ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 55

ra
சயனைட் குப்பிய கடித்த விடுதலைப் புலிகளை பார்த்து மிரண்டுபோன சி.பி.ஐ. புலனாய்வு டீம்

திராவிடர் கழகப் பிரமுகர் ஒருவரை வைத்து, திருச்சி சாந்தனை வளைத்துப் பிடிக்கும் திட்டம் போடப்பட்டதாக கூறிவிட்டு கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.

சி.பி.ஐ. புலனாய்வு டீம், விடுதலைப் புலிகள் தொடர்பான பழைய வழக்குகள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த திராவிடர் கழகப் பிரமுகர்கள் சிலர், விடுதலைப் புலிகளுடன் மிக நெருக்கமாக இருந்ததும், சிலர் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுடன் தொடர்பு வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இத்தகைய திராவிடர் கழகப் புள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களில் முக்கியமான ஒரு பிரமுகரை சி.பி.ஐ., தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு அழைத்தது.

இந்த தி.க. பிரமுகரை எப்படி சி.பி.ஐ. தேர்ந்தெடுத்து அழைத்தது?

திராவிடர் கழகம் என்பது தமிழ்ப் பற்றுடன், சாதியற்ற சமுதாயத்தை லட்சியமாகக் கொண்ட சமூக இயக்கம். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு திராவிடர் கழகம் தீவிர ஆதரவு அளித்தது.

இதனால், விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் பிரிவு முழுமையாகவே தி.க. பிரிவுகளை மையமாக வைத்தே இயங்கியது. (இதனால்தான், தமிழகத்தில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் பிரிவு ஆட்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக மாறினார்கள்)

திராவிடர் கழக தொண்டர்கள் லட்சியத்தில் உறுதியானவர்களாக இருந்ததால், தமது புலனாய்வில் அவர்களை ஒத்துழைக்க வைக்க முடியாது என்பதை புரிந்துகொண்டது சி.பி.ஐ. ஆனால், அந்த இயக்கத்தின் சில தலைவர்களோ, ‘பாதி லட்சியம் பாதி பிசினெஸ்’ ஆட்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு நிழலான சில பிசினெஸ்கள் உள்ளதை சி.பி.ஐ. தெரிந்துகொண்டது.

அவரைத்தான் தேர்ந்தெடுத்தது, சி.பி.ஐ.

அவரது பின்னணியை ஆராய்ந்தபோது, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு உதவுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்பதும், ஆனால், தமிழகத்தில் செயல்பட்ட விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவுடன் அவருக்கு எவ்விதத் தொடர்பும் அதுவரை இருக்கவில்லை என்பதும் தெரியவந்தது (சிவராசன், புலிகளின் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப்பிரிவை சேர்ந்தவர்)

அத்துடன் இந்தப் பிரமுகர், திருச்சி சாந்தனுக்கு நெருக்கமானவர் என்றும் தமிழக உளவுப்பிரிவு க்யூ பிராஞ்ச் ரிப்போர்ட் கொடுத்திருந்தது. இதனால்தான், இவரை அணுகியது சிறப்புப் புலனாய்வுக்குழு.

தி.க. பிரமுகரிடம் பிரன்ட்லியாக பேச்சை ஆரம்பித்தார்கள், சி.பி.ஐ. புலனாய்வு குழுவை சேர்ந்தவர்கள்.

“சிவராசனை நாங்கள் உயிருடன் பிடிக்க வேண்டும். அதற்காக திருச்சி சாந்தனைச் சந்தித்துப் பேச விரும்புகிறோம். இது புலிகளின் உளவுப் பிரிவுக்கும், எங்களுக்கும் இடையேயுள்ள விவகாரம். புலிகளின் அரசியல் பிரிவினரை தொடவே மாட்டோம். அவர்கள் தாராளமாக இங்கு (தமிழகத்தில்) இயங்கலாம். திருச்சி சாந்தன் தலைமறைவாகியிருக்க அவசியமே இல்லை. அவரை அழைத்து வாருங்கள். நாம் பேசலாம்” என்றார் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர்.

இவர் மூலமாக திருச்சி சாந்தனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது, சி.பி.ஐ. புலனாய்வு குழுவின் ஒரு டீம்.

இந்த முயற்சி தமிழகத்தில் நடந்துகொண்டிருக்க, சிவராசனும் அவருடன் இருந்தவர்களும் மறைந்திருந்த கர்நாடகாவில் என்ன நடந்தது?

தாம் பயன்படுத்திய, பச்சை நிற மாருதி ஜிப்ஸியை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துவிடக் கூடும் என சுரேஷ் மாஸ்டர் கருதியதால், ரங்கநாத் உதவியுடன் அந்த ஜீப்புக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டது. அதேபோல, நீல வண்ண ஃபியட் காரும் வெண்மையானது. இந்த இரு வாகனங்களின் லைசென்ஸ் பிளேட்டுகள் அடிக்கடி மாற்றப்பட்டன.

ரங்கநாத்தின் தொடர்புகளைப் பயன்படுத்தி, பெங்களூரு புறநகர்ப் பகுதியான கோனானகுண்டே என்ற இடத்தில் மற்றொரு வீட்டை வாடகைக்குப் பிடித்தார் சுரேஷ் மாஸ்டர். ஆகஸ்ட் 16-ம் தேதி சிவராசன், சுபா, நேரு மற்றும் சிலர் இந்தப் புதிய வீட்டுக்கு மாற்றப்பட்டனர்.

புதிய வீட்டுக்கு போனாலும், ரங்கநாத்தும், அவரது மனைவி மிருதுளாவும் தங்களுடன் புது வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என சிவராசன் குழுவினர் வலியுறுத்தினர். அத்தம்பதியினரைச் சுதந்திரமாக வெளியேவிட்டால் பொலீசாருக்குத் துப்புக்கொடுத்து விடுவார்கள் என்ற பயமே இதற்குக் காரணம்.

ரங்கநாத்தும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், தனது மனைவியுடன் புதிய வீட்டில் தங்க சென்றார்.

இந்த ரங்கநாத் (பின்னர் சி.பி.ஐ.யால் பிடிக்கப்பட்ட போது) சி.பி.ஐ.க்கு மர்ம மனிதராகவே தெரிந்தார். எந்தவொரு தமிழ் அமைப்புடனும் தொடர்பற்ற, அதற்குமுன் விடுதலைப் புலிகள் என்றால் யார் என்றே தெரிந்திராத அவர், மிகுந்த ஆர்வத்துடன் சிவராசன் குழுவினருக்கு உதவியது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகத்தான் இருக்கிறது.

ரங்கநாத்தும் தன்னுடன் சயனைட் குப்பியை வைத்திருந்ததாக, பின்னர் சி.பி.ஐ. அறிந்து கொண்டது.

நிதி நெருக்கடியில் தவித்த ரங்கநாத், இந்த விடுதலைப்புலிகளை பொலீசாரிடம் ஒப்படைத்து, அவர்களைப் பிடிக்க உதவினால் அரசு தருவதாக அறிவித்திருந்த 15 லட்சம் ரூபா வெகுமதியை வாங்கியிருக்கலாமே! அவ்வாறு அவர் ஏன் செய்யவில்லை என்ற கேள்விக்கும் இன்றுவரை சி.பி.ஐ.-யிடம் பதில் இல்லை.

பெங்களூருவில் இருந்த விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் அனைவரையும் அடையாளம் கண்டது சிறப்புப் புலனாய்வுப்படை. ஆனால், ரங்கநாத் அவர்களில் ஒருவர் அல்ல!

பின்னாட்களில் ராஜிவ் கொலைவழக்கு நடந்தபோதும், ரங்கநாத் தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புரியாத புதிராக இருந்தார். விடுதலைப் புலிகளுக்கு மிகுந்த ஈடுபாட்டுடன் தாம் உதவியது எதற்காக என்பதை அவரால் விளக்கி கூறமுடியவில்லை.

திடீரென, அனைத்து நிகழ்வுகளும் மளமளவென நடைபெறத் தொடங்கின. இந்திரா நகர் வீட்டில் சிறப்பு புலனாய்வுப்படை நடத்திய அதிரடி நடவடிக்கை மற்றும் அரசன், குளத்தான் மரணம் ஆகியவற்றையடுத்து, கர்நாடகத்தில் வதந்தி மேல் வதந்தி பரவிக்கொண்டிருந்தது. பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்தனர்.

முதட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த, காயமடைந்த நபர்கள் குறித்து கிராமவாசிகளுக்கு சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.

மாண்டியா மாவட்ட கிராம வீடுகளில் இருந்த காயமடைந்த விடுதலைப்புலிகளைக் கவனித்துக் கொள்வதற்காக தனது நண்பர் ஒருவரை நியமித்திருந்தார் ரங்கநாத். அவர்தான், முதட்டி கிராம வீட்டில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளையும் கவனித்து கொண்டார். (இந்த நண்பருக்கு தமிழே சரியாக தெரியாது. விடுதலைப் புலிகள் என்றால் யார் என்பதும் தெரியாது. ஆனால், மாண்டியா மாவட்ட கிராம வீடுகளில் இருந்த காயமடைந்த விடுதலைப் புலிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்)

ஆகஸ்ட் 17-ம் தேதி, முதட்டி கிராமத் தலைவர் தமது கிராமத்தில் சந்தேகத்துக்குரிய சிலர் தங்கியிருப்பதாக பொலீசாருக்குத் தெரியப்படுத்தினார். அதே தினத்தில் பிரூட்டா என்ற மற்றொரு கிராமத்திலும் ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய நபர்கள் இருப்பதாக அக்கிராமவாசி போலீஸூக்கு தகவல் கொடுத்தார்.

பொலீசார் உடனே முதட்டி கிராமத்தில் இருந்த வீட்டையும், சற்று நேரம் கழித்து பிரூட்டாவில் உள்ள வீட்டையும் சூழ்ந்து கொண்டனர்.

முதட்டி வீட்டில் 9 விடுதலைப் புலிகளும், பிரூட்டா வீட்டில் 8 விடுதலைப் புலிகளும் இருந்தனர்.

இந்த வீடுகளை கர்நாடக போலீசார் சூழ்ந்துகொண்ட போது, அங்கிருந்த 17 விடுதலைப் புலிகளும் சயனைட் குப்பியை கடித்தனர். 17 பேரில் 12 பேர் சயனைட் குப்பியை மென்று உயிரை மாய்த்துக்கொண்டனர். எஞ்சிய 5 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இறந்தவர்களில் சுரேஷ் மாஸ்டரின் உதவியாளர் மூர்த்தியும் ஒருவர்.

திகைத்துப் போனது, சி.பி.ஐ.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் சி.பி.ஐ. அதிகாரி கூறியதாக வெளியான கட்டுரையில், “இவர்கள் மிக சுலபமாக உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், இலங்கையில் நடந்த போரில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற இங்கு வந்தவர்கள். ராஜிவ் காந்தி கொலையுடன் எந்த தொடர்பும் அற்றவர்கள். இருப்பினும் போலீஸில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சயனைட் குப்பியை கடிக்க துணிந்தார்கள். நாம் (சி.பி.ஐ.) மிரண்டு போயுள்ளோம்” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த இரு கிராம வீடுகளில் நடந்த தற்கொலைகளை அடுத்து, சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப்படை தேடுதல் குழுவின் ஒரு பிரிவு மாண்டியா சென்றது.

இரு வீடுகளையும் வாடகைக்கு பிடித்துக் கொடுத்து, அங்கு தங்கியிருந்த புலிகளை கவனித்துக்கொண்ட நபர் (ரங்கநாத்தின் நண்பர்), இந்த ஏற்பாடுகள் அனைத்தும் ரங்கநாத்தின் ஏற்பாட்டிலேயே நடந்தன என்று விசாரணையின்போது தெரிவித்தார்.

அப்போதுதான் சி.பி.ஐ.க்கு இந்த விவகாரத்தில் ரங்கநாத் என்பவருக்கும் தொடர்பு இருப்பது முதல் தடவையாக தெரியவந்தது.

ஆனால், ரங்கநாத்தின் வீட்டு முகவரி, அவரது கிராம நண்பருக்கே தெரியவில்லை.

தமது வீட்டு முகவரியை நண்பருக்கு தெரிவித்திராத ரங்கநாத், ஒரு துண்டுக் காகிதத்தில் தமது ஆலையின் (லேத் பட்டறை) முகவரியை, மாண்டியாவில் உள்ள தமது நண்பரின் உறவினர் ஒருவரிடம் கொடுத்திருந்தார். மாண்டியா மாவட்டத்தில் வாடகைக்குப் பிடித்த 2 வீடுகளில் ஒன்றை ஏற்பாடு செய்தவர் அவர்.

முதட்டி, பிரூட்டா ஆகிய கிராமங்களில் விடுதலைப்புலிகள் தற்கொலை செய்து கொண்டவுடன், அந்த வீடுகளை வாடகைக்கு பிடித்துக் கொடுத்தது யார் என்பதை விசாரித்த உள்ளூர் பொலீஸ், ரங்கநாத்தின் மாண்டியா நண்பரின் உறவினரை விசாரித்தனர்.

அவர், ரங்கநாத் கொடுத்த முகவரி துண்டுச் சீட்டை போலீஸிடம் கொடுத்தார். இந்த விஷயத்தை உள்ளூர் பொலீஸ், தங்கள் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்கள் மூலம் பெங்களூருவில் உள்ள டி.ஜி.பி.க்கு ரங்கநாத்தின் லேத் பட்டறை முகவரி, போய்ச் சேர்ந்தது.

மறுநாள், கன்னடப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் முதட்டி பிரூட்டா ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் தற்கொலைகள் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. அந்த சமயத்தில் ரங்கநாத் கோனானகுண்டேயில் வாடகைக்கு எடுக்கப்பட்ட புதிய வீட்டில், சிவராசன் மற்றும் விடுதலைப்புலிகளுடன் தங்கியிருந்தார்.

காலையில் பால் வாங்க ரங்கநாத் கடைக்குச் சென்றபோது, அந்தச் செய்தியைப் படிக்க நேர்ந்தது. அதிர்ச்சியால் உறைந்துபோன ரங்கநாத், பத்திரிகைகளுடன் வீட்டுக்குத் திரும்பினார். அந்த வீடே பரபரப்பில் ஆழ்ந்தது.

தொடரும்…

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s