ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 57

விடுதலைபுலிகளை உயிருடன் தப்பி செல்ல விடுங்கள் என்றார் சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரன்!

ராஜிவ் கொலை புலனாய்வில் பிரதான திட்டமிடலை செய்தவர் என கருதப்பட்ட சிவராசன் இருக்கும் வீட்டை, சி.பி.ஐ. புலனாய்வுப்படை, கறுப்புப் பூனைப்படையினர், மற்றும் கர்நாடகா போலீஸ் சூழ்ந்து கொண்ட விபரத்தை கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம்.

சி.பி.ஐ. புலனாய்வு குழுவினர் ஊர் ஊராக அலைந்து தேடிக்கொண்டிருந்த சிவராசன் இருப்பிடம் தெரிந்த பின்னரும், நெருங்க முடியாத நிலை. காரணம், வீட்டுக்குள் இருந்த சிவராசன், மற்றும் விடுதலைப்புலிகளிடம் ஆயுதங்களும் இருந்தன, சயனைட் குப்பிகளும் இருந்தன. இவர்களுக்கோ, அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும்.

இதனால், அந்த வீட்டை முற்றுகையிட்டு விட்டு, ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போதைய சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரனிடம் (மேலே போட்டோவில் உள்ளவர்), ஆலோசனை கேட்டார் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர். “சிவராசனும், மற்றவர்களும் சயனைட் குப்பியை கடிக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?”

அதற்கு அப்போது சி.பி.ஐ. இயக்குநர் ராஜா விஜய் கரன் கூறிய பதில் என்ன தெரியுமா? “உயிருடன் தப்பிச்செல்ல விட்டுவிடுங்கள்” என்பதே!

அதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்தார். “சிவராசனை உயிரற்ற நிலையில் பிடிப்பதா? அல்லது உயிருடன் தப்பிச் செல்ல விடுவதா? இந்த இரண்டில் எது என்ற கேள்வி எழுந்தால், சிவராசனை உயிருடன் தப்ப விட்டுவிடுங்கள். ஏனென்றால், சிவராசனையும், சுபாவையும் மற்றொரு சந்தர்ப்பத்தில் உயிருடன் பிடித்துவிட முடியும்” என்றார் சி.பி.ஐ. இயக்குநர்.

பொலிஸ் கமிஷனரும், சிறப்புப் புலனாய்வு தேடுதல் குழுத் தலைவரும் சிவராசனையும், மற்ற விடுதலைப்புலிகளையும் உயிருடன் பிடிப்பதற்கான அனைத்துவிதமான வழிவகைகள் பற்றி ஆலோசித்தனர்.

இவர்களது படை வீட்டை சூழ்ந்துகொண்டு நிற்கிறது என்ற விஷயம், வீட்டுக்கு உள்ளேயிருந்த சிவராசனுக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்துவிட்ட நிலையில், திடீர் அதிரடி நடவடிக்கை என்ற அம்சத்துக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இருந்தபோதிலும், குறைந்தபட்சம் சிவராசனையும், சுபாவையுமாவது உயிருடன் பிடிப்பதும், சில ஆவணங்களையாவது அழியாமல் கைப்பற்றுவதும் சாத்தியமா என ஆராயப்பட்டது.

அப்போது நேரம் நள்ளிரவையும் தாண்டிவிட்டது. இனி நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். எனினும், சி.பி.ஐ. இயக்குநரை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற கருத்து நிலவியது. சி.பி.ஐ. இயக்குநர், டில்லியிலிருந்து அவர் வரும் வரை எதுவும் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என விரும்பினார்.

அந்த வீட்டுக்குள்ளிருந்து விடுதலைப்புலிகளையே வெளியே வரவழைப்பதற்கான எந்த வழியும் யாருக்கும் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் மறைவிடங்கள் அனைத்திலும், பல வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எப்போதும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என்று ஏற்கனவே இவர்களால் கைது செய்யப்பட்ட மற்ற விடுதலைப்புலிகள் கூறியிருந்தனர். இதனால் அவர்கள், தற்போதைக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய அவசியம் கிடையாது!

வீட்டின் அனைத்துக் கதவுகளையும், ஜன்னல்களையும் அவர்கள் மூடியே வைத்திருந்தனர். உள்ளே என்ன நடக்கிறது என்பது, வெளியே யாருக்கும் தெரியவில்லை.

அன்று மாலையில், ரங்கன் அந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தால், அவர் வந்த மாருதி ஜிப்ஸியில் ஏறி, தப்பிச்செல்ல விடுதலைப்புலிகள் முயன்றிருக்கக் கூடும். ஆனால், அந்த சமயத்தில் லோக்கல் பொலிஸார் அந்த வீட்டைச் சுற்றி தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். பொலிஸ் வாகனங்களைப் பார்த்த ரங்கன் தப்பியோடிவிட்டார்.

சிவராசனையும் மற்ற விடுதலைப்புலிகளையும் உயிருடன் பிடிப்பதற்கான ஒரே வாய்ப்பும் போய்விட்டது.

ஆனால், என்ன நேர்ந்தாலும் காத்திருக்க வேண்டும் என்பது சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவினருக்கு டில்லியில் இருந்து வந்த உத்தரவு.

இரவு முழுவதும் மேற்கொண்ட முற்றுகை, மறு நாள் காலையிலும் நீடித்தது. பெருமளவில் பொலிஸாரும், பொலிஸ் வாகனங்களும் குவிந்திருப்பதைக் கண்டு காலையில் அங்கு பொதுமக்கள் கூட்டம் சேரத் தொடங்கியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும் கடினமான வேலையாகி விட்டது.

இதற்கிடையே ரங்கநாத், தமது மனைவி மிருதுளாவை போலீஸ் பிடித்துவிட்டது என்பதை தெரிந்து கொள்ளாமல் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது வீட்டை சுற்றி போலீஸ், அதிரடிப்படை, பொதுமக்கள் என ஏகப்பட்ட கூட்டம்.

அந்த கூட்டத்தில் இருந்த பால்காரப் பெண்மணி ஒருவர் ரங்கநாத்தை அடையாளம் கண்டுகொண்டார். “நீங்கள் முற்றுகையிட்டுள்ள வீட்டை விடுதலைப்புலிகளுக்கு வாடகைக்கு பிடித்து கொடுத்தவர் இவர்தான்” என ரங்கநாத்தை காட்டி கூச்சல் போட்டார் பால்காரப் பெண்மணி.

இதைக் கேட்ட ரங்கநாத் தப்பியோட முயன்றார். ஆனால், பொதுமக்களும், பொலிஸாரும் சேர்ந்து அவரை பிடித்து விட்டனர்.

காலையில், டில்லியிலிருந்து சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரன், சயனைட் நஞ்சு நிபுணரான வைத்தியர் ராமச்சாரி ஆகியோர் அங்கு வந்து சேர்ந்தார். ராஜஸ்தான் மாநிலம் குவாலியரிலிருந்து சயனைட் நஞ்சு முறிவுக்கான ஒரு மருந்தை வரவழைக்குமாறு வைத்தியர் ராமச்சாரி கூறினார்.

தனி விமானத்தில் அந்த மருந்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது.

மருந்து வந்து சேர்வதற்குள், அதிரடித் தாக்குதல் இல்லாமல் வேறு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஆராயப்பட்டது. பால்க்காரப் பெண்மணி அல்லது மிருதுளாவை அந்த வீட்டுக்குள் அனுப்பி நிலைமையை அறிந்துவரச் செய்யலாம் என்ற யோசனையும் பரிசீலிக்கப்பட்டது.

ஆனால், அது நடைமுறையில் சாத்தியமற்றது என்று கைவிட்டார்கள். காரணம், சிவராசன் குழுவினர் ஏற்கெனவே உஷாராகியிருந்தனர். அவர்களிடம் ஒரு பெண்ணை வேவு பார்க்க அனுப்பினால், பணயக் கைதியாக பிடித்துக்கொள்ளக்கூடும் என சி.பி.ஐ. நினைத்தது.

அவர்கள் வீட்டுக்குச் செல்லும் குடிநீர் குழாயில் மயக்க மருந்து சேர்ப்பது என்ற மற்றொரு திட்டமும் ஆராயப்பட்டு, கைவிடப்பட்டது. எல்லா விடுதலைப்புலிகளும் ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.

மொத்தத்தில், அனைத்து யோசனைகளும் நடைமுறைச் சாத்தியமற்றவையாகவே தோன்றின.

சிவராசன் குழுவினரைப் பிடிப்பதற்கு, நடைமுறைச் சாத்தியமான ஒரே வழி, அதிரடி நடவடிக்கைதான். ஆனால், அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. இவர்கள் வீட்டை சூழ்ந்துகொண்ட விஷயம் விடுதலைப்புலிகளுக்கு தெரிவதற்கு முன்னர், அதிரடி நடவடிக்கையை செய்திருக்க வேண்டும்.

எனினும், அதிரடி நடவடிக்கைதான் ஒரே வழி என முடிவு செய்யப்பட்டது. “அவர்களை உயிருடன் தப்பிச் செல்ல விட்டு, அப்புறம் பிடித்துக் கொள்ளலாம்” என்ற நிலைப்பாட்டை சில மணி நேரத்தில், டில்லியில் இருந்து வருவதற்குள் மாற்றிக்கொண்டார் சி.பி.ஐ. இயக்குனர் ராஜா விஜய் கரன்.

வீட்டுக்கு உள்ளேயிருக்கும் விடுதலைப்புலிகள் சயனைட் குப்பியை கடிப்பார்கள் என்பது உறுதியாக தெரிந்த நிலையிலும், அதிரடி நடவடிக்கையை செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அந்த ஏரியாவில் இருந்த வைத்தியசாலைகளை, “சயனைட் நஞ்சு தின்றவர்களை, குறுகிய கால அவகாசத்தில் கொண்டு வந்தால் அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கத் தயாராக இருங்கள்” என உஷார் படுத்தினார்கள். தீயணைப்பு வண்டிகளைத் தயாராக வைத்திருக்குமாறும், குறுகிய அவகாசத்தில் குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்தை முற்றாக நிறுத்தி வைத்தியசாலைக்கு செல்லும் வாகனங்களுக்கு வழியேற்படுத்தித்தர வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.

எல்லாம் தயார். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் குவாலியரிலிருந்து சயனைட் நஞ்சு முறிவு மருந்து வந்து சேரவில்லை. இருள் சூழ தொடங்கியது.

ஆகஸ்ட் 19-ம் திகதி நள்ளிரவை நெருங்கிய நேரம், விடுதலைப்புலிகள் மறைந்திருந்த வீட்டுக்குச் சற்று வெளியே, அந்த வழியே சென்றுகொண்டிருந்த ஒரு டிரக் திடீரென பழுதாகி நின்றுவிட்டது. இந்த ட்ரக்குக்கும், இந்த ஆபரேஷனுக்கும் எந்த தொடர்புமில்லை. யாரோ தனியாருக்கு சொந்தமான வண்டி அது.

டிரக்கை பழுதுபார்ப்பதற்காக அதிலிருந்தவர்கள் கீழே இறங்கியதைக் கண்ட சிவராசனும், நேருவும், தங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை தொடங்கி விட்டது என தவறாகக் கருதி, டிரக்கை நோக்கிச் சுடத் தொடங்கினர்.

ஏ.கே.47 ரைஃபிள்களை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் சடசடவென சுட, வீட்டைச் சுற்றி மறைந்திருந்த கறுப்புப்பூனைகள், விடுதலைப்புலிகள் இருந்த வீட்டை நோக்கி திருப்பி சுடத்தொடங்கினர்.

எந்தவித திட்டமும் போடப்படாமல், யாரும் எதிர்பார்த்திராத விதமாக திடீரென தொடங்கியது அந்த துப்பாக்கிச் சண்டை!

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s