ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 52

விடுதலைப் புலிகளை பெங்களூருவில் மறைத்து வைத்த ‘எதிர்பாராத நபர்’ ரங்கநாத்!

குளத்தான், அரசன் ஆகிய காயமடைந்த விடுதலைப்புலிகள் இருவரும் இலங்கையில் நடந்த யுத்தத்தில் காயமடைந்து, மருத்துவ சிகிச்சைக்காகத்தான் தமிழகம் வந்தனர். அவர்கள் எதற்காக பெங்களூருவில் சயனைட் குப்பியை கடித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

இந்தக் கேள்விக்கு, சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவினருக்கு முதலில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த கேள்விக்கான பதில், இரு நாள்களுக்குப் பின்னர், தமிழகத்தில் உயிருடன் பிடிபட்ட இளம் விடுதலைப்புலி மூலம் தெரியவந்தது. பொலீசாரால் சூழ்ந்து கொள்ளப்பட்டால் சயனைட் குப்பியை மென்று தின்னுமாறு காயமடைந்த விடுதலைப்புலிகள் அனைவருக்கும் திருச்சி சாந்தன் உத்தரவிட்டுள்ளதாக, அந்த விடுதலைப்புலி தெரிவித்தார்.

இதை தெரிந்து கொள்வதற்குள், நான்கு விடுதலைப் புலிகள் தற்கொலை செய்துகொண்டு விட்டனர்.

டிக்சன், குணா தற்கொலையை அடுத்து கோயமுத்தூர் மறைவிடம் ஜூலை 28-ம் தேதி தெரியவந்தது. இதையடுத்தே, தமிழகத்தில் இருந்த சிவராசன் குழுவினர் கர்நாடகா வந்தனர் என்று மட்டும்தான், டோமலூரில் பிடிபட்ட இளம் விடுதலைப்புலி மிரேஷ் கூறினார். வேறு எதுவும் அவருக்கு தெரியவில்லை.

பெங்களூரு அருகே, டோமலூர் வீட்டில்தான் சிவராசன் குழுவினர் முதலில் தங்கினர். அந்த வீட்டுக்கு சி.பி.ஐ. சென்றபோது, அங்கிருந்த குளத்தான், அரசன் ஆகிய இருவரும் சயனைட் குப்பி கடித்து தற்கொலை செய்துகொண்டனர். இதனால், மீண்டும் சிவராசன் குழுவினர் அங்கு வர சான்ஸே இல்லை.

அந்த வீட்டில் இருந்து மூர்த்தியால் அழைத்துச் செல்லப்பட்ட மற்ற காயமடைந்த விடுதலைப்புலிகளும், தடயம் ஏதுமின்றி மாயமாக மறைந்து விட்டனர்.

பெங்களூருவில் இருந்த திராவிடர் கழக இளைஞரணியை சேர்ந்த ஒருவரின் உறவினர்களது வீடுகளில் 3 பெண் விடுதலைப்புலிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக மூர்த்தி கூறியதை சி.பி.ஐ. தெரிந்து கொண்டாலும், திராவிடர் கழக இளைஞரணியை சேர்ந்தவர் யார் என்பது சி.பி.ஐ.க்கு தெரியவில்லை.

மொத்தத்தில், சிவராசனும், அவருடன் இருந்தவர்களும் பெங்களூருவில் எங்கோ மறைந்திருக்கிறார்கள் என்பதை தவிர, சி.பி.ஐ. புலனாய்வு குழுவிடம் வேறு எந்த தகவலும் இல்லை. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுதான் அவர்களை எங்கோ மறைத்து வைத்திருக்கிறது என்ற விபரம் மட்டும் தெரிந்திருந்தது.

அதே நேரத்தில், விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பற்றி மற்றொரு தகவலும் சி.பி.ஐ.க்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இலங்கையில் நடந்த யுத்தத்தில் காயமடைந்த விடுதலைப்புலிகளை விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுதான் கவனித்துக்கொண்டிருந்தது என்பதே அந்த விஷயம்.

இதை வைத்து, விடுதலைப் புலிகளை பெங்களூருவில் ட்ரேஸ் பண்ண முயன்றது, சி.பி.ஐ.

பெங்களூரு பொலீசாரிடம் இந்த விபரத்தை தெரிவித்த சி.பி.ஐ., “பெங்களூருவுக்கு புதிதாக வரும் தமிழர்களை ரகசியமாகக் கவனியுங்கள். அப்படி வரும் ஆட்களில், யாராவது மருத்துவ சிகிச்சைக்கு – முக்கியமாக உடலில் ஏற்பட்ட பெரிய காயங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு – வருகிறார்களா என்பதை கண்காணியுங்கள் ” என அவர்களிடம் கூறினார்கள்.

சிவராசன், திருச்சி சாந்தன் ஆகியோர் பெங்களூரு வந்த பிரிமியர் பத்மினி பியட் கார், பச்சை வண்ண மாருதி ஜிப்ஸி ஜீப் பற்றிய விவரங்களை கர்நாடக பொலீசாருக்கும் தெரியப்படுத்தினார்கள்.

பெங்களூரு போலீஸ், தமிழக ரிஜிஸ்ட்ரேஷனுடன் கூடிய இந்த வாகனங்களை தேடத் தொடங்கினர்.

இந்த ஆபரேஷனுக்காக சி.பி.ஐ. அழைத்துவந்த டாக்டர் சயனைட் எதிர்ப்பு மருந்து கொடுத்தும், டோமலூர் வீட்டில் அரசனையும், குளத்தானையும் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது. இதனால், சிவராசனை தேடிப் போவதற்கு முன், வீரியம் மிக்க சயனைட் எதிர்ப்பு மருந்து தேவை என டில்லிக்கு தகவல் தெரிவித்தார்கள், பெங்களூருவில் இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள்.

இதுவரை சி.பி.ஐ. தெரிந்து கொண்ட தகவல்களின்படி, காயமடைந்த விடுதலைப்புலிகளை வைத்திருப்பதற்காக, பெங்களூருவில் 2 வீடுகளை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வாடகைக்கு எடுத்திருந்தது.

ஒன்று இந்திரா நகர் வீடு. மற்றொன்று டோமலூரில் இருந்த வீடு. இந்த இரண்டு வீடுகளிலும் சி.பி.ஐ. புகுந்து, தேடிவிட்டது.

இந்த இரு வீடுகளையும் வாடகைக்கு பிடித்துக் கொடுத்த விடுதலைப் புலிகளின் பெங்களூரு ஆதரவாளர் ஜகன்னாதனின் உதவியுடன் மற்றொரு மறைவிட வீட்டைப் வாடகைக்கு பிடிக்கும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை ஜகன்னாதனிடம் இருந்து தெரிந்து கொண்டது சி.பி.ஐ.

இதனால், விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர், பெங்களூருவில் தங்குவதற்கு வீடு ஒன்றை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என ஊகித்த சி.பி.ஐ., வீடு பிடித்துக் கொடுக்கும் புரோக்கர்களை தொடர்பு கொண்டு விசாரிக்குமாறு பெங்களூரு போலீஸை கேட்டுக் கொண்டனர்.

ஒருவகையில் சொன்னால், சி.பி.ஐ.யின் இந்த ஊகம் சரியாகத்தான் இருந்தது. பெங்களூருவில் வீடு பிடிக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருந்தார், சுரேஷ் மாஸ்டர்.

பெங்களூருவில் ரங்கநாத் என்ற தமிழர் லேத் பட்டறை வைத்திருந்தார். தொழில் நொடித்துப்போன நிலையில் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த அவர், உள்ளூர் தமிழ்ப் பிரமுகர் ஒருவருக்கு தமது லேத் பட்டறையை விற்பது குறித்துப் பேரம் பேசிக்கொண்டிருந்தார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி, அந்த உள்ளூர் தமிழ்ப் பிரமுகர் மூலம் ரங்கநாத்தைத் தொடர்பு கொண்டார் சுரேஷ் மாஸ்டர்.

தனக்காகவும், காயமடைந்த தனது நண்பர்கள் சிலருக்காகவும் மாற்று ஏற்பாடு செய்யும் வரை, தாற்காலிகமாகத் தங்குவதற்கு வீடு தேவை என சுரேஷ் மாஸ்டர் கூறினார். அதற்காக, சுரேஷ் மாஸ்டரால் தனக்குப் பண உதவி செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொண்டார் ரங்கநாத்.

புட்டனஹெல்லி என்ற இடத்தில் நண்பருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் ரங்கநாத் வசித்து வந்தார். அந்த வீட்டிலேயே அவர்களை தற்காலிகமாக தங்கவைக்க, ரங்கநாத் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். அன்றிரவே, தமது வீட்டுக்கு வரலாம் எனவும் கூறிவிட்டார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் சிவராசன், சுபா, நேரு மற்றும் சிலர் மாருதி ஜிப்ஸி ஜீப்பில் வந்து, ரங்கநாத் வீட்டில் இறங்கினர்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என சி.பி.ஐ. வலைவீசி தேடிக்கொண்டிருந்த சிவராசன், சுபா, நேரு ஆகியோர், ரங்கநாத்தின் இரு அறைகள் கொண்ட அந்த வீட்டின் ஓரு அறையில் தங்கியிருந்தனர்.

இவர்களது மறைவிடத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. செய்த சிஸ்டமேட்டிக் ஏற்பாடுகள் எல்லாமே, காட்சிக்குள் எதிர்பாராத விதமாக ரங்கநாத் வந்ததால், செயலற்றுப் போயின.

சிவராசன் குழுவை பிடிப்பதற்கு, பெங்களூருவில் வீடு வாடகைக்கு பிடித்துக் கொடுப்பவர்கள் மூலம், சி.பி.ஐ. வலை விரித்திருந்தது. அத்துடன், பெங்களூருவில் இருந்த திராவிடர் கழக உறுப்பினர்கள், மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பலரும் கண்காணிக்கப்பட்டு கொண்டிருந்தார்கள்.

பெங்களூருவில் விடுதலைப்புலிகளுக்கு வழக்கமாக உதவும் ஆதரவாளர்கள் மூலம் சுரேஷ் மாஸ்டர் வீடு பிடிக்க முயற்சித்து இருந்தால், உடனடியாக சி.பி.ஐ.க்கு தகவல் எளிதாக கிடைத்திருக்கும்.

ஆனால், இதுவரை அறிமுகம் இல்லாத ரங்கநாத், திடீரென காட்சிக்குள் வந்ததால், புலனாய்வாளர்கள் பாடு கேள்விக்குறியாகிவிட்டது.

ரங்கநாத்துக்கு தமிழ்ப் பற்றுள்ள எந்த அமைப்புகளுடனும் தொடர்பு இல்லை. இதனால், அவரது வீட்டில் சிவராசன் குழுவினர் தங்கியிருக்க முடியும் என்ற விஷயம், சி.பி.ஐ. உட்பட, யாராலும் ஊகிக்க முடியாத விஷயமாகவே இருந்தது.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s