ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 56

விடுதலைபுலிகளை பிடிக்க சி.பி.ஐ. ஒரு திட்டம் போட, ‘தமது பாணியில்’ சுற்றி வளைத்த போலீஸ்!

மறுநாள், கன்னடப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் முதட்டி பிரூட்டா ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் தற்கொலைகள் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. அந்த சமயத்தில் ரங்கநாத் கோனானகுண்டேயில் வாடகைக்கு எடுக்கப்பட்ட புதிய வீட்டில், சிவராசன் மற்றும் விடுதலைப்புலிகளுடன் தங்கியிருந்தார்.

காலையில் பால் வாங்க ரங்கநாத் கடைக்குச் சென்றபோது, அந்தச் செய்தியைப் படிக்க நேர்ந்தது. அதிர்ச்சியால் உறைந்துபோன ரங்கநாத், பத்திரிகைகளுடன் வீட்டுக்குத் திரும்பினார். அந்த வீடே பரபரப்பில் ஆழ்ந்தது. -கடந்த அத்தியாயத்திலிருந்து…

“சி.பி.ஐ. எங்களை விடாமல் துரத்துகிறது. அவர்கள் இங்கேயும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சிவராசன் அப்போது கூறியதாக, மிருதுளா பின்னர் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

தமது வீட்டில் தங்கியிருப்பவர்கள், சி.பி.ஐ.யால் தேடப்படும் விடுதலைப் புலிகள் என்ற பதட்டம் காரணமாக மிருதுளாவுக்குத் திடீரென ஆஸ்துமா அதிகரித்தது. அதனால், அந்த வீட்டிலிருந்து வெளியேறி, டாக்டரிடம் போக வேண்டும் என்றார்.

ஆனால், டாக்டரிடம் போவது என்பதைவிட, விடுதலைப்புலிகள் தங்கியிருந்த அந்த வீட்டை விட்டே வெளியேறுவதே அவரது திட்டமாக இருந்தது.

“வெளியே போனால், நம் அனைவருக்குமே ஆபத்து. போலீஸ் உங்களையும் தேடுகிறார்கள்” என சிவராசன் கடுமையாக எச்சரித்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினார் மிருதுளா!

தனது மனைவியை வைத்தியரிடம் காண்பித்துவிட்டு, மாலையில் திரும்பவும் அழைத்துக் கொண்டு வருவதாக ரங்கநாத் சிவராசனிடம் உறுதியளித்தார். அவர்கள் வெளியேறிச் செல்வதை, விடுதலைப்புலிகள் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மிருதுளாவை எங்கே அழைத்துச் செல்வது?

புட்டனஹள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு எந்த நிமிடத்திலும் சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வு படை வந்து இறங்கி கதவை தட்டலாம் என்பது ரங்கநாத்துக்குத் தெரியும். ஆனால் அங்கேதான், அவர்களது உடைகள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இருந்தன.

ரங்கநாத்தும், மிருதுளாவும் தங்கள் வீட்டுக்கு விரைந்து சென்று அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு, புட்டனஹெள்ளியிலிருந்து வாடகைக்கு அமர்த்திய வேனில், மிருதுளாவின் சகோதரர் வீட்டுக்குச் சென்றனர்.

சாந்தி ஆலிவர் தேவாலய வளாகத்துடன் இணைந்திருந்தது அந்த வீடு. மிருதுளாவின் சகோதரர் மத போதகராக இருந்தார். அவரது வீட்டில் மிருதுளா தங்கிக்கொண்டார். ரங்கநாத் அங்கே தங்காமல், கிளம்பி சென்றார்.

சிவராசன் எச்சரித்தது சரியாகவே இருந்தது.

மாண்டியா பொலிஸிடமிருந்து ரங்கநாத் வீட்டு முகவரியைப் பெற்ற டி.ஜி.பி., பெங்களூரு நகர பொலிஸ் கமிஷனருக்கு அதைத் தெரியப்படுத்தினார். அந்த வீட்டை அடைந்தபோது வீடு பூட்டிக் கிடந்தது. “புட்டனஹெள்ளியிலிருந்து வேன் ஒன்றின் மூலம் அங்கு வந்த, ரங்கநாத்தும், மனைவி மிருதுளாவும் வந்து தமது பொருட்களை எடுத்துக்கொண்டு எங்கோ சென்றனர்” என அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள்.

புட்டனஹெள்ளியியில் வேன் சாரதியையும், அவர் மூலம், மத போதகரின் வீட்டையும் கண்டுபிடிப்பது பொலிசாருக்கு சிரமமாக இல்லை.

ஆகஸ்ட் 18-ம் திகதி மாலையில், மத போதகர் இல்லத்தில் இருந்த மிருதுளாவை அணுகிவிட்டது போலீஸ்.

அவரை விசாரித்தபோது, சிவராசன் குழுவினருடன் தாமும், கணவரும் தங்கியிருந்ததை ஒப்புக் கொண்டார். அவர்கள் இன்னமும் அதே வீட்டில்தான் தங்கியுள்ளார்கள் என்றார். தனியார் கார் ஒன்றில், உதவி பொலிஸ் கமிஷனர் ஒருவருடன் மிருதுளாவை கோனானகுண்டே பகுதிக்கு அனுப்பி வைத்து, அந்த வீட்டை அடையாளம் காட்ட சொன்னது போலீஸ்.

மிருதுளாவும், வீட்டை அடையாளம் காட்டினார்.

அந்த வீட்டில்தான், ராஜிவ் கொலை வழக்கில் சி.பி.ஐ. வலைவிரித்து தேடிக்கொண்டு இருந்த சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், ரங்கன் ஆகியோர் மறைந்திருந்தனர்.

இவர்கள் அனைவரது பெயர்களும் மிருதுளாவுக்கு தெரிந்திருந்த காரணத்தால், யார்யார் வீட்டுக்குள் உள்ளனர் என்பதை சி.பி.ஐ. உறுதி செய்துகொண்டது. திருச்சியில் இவர்கள் தேடிக்கொண்டிருந்த ரங்கன், பெங்களூருவில் இருப்பதை மிருதுளா மூலம் அறிந்து கொண்டது சி.பி.ஐ புலனாய்வு குழு.

சிவராசன் குழுவினரை பச்சை நிற மாருதி ஜீப்பில் பெங்களூரு மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதே ரங்கன்தான் என்பதையும் மிருதுளா தெரிவித்தார்.

இதனால், ரங்கனுக்கு அந்த ஏரியா நன்றாக தெரிந்திருக்கலாம் என ஊகித்துக் கொண்டது சி.பி.ஐ.

கோனானகுண்டேயில் சிவராசன் குழுவினர் இருந்த வீடு அமைந்திருந்த இடம், அதன் அமைப்பு ஆகியவற்றை சி.பி.ஐ. புலனாய்வு குழு ஆராய்ந்தது. சிவராசன் மற்றும் விடுதலைப்புலிகள் தங்கியிருந்த வீட்டின் நுழைவாயிலுக்கு முன், பக்கத்து வீட்டின் பின்பகுதி அமைந்திருந்தது. இரு வீடுகளுக்கும் இடையே சில அடி தூரம்தான் இடைவெளி.

பக்கத்து வீட்டின் உரிமையாளரிடம் விஷயத்தை சொல்லி, உள்ளே நுழைந்தனர் சி.பி.ஐ. புலனாய்வு குழுவினர். அந்த வீட்டின் குளியல் அறையிலிருந்து பார்த்தால், சிவராசன் குழுவினர் இருந்த வீட்டுக்குள் நோட்டமிட முடியும் என்பதை கண்கூடாக கண்டனர்.

பக்கத்து வீட்டுக்குச் சற்றுப் முன்னால் உள்ள ஒரு சந்தில், சி.பி.ஐ. புலனாய்வு குழுவுடன் வந்திருந்த கர்நாடகா போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அது கர்நாடகா போலீஸ் விட்ட கவலையீன பிழைகளில் ஒன்று.

எப்படியென்றால், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து பார்த்தால், இந்த வாகனங்கள் தெரியாது என்பது உண்மைதான். ஆனால், வெளியிலிருந்து யாராவது அந்த வீட்டுக்கு வந்தால், வழியில் போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.

அதுதான், நடந்தது.

அன்று மாலையில், அந்த வீட்டுக்கு மாருதி ஜிப்ஸியில் வந்துகொண்டிருந்த ரங்கன், வழியில் பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

ரங்கன், ரங்கநாத், மிருதுளா ஆகியோர் கோனானகுண்டே வீட்டுக்குத் திரும்பாததை வைத்து, ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை சிவராசனும், மற்ற விடுதலைப் புலிகளும் உணர்ந்தனர்.

ரங்கன் வீட்டுக்கு வராமல் போனதால், அவர்களுக்குப் பெரும் பாதிப்பு. வீட்டைவிட்டு எங்கும் போக முடியாத நிலை. காரணம், ரங்கனிடம்தான் மாருதி ஜிப்ஸி வாகனம் இருந்தது. பியட் கார், கலர் மாற்றுவதற்காக விடப்பட்டிருந்தது. சிவராசனுடன் இருந்தவர்களில் எவருக்கும் அந்த ஏரியாவும் தெரியாது. உள்ளூர் மொழியான கன்னடமும் தெரியாது.

சிவராசன், நேரு ஆகியோரிடம் ஏ.கே. 47 ரைஃபிள்களும், ஒரு பிஸ்டலும், சயனைட் குப்பிகளும் இருப்பதாக, விசாரணையின்போது மிருதுளா உறுதிப்படுத்தினார்.

இந்த விசாரணைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சி.பி.ஐ. குழு இந்த வீட்டை கண்டுபிடிக்க உதவிய கர்நாடகா போலீஸ், ‘தங்கள் பாணியில்’ அதை டீல் பண்ண தொடங்கினார்கள். விடுதலைப் புலிகள் தங்கியிருந்த வீட்டை சுற்றி பொலிஸ் வாகனங்களும், சீருடை அணிந்த பொலிஸாரும் குவிந்தனர்.

இதைப் பார்த்த சி.பி.ஐ. புலனாய்வுக் குழு திகைத்துப் போனது. இந்த நடவடிக்கையில் அதிரடி அல்லது ரகசியத்துக்கு இடமே இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது.

சிவராசனை உயிருடன் பிடிப்பது என்பதே சி.பி.ஐ.யின் திட்டமாக இருந்தது. இந்திரா நகர் வீட்டில் சி.பி.ஐ. மேற்கொண்ட நடவடிக்கையில் அரசன், குளத்தான் ஆகிய இருவரும் சயனைட் குப்பி கடித்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். இதனால், சிவராசனும், மற்ற விடுதலைப் புலிகளும், போலீஸ் தம்மை சுற்றி வளைத்துள்ளது என்பதை தெரிந்து கொண்டால் தற்கொலை செய்து விடுவார்கள் என்பது தெளிவாக தெரிந்தது.

அதனால்தான், திராவிடர் கழகப் பிரமுகரின் உதவியை சி.பி.ஐ. நாடியது. தி.க. பிரமுகர் மூலம் திருச்சி சாந்தனின் இருப்பிடத்தை அறிந்து, சாந்தனுடன் பேசி தமது வழிக்கு கொண்டுவந்து, அதன்பின் அவரை சிவராசனின் வீட்டுக்கு அனுப்பி வைத்து, சிவராசனையும், மற்ற விடுதலைப் புலிகளையும் உயிருடன் பிடிப்பது என்பதே, சி.பி.ஐ.யின் திட்டம்.

ஆனால், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன், சிவராசன், சுபா மற்றும் விடுதலைப்புலிகள் தங்கியிருந்த வீட்டை போர்க்கால நடவடிக்கை போல முற்றுகையிட்டு விட்டனர், கர்நாடகா போலீஸ்! அந்த வீட்டை போலீஸ் சூழ்ந்துவிட்ட விஷயம், தப்பியோடிய ரங்கனுக்கும் தெரிந்து விட்டது!

இப்போது சி.பி.ஐ., தமது திட்டத்தை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது!

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s