அம்மு முதல் அம்மா வரை : பகுதி 5

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் புதுக் கதாநாயகியாக ஆகிவிட்ட ‘ஜெயலலிதா!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-5)

சிவாஜியை வைத்து நிறைய படங்களை எடுத்த இயக்குநர் பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து ஒரு படமெடுக்க நினைத்தார்.

அதுதான் ‘ ஆயிரத்தில் ஒருவன்!

’ எம்.ஜி.ஆருக்கும் பந்தலுவின் டைரக்ஷனில் நடிக்க நீண்ட நாட்களாக ஆசை.

காரணம் , பி.ஆர். பந்தலு ஒரு தேசபக்தி ஸ்பெஷலிஸ்ட்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘ கப்பலோட்டிய தமிழன்’ படங்களெல்லாம் ஹீரோயிஸத்தோடு தேசபக்தியையும் தூக்கிப் பிடிக்கும் ரகம்.

எம்.ஜி.ஆருக்கு இந்த ஃபார்முலா மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் , தி.மு.கவின் கொள்கைக்குக் கட்டுப்பட்டு ‘ஆயிரத்தில் ஒருவன் ’ தேசியம் பேசவில்லை.

மற்றபடி எல்லா விஷயங்களையும் எம்.ஜி.ஆர். பந்துலுவின் பொறுப்பிலேயே விட்டுவிட்டார்.

அப்போது எம்.ஜி.ஆர். படத்தில் ஆஸ்தான கதாநாயகி சரோஜா தேவிதான்.

ஆனால், சரோஜா தேவிக்கும் பந்துலுவுக்கும் ஏதோ பிரச்னை. அதிர்ஷ்டக் காற்று ஜெயலலிதா பக்கம் வீசியது.

‘ சரோஜா தேவிக்குப் பதிலாக அம்முவை நாயகியாக்கிவிடலாமே ’ என்றார்.

எம்.ஜி.ஆருக்கு அதில் இஷ்டமில்லை.

‘அவர் நடித்த படத்தின் சில காட்சிகளையாவது பார்த்துவிட்டு முடிவு செய்யலாமே! ’ என்றார்.

சின்ன வயதில் ‘பாக்தாத் திருடன்’ படப்பிடிப்பில் இருந்த அம்மாவைப் பார்க்க ஜெயலலிதா வந்தபோது, எம்.ஜி.ஆரைப் பார்த்திருக்கிறார்.

அப்போது ஜெயலலிதாவுக்கு வயது ஐந்து.

ஏழு வருஷங்களுக்குப் பின்னர் சென்னை சட்டக் கல்லூரி விழாவில் ஜெயலலிதா நடனமாடிய போதும் பரிசு கொடுக்க எம்.ஜி.ஆர். வந்திருந்தார்.

ஜெயலலிதா ரொம்பவும் சின்னப் பெண் என்று ஜோடியாக நடிக்க எம்.ஜி.ஆர். மறுத்துவிடுவாரோ என்று சந்தியாவுக்கு டென்ஷன்.

அதுவரைக்கும் ஜெயலலிதாவுக்காக சந்தியா யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை.

எம்.ஜி.ஆர். மட்டும் சரி என்று சொல்லாவிட்டால் கொஞ்சம் கஷ்டம்தான்.

விஜயா ஸ்டுடியோ. ஜெயலலிதா நடித்த சில காட்சிகளைப் பார்க்க எம்.ஜி.ஆர். , ஜானகியோடு வந்திருந்தார்.

ஜெயலலிதா , சந்தியாவோடு வந்திருந்தார்.

ஜெயலலிதா நடித்த ‘சின்னத கொம்பே’, ‘மனே அளியா’ கன்னடப் படங்களிலிருந்து பாடல் காட்சிகளும் குளோஸப் காட்சிகளும் திரையில் ஓடின.

ஒரு மணி நேரம் வரை ஓடிய காட்சிகளைச் சலனமில்லாமல் பார்த்துவிட்டு, கடைசியில் ஓகே சொல்லிவிட்டு , எம்.ஜி.ஆர். போயே போய்விட்டார்.

எம்.ஜி.ஆரின் புதுக் கதாநாயகியாக ஆகிவிட்ட ஜெயலலிதா , பொம்மை பத்திரிகையில் அட்டைப் படமாக மின்னிக்கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர். முடிவு செய்துவிட்டால் யாராலும் மாற்ற முடியாது.

இனி சினிமாதான் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டது.

ஜெயலலிதாவுக்கு இப்போது திடீரென்று கல்லூரி ஞாபகம் வந்தது. ஒரே ஒரு நாள் கல்லூரிக்குப் போய்விட்டு வரலாமே என்று நினைத்தார்.

அவரோடு படித்தவர்களில் பாதிப் பேர் ஸ்டெல்லா மேரீஸில் படித்துக்கொண்டிருந்தார்கள்.

ஏற்கெனவே பணம் கட்டியிருந்ததால் , ஜெயலலிதா பெயரும்  மாணவிகளின் வருகைப் பட்டியலில் இருந்தது.

ஒரு வழியாக வகுப்பைத் தேடிக் கண்டுபிடித்து உள்ளே வந்து உட்கார்ந்துவிட்டார்.

வகுப்பு ஆரம்பமானது. பேராசிரியர் பாடம் எடுக்க, எடுக்க, எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

ayirathil_aruvan1 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் எம்.ஜி.ஆரின் புதுக் கதாநாயகியாக ஆகிவிட்ட ‘ஜெயலலிதா!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-5) ayirathil aruvan1

‘ நீ ஏன் நோட்ஸ் எழுதாம சும்மா இருக்கே ?’ ‘ ம்… நோட் புக் , பேனா எதுவும் கொண்டு வரலை, மேடம்!’

‘பின்னே எதுக்கு வந்தே ?’ பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார் ஜெயலலிதா.

பேராசிரியர் ஒரு மாதிரியாக முறைக்க , வேறு வழியில்லாமல் பாதியிலேயே கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டார் ஜெயலலிதா.

அப்போது எல்லையில் போர் மூண்ட நேரம்.

எல்லைப் பகுதியிலிருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்த தமிழ் சினிமாக் கலைஞர்கள் பத்து நாள் சுற்றுப்பயணம் போயிருந்தார்கள்.

கடைசியாக ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்திக்க குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் போனார்கள்.

எல்லைக்குப் போய் பாட்டுப் பாடி, நடனம் ஆடியதைக் கேள்விப்பட்ட ஜனாதிபதி, அதை இங்கே செய்துகாட்ட முடியுமா என்று கேட்டவுடன் சீனியர் நடிகைகளெல்லாம் பின்வாங்கிவிட்டார்கள்.

கூட்டத்திலேயே சின்னப் பெண்ணாக இருந்த ஜெயலலிதாதான் மாட்டிக்கொண்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் ஆர்மோனியத்தை தட்ட , பி.சுசீலா பாட , ‘ கண்ணன் என்னும் மன்னன் பெயரை… ’ அதே ‘ வெண்ணிற ஆடை ’ பாடலுக்கு ஜெயலலிதா நடனம் ஆட , மறக்காமல் ஜனாதிபதி தெலுங்கில் பாராட்டினார்.

ஜெயலலிதாவுக்குக் கிடைத்த முதல் பெரிய பாராட்டு அது.

‘ ஆயிரத்தில் ஒருவன் ’ படப்பிடிப்பு ஆரம்பமானது.

பந்துலு டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். என்பதோடு சந்தியாவின் பதினாறு வயதுப் பெண் எம்.ஜி.ஆருக்கு ஜோடி என்பதுதான் பத்திரிகைகள் வெளியிட்ட செய்தி.

அப்போது எம்.ஜி.ஆருக்கு வயது ஐம்பதுக்கும் கொஞ்சம் அதிகம்.

24-1456298028-jayalalitha34666 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் எம்.ஜி.ஆரின் புதுக் கதாநாயகியாக ஆகிவிட்ட ‘ஜெயலலிதா!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-5) 24 1456298028 jayalalitha34666

‘ வெண்ணிற ஆடை ’ கடைசிக் கட்ட படப்பிடிப்பில் இருந்தபோதே  ‘ ஆயிரத்தில் ஒருவன் ’ படத்தில் நடிக்க ஜெயலலிதா ஒப்பந்தமாகி இருந்தார்.

ஒரு தடவை ‘ பணம் படைத்தவன் ’ படப்பிடிப்புக்காகப் பக்கத்து செட்டிலிருந்த எம்.ஜி.ஆர். , ‘ வெண்ணிற ஆடை ’ படப்பிடிப்பைப் பார்க்க வந்துவிட்டார்.

எம்.ஜி.ஆரைச் சுற்றிக் கூட்டமாக இருந்ததால் , ஜெயலலிதா ஒதுங்கியே நின்றிருந்தார்.

படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த பிறகும் அவரைப் பார்த்து பேசவில்லை என்றால் கோபித்துக் கொள்வார் என்று சமாதானம்  சொல்லி  ஜெயலலிதாவை  எம்.ஜி.ஆருக்கு வணக்கம் சொல்ல வைத்தார் ஸ்ரீதர்.

ஆயிரத்தில் ஒருவனில் எம்.ஜி.ஆருடனான முதல் காட்சியே முதலிரவு காட்சிதான்.

‘நாணமோ இன்னும் நாணமோ’ பாடல் வரி ஒலிக்க ஆரம்பித்தாயிற்று.

ஜெயலலிதாவுக்கு  நாணத்துக்குப் பதிலாக நடுக்கம் வந்திருந்தது.

காரணம் , அதுவரை எந்தவொரு  ஆணிடமும் அவ்வளவு நெருக்கமாக  நின்று பேசியதில்லை.

அப்படியெல்லாம் நடுங்கிய ஜெயலலிதா , அடுத்த நாள் எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்கும்படி ஒரு காரியம் செய்தார்.

படப்பிடிப்பில் மற்ற நடிகர்களின் முன்பு, நடிகைகள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பது தமிழ் சினிமாவில் இன்றைக்கும் மரியாதைக் குறைவான விஷயம்.

சீனியர் நடிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் செட்டுக்கு வந்தால் எழுந்து நின்று வணக்கம் சொல்லியாக வேண்டும்.

கூடவே பணிவாக நின்று புகைப்படக்காரர் காமிராவை மூடி வைக்கும் வரை சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

கான்வெண்ட் கலாசாரத்தில் வந்த ஜெயலலிதாவுக்கு இதெல்லாம் புதுசு.

பந்துலு பழைய காலத்து டைரக்டர்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் வசதியாக ஒரு நாற்காலியைப் போட்டுக் கொள்வார்.

எதிரே மேஜையில் வெற்றிலைப் பெட்டி, ஐஸ் வாட்டர்.

வெற்றிலையைக் குதுப்பிக்கொண்டே காட்சியை யோசித்து ரொம்பப் பொறுமையாகத்தான் டேக்குக்குப் போவார்.

அவ்வப்போது ஜெயலலிதாவை ‘குழந்தேய்.. குழந்தேய்’ என்று கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து, உபதேச மழையாகக் கொட்டுவார்.

யூனிட்டில் இருப்பவர்கள் எல்லோருமே சீனியர்கள்.

ஜெயலலிதா மட்டும்தான் சின்னப்பெண்.

ஸ்ரீதர் யூனிட் போல இங்கே ஜாலியாகப் பேசி சிரித்துக் கொண்டிருக்க முடியாது.

கொஞ்சம் அதிகமாகச் சிரித்தாலே சீரியஸாக முறைப்பார்கள்.

ஜெயலலிதாவின் சுதந்தரம் சுத்தமாகப் பறிபோயிருந்தது.

செட்டுக்கு வந்ததும் , டைரக்டருக்குப் பக்கத்திலேயே சேர் போட்டு , அதில் கால் மேல் கால் போட்டு , ஆங்கில நாவலைப் படிக்க ஆரம்பித்திருந்தார் ஜெயலலிதா.

எல்லோருக்கும் எரிச்சல். எம்.ஜி.ஆருக்கும்.

டைரக்டர் கூப்பிட்டு சந்தியாவிடம் நிலைமையைச் சொன்னார்.

‘இதோ பாரும்மா, இதெல்லாம் எனக்கு ஒத்து வராது. நான் ஆரம்பத்துலேயே வேணாம்னு சொன்னேன். நீதான் கேட்கலை.

இப்படி நிக்கணும் , இங்கே உட்காரணும்னு கண்டிஷனெல்லாம் போட்டா நாளையிலேர்ந்து நான் நடிக்க வரவே மாட்டேன்.

’சந்தியாவிடம் சத்தமாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார் ஜெயலலிதா.

‘ என்னம்மா விளையாட்டுத்தனமாப் பேசுறே… படம் ஆரம்பிச்சாச்சு. இனிமே ஆக்ட் பண்ண முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம் ?’ கொஞ்சம் கோபமாகவே கேட்டார் சந்தியா.

‘I don’t care! ! ’ அதுதான் ஜெயலலிதா! ரொம்ப நாள் கழித்துதான் ஜெயலலிதா இறங்கிவந்தார்.

அதற்குள் சினிமா கலாசாரம் ஜெயலலிதாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்திருந்தது.

காலையில் எல்லோரும் வருவதற்கு முன்பாகவே செட்டுக்கு வந்து காத்திருப்பார்.

சீனியர் நடிகர்களெல்லாம் வந்தவுடன் அவசர அவசரமாக ஒரு நமஸ்காரத்தை உதிர்த்துவிட்டு ஓரமாகப் போய் உட்கார்ந்துவிடுவார். ‘

ஷாட் ரெடி ’ யென்று உதவி இயக்குநர் கூப்பிடும் வரை நாவலே கதி.

ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் பட்டியலில் சார்லஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டேன், ஷிட்னி ஷெல்டன் உண்டு.

சாமர்ஸெட்டின் கவிதைகள் பிடிக்கும்.

படப்பிடிப்பு நேரத்தில் ஜெயலலிதாவை புத்தகமும் கையுமாக செட்டில் பார்த்த யூனிட் ஆட்கள்தான் அதிகம்.

போயஸ் தோட்டத்தில் அவர் வீட்டில் ஒரு பெரிய நூலகம். அதில் அரசியல் புத்தகம் இல்லை. எல்லாமே நாவல்கள்தான்.

அதிலும் தமிழைவிட ஆங்கிலம்தான் அதிகம்.

1965. அப்போது தமிழ்நாட்டில் இந்திப் போராட்டம் உச்சத்தில் இருந்தது.

தி.மு.க. நடிகர்களெல்லாம்  போராட்டத்தில் கலந்துகொண்டால் சினிமாத் தொழில் பாதிக்கப்படுமே என்பதற்காக, எம்.ஜி.ஆர். , எஸ்.எஸ். ராஜேந்திரன் போன்றவர்களுக்கு அண்ணா போராட்டத்திலிருந்து விலக்கு கொடுத்திருந்தார்.

‘ ஆயிரத்தில் ஒருவன் ’ படப்பிடிப்பு  கோவாவில் கார்வார் என்னுமிடத்திலிருந்து 25 கி.மீ தூரமிருக்கும் ஒரு குட்டித்தீவில் நடந்தது.

ஒரு மாதம் வரை பட  யூனிட் கோவாவில் லாட்ஜில் தங்கிக்கொண்டு பொழுது விடியும் நேரத்தில் ஒரு பெரிய மோட்டார் படகில் கிளம்பி கார்வார் போவார்கள்.

அங்கே இருட்டும் வரை படப்பிடிப்பு நடக்கும்.

எப்போதும் ஜெயலலிதா கூடவே வரும் சந்தியா , அன்று காட்டேஜிலேயே தங்கிவிட்டார்.

ஜெயலலிதா கிளம்பி வருவதற்குள்  அவரைப் போலவே உடை அணிந்திருந்த வேறு  ஒரு பெண்ணை ஜெயலலிதாதான் என்று தவறாக நினைத்து மோட்டார் படகில் ஏற்றிவிட்டுக் கிளம்பியது படக்குழு.

மோட்டார் படகின் மேல் தளத்தில் நின்று பேசிக்கொண்டே  அந்தக் குட்டித்தீவை நெருங்கிக் கொண்டிருந்தபோதுதான் , யூனிட் ஆள்கள் அதைக் கவனித்தார்கள்.

முன்னால் ஒரு கட்டுமரத்தில் படு சுறுசுறுப்பாகத்  துடுப்புப் போட்டபடியே ஒரு பெண் போய்க் கொண்டிருந்தாள்.

அவர் , ஜெயலலிதா!

படகைத் தவறவிட்டதும் அங்கிருந்து குறுக்குவழியில் ஆள் அரவமற்ற ஒரு தீவுக்குப் போய், அங்கிருந்து ஒரு கட்டுமரத்தில் 3 கி.மீ துடுப்புப் போட்டபடியே வேறு வழியாகக் குட்டித்தீவுக்கு வந்து சேர்ந்துவிட்டார் ஜெயலலிதா.

அதுவும் யூனிட்டின் மோட்டார் படகையே முந்திக்கொண்டு. அத்தனைத் துணிச்சல்.

‘ ஆயிரத்தில் ஒருவன் ’ படம் முடிவதற்குள்ளாகவே  ஜெயலலிதாவுக்கு அடுத்த படத்துக்கான வாய்ப்பு வந்துவிட்டது.

இதுவும் பெரிய பேனர்தான்.

தேவர் பிலிம்ஸின் ‘கன்னித்தாய்’.

எம்.ஜி.ஆரின் ஜோடி. ஜெயலலிதாவின் சம்பளமும் ஏறியிருந்தது.

ஐந்தாயிரம் ரூபாய்.

தமிழ் சினிமாவில் தேவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.

நெற்றியில் பட்டையும் உடம்பு முழுக்க சந்தனத்தையும் பூசிக்கொண்டு திறந்த மேனியாக, பக்திப்பழமாகக் காட்சி தருவார் தேவர்.

செட்டுக்குள் வந்துவிட்டால் ஒரே வசவு மழைதான்.

அவ்வப்போது பிராயச்சித்தமாக ‘முருகா… முருகா’ என்பார். யூனிட் எப்போதும் கூச்சலும் குழப்பமுமாக இருக்கும்.

கொஞ்சம் தாமதமாகிவிட்டால்கூட போதும், அக்கம் பக்கம் பார்க்காமல் கண்டபடி திட்டிவிடுவார்.

படப்பிடிப்புத் தளத்தை பத்து நாள்களுக்கு மட்டுமே வாடகைக்கு எடுத்திருப்பார் தேவர்.

எல்லாமே அவசர கதியில் நடக்கும்.

படப்பிடிப்பின் நடுவே இடைவேளை, ஓய்வெல்லாம் இருக்காது.

ஒத்திகை இருக்கவே இருக்காது.

நேராக டேக் போய்விட வேண்டியதுதான். வசனம்கூட செட்டில்தான் எழுதுவார்கள். அதைப் படித்துப் பார்க்கக்கூட நேரமிருக்காது.

வசனம் நீளமாக இருந்தால் காமிராவுக்கு முதுகைக் காட்ட வைத்து , ஷாட்டை ஓகே செய்துவிடுவார்கள்.

படித்த பெண் என்பதால் தேவருக்கு ஜெயலலிதா மேல் நிறைய மரியாதை.

‘கன்னித்தாய் ’ முடிந்த கையோடு அடுத்த படமான ‘ முகராசி ’ யிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க வைத்து மொத்தப் படத்தையும் பத்தே நாளில் முடித்துவிட்டார்.

பெரிய குண்டு கண்கள் , கண்ணைப் பறிக்கும் நிறம்.

இளம் வயது எல்லாமே ஜெயலலிதாவுக்குச் சாதகமாக இருந்தது.

மாடர்ன் டிரெஸ் முதல் மடிசார் புடைவை வரை ஜெயலலிதாவுக்கு எந்த உடையிலும் கச்சிதமாக இருந்தார்.

வயதை மறைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஜெயலலிதா வித்தியாசமானவர்.

முதல் படத்தில் நடிக்கும்போதே தன்னுடைய பிறந்த நாளை வெளிப்படையாகச் சொன்னவர்.

பரதநாட்டியமா, வெஸ்டர்ன் டான்ஸா எதுவாக இருந்தாலும் ஜெயலலிதாவுக்குச் சர்வ சாதாரணம்.

எந்த மொழி வசனமாக இருந்தாலும் ஒரே ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு நேராக ஒத்திகைக்கு வந்துவிடுவார்.

தமிழ் சினிமாவும் அப்படியொரு ‘ ஆல்ரவுண்டரு ’ க்காகத்தான் காத்திருந்தது.

‘ ஆயிரத்தில் ஒருவன் ’ படத்தில் ஒரு காட்சி.

அடிமை ஜெயலலிதாவை இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து எம்.ஜி.ஆர். மீட்டு வருவதாக ஒரு காட்சி.

முகத்தை சுளித்து , படபடவென்று எம்.ஜி.ஆரைப் பார்த்துப் பொரிந்து தள்ளவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு முன்கோபம் வருகிற மாதிரி நடிக்கச் சொல்லியா தரவேண்டும் ?

‘ ஷாட் ரெடி ’ என்று சொன்னதும் படுவேகமாக முகபாவத்தை மாற்றி அதற்கேற்றபடி வசனத்தையும் ஏற்ற இறக்கத்தோடு சொல்லி முடித்த ஜெயலலிதாவின் காதோரமாக வந்து எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘ படபடப்பு , வேகம் , துள்ளல் , தைரியம்… இதையெல்லாம் பானுமதியம்மாவுக்கு அப்புறம் உன்கிட்டதான் பார்க்குறேன்!

தொடரும்….

நன்றி : ஜெ ராம்கி , இணயதளம்


ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை காணவும்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s