ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 59

பிரபாகரனை சந்திக்க தமிழகத்தில் இருந்து திருச்சி சாந்தனால் அனுப்பப்பட்ட இரும்பொறை

ராஜிவ் காந்தி கொலை திட்டமிடலின் பிரதான நபராக கருதப்பட்ட சிவராசனும், அவருடன் இருந்தவர்களும் பெங்களூருவில் தங்கியிருந்த வீட்டை சி.பி.ஐ. புலனாய்வு குழு கண்டுபிடித்தபோதும், இவர்கள் அந்த வீட்டுக்கு உள்ளே அதிரடியாக நுழைவதற்குமுன் சிவராசனும், அவருடன் இருந்தவர்களும் சயனைட் குப்பியை கடித்து (சிவராசன் நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது) தற்கொலை செய்தது பற்றி கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.

ராஜிவ் கொலை புலனாய்வு, சிவராசனின் மரணத்துடன் முடியவில்லை. குற்றத்தை நிரூபிக்க வேறு சிலரையும் பிடிக்க வேண்டியிருந்தது. தடயங்களும் போதாது என்ற நிலை இருந்தது.

பெங்களூவில் சிவராசனுடன் இருந்துவிட்டு, சி.பி.ஐ.யிடம் சிக்காமல் சென்னைக்கு தப்பி வந்த விடுதலைப்புலி ரங்கன், சென்னை அடையாறில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த டிராவல் ஏஜன்ஸிக்கு வந்த தகவல் சி.பி.ஐ.க்கு எப்படி கிடைத்தது என்றும் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

ரங்கன் அடையாறு ட்ராவல் ஏஜென்சிக்குள் இருந்தபோது, சி.பி.ஐ. தேடுதல் குழு அந்த ட்ராவல் ஏஜென்சியை சுற்றிவளைத்து விட்டது.

இவர்களை கண்டதும் தப்பியோட முயன்ற ரங்கனை, ஹாலிவுட் திரைப்படப் பாணியில் அடையாறு வீதிகளில் துரத்திச் சென்று ஒருவழியாக பிடித்துவிட்டது சி.பி.ஐ. டீம். ரங்கன் தன்னிடமிருந்த சயனைட் குப்பியை வாயில் வைக்க முயலுவதற்கு முன், அதை பறித்தும் விட்டார்கள்.

மறுநாள் காலை விடிவதற்குள் உள்ளூர் கராஜ் ஒன்றில் விடப்பட்டிருந்த அவரது மாருதி ஜிப்ஸி ஜீப்பைக் கைப்பற்றினார்கள். அந்த ஜீப்தான், பெங்களூருவில் சிவராசனும், மற்றவர்களும் தற்கொலை செய்துகொண்ட வீட்டின் முன்னால் நின்றிருந்த ஜீப்.

ஜிப் கிடைத்ததையடுத்து, அந்த ஜீப்பை வாங்குவதற்கு முதலில் பதிவு செய்திருந்த நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஜீப்புடன் சேர்த்து மொத்தம் 4 மாருதி ஜிப்ஸி ஜீப்கள் விடுதலைப்புலிகளின் உபயோகத்துக்காக வாங்கப்பட்டிருந்தன. அவற்றை வாங்க, சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த பஸ் அதிபர் தனசேகரன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது.

நான்கு ஜீப்களில் இரண்டு, ஏற்கெனவே விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டு, தமிழக பொலிசார் வசம் இருந்தன.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் தமிழகம் எங்கும் வலைவீசி தேடப்பட்டுக் கொண்டிருந்த சிவராசன், சுபா, நேரு ஆகியோர், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எப்படி தப்பிச் செல்ல முடிந்தது என்பது, சி.பி.ஐ. புலனாய்வு டீமுக்கு பெரிய மர்மமாக இருந்தது.

ரங்கனைக் கைது செய்து விசாரித்தபோது, அவர் கொடுத்த தகவலின் பின்னர்தான், சிவராசன், சுபா, நேரு ஆகியோரை சென்னையிலிருந்து பெங்களூருக்கு திருச்சி சாந்தன் எவ்வாறு அனுப்பி வைத்தார் என்பது சி.பி.ஐ.-க்கு தெரிய வந்தது.

மேட்டூரைச் சேர்ந்த ராஜூ என்பவரின் காலி டேங்கர் லாரி ஒன்று சென்னைக்கு வந்தது. அதற்குள் சிவராசன், சுபா, நேரு ஆகியோரை அமரச்செய்து அனுப்பினார், திருச்சி சாந்தன். அந்த டேங்கர் லாரியை ஒரு டிரைவர் செலுத்த, உரிமையாளர் ராஜூவும் ஏறி பெங்களூரு வரை சென்றார்.

சென்னையிலிருந்து எந்த இடத்திலும் போலீஸ் சோதனையில் சிக்காமல் அந்த டேங்கர் லாரி பெங்களூரு சென்றுவிட்டது.

சிவராசன் குழுவினரை எதிர்கொண்டு வரவேற்பதற்காக திருச்சி சாந்தனும், இரும்பொறையும் பெங்களூவில் காத்திருந்தனர் என்றும் ரங்கன் விசாரணையில் தெரிவித்தார்.

இவர்களில் திருச்சி சாந்தன், விடுதலைப் புலிகளின் தமிழகத்துக்கான அரசியல் பிரிவு தலைவர். இரும்பொறை, இந்தியர். விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர். இவர்கள் இருவரையும் டார்கெட் செய்து தேட முடிவெடுத்தது, சி.பி.ஐ. புலனாய்வுக் குழு.

சிவராசனை பிடிப்பதற்காக சி.பி.ஐ. திராவிடர் கழக பிரமுகர் ஒருவரை அணுகியது குறித்து, கடந்த அத்தியாயம் ஒன்றில் எழுதியிருந்தோம். அந்த தி.க. பிரமுகர் மூலம் திருச்சி சாந்தனை தொடர்பு கொண்டு, அவர் மூலமாக சிவராசனை பிடிப்பதே அப்போது சி.பி.ஐ.யின் திட்டமாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னரே சிவராசன் தற்கொலை செய்துகொண்டதில், இந்த முயற்சிக்கு அவசியம் ஏற்படாமல் போயிருந்தது.

இப்போது, அதே தி.க. பிரமுகரை வைத்து திருச்சி சாந்தனை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டது சி.பி.ஐ. குழு.

சிவராசன் தற்கொலை செய்துகொண்டதால், திருச்சி சாந்தனை உயிருடன் பிடித்தால்தான் ராஜிவ் கொலை வழக்கில் விடுதலைப் புலிகளை நேரடியாக தொடர்பு படுத்த முடியும் என நினைத்தது சி.பி.ஐ.

அதற்கு காரணம் என்ன?

திருச்சி சாந்தன், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின்ன் தலைவராக இருந்தபோது, தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் உளப்பிரிவுத் தலைவராக இருந்தவர் சிவராசன். இருவருமே ஒருவரை ஒருவர் சார்ந்திருக்காமல் தனித்தே செயல்பட்டு வந்தனர். இதனால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உத்தரவு இல்லாமல் சிவராசனைக் காப்பாற்றும் நடவடிக்கையில் திருச்சி சாந்தன் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனால், திருச்சி சாந்தனை உயிருடன் பிடித்தால், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுக்கு உள்ள தொடர்பு குறித்து நேரடி சாட்சியம் கிடைக்கும் என்பதே, சி.பி.ஐ.யின் வியூபாயின்ட் ஆக இருந்தது.

எனவே, திருச்சி சாந்தனை பிரதானமாக இலக்கு வைத்து தமிழகம் முழுவதும் தேடத் தொடங்கியது, கார்த்திகேயன் தலைமையிலான சி.பி.ஐ. டீம்.

கோவையில் டிக்சன் தற்கொலை செய்துகொண்டபோது, அவர் வசமிருந்த திருச்சி சாந்தனின் ஒயர்லெஸ் சாதனம் அழிக்கப்பட்டு விட்டது என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம். சிவராசனிடமிருந்து கிடைத்த மற்றொரு ஒயர்லெஸ் சாதனம், கரூரில் வரதன் கைது செய்யப்பட்டபோது போலீசாரால் கைப்பற்றப்பட்டுவிட்டது.

எனவே, இப்போது திருச்சி சாந்தனிடம் ஒயர்லெஸ் சாதனம் எதுவுமில்லை. பணமும் இல்லை. திருச்சி சாந்தனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தி.க. பிரமுகர்கள் சி.பி.ஐ.-யின் கண்காணிப்புக்ள் வந்து விட்டதால், அவருக்கு முன்புபோல உதவியோ, ஆதரவோ, தங்குவதற்கு இடவசதியோ கிடைக்காது.

இதைவிட மோசமானது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள திருச்சி சாந்தனால் முடியாமல் போனதுதான்.

எனவே, யாழ்ப்பாணத்துக்கு ஒரு நபரை அனுப்பி, பிரபாகரனைச் சந்தித்து தற்போதைய நிலவரத்தை விளக்க வேண்டும். புதிதாக ஒரு ஒயர்லெஸ் சாதனம், அதை இயக்குபவர் மற்றும் தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைத் தொடருவதற்குத் தேவைப்படும் பணம் ஆகியவற்றை பெற வேண்டும் என முடிவு செய்தார் திருச்சி சாந்தன்.

இது நடந்த நாட்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, திருச்சி சாந்தனால் தமது மறைவிடத்தை விட்டு வெளியே வந்து நடமாடவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருந்தது. அதனால்தான், வேறு யாரையாவது யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார் அவர்.

இது நடந்த நேரத்தில், திருச்சி சாந்தனின் கீழ் தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் அநேகர் சி.பி.ஐ. குழுவால் கைது செய்யப்பட்டு விட்டனர். சிலர் சயனைட் குப்பி கடித்து தற்கொலை செய்துகொண்டு விட்டனர். சி.பி.ஐ. திருச்சி சாந்தனை மும்மரமாக தேட தொடங்கிய நேரத்தில், அவருக்கு உதவியாக 2 அல்லது 3 விடுதலைப்புலிகள் மட்டுமே இருந்தனர்.

அவர்களுக்கு இருந்த பிரச்சினை, பொது இடங்களில் பேசும்போது அவர்களது இலங்கைத் தமிழ் உச்சரிப்புக் காட்டிக்கொடுத்துவிடும் என்பதுதான்.

இந்த காரணங்களுக்காக, திருச்சி சாந்தனால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பத் தேர்வு செய்யப்பட்டவர், இந்தியரான இரும்பொறை.

இரும்பொறையும் தலைமறைவாகவே இருந்தார். அவருக்கு தமிழகத்தில் தி.க. தவிர்ந்த வேறு சில தமிழர் அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது. அவர்களின் உதவியுடனேயே, இரும்பொறையும், திருச்சி சாந்தனும் தமிழகத்தில் தலைமறைவாக இருக்க முடிந்தது.

இரும்பொறையை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவது என முடிவாகியதும், திருச்சி சாந்தன் பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதினார். செப்டெம்பர் 9-ம் தேதியிட்ட கடிதம் அது. அந்தக் கடிதம், இரும்பொறையிடம் கொடுக்கப்பட்டது.

அதைவிட மற்றொரு காகிதத்தில், இரும்பொறைக்காக சில குறிப்புகளை எழுதினார் திருச்சி சாந்தன்.

அந்தக் குறிப்புகளில், இலங்கை கரையை இரும்பொறை அடைந்தவுடன் என்ன சொல்ல வேண்டும். யார் மூலமாக பிரபாகரனின் இருப்பிடத்தை சென்றடைய வேண்டும். பிரபாகரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். பிரபாகரனிடம் எவற்றைச் சொல்ல வேண்டும், எவற்றைச் சொல்லக்கூடாது என விலாவாரியாக எழுதிக் கொடுத்தார், திருச்சி சாந்தன்.

திருச்சி சாந்தன் இந்த விபரங்களை இரும்பொறையிடம் வாய் வார்த்தையாக சொல்லியதுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால், விலாவாரியாக அனைத்தையும் எழுத்து மூலம் கொடுத்தது, விடுதலைப் புலிகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்பதோ, இந்த இரு கடிதங்களும் சி.பி.ஐ.யிடம் அகப்பட போகின்றன என்பதோ, அப்போது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இரும்பொறை புறப்பட்டார்.

விடுதலைப் புலிகள் தமிழகம் எங்கும் வேட்டையாடப்பட்டு வந்த காரணத்தால், தமிழகத்தின் தென் கரையோர பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக இருந்தது. இதனால், வேதாரண்யத்தில் இருந்து அவரால் உடனே படகில் புறப்பட முடியாமல், சுமார் 3 வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

இவரைப் போலவே, தமிழகத்தில் சிகிச்சை முடிந்த 8 விடுதலைப்புலிகளும் படகுக்காக மறைவிடங்களில் காத்திருந்தனர். அக்டோபர் தொடக்கத்தில்தான் யாழ்ப்பாணம் செல்வதற்கு படகு ஏற்பாடு செய்ய முடிந்தது.

அக்டோபர் 2-ம் தேதி இரவு 11 மணியளவில், இரும்பொறையும் தமிழகத்தில் சிகிச்சை முடிந்த 8 விடுதலைப்புலிகளும் வில் ஊன்றித் தீர்த்தம் என்ற இடத்திலிருந்து படகில் புறப்பட்டனர். ஆனால், புறப்பட்டு சிறிது நேரத்தில், அந்தப் படகை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மறித்து நிறுத்தினர்.

விடுதலைப்புலிகளில் 3 பேர் சயனைட் குப்பியை மென்றனர். இவர்களில் இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இரும்பொறை கைது செய்யப்பட்டார்.

திருச்சி சாந்தன், பிரபகாரனுக்கு எழுதிய கடிதமும், இரும்பொறைக்கு எழுதிக் கொடுத்த குறிப்புகளும், இந்தியக் கடலோரக் காவல்படையினரால் கைப்பற்றப்பட்டன.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s