தி.க. பிரமுகரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தபின் அங்கிருந்து புறப்பட்ட குணராஜ், ஈரோடு பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து திருச்சி செல்லும் பஸ்ஸில் ஏறிக் கொண்டார்.
குணராஜ், திராவிடர் கழகப் பிரமுகரைச் சந்தித்துவிட்டு திருச்சி நோக்கி வந்துகொண்டிருக்கிறார் என்ற தகவல் திருச்சியில் இருந்த சி.பி.ஐ. குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஈரோட்டில் இருந்த சி.பி.ஐ. குழுவினர், திருச்சி பஸ்ஸை சற்றுத் தொலைவில் இருந்தவாறே தமது வாகனத்தில் பின்தொடர்ந்தனர்.
மற்றொரு குழுவினர் ஈரோடு பஸ் திருச்சிக்குள் நுழையும் இடத்தில் காத்திருந்தனர்.
ஆனால், திருச்சிக்குள் அந்த பஸ் நுழையும் முன்னரே, சினிமாவில் வரும் காட்சிபோல ஒரு சம்பவம் நடந்தது. மோட்டார் பைக் ஒன்று, அந்த பஸ்ஸூக்கு பாரலலாக சிறிது நேரம் சென்றது. அதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து குணராஜ் இறங்கி, பைக்கில் ஏறிக் கொண்டார்.
பைக்கை ஈரோடில் இருந்து வந்த சி.பி.ஐ. குழுவின் வாகனம் பின்தொடர்ந்தது.
திருச்சி சுந்தர் நகர் அருகே, மோட்டார் பைக்கிலிருந்து இறங்கினார் குணராஜ். அவரை ஏற்றிவந்த பைக், சுந்தர் நகரில் இருந்து கே.கே. நகர் நோக்கி செல்லும் பாதையில் போய்விட்டது.
அப்போது நேரம் இரவு 8.30 மணி. வாகனத்தில் வந்த சி.பி.ஐ. குழுவினர் குணராஜை சிறு தள்ளுமுள்ளுக்குப் பின் மடக்கினர். அவரிடமிருந்த 2 சயனைட் குப்பிகளும் கைப்பற்றப்பட்டன.
குணராஜை, திருச்சி ரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள் சி.பி.ஐ. குழுவினர். அவரைத் தீவிரமாக விசாரணை நடத்தியதில், சுந்தர் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவரது வீட்டில் திருச்சி சாந்தனைச் சந்திக்கச் சென்று கொண்டிருப்பதாக ஒப்புக்கொண்டார்.
திருச்சி சுந்தர் நகரில் வசித்த இந்த நபரை ஏற்கனவே சி.பி.ஐ. விசாரித்திருந்தது. அவர், கள்ளக் கடத்தல் தொழில் செய்த நபர். ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர், கடலோரப் பகுதிகளில் காவல் அதிகரித்து விட்டதால், கடத்தல் தொழிலை விட்டுவிட்டு, திருச்சியில் வசித்ததாக கூறியிருந்தார் அவர்.
அவரது வீட்டில்தான் தற்போது திருச்சி சாந்தன் தங்கியிருப்பதாக கூறினார், குணராஜ்.
அப்போது நள்ளிரவு நெருங்கிவிட்டது. சி.பி.ஐ. குழுவுக்கு ஒரு தயக்கம் ஏற்பட்டது. இவர்கள் 4 பேர்தான் இருந்தார்கள். சுந்தர் நகர் வீட்டை இவர்கள் சூழ்ந்து கொண்டால், திருச்சி சாந்தன் சுலபமாக தப்பித்து விடலாம் என்பதே தயக்கத்துக்கு காரணம். எனவே திருச்சி போலீஸை துணைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்கள்.
திருச்சி சரக பொலிஸ் டி.ஐ.ஜி.யைத் தொடர்புகொண்டார்கள். அவர் உடனே, எஸ்.பி.யை வரவழைத்தார். ஆயுதப் படையின் ஒரு பிரிவை சுந்தர் நகருக்கு அனுப்ப முடிவாகியது.
குணராஜிடம் விசாரித்ததில், திருச்சி சாந்தனிடம் ஒரு பிஸ்டலும், 2 கையெறி குண்டுகளும், சயனைட் குப்பியும் இருப்பதாகத் தெரியவந்தது. டி.ஐ.ஜி.யும், எஸ்.பி.யும், சி.பி.ஐ. குழு மற்றும் ஆயுதப்படைப் பிரிவுடன் சுந்தர் நகருக்கு புறப்பட்டனர்..
குணராஜ் வழிகாட்ட, இவர்கள் அனைவரும் சுந்தர் நகரில் இருந்த வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டை ஆயுதப்படையினர் இருளில் சூழ்ந்து கொள்ள, சி.பி.ஐ. குழுவினர் மட்டும் வீட்டு கதவை தட்டினர்.
அந்தக் கள்ளக் கடத்தல் நபர், அங்கு குடும்பத்துடன் தங்கி இருந்தார். திருச்சி சாந்தன் இல்லை. திருச்சி சாந்தனைத் தங்களுக்குத் தெரியும் என, தொடக்கத்தில் அந்த வீட்டிலிருந்த யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.
பிறகு அந்தக் கள்ளக்கடத்தல் நபரை மட்டும் ரயில்வே பாதுகாப்புப்படைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வைத்து அவரை தீவிரமாக விசாரித்ததில், திருச்சி சாந்தனை தெரியும் என ஒப்புக் கொண்டார்.
அன்று மாலையில் திருச்சி சாந்தன் தன்னைச் சந்தித்ததாகவும், உடனே புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தகவல் கிடைத்தபோது, அதிகாலை 2 மணி ஆகிவிட்டது. இந்த நடவடிக்கையில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனக் கருதிய டி.ஐ.ஜி.யும், திருச்சி மாவட்ட பொலிஸ் எஸ்.பி.யும் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
திருச்சி சாந்தனின் உதவியாளர்களான வசந்தனும், குணராஜும் ஏற்கெனவே பிடிபட்டு விட்டனர். இவர்கள் மூலமாக இல்லாவிட்டால், திருச்சி சாந்தனைப் பிடிப்பது கடினமாகிவிடும். எனவே, கள்ளக் கடத்தல் நபரை மீண்டும் தொடர்ந்து விசாரித்தனர், சி.பி.ஐ. அதிகாரிகள்.
மெதுவாகப் படிப்படியாக அந்தக் கள்ளக் கடத்தல் நபர் உண்மையை வெளிப்படுத்தத் தொடங்கினார். அன்று மாலைவரை தன்னுடன்தான் திருச்சி சாந்தன் இருந்தார் என்றார்.
“திருச்சி சுந்தர் நகரில் வசிக்கும் செபாஸ்டியான் என்பவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார் திருச்சி சாந்தன். அதை போய் செபாஸ்டியானிடம் கொடுத்துவிட்டுச் வர சொன்னார். திருச்சி சாந்தன் கொடுத்த துண்டுக் கடிதத்தை செபாஸ்டியானிடம் கொடுத்துவிட்டு வந்தேன். சிறிது நேரம் கழித்து முதியவர் ஒருவர் எனது வீட்டுக்கு கறுப்பு மொபெட்டில் வந்து திருச்சி சாந்தனை அழைத்துச் சென்றுவிட்டார்” என்றார், கள்ளக் கடத்தல் நபர்.
அதிகாலை 2 மணிக்கு செபாஸ்டியான் வீட்டுக்கதவைத் தட்டியது சி.பி.ஐ. டீம்.
திராவிடர் கழகத்தின் உணர்வுப்பூர்வமான உறுப்பினரான செபாஸ்டியான், சி.பி.ஐ.க்கு புதிய நபர். ஆனால், தமிழக போலீஸ் க்யூ பிராஞ்ச்சுக்கு இவரை நன்றாக தெரியும். காரணம், பிரபாகரனின் பெற்றோர் திருச்சியில் வசித்தபோது, அவர்களை பராமரித்து வந்தவர் இவர்தான்.
அவரது வீட்டைச் சோதனையிட்டபோது பிரபாகரனின் பிறப்புச் சான்றிதழும் அவரது மனைவியின் மதிப்பெண் பட்டியலும் கிடைத்தன. திருச்சி சாந்தன் பற்றிய தடயம் ஏதும் கிடைக்கவில்லை. திருச்சி சாந்தன் எழுதியதாக சொல்லப்பட்ட கடிதமும் இல்லை.
அதிகாலை 3 மணிக்கு இப்படி எந்த தடயமும் இல்லாமல், அடுத்து எந்த திசையில் போவது என்று புரியாத நிலையில் நின்றது, சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவு. அன்று மாலை வரை திருச்சி சாந்தன் இந்த ஏரியாவில் இருந்திருக்கிறார் என்பதால், விடிவதற்கு முன் அவரை பிடித்தால்தான் உண்டு. விடிந்து விட்டால், வேறு ஒரு நகருக்கு போய்விடலாம்.
அதன்பின் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
வேறு ஏதாவது தகவல் கிடைக்குமா என்று செபாஸ்டியானிடம் விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். அவருக்கு தெரிந்த வேறு யாரிடம் விடுதலைப் புலிகள் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதையும் விசாரித்தார்கள்.
வேறு சிலரது பெயர்களை செபாஸ்டியான் தெரிவித்தார். அவர்களும் பெரும்பாலும் தி.க. உறுப்பினர்களே.
அப்போதுதான் திடீரென ஐடியா ஒன்று விசாரணை அதிகாரிக்கு தோன்றியது. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஆட்களில் ஒவ்வொருவருக்கும் எத்தனை வயது இருக்கலாம் என செபஸ்டியானிடம் விசாரித்தார் அவர்.
செபஸ்டியான் சொன்ன நபர்களில் ஒருவருக்கு வயது 60-க்கு மேல்.
“அந்த நபரிடம் கறுப்பு மொபெட் வண்டி ஒன்று உள்ளதா?”
“அம். அவர் வைத்திருக்கும் மொபெட் கருப்பு நிறமானதுதான்”
இதோ, கிடைத்தது, அடுத்த லீட்.
கள்ளக்கடத்தல் நபர், “முதியவர் ஒருவர் எனது வீட்டுக்கு கறுப்பு மொபெட்டில் வந்து திருச்சி சாந்தனை அழைத்துச் சென்றுவிட்டார்” என்று கூறினாரே, அந்த முதியவர்தான், இந்த முதியவரா?
செபஸ்டியான் குறிப்பிட்ட முதியவரின் பெயர் ஆனந்தராஜா. அவரும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் என்றார் செபாஸ்டியான்.
திருச்சி சுந்தர் நகரில் இருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அண்ணா நகரில் வசித்து வந்த ஆனந்தராஜாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு செபாஸ்டியானிடம் கூறியது சி.பி.ஐ. டீம்.
அண்ணா நகரில் இருந்த ஆனந்தராஜாவின் வீட்டுக்கு அந்த அதிகாலை நேரத்தில் இவர்கள் போனபோது, அங்கு ஆனந்தராஜா இல்லை. வேறு ஒருவர் குடியிருந்தார்.
ஆனந்தராஜா அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்ததாகவும், சில தினங்களுக்கு முன்னர்தான், அதே ஏரியாவில் தாம் புதிதாக கட்டிய சொந்த வீட்டுக்குக் குடியேறினார் என்றும் தெரியவந்தது. வாடகை வீட்டில் புதிதாக வந்தவருக்கு, ஆனந்தராஜாவின் சொந்த வீட்டு முகவரியும் தெரிந்திருந்தது.
ஆனந்தராஜாவின் புதிய வீட்டுக்கு சி.பி.ஐ. புலனாய்வுக் குழு போய் சேர்ந்தபோது, நேரம் அதிகாலை 4.15.
அந்த வீடு தனிமையில் அமைந்திருந்தது. விரிந்து பரந்திருந்த அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த 2 வீடுகளில் அதுவும் ஒன்று. மற்றொரு வீட்டுக்கு யாரும் குடிவரவில்லை. ஆனந்தராஜாவின் வீட்டைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.
ஒரு பக்க சுவரில் ‘கடவுள் இல்லை’ என பெரிதாக எழுதப்பட்டிருந்தது. மறுபக்க சுவரில் பெரிய எழுத்துக்களில், ‘இந்த வீடு, தம்பி பிரபாகரனுக்குச் சொந்தமானது’ என்று எழுதப்பட்டு இருந்தது.
தொடரும்…