ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 61

விடுதலைப் புலிகளை பிடிக்க சி.பி.ஐ., திருச்சி தி.க. பிரமுகர் மூலம் செய்த முயற்சி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு புலனாய்வில், இனி திருச்சி சாந்தனை (தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்) பிடித்தால்தான், புலனாய்வு மேற்கொண்டு நகரும் என்ற நிலை ஏற்பட்டது. அதுவரை திருச்சி சாந்தனை இவர்களால் நெருங்கக்கூட முடியவில்லை. எப்படி பிடிப்பது?

இந்த இடத்தில், திருச்சி சாந்தனைப் பிடிக்க, ‘குறுக்கு வழியில்’ இறங்க சி.பி.ஐ. தேடுதல் குழு தீர்மானித்தது.

மேட்டூர் பஸ் அதிபர் தனசேகரனிடமும் (தி.க. அனுதாபி), நாம் கடந்த அத்தியாயங்களில் குறிப்பிட்ட திராவிடர் கழகப் பிரமுகரிடமும் (இவரது பெயரை நாம் குறிப்பிடவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன) தனித்தனியே விசாரித்ததில், மேட்டூர் அல்லது அதையொட்டிய பகுதியில்தான் திருச்சி சாந்தன் ஒளிந்திருக்க வேண்டும் என்பது உறுதியானது.

தனசேகரன், திராவிடர் கழகப் பிரமுகர், பிரமுகரின் சகோதரர், மற்றும் சில தமிழக அரசியல்வாதிகள், சி.பி.ஐ. தேடுகிறது என தெரிந்தும் திருச்சி சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இனியும் தமிழகத்தில் தலைமறைவாக இருப்பது முடியாத காரியம் என்ற முடிவுக்கு வந்தார் திருச்சி சாந்தன். அதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போக முடிவு செய்தார். ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைமையை தொடர்பு கொள்ள அவரிடம் ஒயர்லெஸ் சாதனம் இல்லை.

இதனால், தாமே தமிழகத்தில் படகு ஏற்பாடு செய்து யாழ்ப்பாணம் செல்வது என முடிவு செய்தார்.

தமிழகத்தின் தெற்கு கரையோர பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செய்த படகோட்டிகள் சிலரை திருச்சி சாந்தனுக்கு நன்றாக தெரிந்திருந்தது. ஆனால், அவர்களுடன் போய் பேசுவதற்கு முடியாத அளவுக்கு, திருச்சி சாந்தனுக்கு திருச்சியிலும், தமிழக கரையோர நகரங்களிலும் வலை விரித்திருந்தது, சி.பி.ஐ.

இதையடுத்து திருச்சி சாந்தன் ஒரு திட்டம் வகுத்தார். ஆந்திராவில் உள்ள படகோட்டி ஒருவரை தொடர்பு கொள்ள முடிவு செய்தார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், விடுதலைப் புலிகளுக்காக படகு ஓட்டிய ஒருவர் இருந்தார். படகோட்டுவதில் கில்லாடியான அவரது பெயர், மேஸ்திரி.

திருச்சி சாந்தனின் வேண்டுகோளின்பேரில், தனசேகரனும் திருச்சி சாந்தனின் உதவியாளர் வசந்தனும் விசாகப்பட்டினம் சென்றனர். அங்கு மேஸ்திரியை சந்தித்து, திருச்சி சாந்தன் தப்பிச் செல்வதற்கான வழி தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

அக்டோபர் 9-ம் தேதி சிறப்புப் புலனாய்வுப்படை தேடுதல் குழு தனசேகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, அவர் விசாகப்பட்டினத்தில் இருந்தார். மறுநாள், தனது சட்டத்தரணியைப் பார்ப்பதற்காகச் சென்னை வந்திருந்தார்.

சென்னை எக்மோரில் உள்ள ஒரு லாட்ஜில் வசந்தனுடன் அவர் தங்கியிருந்தார். இருவரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என பொய்யான முகவரி கொடுத்ததுடன், பொய்யான பெயர்களையும் கொடுத்திருந்தனர்.

ஆனால், திருச்சி சாந்தனின் உதவியாளர் வசந்தனின் இலங்கை தமிழ் பேசும் நபர்.

ராஜிவ் கொலைக்குப்பின், சென்னையில் உள்ள லாட்ஜ்களில் இலங்கை தமிழர்கள் வந்து தங்கினால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு அறிவிக்க வேண்டும் என தமிழக காவல்துறை அனைத்து லாட்ஜ் உரிமையாளர்களிடமும் சொல்லி வைத்திருந்தது.

அதன்படி, சென்னை எக்மோரில் உள்ள ஒரு லாட்ஜில் இந்தியர் ஒருவரும், இலங்கை தமிழர் ஒருவரும் சேலம் முகவரி கொடுத்து தங்கியுள்ளனர் என்ற விபரம், எக்மோர் காவல்நிலையத்துக்கு போய் சேர்ந்தது.

திருச்சி சாந்தனுக்குப் பல்வேறு நபர்கள் அடைக்கலம் கொடுத்து வருகிறார்கள் என்ற தகவல், சி.பி.ஐ.-யினால் தமிழகப் பொலிஸுக்கு தெரிவிக்கப்பட்டது. சில பெயர்களும் கொடுக்கப்பட்டன. இதையடுத்து தமிழக போலீஸ் உளவுப் பிரிவும் (க்யூ பிராஞ்ச்) சிலரை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்தது.

க்யூ பிராஞ்ச்சுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், திருச்சி சாந்தன், மேட்டூர், பவானி, ஈரோடு ஆகிய இடங்களில் எல்லாம் தங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டதாக தெரிய வந்தது. அவர் ஈரோடுவில் இருந்து புறப்பட்டு சென்றபோது, திருச்சி போவதாக சொல்லிவிட்டு போனார் என்ற தகவல்கூட கிடைத்தது.

இதையடுத்து, திருச்சியிலேயே அவரைத் தேடத் தொடங்கியது, தமிழக போலீஸ்.

சி.பி.ஐ. புலனாய்வுக் குழு ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த திராவிடர் கழகப் பிரமுகரும், திருச்சியில்தான் வசித்தார். திருச்சி கே.கே.நகரில் இருந்த அவரது வீடு, 24 மணி நேர கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தது. இந்த திராவிடர் கழகப் பிரமுகரைச் சந்திக்க திருச்சி சாந்தன் வருவார் என்பது சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவின் நம்பிக்கை.

இந்தக் கட்டத்தில், திராவிடர் கழகப் பிரமுகரும் சில தகவல்களை சி.பி.ஐ.யுடன் பகிர்ந்து கொள்ள தொடங்கியிருந்தார். அவர் நடத்திவந்த சில வர்த்தக நிறுவனங்கள், அரசை பகைத்துக் கொண்டு நடத்த முடியாத வர்த்தகம் செய்து கொண்டிருந்தன.

திருச்சி சாந்தனிடம் இருந்து தமக்கு தகவல் வந்ததை ஒப்புக்கொண்ட திராவிடர் கழகப் பிரமுகர், திருச்சி சாந்தன் தமது வீட்டுக்கு வரமாட்டார் எனவும், ஆனால், திருச்சியில் மற்றோர் இடத்தில் சந்திக்கலாம் என தகவல் அனுப்பியதாகவும், சி.பி.ஐ.-க்கு தெரிவித்தார். அந்த சந்திப்பு, திருச்சியில் இருந்த ஒரு ஹோட்டல் ரெஸ்ட்டாரென்ட்டில் நடக்க முடிவாகியிருந்தது.

ஆனால், திருச்சி சாந்தன் கூடுதல் கவனத்துடன் இருந்தார். திருச்சி ஹோட்டலில், திராவிடர் கழகப் பிரமுகரை வேறு யாரோ ஒரு நபர்தான் சந்தித்தார்.

திருச்சி ஹோட்டலில் உணவருந்தியபடி இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது, சி.பி.ஐ.யின் ஆட்கள் சென்று திராவிடர் கழகப் பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அந்த புதிய நபரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர் தப்பியோட முயற்சிக்கும் முன், மடக்கி விட்டார்கள்.

திராவிடர் கழகப் பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த நபர் வசந்தன். திருச்சி சாந்தனின் உதவியாளர்.

அவரை சோதனையிட்டபோது, ஒரு பிஸ்டலும், சிறிது காலத்துக்குத் தலைமறைவாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, கைச்சாத்திடப்படாத ஒரு சட்டத்தரணியின் கடிதமும் இருந்தன.

வசந்தனிடம் விசாரணை நடத்தியதிலும் திருச்சி சாந்தன் இருக்கும் இடம் பற்றி அறிய முடியவில்லை. தன்னை திருச்சி தில்லைநகரில் உள்ள பொது இடம் ஒன்றில் வைத்தே திருச்சி சாந்தன் சந்தித்ததாக தெரிவித்தார் அவர்.

திருச்சியில் பல நாட்களைச் செலவிட்ட சி.பி.ஐ. தேடுதல் குழுவால் திருச்சி சாந்தனின் மறைவிடம் குறித்து எந்த விபரத்தையும் அறிய முடியவில்லை. வசந்தனிடம் விசாரித்தபோது, திருச்சி சாந்தன் மற்ற நகரங்களில் வைத்திருந்த தொடர்புகள் தெரியவந்தன.

இதையடுத்து சி.பி.ஐ. குழுக்கள், சேலம், ஈரோடு, பவானி, கரூர், மேட்டூர், கோயமுத்தூர் ஆகிய இடங்களுக்கு திருச்சி சாந்தனைத் தேடிச் சென்றனர்.

இதற்கிடையில், வசந்தனையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டத்தரணியின் கடிதத்தையும் சி.பி.ஐ. புலனாய்வுக் குழு, தமிழகப் போலீசின் க்யூ பிரிவிடம் கையளித்தார்கள். அவர்களிடம் வேறு ஒரு தகவல் இருந்தது.

பத்மநாபா கொலை வழக்கில் தேடப்படும் விடுதலைப் புலிகளான குணராஜ், சிவத்தான் ஆகியோருடன் திருச்சி சாந்தன் எங்கோ புறப்பட்டுப் போய்விட்டதாக, க்யூ பிராஞ்சுக்கு தகவல் தரும் ஆள் ஒருவர் கூறியிருந்தார்.

இந்த மூன்று விடுதலைப்புலிகளில் யாரேனும் ஒருவர், திராவிடர் கழகப் பிரமுகரைச் சந்திக்க முயற்சிக்கக் கூடும் என சி.பி.ஐ. நம்பியது. ஆனால், திருச்சி ஹோட்டல் ரெஸ்ட்டாரென்ட்டில் தம்முடன் பேசிக்கொண்டிருந்த வசந்தன் கைது செய்யப்பட்டபின், சி.பி.ஐ.-யின் திட்டங்களுக்கு மேற்கொண்டு ஒத்துழைக்க விருப்பமற்றவராக அந்த திராவிடர் கழகப் பிரமுகர் இருந்தார்.

“என்னுடன் உணவருந்திக் கொண்டிருந்த வசந்தனை நீங்கள் கைது செய்தபின், விடுதலைப் புலிகள் எனது தொடர்புகளை வெட்டிக் கொண்டனர். இப்போது நான், விடுதலைப் புலிகளின் விவகாரத்தில் இருந்து ஒதுங்கி விட்டேன்” என்றார், தி.க. பிரமுகர்.

இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய சி.பி.ஐ. குழு, தொடர்ந்தும் அந்த தி.க. பிரமுகரை கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்தது. சில நாட்களாக அந்த தி.க. பிரமுகர், தமது வீடு மற்றும், தமது வர்த்தக நிறுனம் தவிர்ந்த வேறு எந்த இடத்துக்கும் செல்லாமல் இருந்தார்.

நவம்பர் 12-ம் தேதி, தி.க. பிரமுகர் திருச்சியில் இருந்து ஈரோடுக்கு பயணமானார். இவர் ஈரோடு செல்லும்வரை பின்தொடர்ந்த சி.பி.ஐ. ஆட்கள், அதன்பின், ஈரோட்டில் முகாமிட்டிருந்த தமது அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

ஈரோட்டில் தி.க. பிரமுகருக்கு நெருங்கிய உறவினர் வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டுக்கு சென்றார் அவர்.

சிறிது நேரத்தில், அந்த வீட்டுக்கு வந்த நபர், பத்மநாபா கொலை வழக்கில் தேடப்படும் விடுதலைப் புலியான குணராஜ்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s