ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 47

புலிகளின் ரேடியோ ட்ரான்ஸ்மிஷனை கண்டுபிடிக்க ஐடியா சொன்ன கோவை கான்ஸ்டபிள்!

சென்னையில் இருந்த ராஜிவ் கொலை புலனாய்வு டீம், சில போட்டோக்களைப் பார்க்க நேரிட்டது. போரூரில் ராபர்ட் பயஸ் வீட்டில் சோதனையிட்டபோது இவர்கள் கைப்பற்றிய கவரில், இருந்த அந்த போட்டோக்களில், போரூர் அருகே பறங்கிமலையில் உள்ள ஒரு போட்டோ ஸ்டூடியோவின் ரப்பர் ஸ்டாம் முத்திரை காணப்பட்டது என கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா?.

உடனே அந்த ஸ்டூடியோவுக்கு சென்றது, சி.பி.ஐ. டீம். ஸ்டூடியோ ஆவணங்களை ஆராய்ந்ததில் 1990-ம் ஆண்டு டிசம்பரில் ராபர்ட் பயஸும், சிவராசனும் இந்த ஸ்டூடியோவில் போட்டோ எடுத்துக்கொண்டது தெரிய வந்தது. இந்த போட்டோ எடுத்தபோது சிவராசனின் ஒரு கண் பாதிக்கப்பட்டிருக்கவில்லை.

‘ஒற்றைக் கண்’ சிவராசன் என்று இவர்கள் தேடிக்கொண்டிருந்தவரின், கண் பாதிக்காத தோற்றமுள்ள போட்டோ சி.பி.ஐ. டீமுக்கு கிடைத்துவிட்டது.

ஏற்கனவே தமிழக அரசு உளவுப்பிரிவு மூலம், டிக்சனின் போட்டோவையும் சி.பி.ஐ. டீம் பெற்றிருந்தது.

விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்த காந்தன் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தோம். இவர், 1990-ம் ஆண்டு செப்டெம்பரில் டிக்சனுடன் இந்தியா வந்தார் என்றும், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து பயின்றார் என்றும் ராபர்ட் பயஸ் தெரிவித்தார். அந்த கல்லூரி அலுவலகத்தில் உள்ள ஆவணங்களைச் சோதனையிட்டதில், காந்தனின் போட்டோவுடன் கூடிய விண்ணப்பத்தை கைப்பற்றியது சி.பி.ஐ. டீம்.

இப்படி போட்டோ மேல் போட்டோவாக கிடைத்தனவே தவிர, நிஜ ஆட்கள் சிக்கவில்லை. ஆனால், இந்த போட்டோக்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டது சி.பி.ஐ.

ஜூலை 24-ம் தேதி முதல், தினமும் ஒரு போட்டோ, பத்திரிகைகளில் வெளியானது. “இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், எம்மை தொடர்பு கொள்ளுங்கள். எம்முடன் தமிழிலும் பேசலாம்” என்று சி.பி.ஐ. விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டிருந்தது ‘வைத்திய சிகாமணி திருப்பூர் விஜயம்’ பாணியில்!

இந்த போட்டோ விளம்பரங்களால் சிவராசனை பிடித்துவிட முடியும் என்று சி.பி.ஐ. நிஜமாகவே நினைத்தார்களா?

சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவின் தலைவராக செயல்பட்ட கார்த்திகேயனை பல ஆண்டுகளின்பின் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது, இந்த விளம்பரங்கள் பற்றி அவர் மற்றொரு கோணம் சொன்னார்.

“அந்த விளம்பரங்கள் மூலம் சிவராசனை பிடிக்க முடியாது என்பது எமக்கு தெரியும். ஆனால் அடிக்கடி அந்த விளம்பரங்கள் தொடர்ந்து வந்ததால், தலைமறைவாக இருந்த சிவராசனுக்கு மற்றவர்களுக்கும் மனோதத்துவ ரீதியான நடுக்கம் ஒன்றை கொடுத்தோம்.

புதிது புதிதாக போட்டோக்களை வெளியிட்டதில், அவர்கள், சி.பி.ஐ. தம்மை நெருங்குகிறது என்று உணரத் தொடங்கியிருப்பார்கள்.

இந்த மனோதத்துவ ரீதியான நடுக்கம், அவர்களை தமது மறைவிடங்களில் இருந்து வேறு மறைவிடத்தை நோக்கி ஓட வைக்கும். மறைவிடத்தை விட்டு வெளியே வந்தால்தான் அவர்களை பிடிக்க முடியும் என்பதும் அந்த விளம்பரங்கள் கொடுக்கப்பட்டதன் காரணம்” என்றார் அவர்.

அந்த சந்திப்பின்போது கார்த்திகேயன் கூறிய மற்றொரு விஷயம் சுவாரசியமானது.

“நாம் கொடுத்த விளம்பரங்களில் மற்றுமோர் கேட்ச் இருந்தது. விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தனியாகவும், அரசியல் பிரிவு தனியாகவும் இயங்கியது என்று எமக்கு தெரியும். அந்த விஷயம் எமக்கு தெரியும் என்பது சிவராசனுக்கும் தெரியும்.

ஜூலை 24-ம் தேதி முதல் நாம் கொடுத்த விளம்பரங்களில், சிவராசன், சுபா போன்ற உளவுப்பிரிவினர் போட்டோக்களுடன், டிக்சன், திருச்சி சாந்தன் போன்ற அரசியல் பிரிவினரின் போட்டோக்களை வெளியிட்டதன் மூலம், புலிகளின் உளவுப் பிரிவினரை காப்பாற்ற அரசியல் பிரிவினரும் ஒன்றிணைந்து செயல்படுவது எமக்கு தெரியும் என்ற மறைமுக மெசேஜை அந்த விளம்பரங்கள் வாயிலாக அவர்களுக்கு கொடுத்தோம்” என்றார் கார்த்திகேயன்.

அது உண்மைதான். விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவும், அரசியல் பிரிவும் கைகோர்த்துள்ளதை சி.பி.ஐ. புலனாய்வுக்குழு தெரிந்து கொண்டது என்பதை முதல் முறையாகப் பகிரங்கப்படுத்தியது இந்த விளம்பரங்கள்தான்.

சிவராசன் சுபாவின் போட்டோக்களை வெளியிட்டதில் பலன் ஏதும் கிட்டவில்லை. ஆனால், டிக்சனின் போட்டோவை வெளியிட்டதற்கு உடனடிப் பலன் கிடைத்தது.

கோயம்புத்தூரில் சாய்பாபா காலனி அருகே உள்ள ஒரு தொலைபேசி மையத்துக்கு டிக்சன் அடிக்கடி வந்து செல்வதாக, கோயம்புத்தூரிலிருந்து ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். திருச்சியில் முகாமிட்டிருந்த சிறப்புப் புலனாய்வுப்படை தேடுதல் குழு உடனே கோயம்புத்தூருக்கு விரைந்தது.

தமிழகத்தில் கோயம்புத்தூர் ஒரு வித்தியாசமான நகரம். இந்தியாவின் மான்செஸ்ட்டர் என்று அழைக்கப்படும் கோவையில், தொழிற்சாலைகள் ஏராளம். மற்றைய மாநிலத்தவர்கள் அதிகம் நடமாடும் இடம். இதனால், மத்திய உளவுப்பிரிவுகளில் இருந்து தமிழக க்யூ பிராஞ்ச் வரை அட்டகாசமான உளவு வலைப்பின்னல் வைத்திருக்கும் நகரம் கோவைதான்.

கோயம்புத்தூரில் தமிழக க்யூ பிராஞ்ச் நல்ல கட்டமைப்புக் கொண்டிருந்தததால் அவர்களின் உதவியை நாடியது சி.பி.ஐ.

கோவையின் சிறப்பம்சங்களில் ஒன்று, அங்குள்ள மக்களைப் போல காவல்துறையும் பிரன்ட்லியானவர்கள். மற்றைய நகரங்களில் பணி புரிந்தபோது சிடுசிடு என்றிருந்த காவல்துறை அதிகாரிகள்கூட கோவைக்கு ட்ரான்ஸ்பரில் வந்து விட்டால் பிரன்ட்லியாகி விடுவார்கள் (நான் கோவையில் படித்த காலத்தில் அப்படி இருந்தது. இப்போது எப்படியோ தெரியவில்லை!)

இதனால், சென்னையில் சி.பி.ஐ. டீமுடன் முறுகிக் கொண்டிருந்த தமிழக காவல்துறை க்யூ பிராஞ்ச், கோவையில் அட்டகாசமாக ஒத்துழைப்பு கொடுத்தது.

கோவை சென்ற சி.பி.ஐ. டீம், முதலில் கோவையில் உள்ள வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் விசிட் அடித்து, தம்மை அறிமுகம் செய்து கொண்டனர். தலைமறைவாக உள்ள விடுதலைப் புலிகள் கோவையில் மறைந்திருக்கலாம் எனவும், தேடப்படும் நபரான டிக்சன் சாய்பாபா காலனி அருகே உள்ள ஒரு தொலைபேசி மையத்துக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

“தலைமறைவாக உள்ள புலிகள் கோவையில் இருந்து மற்ற விடுதலைப் புலிகளை தொலைபேசி மையங்கள் மூலமோ (இது நடந்த நாட்களில் செல்போன்கள் கிடையாது) ஒயர்லெஸ் மூலமோ தொடர்பு கொள்வார்கள். அது தொடர்பாக ஒரு லீட் கிடைத்தால், ஆட்களை பிடித்து விடலாம்” என்று ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சொல்லி வைத்தார்கள்.

இவர்கள் இப்படி ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனாக ரவுன்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, வட கோவையில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த ஒருவர், சி.பி.ஐ. அதிகாரிகளே மூக்கில் விரலை வைக்கும் விதத்தில் ஒரு விஷயத்தை சொன்னார். இதை சொல்லியவர், பெரிய அதிகாரி அல்ல. ஒரு கான்ஸ்டபிள்.

“இங்கு தலைமறைவாக இருக்கும் விடுதலைப் புலிகள் ஒயர்லெஸ் மூலம் பேசிக் கொள்வதாக கூறுகிறீர்களே.. குடியிருப்புகளுக்கு மத்தியில் வைத்து ஒயர்லெஸ் இயக்கினால், மற்ற வீடுகளில் வரும் டி.வி. சிக்னல்கள் பாதிக்குமே..” என்றார் அவர் அசால்ட்டாக! (சிறுவாணி தண்ணீர் மகிமை?)

உடனே அவருடன் கை குலுக்கிக் கொண்ட சி.பி.ஐ. டீம், குறிப்பிட்ட ஒரு நாளிதழின் கோவை பதிப்பில் ஒரு விளம்பரம் கொடுத்தது. “உங்கள் தொலைக்காட்சி ஒலிபரப்பின்போது இடையூறு ஏற்பட்டால் எமக்கு தகவல் தெரியுங்கள்” என்பதே அந்த விளம்பரம்!

விளம்பரத்தில், சி.பி.ஐ. என்று குறிப்பிடாமல், ‘மத்திய தொலைக்காட்சி அமலாக்க பிரிவு’ என்று குறிப்பிட்டு, லோக்கல் போன் இலக்கம் ஒன்றும் கொடுத்திருந்தார்கள்.

இந்த விளம்பரம் வேலை செய்தது.

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது இத்தகைய இடையூறு ஏற்பட்டதாக கோயம்புத்தூர் அருகே உள்ள துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சி.பி.ஐ. டீம் உடனடியாக அதிகபட்ச உஷார் நிலையை அடைந்தனர். துடியலூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டது.

சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடும் யாரை கண்டாலும், அந்த இடத்திலேயே விசாரித்துவிட்டு விடாமல், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்து விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என கோவை போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவு போனது.

ஜூலை 27-ம் தேதி போக்குவரத்துச் சோதனையின்போது, கவுண்டர்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரைத் தடுத்து நிறுத்திய ஒரு ட்ராஃபிக் பொலீஸ்காரர், அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.

விக்கி, ரகு என்ற அந்த இருவரும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமின்றி, ஒளிவதற்குப் புதிய மறைவிடம் தேடித்திரிந்த விடுதலைப் புலிகள். இந்த இருவரும் கோயம்புத்தூர் முனுசாமி நகரில் உள்ள ஒரு வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தனர்.

அந்த வீடு பாதுகாப்பான மறைவிடம் அல்ல என்பதால், புதிய வீடு தேடும் முயற்சியில் ஈடுபட்ட நேரத்திலேயே, ட்ராஃபிக் போலீஸிடம் சிக்கினர்.

விசாரணையின்போது முனுசாமி நகரில் உள்ள வீட்டில் இவர்களுடன் வேறு யாராவது தங்கியுள்ளார்களா என விசாரித்தபோது, வேறு இருவரும் அங்கு தங்கியுள்ளதாக தெரிவித்தனர். இந்த இருவரில் ஒருவரின் பெயர், குணா.

மற்றையவரின் பெயர்… இவர்கள் தேடிக்கொண்டிருந்த, டிக்சன்!

இந்த விபரம் உடனே சி.பி.ஐ. டீமுக்கு போய்ச் சேரவில்லை. விசாரித்த போலீஸ்காரர் தமது மேலதிகாரிக்கு தெரிவித்து, அவர் தமது சுப்பீரியருக்கு தகவல் கொடுத்து, அங்கிருந்து சி.பி.ஐ. டீமுக்கு போய் சேர, இரவு ஆகிவிட்டது.

அதுவரை விக்கி, ரகு என்ற அந்த இருவரையும் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்துக் கொண்டனர். அந்த இருவரும் அன்றிரவு முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்க வைக்கப்பட்டனர்.

இதில்தான் கோவை போலீஸ் இரண்டு விஷயங்களில் சறுக்கியது.

முதலாவது, இந்த தகவல் உடனே சி.பி.ஐ. டீமுக்கு போய் சேர்ந்திருக்க வேண்டும். அதுவும் இவர்கள் வலை விரித்துள்ள நபரின் பெயரும் டிக்சன். முனுசாமி நகரில் உள்ள வீட்டில் இருப்பவரின் பெயரும் டிக்சன் என்றதும், விசாரித்த போலீஸூக்கு உடனே பல்ப் எரிந்திருக்க வேண்டும்.

இரண்டாவது, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விக்கி, ரகு என்ற இருவரையும், போலீஸ் ஸ்டேஷனில் இரவு முழுவதும் வைத்திருந்திருக்க கூடாது. விஷயத்தை தெரிந்துகொண்டபின் சந்தேகம் ஏதும் இல்லாத பாவனையில் ஆட்களை விட்டிருக்க வேண்டும். அதன்பின் ரகசியமாக கண்காணித்திருக்க வேண்டும்!

இதை ஏன் சொல்கிறோம் தெரியுமா?

மறுநாள் காலை டிக்சனும், குணாவும் உயிரை விட போகிறார்கள் என்பதால்!

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s