சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 29

சந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம்

என்றார் பிரபாகரன்!!

சந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்!!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்

விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன.

இரு சாராரும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்துவதற்கு உதவுவதாக இல்லை.

புலிகள் தரப்பினரின் அதிகரித்த தாக்குதல்களும், எவ்விதமான இணக்கப் போக்கும் அவர்களிடத்தில் காணப்படாததால் ஐரோப்பிய அரசுகள் மிகவும் காத்திரமான முடிவுகளை எடுக்கக்கூடும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஐரோப்பிய அரசுகள் மிகக் கடினமான முடிவை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்த்த நோர்வே விஷேட தூதுவர் இரு தரப்பாரையும் சந்திக்க இலங்கை சென்றார்.

புலிகளை ஐரோப்பிய அரசுகள் தடைசெய்தால் அது போர் நிறுத்த ஒப்பந்தத்தினை எவ்வளவு தூரம் பாதிக்கும்? என்பதைக் கருத்தில் கொண்டே அவரது பயணம் அமைந்திருந்தது.

அவர் இரு தரப்பாரையும் போர்நிறுத்த ஒப்பந்த அமுலாக்கத்தில் எழக்கூடிய பிரச்சனைகளைப் பேசுவதற்காக 2006ம் ஆண்டு யூன் 8ம் 9ம் திகதிகளில் ஒஸ்லோவில் சந்திக்க வருமாறு அழைத்தார்.

இவ் வேளையில் அதாவது 2006ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி ஏற்கெனவே எதிர்பார்த்தது போலவே புலிகளின் வங்கிக் கணக்குகள் உறைய வைக்கப்பட்டதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே செல்வதும், உள்ளே வருவதும் தடை செய்யப்பட்டது.

ericsolkaim சந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்!!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம் ericsolkaim(Norwegian Peace Envoys Jon Hanssen-Bauer, left, and Erik Solheim, right)

மறு நாள் 30ம் திகதி கூட்டுத் தலைமை நாடுகளின் சந்திப்பு யப்பானில் இடம்பெற்றது அக் கூட்டத்தில் எரிக் சோல்கெய்ம், புதிய அனுசரணையாளர் கன்சன் போவர் (Hanssen Bauer ) கலந்துகொண்டனர்.

இச் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் புலிகள் பயங்கரவாதத்தையும், வன் முறையையும் கைவிட்டு, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைக் காணுவதற்கான விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமெனவும்…,

அதே வேளை இலங்கை அரசு தமிழ் மக்களின் சட்ட ரீதியான குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, பிரதேச எல்லைகளுக்குள் வன்முறை, பயங்கரவாதம் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமெனவும்…,

நாடு முழுவதும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பும், உரிமையும் உறுதிப்படுத்துவதற்கு காத்திரமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான புதிய பொறிமுறைக்கு தயாராக வேண்டுமெனவும், அப் பொறிமுறை இலங்கையில் வாழும் சகல மக்களினதும் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டுமெனவும், அதில் முஸ்லீம் மக்களும் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் அவ் அறிக்கை தெரிவித்திருந்தது.

இவ் அறிக்கை மிக முக்கியமான செய்தியை இரு தரப்பாருக்கும் வழங்கியதாக நோர்வேயின் புதிய சிறப்புத் தூதுவர் தெரிவித்தார்.

அதாவது புலிகளைத் தாம் தடை செய்வதற்கான காரணம், இலங்கை அரசு தாமாகவே சில முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதையும், அதில் தமது எதிர்பார்ப்புகள் எவை? என்பதையும் குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார்.

இக் காலப்பகுதியில் இரு சாராரும் மீண்டும் போரை நோக்கிச் செல்வதற்கான நிலமைகள் காணப்பட்டதால், அவற்றைக் கட்டுப்படுத்தவும், புலிகள் தடைசெய்யப்பட்ட வாய்ப்பை அரசு பயன்படுத்தி தீர்வைக் கிடப்பில் போடாமல் பார்க்கவும், அரசுக்கும் கடினமான நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தது.

Erik-Solheim சந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்!!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம் Erik Solheim

ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடைசெய்வதற்கான பின்னணிகள் குறித்து சோல்கெய்ம் தெரிவிக்கையில் ஐரோப்பிய அரசுகள் தடைசெய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டுமெனில் கதிர்காமரின் படுகொலைகள் போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டுமென தாம் பிரபாகரனுக்கு பல தடவைகள் தெரிவித்ததாக கூறுகிறார்.

புலிகள் தரப்பினர் கிழக்கில் கருணா தரப்பினரின் செயல்களுக்கு பதிலடி கொடுக்கவே அவ்வாறு நடந்து கொள்வதாக கூறிய போதிலும் எவரும் அதை நம்பத் தயாராக இல்லை.

அமெரிக்க 9/11 தாக்குதலின் பின்னர் சகல நடவடிக்கைகளையும் அதனைக் காரணம் காட்டித் தொடர்ந்தனர்.

பல அமைப்புகள் அவ்வேளையில் தடைசெய்யப்பட்டபோது புலிகளையும் தடைசெய்யுமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

புலிகள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள மாட்டோம் என புலிகள் பயமுறுத்தி வந்த போதிலும், தாம் ஒஸ்லோ வருவதாக புலிகள் தரப்பு அறிவித்தது.

இத் தடை தொடர்பாக பாலசிங்கம் தெரிவிக்கையில் புலிகளை அவமானப்படுத்த சர்வதேச அரசுகள் முயற்சிப்பதாகவும், இவை புலிகளை மேலும் கடினப்படுத்தி சர்வதேச அழுத்தங்களிலிருந்தும் தம்மை விடுவித்து தாமே தனித்துச் செயற்பட தள்ளக்கூடும் என்றார்.

060606oslo சந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்!!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம் 060606oslo

ஓஸ்லோவிற்கு வந்த புலிகள் தரப்பினரின் போக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.

யூன் 8ம் திகதி வந்தவர்கள், மறு நாள் ஆசனங்களில் அமரும் வேளையில் அரச தரப்பில் அமைச்சர்கள் எவரும் இல்லை என முறையிட்டு தம்மால் கலந்து கொள்ள முடியாது என்றனர்.

இந் நிலமை குறித்து அங்கு சென்றிருந்த பாலித கோகன ஜனாதிபதி மகிந்தவிடம் வழிநடத்தலைக் கோரினார்.

சகலரையும் நாடு திரும்பும்படி மகிந்த உத்தரவிட, அரச தரப்பினர் இவ்வளவு விரைவாக பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டதாக தமிழ்ச் செல்வன் கிண்டலடித்தார்.

நாடு திரும்புவதற்கு முன்னர் புலிகள் தரப்பினர் மிக நீண்ட சட்ட வாசகங்கள் நிரம்பிய அறிக்கை ஒன்றினை ‘ஒஸ்லோ அறிக்கை’என்ற பெயரில் வெளியிட்டனர்.

அதில் பல்வேறு பிரச்சனைகளில் தமது நிலைப்பாடு பற்றியும், தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதே தீர்வு எனவும் தெரிவித்தனர்.

நோர்வே பேச்சுவார்த்தைகள் நடைபெறாமல் போனதற்குக் காரணம் புலிகளின் நடத்தையே என நோர்வே வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

புலிகள் தரப்பிலும் மாற்றங்கள் இருந்தன எனவும், அக் குழுவில் பாலசிங்கத்திற்குப் பதிலாக தமிழச்செல்வன் சென்றார்.

கொழும்பு விமான நிலையத்தில் புலிகளுக்கு மிகவும் கடுமையான அழுத்தங்கள் காணப்பட்டதால் அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர்.

அவர்கள் தமக்கு அரச தரப்பினருக்குரிய ராஜதந்திர வரவேற்ப எதிர்பார்த்தனர்.

அமெரிக்கா சென்றாலும் இதுபோன்ற கெடுபிடிகள் உண்டு எனத் தாம் தெரிவித்த போதும் புலிகள் அதனை ஏற்கவில்லை என சோல்கெய்ம் கூறுகிறார்.

அரச தரப்பு அதிகாரியாகிய பாலிதகோகன இன் அபிப்பிராயப்படி போர்நிறுத்த ஒப்பந்தம் போதுமான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்கிறார்.

அதாவது புலிகள் 5000ம் தடவைகள் ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். அரசாங்கம் 300 தடவைகள் மீறியுள்ளது.

ஆனால் இம் முறைப்பாடுகளுக்குப் பரிகாரம் எதனையும் காண்காணிப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. நடவடிக்கையும் இல்லை. இது ஒப்பந்த வரைபில் காணப்பட்ட பாரிய இடைவெளி என்கிறார்.

ஓஸ்லோ சந்திப்பு தோல்வியடைந்த ஒரு வாரத்தில் அனுராதபுரத்திலிருந்து 50 கிலோ மீற்றர் வடமேற்கு பகுதியில் சென்றிருந்த பஸ் வண்டி தாக்கப்பட்டு அதிலிருந்த 64 பயணிகள் மரணமடைந்ததோடு, 80 பேர் படுகாயமடைந்தனர்.

இச் சம்பவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நடைபெற்ற மிகவும் பாரதூரமான சம்பவம் எனக் கருதப்பட்டது.

இச் சம்வத்தைத் தொடர்ந்து ராணுவம் திருகோணமலையில் புலிகளின் இடங்களைத் தாக்கியது.

முல்லைத் தீவிலும், இரணைமடு விமான ஓடுபாதையும் தாக்கப்பட்டது. யூன் 17ம் திகதி கொழும்புத் துறைமுகத்திலிருந்த கப்பலைத் தாக்க புலிகள் எடுத்த முயற்சி தடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசாலைப் பகுதியில் கடற்படடையினர் தாக்கப்பட்டதில் 11 கடற்படையினர் உயிரிழந்தனர்.

இப் பின்னணியில் கண்காணிப்புக் குழுவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய படையினரை குழுவிலிருந்து அகற்றும்படி ஒரு மாத கெடு தந்திருப்பதாக கூட்டுத்தலைமை நாடுகளின் பிரதிநிதிக்கு கண்காணிப்புக் குழு தெரிவித்தது.

கண்காணிப்புக் குழுவினர் புலிகள் குறித்து பிரச்சனையாக செயற்படவில்லை எனவே அவ்வாறான கடுமையான போக்குகளைக் கைவிடும்படி கண்காணிப்புக் குழுவினர் கேட்டுக்கொண்ட போதிலும் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளதாக தமிழ்ச்செல்வனின் விளக்கம் அமைந்தது.

இச் சம்பவங்கள் நோர்வே தரப்பினரைச் சோர்வடையச் செய்ததாக அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.

இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் தாமாகவே வலுவிழந்த ஒன்றாக மாறிக்கொண்டிருந்தது.

2006ம் ஆண்டு யூன் 26ம் திகதி இலங்கை ராணுவத்தின் மூன்றாவது உயர் பதவியை வகித்த மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க தற்கொலைப் பிரிவினரால் கொழும்பில் கொல்லப்பட்டார்.

இதே வேளை நோர்வேயினருக்குத் தெரியாமல் புலிகளுடன் இரண்டுவார போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றிற்கு மகிந்த தயாராவதாக செய்திகள் கசிந்தன. புலிகள் அச் செய்தியை நிராகரித்தனர்.

இந் நிலமைகள் இந்திய தரப்பினருக்கு கவலை அளிப்பதாக இருந்தது.

யூலை மாத ஆரம்பத்தில் இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரன் அங்கு மீண்டும் போருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளில் ராணுவம் இறங்கியிருப்பதாக நிலவிய கருத்துக்களுக்கு மத்தியில், அதிகார பரவலாக்கம் தொடர்பாக மகிந்த ஐ தே கட்சியுடன் இணக்கத்தை ஏற்படுத்தாதது கவலையளிப்பதாக தெரிவித்தார்.

15 சந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்!!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம் 15

இப் பின்புலம் தொடர்பாக சந்திரிகா அவர்களின் அனுபவம் இவ்வாறு இருந்தது…

இழந்த வாய்ப்புகள் பற்றி அவர் குறிப்பிடுகையில் தாம் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக தீர்மானித்த பின் லண்டனில் 9 மாதங்கள் தங்கிய பின் நல்ல காலம் உண்டு என எண்ணி நாடு திரும்பிய போது, ரணில் நல்லெண்ண அடிப்படையில் தம்மைச் சந்தித்திருந்தார் எனவும், அச் சந்திப்பு 2 மணிநேரம் நீடித்ததாக தெரிவித்தார்.

அச் சந்திப்பின் முடிவில் அவர் செல்ல எண்ணிய தருணத்தில் தற்போதைய தருணத்தில் நிலமைகள் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டீர்கள். இதற்குப் பதிலாக எவ்வாறு நிலமைகள் அமைந்திருக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்? என்ற கேள்வியை ரணில் கேட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி நீக்கப்படவில்லை. என்னைப் போல ஒருவர் அந்த அதிகாரத்தில் இருந்தால் பரவாயில்லை.

mahinda12 சந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்!!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம் mahinda12

ஆனால் சர்வாதிகார ஆசையுள்ளவர் அமர்ந்தால் எவ்வளவு ஆபத்தானது? என்பதை தற்போது புரிந்து கொண்டீர்கள் அல்லவா? அதை நான் ஏற்கெனவே உங்களுக்குக் கூறியிருந்தேன்.

என்னுடைய வார்த்தையை மதித்து அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு நீங்கள் வாக்களித்திருந்தால் போர் சமாதான வழியில் இப்போது முடிவுக்குச் சென்றிருக்கும்.

நாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியையும், சர்வாதிகாரியையும் தவிர்த்திருக்கலாம். நீங்கள் ஜனாதிபதியாக அமர்ந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பின்போது அதிகார பரவலாக்க யோசனைகளுக்கு நீங்கள் வாக்களித்திருந்தால் மறு நாளே தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான அழைப்பை விடுத்திருப்பேன்.

நீங்கள் வாக்களிக்காத வரை என்னால் அவ்வாறான அழைப்பை விடுக்க முடியாது என தான் தெரிவித்த போது ரணிலின் பார்வை ஒரு விதமாக மாறி, தான் எனது சொற்களை அப்போது கேட்டிருக்கலாம் எனத் தெரிவித்த போது தற்போது எல்லாம் கடந்து விட்டது.

குறைந்தது அதனை தற்போது புரிந்துள்ளது நல்லது எனத் தாம் தெரிவித்ததாக கூறினார்.

பிரித்தானியாவிலுள்ள வன்னி மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காக பணம் திரட்டும் புலம்பெயர் நண்பர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோது அவர்களில் சிலர் தாம் பிரபாகரனைச் சந்தித்த வேளையில் சந்திரிகாவின் கருத்துக்களுக்கு செவிமடுக்காமல் மகிந்தவை ஜனாதிபதியாக்கியது எவ்வளவு பாரதூரமானது என்பதை உணர்கிறீர்களா? என தாம் கேட்டதாகவும், அதற்குப் பிரபாகரன் தாம் சந்திரிகாவின் கோரிக்கைகளை மதித்திருக்கலாம் எனத் தெரிவித்தாகவும் கூறியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 சந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்!!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம் 625

வாசகர்களே!

இக் கட்டுரைத் தொடரைப் படிக்கும் ஒவ்வொருவரும் இன்றைய அரசியல் நிலை குறித்தும், குறிப்பாக சமீப காலமாக தழிழர் தரப்பின் அரசியலைத் தனது தலையில் வைத்து ஆடிக்கொண்டிருக்கும் வட மாகாண முதல்வரின் அரசியல் போக்கும் எவ்வாறான முடிவுகளை நோக்கித் தள்ளும்? என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இந் நிலமைகள் எவ்வாறு மாவிலாறு அணைக்கட்டை நோக்கித் திரும்பின? என்பதை அடுத்தது பார்ப்போம்.

 

தொடரும்

 Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட   TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s