ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 53

விடுதலைப் புலிகளுக்கு கரூர், குளித்தலை, காங்கயம் பாதையில் வலைவிரித்த தமிழக உளவுத்துறை

ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் சிவராசன், சுபா, நேரு மற்றும் சிலர் மாருதி ஜிப்ஸி ஜீப்பில் வந்து, ரங்கநாத் வீட்டில் இறங்கினர் என கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம். அதுவரை, இந்த ஏற்பாடுகளை செய்த சுரேஷ் மாஸ்டர், விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்பது ரங்கநாத்துக்கு தெரியாது.

ஆனால், சிவராசனும் மற்றவர்களும் தமது வீட்டின் ஒரு ரூமில் தங்க வைக்கப்பட்டபின், அவர்களது அடையாளத்தை தெரிந்து கொண்டார். தனது விருந்தினர்களில் பொலீசாரால் தேடப்படும் சிவராசனும், சுபாவும் உள்ளதை ரங்கநாத் புரிந்துகொண்டார்.

ராஜிவ்காந்தி கொலை விவகாரத்தில், பத்திரிகைகளில் பலத்த விளம்பரங்களுடன் தேடப்படும் நபர்களுக்கு தங்க இடம் கொடுக்கிறோம் என்பதை ரங்கநாத் உணர்ந்திருந்தாலும், அவர் பெரிதாக மிரளவில்லை. ஆனால், அவரது மனைவி மிருதுளா பீதியில் நடுங்கினார்.

இருந்தபோதிலும், கணவரின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யப் பயந்தார் மிருதுளா.

பெங்களூருவில் விடுதலைப்புலிகளுக்கு வாடகைக்கு வீடு பிடிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தோம். இப்போது ரங்கநாத்தின் உதவியுடன் அதுவும் சுலபமாகியது.

சுரேஷ் மாஸ்டர் ரங்கநாத்தைப் பயன்படுத்தி, காயமடைந்த விடுதலைப்புலிகளைத் தங்கவைப்பதற்காக ஆனைக்கல் என்ற இடத்தில்ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தார். ஆனால், அந்த வீடு வசதியானதாக இல்லை. இதையடுத்து மேலும் இரு வீடுகள் வாடகைக்குக் கிடைக்க உதவினார் ரங்கநாத். இந்த வீடுகள் பெங்களூரு சிட்டிக்குள் இல்லை என்பதால், வாடகைக்கு பிடிக்க சுலபமாக இருந்தது.

இவற்றில் ஒரு வீடு, முத்தடி என்ற இடத்திலும், மற்றொன்று பிரூட்டா என்ற இடத்திலும் இருந்தன. இந்த இரு கிராமங்களும் மாண்டியா மாவட்டத்தில் உள்ளன. திரைப்படப் படப்பிடிப்புக்காக இந்த வீடுகள் தேவை என வீட்டு உரிமையாளர்களிடம் ரங்கநாத் கூறினார்.

விடுதலைப்புலிகளுடன் ரங்கநாத்தும், அவரது மனைவி மிருதுளாவும் மாண்டியா மாவட்டம் சென்றார். ரங்கநாத்தும் அவரது மனைவியும் காயமடைந்த விடுதலைப்புலிகளை கலப்பா என்ற இடத்தில் உள்ள தனியார் நர்சிங்ஹோமில் சேர்த்தனர். காயமடைந்த விடுதலைப்புலிகளைப் பாதுகாக்கும் வகையில் வைத்தியசாலையில் அவர்கள் இருந்தனர்.

இருவரும் பெங்களூருவாசிகள் என்பதுடன், அந்த தனியார் நர்சிங்ஹோமில் இருந்த ஊழியர்கள் சிலரும் அவர்களை அறிந்திருந்தனர்.

கர்நாடகாவில் இப்படி நடந்துகொண்டிருக்க, தமிழகத்தில் வேறு ஒரு சம்பவம் நடந்தது.

விடுதலைப்புலிகளின் பொட்டு அம்மான் பிரிவை சேர்ந்த சிவராசன், சுபா, நேரு ஆகியோர், அரசியல் பிரிவை சேர்ந்த திருச்சி சாந்தனின் பாதுகாப்புக்குள் வந்த பின்னர், சிவராசன் ஒயர்லெஸ் சாதனத்தை திருச்சி சாந்தன் வாங்கிக் கொண்டார். அதற்கு காரணமும் இருந்தது.

அதற்கு முன் திருச்சி சாந்தன் பயன்படுத்திவந்த ஒயர்லெஸ் சாதனம், ஜூலை 28-ம் தேதி கோயமுத்தூரில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் டிக்சன் மற்றும் குணாவால் அழிக்கப்பட்டது. திருச்சி சாந்தனின் ஒயர்லெஸ் ரகசியக் குறியீட்டுக் காகிதங்களும் அப்போது அழிக்கப்பட்டன.

எனவேதான், இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொள்ள, சிவராசனின் ஒயர்லெஸ் சாதனத்தை வாங்கிக் கொண்டார் திருச்சி சாந்தன்.

சிவராசனும், மற்றவர்களும் கர்நாடகா சென்றபோது, இந்த ஒயர்லெஸ் சாதனம் திருச்சியில் உள்ள ஆதரவாளர் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டது. அப்போது திருச்சி சாந்தனும் திருச்சியிலேயே தலைமறைவாக இருந்தார்.

ஆனால் திருச்சி சாந்தனிடம், சிவராசன் ஒயர்லெஸ் சாதனம் மட்டுமே இருந்தது. அதை இயக்குவதற்கான ஒயர்லெஸ் ஆபரேட்டரோ, ரகசியக் குறியீட்டுக் காகிதங்களோ இல்லை.

இதனால், ஒயர்லெஸ் சாதனத்தை எப்படியாவது இயக்கி பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயம், திருச்சி சாந்தனுக்கு ஏற்பட்டது.

இந்த நேரத்தில், திருச்சி முழுவதும் விடுதலைப் புலிகளை வலைவீசி தேடிக்கொண்டு இருந்தனர் தமிழக போலீஸ். இதனால், திருச்சியில் இருந்து இந்த சாதனத்தை இயக்கிப் பார்க்க சாந்தன் விரும்பவில்லை.

திருச்சி சாந்தனுடன், வரதன் என்ற காயமடைந்த ஒரு விடுதலைப்புலி இருந்தார். இவர்களுக்கு கரூர் அருகே செட்டிப்பாளையத்தில் ஒரு மறைவிடம் இருந்தது.

ஒயர்லெஸ் சாதனத்தை கரூர் வரை கொண்டுபோய், அங்கு தனிமையான ஓரிடத்துக்கு எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொள்ள முயலுமாறு இந்த வரதனிடம் கூறினார் திருச்சி சாந்தன்.

“வீட்டுக்குள் இருந்து ஒயர்லெஸ் சாதனத்தை இயக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் தொலைக்காட்சி ஒளிபரப்புப் பாதிக்கும். அதன் மூலம் பொலீசார் உஷாராகிவிடுவார்கள்” என வரதனை எச்சரித்தார், திருச்சி சாந்தன்.

கோவையில் இவர்களது மறைவிடம் போலீசிடம் சிக்கிக் கொண்டது அப்படித்தான் என எழுதியிருந்தோம். கோவையில் ஒயர்லெஸ் சாதனத்தை இயக்கியதால் ஏற்பட்ட சிக்னல் அலைகள், டி.வி. ஒளிபரப்பை இன்ட்டரப்ட் செய்து, அதன் மூலம் மறைவிடம் கண்பிடிக்கப்பட்டது என்பது, திருச்சி சாந்தனுக்கு தெரியும்.

இதனால்தான், வீடுகளுக்குள் வைத்து ஒயர்லெஸ் சாதனத்தை இயக்க வேண்டாம் என, வரதனிடம் எச்சரித்திருந்தார், திருச்சி சாந்தன்.

சரி. ஒயர்லெஸ் சாதனத்தை திருச்சியில் இருந்து கரூர்வரை எப்படி எடுத்துச் செல்வது?

சாதாரண காலங்களில் இப்படியொரு சாதனத்தை மிக சுலபமாக கொண்டுபோய் விடலாம். ஆனால், திருச்சி சாந்தன் திருச்சியில் எங்கோ மறைந்து இருந்து இயங்குகிறார் என்பதை தெரிந்து கொண்ட தமிழக உளவுத்துறை, திருச்சி முழுவதும் வலைவிரித்திருந்தது.

திருச்சி எல்லையை கடக்கும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குள்ளாகின. திருச்சி மெயின் பஸ் ஸ்டான்ட், சத்திரம் பஸ் ஸ்டான்ட், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் என அனைத்து இடங்களிலும், சாதாரண உடையில் உளவுத்துறையினர் சுற்றிக்கொண்டு இருந்தனர். யாராவது, இலங்கை தமிழ் பேசினால், உடனே பிடித்து சோதனையிட்டனர்.

தனிப்பட்ட வாகனம் ஒன்றில் ஒயர்லெஸ் சாதனத்தை எடுத்துச் சென்றால் செக்போஸ்ட்டில் சிக்குவதற்கு சான்ஸ் அதிகம் என கூறிய திருச்சி சாந்தன், ஏராளமான பொதுமக்கள் போய்வரும் அரசு பஸ்களில் பயணம் செய்வதுதான், கரூர்வரை ஒயர்லெஸ் சாதனத்தை எடுத்துச் செல்ல ஒரே வழி என்றார்.

அப்படியும், இப்படியான சாதனம் ஒன்றை கரூர்வரை பஸ்ஸில் கொண்டுபோவதில் மற்றொரு பிரச்னையும் இருந்ததை திருச்சி சாந்தன் தெரிந்து வைத்திருந்தார்.

அது என்னவென்றால், இது நடப்பதற்கு முன் (எம்.ஜி.ஆர். ஆட்சியில்), விடுதலைப்புலிகள் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருந்தபோது, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு ஆபரேஷன் திருச்சியில் இருந்து வெளிப்படையாக இயங்கியது. அப்போது இவர்களது நடமாட்டங்களை தமிழக உளவுத்துறை தடுக்கவில்லை, ஆனால், கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கண்காணித்ததில், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் வட்டம் எந்தெந்த பகுதிகளில் உள்ளது என்பதை, உளவுத்துறை தெரிந்து வைத்திருந்தது. அந்த வகையில், திருச்சியில் இருந்து இயங்கிய புலிகளின் அரசியல் பிரிவினர், திருச்சிக்கு வெளியே எங்கே அடிக்கடி போய் வருகின்றனர் என்பது தமிழக உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

அந்த விபரங்களில் இருந்து திருச்சிக்கு வெளியே, புலிகளின் தொடர்புகள் இருந்த நகரங்கள், கரூர், குளித்தலை, காங்கயம் என்பதை உளவுப்பிரிவு தெரிந்து வைத்திருந்தது. இது, திருச்சி சாந்தனுக்கும் தெரியும்.

இதனால், திருச்சியில் இருந்து வெளியேற வேண்டுமானால், கரூர் பாதையில் உளவுப் பிரிவினர் அதிகம் கண் வைத்திருப்பார்கள் என திருச்சி சாந்தனுக்கு தெரியும். இருந்தாலும், ஒயர்லெஸ் சாதனத்தை இயக்கிப் பார்க்க கரூர் கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.

திருச்சி சாந்தனால் பலத்த எச்சரிக்கை செய்யப்பட்டு, ஒயர்லெஸ் சாதனத்துடன் திருச்சி பஸ் ஸ்டான்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார், காயமடைந்த விடுதலைப்புலி வரதன்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s