ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 60

விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தில் பயிற்சி கொடுக்கப்பட்ட இந்திய இளைஞர்கள்

உளவுப் பிரிவுப் பணிகள் நீங்கலாக, இந்தியாவில் விடுதலைப் புலிகளின் மற்ற பணிகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தவர் திருச்சி சாந்தன். தமிழகத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு உதவும் இலங்கைத் தமிழர்களின் விவரங்களும் அவரிடம் இருந்தன.

இதனால்தான், திருச்சி சாந்தன் உயிருடன் சிக்கிவிடக்கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் இயக்கம் கவனமாக இருந்தது.

அதே நேரத்தில் திருச்சி சாந்தனும், வேறு விதமான ஸ்டான்ட் ஒன்றை எடுத்தார்.

தமிழகத்தில் இருந்த இலங்கைத் தமிழர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதால், சி.பி.ஐ. சுலபமாக ஒவ்வொருவராக பிடிக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவருவது சுலபம் என்பதையும் அவர் தெரிந்து கொண்டார்.

இதனால், தமது அனைத்து நடவடிக்கைகளிலும் இலங்கை தமிழர்கள் இல்லாத வகையில், இந்தியர்களை மட்டும் பயன்படுத்த தொடங்கினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு கடிதம் எழுதி, இந்தியரான இரும்பொறையிடம் கொடுத்தது அப்படித்தான்.

ஆனால், பிரபாகரனுக்கு எழுதப்பட்ட கடிதத்துடனும், அத்துடன் திருச்சி சாந்தன் எழுதிய குறிப்புகளுடனும் இலங்கைக்கு படகில் செல்லும்போது, இரும்பொறை சிக்கிக் கொண்டார்.

இரும்பொறையை சி.பி.ஐ. விசாரித்தபோது, சிவராசன், சுபா, நேரு ஆகியோரை ராஜூ என்பவர் தனது டேங்கர் லாரியில் பெங்களூருவுக்கு அழைத்து வந்தபோது, தானும் பெங்களூருவில் இருந்ததாக ஒப்புக் கொண்டார்.

திருச்சி சாந்தன் பற்றி இரும்பொறையிடம் விசாரித்தபோது, “புலிகள் இம்முறை மிகப்பெரிய இலக்கை (ஆளை) குறி வைத்திருப்பதாக, ராஜிவ்காந்தி கொலைக்கு முன், அவர் (திருச்சி சாந்தன்) என்னிடம் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், சிவராசனை தனது டேங்கர் லாரியில் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்ற ராஜூ என்பவர் யார், அவரது பின்னணி என்ன என்பது இரும்பொறைக்கு தெரியவில்லை. ராஜூ என்பவர் இலங்கைத் தமிழர் அல்ல, ஒரு இந்தியர் என்று இரும்பொறை தெரிவித்தார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுடன் அப்போதும் (ராஜிவ் கொலைக்கு பின்) தொடர்பில் உள்ள இந்தியர்களா யார் என்று கேட்டபோது, இரும்பொறை கூறிய ஒருவரின் பெயர், ரவி.

இந்த ரவி, தமிழ் தேசிய மீட்புப் படை என்ற அமைப்பின் தலைவர். ரவியுடன், இந்த அமைப்பின் உறுப்பினர்களான சுசீந்திரன், சங்கரமூர்த்தி, மோகன் ஆகியோர் இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் ஆயுத போர்முறை பயிற்சி பெற்ற முதலாவது இந்தியத் தமிழ் அணியினரில் அடங்குவர்.

யாழ்ப்பாணத்தில் பயிற்சி முடிந்தபின், ரவி மற்றும் சில இளைஞர்களுடன் 1990-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் (ராஜிவ் கொல்லப்படுவதற்கு 5 மாதங்களுக்கு முன்).

விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் தாம் நேரடியாக கடற்கரைக்கு சென்று ரவியை வழியனுப்பி வைத்தார்.

“இந்த முறை பத்மநாபாவைவிட பெரிய புள்ளியைக் குறிவைக்க போகிறோம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதுடன் சிவராசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்” என்றும் ரவியிடம் தெரிவித்தார் பொட்டு அம்மான் (சென்னையில் EPRLF இயக்க தலைவர் பத்மநாபா கொல்லப்பட்டது, ஜூன் 1990).

ரவியின் முக்கிய பணி தமிழ்த் தேசிய மீட்புப்படையின் கிளைகளை தமிழகத்தில் அமைப்பது. இதற்கான நிதியுதவியை சிவராசன் அளிப்பார் என பொட்டு அம்மான் கூறினார். தமிழகக் கடலோரப் பகுதிகளில், விடுதலைப் புலிகளின் படகுகள் வந்து செல்வதற்கு புதிய இடங்களைக் கண்டறியும் பொறுப்பும் ரவியிடம் விடப்பட்டது.premium-id

சிவராசனுக்கு பொட்டு அம்மான் அனுப்பி, இந்தய உளவுத்துறை ‘ரா’வினால் இடைமறிக்கப்பட்ட ரகசியக் குறியீட்டு ஒயர்லெஸ் செய்தியில், “ரவியின் ஆட்களைப் பாதுகாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

1991-ம் ஆண்டு மார்ச்சில், தமிழ்த் தேசிய மீட்புப்படையைச் சேர்ந்த 2-பேட்ச்சில் பயிற்சி பெற்ற சுகுமார், திருநாவுக்கரசு ஆகிய இருவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் திரும்பினர். இந்த இருவரும் ஒயர்லெஸ் சாதனங்களை இயக்கவும், நவீன ஆயுதங்களையும் வெடிபொருள்களைக் கையாளவும் பயிற்சி பெற்றிருந்தனர்.

சிவராசனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் ரவி. பல்வேறு செலவுகள், முதலீடுகளுக்காக ரவியிடம் சுமார் 10 லட்சம் ரூபா அளித்தார் சிவராசன். அத்துடன் ரவிக்கும் ஒரு ஒயர்லெஸ் சாதனம் வழங்கப்பட்டது.

கண்ணியூரில் தனது ஆதரவாளர் வீட்டை வாடகைக்கு அமர்த்திய ரவி, அங்கிருந்து தனது ஒயர்லெஸ் சாதனத்தை திருநாவுக்கரசு உதவியுடன் இயக்கி வந்தார். அவரது அமைப்பின் சக உறுப்பினர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு ஏதாவது ஓர் இடத்தில் அவ்வப்போது சந்தித்து கொண்டனர்.

ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின், 1991-ம் ஆண்டு மே மாத இறுதியில், தாம் தப்பி செல்வதற்காக கடலோரப் பகுதிகளில் வழித்தடங்களை ஆராயுமாறு ரவியிடம் சொன்னார் சிவராசன்.

ஜூன் மாத தொடக்கத்தில் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு படையின் ரெயிடுகள் அதிகரித்ததும், கண்ணியூரில் தொடர்ந்து தங்குவது அபாயம் என புரிந்து கொண்டார் ரவி. இதையடுத்து, காந்தன், ரமணன் மற்றும் தனது ஒயர்லெஸ் சாதனத்துடன் சென்னை வட பழநியில் உள்ள ஒரு வீட்டுக்கு மாறிச் சென்றார்.

ஜூன் இரண்டாவது வாரம், சென்னை கொட்டிவாக்கத்தில் சிவராசனை காந்தனுடன் கடைசி முறையாகச் சந்தித்தார் ரவி.

திருச்சி சாந்தனைப் பயன்படுத்தித் தப்பிச் செல்லும் திட்டத்தை ரவியிடமோ அல்லது காந்தனிடமோ சிவராசன் தெரிவிக்கவில்லை. திடீரென, ஜூன் மூன்றாவது வாரத்திலிருந்து ரவியும், காந்தனும் சிவராசனுடனான தொடர்பை இழந்தனர்.

தமக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் சிவராசன் தலைமறைவாகியது ரவி, மற்றும் காந்தனுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. “தப்பிச் செல்லும் திட்டத்தை தமக்கு தெரிவிக்க வேண்டாம் என சிவராசனுக்கு பொட்டு அம்மான் சொல்லியிருப்பாரோ” என சந்தேகப்பட்டு, ரவியிடம் தெரிவித்தார் காந்தன்.

எனினும், பொட்டு அம்மானுடன் ரவி நேரடியாக தொடர்பு வைத்திருந்தார்.

காந்தன் மனம் உடைந்துபோனார். சிவராசனுக்கு உதவுவது பற்றி மட்டுமே பொட்டு அம்மான் கவலைப்படுகிறார். இங்குள்ள மற்றவர்கள் தப்பிச் செல்ல எந்த ஏற்பாடு செய்யப்படவில்லை” என்று ரவியிடம் முறையிட்டார் காந்தன்.

ஜூலை கடைசி வாரத்தில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தேடப்படும் நபர்கள் என காந்தன் மற்றும் டிக்சனின் போட்டோக்களைச் சி.பி.ஐ. வெளியிட்டதும் காந்தன் பீதியடைந்தார்.

இதற்கிடையே, தனது ஒயர்லெஸ் சாதனத்தை இயக்குவதற்காக திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தார் ரவி. சென்னை வட பழநியில் உள்ள வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் ஒயர்லெஸ் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்ததே இதற்குக் காரணம்.

திண்டுக்கல்லில் இருந்தவாறே பொட்டு அம்மானுடன் ரவியால் தொடர்புகொள்ள முடிந்தது.

சிவராசன், சுபா ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட பின், தமிழக படலோரப் பகுதிகளில் காவல் ஏற்பாடுகள் குறைக்கப்பட்டன. அந்த விபரத்தை பொட்டு அம்மானுக்கு தெரிவித்தார் ரவி. இவர்களுக்காக படகு ஒன்றை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார் பொட்டு அம்மான்.

ஆகஸ்ட் 27-ம் தேதி பொட்டு அம்மான் ஒரு படகை அனுப்பி வைத்தார். அந்தப்படகில் ஏறி ரவி, காந்தன், காந்தனின் ஒயர்லெஸ் இயக்குபவர் ரமணன் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றனர்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s