிக்கெட் என்று சொல்வதைவிட கிரிக்கெட்டர் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

தான் கிரிக்கெட் ஆடுவதை விட மற்றவர்கள் கிரிக்கெட் ஆடுவதைப் பார்க்கப் பார்க்க ஒரு இன்பம். முக்கியமாக பட்டோடி! கனவுக்கன்னி சர்மிளா தாகூரின் கணவர்.

அந்தக் காலத்தில் மெட்ராஸ் கிரிக்கெட் சங்கத்தில் பெண்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

அதை எதிர்த்துப் போராடி உறுப்பினர் ஆனார் அம்மு. சென்னையில் மேட்ச் நடந்தால் பைனாகுலர் சகிதம் ஆஜராகிவிடுவார்.

எத்தனை ஓவர் , எத்தனை ரன் வித்தியாசம் , விக்கெட் , ரன் ரேட் சங்கதிகளில் எல்லாம் அம்முவுக்கு ஆர்வம் இருந்ததில்லை. பட்டோடி எப்படி மட்டையைச் சுழற்றுகிறார் , எப்போது ஓடுகிறார் என்று பட்டோடியை மட்டுமே அம்முவின் பைனாகுலர் குறி வைத்து நகரும்.

பட்டோடி படம் எந்தப் பத்திரிகையில் வந்தாலும் அதைக் கத்தரி போட்டு ஆல்பமாக்கிவிடுவார். வீட்டில் பெட்ரூமில் ஆரம்பித்து சமையலறை வரை பட்டோடியின் படம்தான்.

பட்டோடிக்காகவே சர்மிளாதாகூர் நடித்த படங்களையெல்லாம் பார்க்க ஆரம்பித்திருந்தார். அம்முவுக்கு பீடா சாப்பிட ரொம்ப நாளாக ஆசை. வீட்டில் கேட்டால் அனுமதி கிடைக்காது.

‘ படிக்கிற பசங்க வெத்தலைப் பாக்கு போட்டால் மாடு முட்டும் ; சரஸ்வதி நாக்குல உட்கார மாட்டா ’ என்று ஒரே உபதேச மழையாகத்தான் இருக்கும்.

யாருக்கும் தெரியாமல் பீடா சாப்பிட்டாக வேண்டும். அந்த வாய்ப்புக்காகத்தான் ரொம்ப நாளாகக் காத்திருந்தார் அம்மு. பள்ளி ஆண்டு விழாவும் வந்தது. பாக்கெட் மணியாக முப்பது ரூபாய் கொடுத்தனுப்பி இருந்தார்கள்.

பள்ளி வாசலில் ஸ்பெஷலாக பீடா கடை போட்டிருந்தார்கள். நிதானமாக ஒரு சேரை எடுத்து வந்து பீடா கடையோரமாகப் போட்டு உட்கார்ந்து கொண்டு , கையிலிருந்த முப்பது ரூபாய்க்கும் பீடாவாக வாங்கி மென்று தள்ளிவிட்டார்.

வாயெல்லாம் வெந்து போய் மூன்று நாள் எதுவுமே சாப்பிட முடியாமல் போனாலும் அதற்காக அம்மு கவலையேபடவில்லை.

1964. சர்ச் பார்க் பள்ளியில் அம்முவுக்கு அது கடைசி வருஷம். (இனி அம்மு அல்ல , ஜெயலலிதா!) அந்த நேரத்தில்தான் ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஏகப்பட்ட ஆங்கில நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்த ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த நடிகை தேவைப்பட்டார்.

எங்கெங்கோ தேடிவிட்டு கடைசியாகத்தான் கண்ணில் பட்டார் ஜெயலலிதா.

ஒய்.ஜி.பி. குடும்பம் , சந்தியாவுக்கு நெருக்கமானதுதான். ஒய்.ஜி.பி.யின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழுவில் சந்தியாவும் , வித்யாவதியும் ஆரம்ப கால உறுப்பினர்கள்.

சந்தியாவின் வீட்டில் நாடக ரிகர்சல் நடக்கும்போது , ஜெயலலிதாவைப் பார்த்திருக்கிறார் ஒய்.ஜி.பி. அவர் கேட்டதும் சந்தியாவால் மறுக்க முடியவில்லை.

14-1426334233-5thingsaboutjayalalithathatyoumighthaveneverknown 'அம்மு'வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ''ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3) 14 1426334233 5thingsaboutjayalalithathatyoumighthaveneverknownநாடகத்தில் நடிப்பது ஏதோ சுற்றுலா போய் ஊர் சுற்றிப் பார்க்கிற மாதிரி ஜெயலலிதாவுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. The Hold Truth, The de house of the August Moon என்று இரண்டு நாடகங்களில் நடிக்கும் போதும் உடன் நடித்த சக நடிகர் ‘ சோ ’ ராமசாமி.

அப்போது நாடகம் பார்க்க வந்திருந்தார் சங்கர் கிரி. பின்னாளில் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியின் மகன். பிரிட்டிஷ் கவுன்சில் உதவியோடு ஒரு டாக்குமெண்டரி எடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

டாக்குமெண்டரி படம்தானே நாலு நாளில் முடித்துவிடலாம் என்று ஜெயலலிதா ஓகே சொல்லியிருந்தார். படப்பிடிப்புக்குப் போனபோதுதான் தெரிந்தது , அது டாக்குமெண்டரி அல்ல , முழுநீள ஆங்கிலப்படம்.

அதுவும் சங்கர் கிரியின் சொந்தப்படம். சரி ஒப்புக்கொண்டதை முடித்துக்கொடுத்துவிடலாம் என்று நினைத்தால் , படமோ வளவளவென்று இழுத்துக் கொண்டே போனது. படம் முடிவதற்குள் ஜெயலலிதாவுக்கு நடிப்பே வெறுத்துவிட்டது.

‘ எபிஸில் ’ என்ற அந்தப் படமும் ஜெயலலிதா சினிமாவில் பிரபலமான பின்னர் வெளியாகி படு தோல்வியடைந்தது. ஜெயலலிதா அப்போது படிப்பில் பிஸி. மெட்ரிகுலேஷன் பரீட்சை நெருங்கிக்கொண்டிருந்தது.

14-1426334265-9thingsaboutjayalalithathatyoumighthaveneverknown 'அம்மு'வுக்கு நடந்த நாட்டிய அரங்கேற்றம்: ''ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-3) 14 1426334265 9thingsaboutjayalalithathatyoumighthaveneverknownஅவர் படிப்பதே வித்தியாசமாகத்தான் இருக்கும். பரீட்சை ஹாலில் அவருக்கு ஞாபகத்துக்கு வருவதெல்லாம் பதிலை எந்தப் பக்கத்தில் ஆரம்பித்து எங்கே முடிப்பது என்பதுதான்.

கேள்விக்கான பதிலைப் பதிமூன்றாம் பக்கம் இரண்டாவது பாராவில் ஆரம்பித்து இருபத்தாறாம் பக்கத்தின் மூன்றாவது பாராவில் முடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டால் போதும். பக்கம் பக்கமாகப் படித்து மண்டையில் ஏற்றியிருப்பதை அப்படியே இறக்குமதி செய்துவிடுவார்.

இத்தனைக்கும் பரீட்சைக்கு முதல்நாள் கொட்டக் கொட்ட கண்விழித்து படிக்கிற படிப்புதான். தேர்வு முடிவுகள் வெளியானபோது அதில் ஆச்சர்யங்கள் நிறைய இருந்தன.

ஜெயலலிதா , மாநிலத்திலேயே இரண்டாவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். சந்தியாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். கையோடு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விண்ணப்பமும் போட , பி.யூ.ஸியில் சேர இடமும் கிடைத்து , பணமும் கட்டியாகிவிட்டது.

‘ கல்லூரி திறக்க இரண்டு மாதம் ஆகும் ’ என்றார்கள். இருக்கும் இரண்டு மாதத்தை அம்மாவுடன் எப்படிக் கொண்டாடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.

அந்த நேரத்தில்தான் உட்லண்ட்ஸ் ஓட்டலில் ‘ கர்ணன் ’ படத்தின் நூறாவது நாள் விழா. படத்தில் நடித்திருந்ததால் வெற்றி விழாவுக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார் சந்தியா.

முதல் முறையாகப் புடைவை கட்டிக்கொண்டு வெளியிடத்துக்கு வந்திருந்த ஜெயலலிதாவின் மீதுதான் எல்லோருக்கும் கண். ‘ சந்தியாவுக்கு இவ்வளவு பெரிய பெண்ணா ’ என்ற ஆச்சர்யம்.

வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் படத்தின் டைரக்டர் பி.ஆர். பந்தலு , சந்தியாவிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்றார். சுற்றி வளைக்காமல் நேராகவே விஷயத்துக்கு வந்தார். ‘ அடுத்த வாரம் ஒரு கன்னடப் படத்துக்குப் பூஜை போடப் போறேன்.

உங்க பொண்ணுதான் கதாநாயகி! ’

தொடரும்…

நன்றி : ஜெ ராம்கி இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s