ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 50

விடுதலைப்புலிகளை பிடிக்க ‘வடிவேலு பாணியில்’ பெங்களூரு சென்ற சி.பி.ஐ. டீம்!

“அந்த வீட்டின்முன் பச்சை நிற மாருதி ஜீப்பும், நீலவண்ண பிரிமியர் பத்மினி பியட் காரும் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்” என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதையடுத்து, “இதுதான், நாம் தேடிவந்த மறைவிடம்” என உடனே உஷாரானது சி.பி.ஐ.

இருட்டிய பிறகு, அந்த வீட்டின் மின் விளக்குகள் எரிந்தன. இதனால், அங்கு ஆட்கள் இருப்பது உறுதியாகத் தெரிந்தது.

பெங்களூருவில் போராளிகள் மறைந்திருந்த இந்த வீட்டை தொடர்ந்து 24 மணி நேரம் கண்காணித்த பின்னர், ஆகஸ்ட் 2-ம் தேதி என்.எஸ்.ஜி. அதிரடிப்படை குழு பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்டது. சயனைட் எதிர்ப்பு மருந்துகளுடன் ஒரு டாக்டரும் உடன் வந்தார்.

பெங்களூரு பொலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

பெங்களூருவில், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அலுவலகம் இருக்கவில்லை. இதனால், பெங்களூரு விமான நிலையத்தின் வி.ஐ.பி. லவுஞ்சை தமது தற்காலிக ஆபரேஷன் சென்டர் ஆக்கி கொண்டனர். அங்கு வைத்து, தாங்கள் செய்ய வேண்டிய திட்டத்தை வகுத்த பின்னர், செயலில் இறங்க முடிவு செய்தது சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு.

போராளிகள் மறைந்திருந்த வீடு, ஒரு மாடி மட்டும் கொண்டது. என்.எஸ்.ஜி.யின் கறுப்புப் பூனைப்படையினர், இப்படியான வீடுகளில் அதிரடியாக நுழைந்து நடவடிக்கை மேற்கொள்ள பயிற்சி பெற்றவர்கள்.

மறைவிடங்களில் அதிரடியாகப் புகுந்து பிடிப்பது அல்லது கடத்திச் செல்லப்பட்டு இப்படியான இடங்களில் வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதுதான் அவர்களது பணி.

சுதந்திர ராஜாவும், விஜயனும் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், சிவராசனிடம் ஏ.கே. 47 ரைஃபிள், 9 மி.மீ. பிஸ்டல் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் இருந்தன. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரிடமும் சயனைட் குப்பிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருந்தன.

அத்துடன், சிவராசன், நேரு, சுபா ஆகிய மூவரில் யாராவது ஒருவர் எந்த நேரத்திலும் ஆயுதத்துடன் உஷாராக விழித்திருப்பார்கள் எனவும் சுதந்திர ராஜாவும், விஜயனும் தெரிவித்திருந்தனர்.

விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், சிவராசனுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில், “சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், ஏதேனும் ஒரு வாயுவைப் பயன்படுத்தி உங்கள் அனைவரையும் மயக்கி விட்டு உயிருடன் பிடிக்க முயற்சிக்கலாம்” என்று தெரிவித்திருந்ததை, ஒயர்லெஸ் தகவல் தொடர்புகளை இடைமறித்துக் கேட்ட சி.பி.ஐ. தெரிந்து வைத்திருந்தது.

பொட்டு அம்மானிடம் இருந்து சிவராசனுக்கு அனுப்பப்பட்ட செய்தி, தெளிவாக இருந்தது. “என்ன நடந்தாலும் உன்னை உயிருடன் பிடிக்க அனுமதிக்கக் கூடாது”

“நாங்கள் யாருமே உயிருடன் பிடிபட மாட்டோம்” என பொட்டு அம்மானுக்கு சிவராசன் அனுப்பிய ஒயர்லெஸ் தகவலும், இடைமறிக்கப்பட்டிருந்தது.

மொத்தத்தில், தம்மை சுற்றி வளைத்து விட்டார்கள் என்று தெரிந்து கொண்டாலே, போராளிகள் சயனைட் குப்பியை கடித்து தற்கொலை செய்து விடுவார்கள் என்ற விஷயம், சி.பி.ஐ. குழுவினருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. கோவையில் டிக்சனும், குணாவும் தங்கியிருந்த மறைவிடத்தை இவர்கள் சுற்றி வளைத்தபோது, அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி 48-ம் அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.

இவ்வளவு உறுதியாக தெரிந்து கொண்ட பின்னரும், சிவராசனையும், அவருடன் இருந்தவர்களையும் ஏன் கடைசியில் உயிருடன் பிடிக்க சி.பி.ஐ. குழுவால் முடியவில்லை? அதுவும், ராஜிவ் கொலை திட்டமிடலில் பிரதான பங்கு வகித்தவர் என சி.பி.ஐ. கூறிக்கொண்டிருந்த சிவராசனை உயிருடன் பிடித்திருந்தால் அல்லவா, அந்த கொலை யாரால், எதற்காக திட்டமிடப்பட்டது என்ற விபரம் தெரிய வந்திருக்கும்?

மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் இல்லை.

போராளிகளின் மறைவிடம் பெங்களூருவில் எங்கே உள்ளது என்பதை சரியாக தெரிந்து கொண்ட சி.பி.ஐ. புலனாய்வுக் குழு, அந்த மறைவிடத்தை சுமார் 24 மணி நேரம் கண்காணித்த போது, மிக ரகசியமாக நடந்து கொண்டனர். யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

அந்த மறைவிடத்தில்தான் சிவராசன் இருக்கிறார் என உறுதியாக நம்பினார்கள் இவர்கள். ஆனால், சிவராசன் குழுவை அதிரடியாக சென்று பிடிக்கும் நடவடிக்கையை வெளிப்படையாகவே செய்தார்கள்.

அது ஏன்?

ராஜிவ் கொவை புலனாய்வு தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த இறுதி அறிக்கையில், “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகிய இருவருக்கும் அடுத்தபடியாக, இந்த கொலை திட்டமிடல் விஷயம் பற்றி நன்றாக தெரிந்தவர் சிவராசன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியான சிவராசன் பெங்களூருவில் இந்த இடத்தில் மறைந்திருக்கிறார் என்று இவர்கள் உறுதியாக நம்பிய பின்னரும், அவரை பிடிக்க இவர்கள் ஏன் ரகசியமாக செல்லவில்லை? சிவராசன் உயிருடன் பிடிபடுவதை, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்த ‘யாரோ’ விரும்பவில்லையா?
வடிவேலு நடித்த படம் ஒன்றில், “அண்ணன் இன்றிரவு 12 மணிக்கு தெற்கு தெரு மூன்றாவது வீட்டில் திருட வருகிறார்” என போஸ்ட்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டிவிட்டு திருட சென்று மாட்டிக்கொண்டது போலதான், பெங்களூரு மறைவிடத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க வந்து இறங்கியது, என்.எஸ்.ஜி. அதிரடிப்படை!

சென்னையில் இருந்து அதிரடிப்படை விமானம் மூலம் பெங்களூரு வந்து சேர்ந்தது. இவர்களது விமானம், ஏதாவது ஒரு விமானப்படை தளத்தில் தரையிறங்கினாலாவது, ரகசியமாக இருந்திருக்கும். ஆனால், விமானம், பெங்களூரு பயணிகள் விமான நிலையத்தில் வந்து இறங்கியது.

என்.எஸ்.ஜி. அதிரடிப் படையினர் பெங்களூரு விமான நிலையக் பில்டிங்குக்குள், அங்கிருந்த பயணிகளை கடந்து வெளியே வந்தபோது, ‘புல்லட் ஃப்ரூப்’, கவச உடைகள், பல்வேறு வகையான வெடிபொருள்கள், நவீன ஆயுதங்களுடன் அதிரடித் தாக்குதலுக்குத் தயாராக இருந்தனர்.

பெங்களூரு விமான நிலையத்தில் விமானத்தில் செல்வதற்காகக் காத்திருந்த பயணிகள் அனைவரும், கறுப்புப் பூனைகளையும், சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வு குழுவினரையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பெங்களூருவில் முக்கிய ஆபரேஷன் ஒன்று நடக்க போகிறது என்பது எந்த ரகசியமும் இன்றி, அனைவருக்கும் தெரிந்து போனது.

இது நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், சி.பி.ஐ.யின் காவலிலிருந்து தப்பிய சண்முகம் தற்கொலை செய்துகொண்டதில், சி.பி.ஐ.க்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது. அது நடந்து சில நாட்களில், கோவையில் இவர்கள் சுற்றிவளைத்த டிக்சனும், குணாவும், இவர்கள் கையில் சிக்காமல் (கடிதம் எழுதி வைத்துவிட்டு) தற்கொலை செய்த சம்பவம், பத்திரிகைகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

அதன்பின் நடக்கும் பெரிய அதிரடி ஆபரேஷனுக்காக பெங்களூரு போய் இறங்கியவர்கள், எந்தளவுக்கு ரகசியம் காத்திருக்க வேண்டும்? அதுவும் அந்த சமயத்தில் இந்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்தது. சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வு குழுவின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன.

ஆனால், ஆகஸ்ட் 2-ம் தேதி, படு வெளிப்படையாக பெங்களூரு போய் இறங்கியது, அதிரடிப்படையும், சி.பி.ஐ. டீமும்!

விமான நிலையத்தில் இருந்து இறங்கிய இவர்கள், ஏதாவது ரகசிய இடத்துக்கு சென்றிருந்தாலாவது பரவாயில்லை. விமான நிலையத்தில் இருந்து நேரே, போராளிகளின் மறைவிடம் இருந்த இந்திரா நகர் வீட்டை நோக்கிச் சென்றனர். பத்திரிகையாளர்களும், இவர்களை தொடர்ந்து, இந்திரா நகர் ஏரியாவுக்கு போய் சேர்ந்தனர்.

பட்டப்பகலில் நடந்த ஆபரேஷன் இது!

இவர்களது அதிரடி திட்டம் என்ன?

அப்பாவிகள் போலத் தோற்றமளிக்கும் இரு அதிகாரிகள் சாதாரண உடையில் சென்று அந்த வீட்டின் கதவைத் தட்டி, ஒரு முகவரியை விசாரிப்பது என்றும், அப்போது கறுப்புப் பூனைப் படையினர் முக்கிய இடங்களில் நிலைகொள்வது என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் அவ்வாறு செய்தால் வீட்டுக்குள் இருப்பவர்களுக்குச் சந்தேகம் ஏற்படக் கூடும். ஆனால், பகல் நேரத்தில் என்றால் சாதாரணமாகத் தோன்றும் என்று திட்டமிட்டிருந்தனர்.

திட்டப்படி, விமான நிலையத்தில் இருந்து சென்றவர்கள், இந்திரா நகரில் அந்த வீட்டை சுற்றி மறைந்து நின்றிருந்தனர் (இவர்கள் மறைந்து நிற்பது, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தெரியும்)

சாதாரண உடையில் இரு அதிகாரிகள், அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினர்.

கதவையொட்டி இருந்த ஜன்னல் கதவு சற்று திறந்தது. ஆனால், உடனே மூடப்பட்டுவிட்டது.

எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிவராசனும், மற்றவர்களும், தமது வீட்டை சுற்றி மறைந்து நிற்பவர்களை பார்த்து விட்டிருக்க கூடும். எப்படியோ, உள்ளே இருந்தவர்கள் அலர்ட் ஆகி விட்டனர் என்பது, தெளிவாகத் தெரிந்தது.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s