ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 58

விடுதலை புலிகளிடம் ஏ.கே.47 தோட்டாக்கள் தீர்ந்த பின் வீட்டுக்கு உள்ளே புகுந்த அதிரடிப்படை!
ஏ.கே.47 ரைஃபிள்களை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் சடசடவென சுட, வீட்டைச் சுற்றி மறைந்திருந்த கறுப்புப்பூனைகள், விடுதலைப்புலிகள் இருந்த வீட்டை நோக்கி திருப்பி சுடத்தொடங்கினர். எந்தவித திட்டமும் போடப்படாமல், யாரும் எதிர்பார்த்திராத விதமாக திடீரென தொடங்கியது அந்த துப்பாக்கிச் சண்டை!
-கடந்த அத்தியாயத்தில் இருந்து

சிவராசன் குழுவினர் தங்கியிருந்த வீட்டை நோட்டம் விடுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு, பக்கத்து வீட்டின் குளியல் அறையிலிருந்த ஜன்னலையே பயன்படுத்தி வந்தது. இந்த திடீர் துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஏ.கே. 47 ரைஃபிள்களிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள் குளியல் அறையை நோக்கியும் வந்தன.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் குளியல் அறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப்படை கமாண்டோ ஒருவரும், ஒரு கர்நாடகா மாநில போலீஸ் அதிகாரியும் துப்பாக்கிக்குண்டு காயமடைந்தனர்.

30 நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு நின்றுவிட்டது.

ஆரம்பத்தில் ஏ.கே.47 ரைஃபிள்களை பயன்படுத்தி சுட்ட விடுதலைப்புலிகள், கடைசியாகச் சுட்டது ஒரு பிஸ்டலால் என்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கவனித்தனர்.

அதிலிருந்து, விடுதலைப் புலிகளிடம் ஏ.கே.47 எந்திரத்துப்பாக்கி தோட்டாக்கள் தீர்ந்து போய், பிஸ்டல்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்ற முடிவுக்கு வந்தனர் சி.பி.. அதிகாரிகள்.

இதையடுத்து, உடனே அதிரடி நடவடிக்கையில் இறங்க விரும்பினார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். சிவராசன் குழுவினர் இருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழையுமாறு அதிரடிப்படை என்.எஸ்.ஜி.யின் தலைவரிடம் கூறினார்கள்.

டில்லியிலிருந்து இங்கு வந்ததுமே அந்த வீட்டுக்குள் நுழையும் அதிரடி நடவடிக்கையில் இறங்க ஆர்வமாக இருந்த என்.எஸ்.ஜி. படையினர், இப்போது தயக்கம் காட்டினர். “டில்லியிலிருந்து மேலும் அதிரடிப்படை வீரர்கள் வரும் வரைக் காத்திருக்கலாம்” என்றனர்.

அங்கு வந்திருந்த தூர்தர்ஷன் (இந்திய அரசு தொலைக்காட்சி நிறுவனம்) படப்பிடிப்புக் குழுவினர், விடுதலைப்புலிகளுக்கும், கறுப்புப்பூனைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையை ஒளிபரப்புவதற்காக, அப்படியே காமெராக்களில் பதிவு செய்தனர். தற்போது உள்ளதுபோல அந்த நாட்களில் திடீர் நேரடி ஒளிபரப்பு எல்லாம் சாத்தியமில்லை.

அதிகாலை 5 மணியளவில் புதிய சயனைட் எதிர்ப்பு மருந்து வந்து சேர்ந்தது, மேலதிக அதிரடிப்படை வீரர்களும் வந்து இறங்கினர்.

காலை 6 மணிக்கு சிவராசன் குழுவினர் மறைந்திருந்த வீட்டுக்குள் கறுப்புப்பூனைப்படை வீரர்கள் அதிரடியாக நுழைந்தனர்.

ஆனால், அங்கு சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், உட்பட அனைவரும் தற்கொலை செய்துகொண்டு கிடந்ததைத்தான் காண முடிந்தது. சிவராசனின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திருந்தது. மற்ற அனைவரும் சயனைட் குப்பியை மென்றிருந்தனர்.

அங்கு எந்தவொரு ஆவணமும் இல்லாமல் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இறுதியில் ஒரெயொரு துண்டுச்சீட்டை மட்டும் சி.பி.ஐ. குழுவினரால் கைப்பற்ற முடிந்தது.

சிவராசனின் கையால் தமிழில் எழுதப்பட்ட கவிதை அது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும், புலிக் கொடியையும் போற்றி எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையில், “தமிழர்கள் விழித்தெழுந்து பிரபாகரனின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்” என அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன், பின்னாட்களில் கொடுத்த பேட்டி ஒன்றில், “சிவராசன், இறுதி மூச்சு உள்ளவரை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் செயலாற்றிய வீரர்” என தெரிவித்தார்.

இந்த இடத்தில் ஆச்சரியமான தரவு ஒன்றும் உள்ளது.

ராஜிவ் காந்தி கொலைக்கான உத்தரவு வழங்கப்பட்டதை அடுத்து அதை முழுமையாக திட்டமிட்டு நடத்தி முடித்தவர் என கருதப்படும் சிவராசனின் உடலை சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவினர் கைப்பற்றிய தினம், 1991-ம் ஆண்டு ஆகஸ்ட், 20-ம் தேதி. அன்றைய தினம் ராஜிவ் காந்தியின் 47-வது பிறந்தநாள்!

மற்றொரு விஷயம், ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டு 3 மாதங்கள் முடிவதற்கு 1 தினம் இருக்கும் நிலையில், சிவராசன், சுபா ஆகியோர் உயிரிழந்தனர். (ராஜிவ் கொல்லப்பட்டது 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி)

சிவராசன், சுபா ஆகியோரின் மரணத்துடன், ராஜிவ் கொலைக்கான புலனாய்வு முடிந்து விடவில்லை. அதன் பின்னரும் பல தடயங்கள் சேகரிக்கப்பட வேண்டியிருந்தது. ஒருவிதத்தில் சொன்னால், சிவராசன் மற்றும் சுபா உயிரிழந்த பின்னரே, ராஜிவ் கொலை வழக்குக்கு தேவையான பல தடயங்கள் சி.பி.ஐ.யால் கைப்பற்றப்பட்டு, ஆதார ஆவணங்கள் ஆக்கப்பட்டன.

சயனைட் அருந்த மரணமடைந்திருந்த சுபா அணிந்திருந்த எச்.எம்.டி. கைக் கடிகாரம், பின்னர் முக்கியமான தடயமாக மாறியது. இந்தக் கைக் கடிகாரம், பொள்ளாச்சியில் சுசீந்திரனின் நண்பர், சுபாவுக்குப் பரிசளித்ததாகும். 1991-ம் ஆண்டு மே மாதம் அவரது இல்லத்துக்கு சுபா அழைத்துச் செல்லப்பட்டபோது, அளிக்கப்பட்டது.

சுபாவின் கைக் கடிகாரத்தில் காணப்பட்ட எச்.எம்.டி. சீரியல் எண்ணும், சுசீந்திரனின் நண்பரிடமிருந்த ரசீதில் காணப்பட்ட சீரியல் எண்ணும் ஒன்றாக இருந்தன. இவையெல்லாம், பின்னர் ராஜிவ் காந்தி கொலை திட்டமிடலில் தொடர்புடையவர்களுடன் யார்யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கான ஆதார சான்று ஆவணங்களாகக் காட்டப்பட்டன.

ரங்கநாத்திடம் நடத்திய விசாரணையின் பயனாக, நீல நிறமாக இருந்து வெள்ளை நிறமாக மாற்றப்பட்ட பிரிமியர் பத்மினி ஃபியட் காரை அடையாளம் கண்டு, கைப்பற்றினார்கள். அதுவும் ஒரு முக்கிய தடயமானது.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் பொறுப்பாளர் திருச்சி சாந்தன் உபயோகித்துவந்த கார் அது. காரின் என்ஜின் எண்ணைக்கொண்டு, ராஜிவ்காந்தி கொலைக்கு முந்தைய நாள் தஞ்சாவூரில் இருந்த ஒரு டாக்டரிடமிருந்து திருச்சி சாந்தன் வாங்கியிருப்பதைக் கண்டறிந்தார்கள்.

பச்சை நிற மாருதி ஜிப்ஸி ஜீப்பை வெள்ளை நிறமாக மாற்றிய பின், அதில் சிவராசன் குழுவினர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த ரங்கன், வெளியே போலீஸ் வாகனங்கள் நிற்பதை பார்த்தவுடன் தப்பிச் சென்றார் என கடந்த அத்தியாயம் ஒன்றில் எழுதியிருந்தோம் அல்லவா? இந்த ரங்கன், கர்நாடகாவில் இருந்து சென்னைக்குத் தப்பிச் சென்றார்.

1989-ம் ஆண்டிலிருந்தே சென்னையில் வசித்து வந்த ரங்கனுக்கு, சென்னையில் பல தொடர்புகள் இருந்தன. ஆனால், ராஜிவ் கொலை வழக்கில் தேடப்படும் நபர் என்பதால், தம்மை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழவேண்டியிருந்தது. சிவராசன் உயிரிழந்து விட்டதால், அதன்பின் புலிகளிடம் இருந்து பண வரவும் கிடையாது.

ரங்கனுக்கு வருமானம் ஈட்டக்கூடிய தொழில் என்ற வகையில் போலி பாஸ்போர்ட், வெளிநாட்டு வீசா தயாரித்து விற்க மட்டுமே தெரிந்திருந்தது.

அந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் பலர் வெளிநாடு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டபடி தமிழகத்தில் தங்கியிருந்த காரணத்தால், இதை ஒரு தொழிலாக செய்ய ரங்கன் திட்டமிட்டார்.

பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும், திராவிடர் கழக இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் உதவியுடன், ஆவடியில் பாதுகாப்புப் படையினரின் அதிகாரபூர்வ குடியிருப்பில் ஓரிரு நாட்களைக் கழித்தார் ரங்கன்.

அந்த வீட்டில் வசித்து வந்த பாதுகாப்புப் படை வீரர் பணி இடமாறுதல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்றிருந்தார். வீட்டின் சாவி அவரது சகோதரரிடமிருந்தது. சென்னையில் உள்ள திராவிடர் கழகப் பிரமுகர் ஒருவருக்கு இந்த சகோதரரை தெரிந்திருந்ததால் சில நாட்களுக்கு வீடு தேவை எனக்கூறி வீட்டுச்சாவியை வாங்கி ரங்கனிடம் அளித்தார்.

தங்க இடம் கிடைத்ததும், அடுத்து தமது வருமானத்துக்காக போலி பாஸ்போர்ட் தொழிலை செய்ய நினைத்தார் ரங்கன். அதற்கான முதல் முயற்சியாக ஆகஸ்ட் 29-ம் தேதி ரங்கன் சென்ற இடம் டிராவல் ஏஜன்ஸி அலுவலகம். சென்னை அடையாறில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அந்த டிராவல் ஏஜன்ஸி அலுவலகம் அமைந்திருந்தது.

வெளிநாடு செல்ல முயற்சிக்கும் ஈழத்தமிழர்கள் அதிகம் வந்து செல்லும் டிராவல் ஏஜன்ஸி அலுவலகம் அது. இதனால், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவரையே தமக்கு தகவல் தரும் நபராக (இன்பார்மர்) மாற்றியிருந்த, சி.பி.ஐ., அங்கு யார் வருகிறார்கள் என்பதை ஓசைப்படாமல் கண்காணித்துக் கொண்டிருந்தது.

இதை தெரிந்து கொண்டிராத ரங்கன், நேரே ட்ராவல் ஏஜென்சிக்கு போய் இறங்கினார். அங்கே அவருக்கு, தெரிந்த நபர் ஒருவர் பணிபுரிந்தார்.

இங்கு அடுத்த திருப்பம் என்னவென்றால், ரங்கனுக்கு தெரிந்த நபரும், சி.பி.ஐ.யின் இன்பார்மரும் ஒரே ஆள்தான்! (…தொடரும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s