ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 54

விடுதலைப்புலி வரதன், செட்டிப்பாளையத்தில் (கரூர் அருகே) வைத்து இயக்கிய ஒயர்லெஸ் சாதனம்!

திருச்சியில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர், திருச்சிக்கு வெளியே எங்கே அடிக்கடி போய் வருகின்றனர் என்பது தமிழக உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது. திருச்சிக்கு வெளியே, புலிகளின் தொடர்புகள் இருந்த நகரங்கள், கரூர், குளித்தலை, காங்கயம் என்பதை உளவுப்பிரிவு தெரிந்து வைத்திருந்தது. இது, திருச்சி சாந்தனுக்கும் தெரியும்.

இதனால், திருச்சியில் இருந்து வெளியேற வேண்டுமானால், கரூர் பாதையில் உளவுப் பிரிவினர் அதிகம் கண் வைத்திருப்பார்கள். இருந்தாலும், ஒயர்லெஸ் சாதனத்தை இயக்கிப் பார்க்க கரூர் கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.

திருச்சி சாந்தனால் பலத்த எச்சரிக்கை செய்யப்பட்டு, ஒயர்லெஸ் சாதனத்துடன் திருச்சி பஸ் ஸ்டான்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார், காயமடைந்த விடுதலைப்புலி வரதன்.

இந்த வரதன், சில மாதங்களுக்கு முன்புதான் தமிழகம் வந்திருந்தார். இதனால் அவர் பக்கா இலங்கை தமிழ் பேசுபவராக இருந்தார். திருச்சி பஸ் ஸ்டான்டிலோ, யாராவது இலங்கை தமிழ் பேசினால், சிவில் உடையில் இருந்த உளவுத்துறையினர், உடனே பிடித்து சோதனையிட்டுக் கொண்டிருந்தார்கள். இதனால், ஒயர்லெஸ் சாதனத்துடன் கரூர் பஸ்ஸில் ஏறிய விடுதலைப்புலி வரதன், மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டியிருந்தது.

அவருடைய நல்லகாலம், திருச்சியில் இருந்து ஒயர்லெஸ் சாதனத்தை அரசு பஸ் மூலம் கரூர்வரை கொண்டுபோய் சேர்க்கும்வரை அவர் சிக்கிக் கொள்ளவில்லை. கரூர் பஸ் ஸ்டான்டில் இருந்து செட்டிப்பாளையத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் மறைவிட வீட்டுக்கும் யாருடைய கண்களிலும் படாமல் கொண்டுபோய் சேர்த்துவிட்டார்.

அதன்பின், அவருக்கு பயம் ஏற்பட்டு விட்டது. திருச்சி சாந்தன் கூறியதுபோல, இந்த ஒயர்லெஸ் சாதனத்தை செட்டிப்பாளயத்தில் உள்ள ஆள்நடமாற்றம் இல்லாத வயல்வெளிக்கு எடுத்து சென்று இயக்கிப் பார்க்க பயந்தார் அவர்.

அப்படி ஒயர்லெஸ் சாதனத்தை வெளியே கொண்டுபோகும்போது யாரக்காவது சந்தேகம் ஏற்பட்டு, போலீஸூக்கு அறிவித்து விடலாம் என்பதே பயத்துக்கு காரணம்.

வீட்டுக்கு வெளியே ஒயர்லெஸ் சாதனத்தை கொண்டு செல்லவும் விருப்பம் இல்லை. ஆனால், அதை இயக்கிப் பார்க்கவும் வேண்டும். என்ன செய்யலாம்?

இந்த நிலையில், முட்டாள்தனமான காரியம் ஒன்றை செய்தார் வரதன். திருச்சி சாந்தனின் கட்டளையை மீறி, செட்டிப்பாளையம் மறைவிட வீட்டில் இருந்தவாறே ஒயர்லெஸ் சாதனத்தை இயக்கினார் வரதன்.

அதன்பின், திருச்சி சாந்தன் செய்த எச்சரிக்கையின்படியே எல்லாம் நடந்தன. இவர் ஒயர்லஸ் சாதனத்தை ஒரு வீட்டில் இருந்து இயக்கியதில், அருகில் இருந்த வீடுகளின் டி.வி. சிக்னல்களில் இடையூறுகள் ஏற்பட்டன. டி.வி. சிக்னல்களில் தடங்கல் ஏற்பட்டால் உடனே தமக்கு அறிவிக்கும்படி, பத்திரிகைகளில் போலீஸ் செய்தி கொடுத்திருந்தனர்.

செட்டிப்பாளையத்தில் குறிப்பிட்ட பகுதியில் இந்த சிக்னல் தடங்கல்கள் ஏற்பட்ட விஷயம் போலீஸூக்கு தெரியவந்தது.

அதன் விளைவு, பொலீசார் மேற்கொண்ட துரித சோதனை நடவடிக்கையில், ஆகஸ்ட் 17-ம் தேதி வரதன் போலீஸில் சிக்கிக் கொண்டார். அந்த மறைவிட வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த சுமதி என்ற பெண்ணும் பிடிபட்டனர்.

அவர்களுடன் சிவராசனின் ஒயர்லெஸ் சாதனமும் போலீஸில் சிக்கியது.

அந்த மறைவிட வீட்டை போலீஸ் சோதனையிட்டதில், சில முக்கிய ஆவணங்களும் சிக்கின. முக்கியமான ஒரு நோட்டு புத்தகம் கிடைத்தது.

விடுதலைப் புலிகளின் அரசியல்பிரிவுக்கு தமிழகத்தில் தலைவராக இருந்த திருச்சி சாந்தனின் நோட்டுப் புத்தகம் அது! அதில், திருச்சி சாந்தனின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் உள்ள அனைத்துப் போராளிகளைப் பற்றிய முழு விவரங்களும் இருந்தன. அவர்களது உண்மையான பெயர், இயக்கத்தில் அழைக்கப்படும் பெயர், சொந்த ஊர், தமிழகத்தில் தங்கியுள்ள முகவரி என அனைத்து விபரங்களும் இருந்தன.

இந்த நோட்டுப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு இந்தியரின் பெயர், இரும்பொறை.

இந்த விபரங்கள் கிடைத்ததை அடுத்து, தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களில், சில விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். சிலர் தப்பிவிட்டனர். திருச்சி சாந்தனும், திருச்சியில் இருந்த தமது மறைவிட வீட்டில் இருந்து தலைமறைவாகி விட்டார்.

ஒயர்லெஸ் சாதனத்தைப் பறிகொடுத்தது, திருச்சி சாந்தனுக்குக் கை ஒடிந்ததுபோல ஆயிற்று. யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைமையகத்துடன் அவர் தொடர்புகொள்ள வேறு வழி இல்லாமல் போனது.

அதன்பின், தமிழகத்தில் இருந்து சிவராசன் குழுவினர் தப்பிச் செல்வதற்கு இலங்கையில் இருந்து எந்த உதவியும் பெற திருச்சி சாந்தனால் முடியாது போயிற்று. இலங்கையில் இருந்த விடுதலைப் புலிகளுடன் அனைத்து தொடர்புகளும் அற்றுப் போயின.

தமிழகத்தில் இப்படி நடக்க, கர்நாடகாவில் என்ன நடந்தது?

சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுப்படை, தொடர்ந்தும் பெங்களூருவில் தங்கியிருந்தது. சிவராசனும், அவருடன் இருந்தவர்களும் பெங்களூரு அல்லது அதற்கு அருகில்தான் தங்கியிருக்க வேண்டும் என சிறப்புப் புலனாய்வுப்படை தேடுதல் குழு உறுதியாக நம்பியது.

அதே நேரத்தில், சிவராசன், சுபா, நேரு ஆகியோரை உயிருடன் பிடிக்க முடியாது என்பதும், குழு உறுப்பினர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

காரணம், அவர்கள் பிடிக்க முயன்றபோது சயனைட் குப்பியை கடித்த விடுதலைப்புலி குளத்தானுக்கு கொடுக்கப்பட்ட சயனைட் எதிர்ப்பு மருந்து, குளத்தானின் மரண அவஸ்தையை நீடித்ததே தவிர மரணத்தைத் தடுக்கவில்லை. இடைப்பட்ட 3 நாட்களில் பெங்களூரு வைத்தியசாலையில் குளத்தான் இருந்தபோது கைதேர்ந்த, வைத்தியர்கள் குழு அனைத்து முயற்சிகளை எடுத்தும், அப்படியிருந்தும் கோமாவில் இருந்து, மரணத்தை தழுவினார் அவர்.

குளத்தானின் மரணத்துடன், பெங்களூருவில் சிவராசனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கக்கூடிய இறுதி வழியும், அடைபட்டு போனது.

‘அடுத்து என்ன செய்வது?’ என ஆலோசித்த சி.பி.ஐ. குழு, தந்திரமான காரியம் ஒன்றை செய்ய முடிவு செய்தது.

அது என்ன தெரியுமா? திராவிடர் கழகப் பிரமுகர் ஒருவரை வைத்து, திருச்சி சாந்தனை வளைத்துப் பிடிக்கும் திட்டம்!

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s