ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 64

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள் 1

இந்த தொடரில் கடந்த அத்தியாயம்வரை, சி.பி.ஐ.-யின் ஆபரேஷன் நடவடிக்கை பற்றி படித்தீர்கள். இந்த அத்தியாயத்தில் இருந்து, ஆதாரங்கள், தடயங்கள், மற்றும் இதர விஷயங்களை வைத்து எப்படி இந்த வழக்கை முடித்தார்கள் என்பதை பார்க்கலாம்.

இந்த தொடரின், ஆதாரங்கள் – தடயங்கள் தொடர்பான பகுதியை எங்கிருந்து தொடங்கலாம்? திருச்சி சாந்தனில் இருந்தே தொடங்குவோம்.

ராஜிவ் கொலை புலனாய்வு தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட சி.பி.ஐ. ஆபரேஷனில், கடைசியாக தற்கொலை செய்து கொண்டவர், திருச்சி சாந்தன் என கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த திருச்சி சாந்தன்தான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தமிழக அரசியல் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது, பரவலாக பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இருப்பினும், வழக்கு என்று வரும்போது, திருச்சி சாந்தனுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் உள்ள தொடர்பையோ, திருச்சி சாந்தனுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனுக்கும் இடையே உள்ள தொடர்பையோ (பிரபாகரனை வழக்குக்குள் கொண்டுவர வேண்டுமென்றால்) ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும்.

இதற்கு என்ன ஆதாரங்களை சி.பி.ஐ. வைத்திருந்தது?

1) இலங்கை, யாழ்ப்பாணத்தில் இருந்த பிரபாகரனின் மறைவிடத்தின் சங்கேதப் பெயர், தளம்-14 (Base-14). இந்த Base-உடன் திருச்சி சாந்தன் தொடர்புகளை வைத்திருந்ததை நிரூபிக்க ஆதாரங்கள் தேவை.

தமிழகத்தில் திருச்சி சாந்தனின் ஒயர்லொஸ் ஆபரேட்டர் டிக்சன், பிரபாகரனின் ஒயர்லெஸ் ஆபரேட்டருடன் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார் என, கோவையில் கைதான விடுதலைப்புலிகள் விக்கியும், ரகுவும் வாக்குமூலம் கொடுத்தனர். எனவே, பிரபாகரனின் கட்டளைகளின்படியே திருச்சி சாந்தன் செயல்பட்டுவந்தார் என்றது சி.பி.ஐ.

2) விடுதலைப் புலிகளின் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவைச் சேர்ந்த சிவராசனுக்கு (இவர் உளவுப் பிரிவை சேர்ந்தவர் என்பதற்காக சி.பி.ஐ. சேகரித்த ஆதாரங்கள், கட்டுரையின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வரும்), அரசியல் பிரிவை சேர்ந்த திருச்சி சாந்தன் உதவ வேண்டும் என்ற உத்தரவு யாரிடம் இருந்து வந்தது?

யாழ்ப்பாணத்துக்கு படகில் செல்லும் வழியில் கடலில் வைத்து கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் ஆதரவாளர் (இந்தியரான) இரும்பொறை, கோவையில் கைதான விக்கி இருவரும், கொடுத்த வாக்குமூலம், இதில் ஒரு ஆதாரமாக சி.பி.ஐ.யால் காட்டப்பட்டது.

“சிவராசனுக்கு உதவுமாறு என்னிடம் (திருச்சி சாந்தன்) பிரபாகரன் கூறினார் என திருச்சி சாந்தன் தெரிவித்தார்” என்பதே, இரும்பொறை, விக்கி ஆகியோரின் வாக்குமூலம். (ஒருவேளை திருச்சி சாந்தனை சி.பி.ஐ. உயிருடன் பிடித்திருந்தால், இந்த சுற்றுப் பாதையில்லாமல், வழக்கை நேரே பிரபாகரனிடம் கொண்டு சென்றிருக்கக்கூடும்).

3) இந்த வழக்கில் திருச்சி சாந்தனின் பங்கை நிரூபிக்கும் வகையில், அனேகமாக அனைத்து அம்சங்களுக்கும் தனித்தனி சாட்சியங்கள், அல்லது ஆதாரங்களை பயன்படுத்தியது, சி.பி.ஐ.

முதலில், யாழ்ப்பாணத்தில் இருந்து பொட்டு அம்மான் தமிழகத்தில் இருந்த சிவராசனுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவல் ரகசிய குறியீட்டுக் காகிதம் ஒன்றில், “உங்களுக்கு (சிவராசனுக்கு) உதவ திருச்சி சாந்தனுக்கு தலைவர் (பிரபாகரன்) உத்தரவிட்டுள்ளார். அதற்கு திருச்சி சாந்தனும் ஒப்புக்கொண்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்து, ஜூன் 22-ம் தேதி சென்னையில் வசித்த இலங்கைத் தமிழ் இஞ்சினியர் வீட்டில், திருச்சி சாந்தன் மற்றும் சிவராசனின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியதற்கு, அவர்களை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றவர்களின் வாக்குமூல சாட்சியங்கள் காட்டப்பட்டன.

சிவராசனும், அவருடன் இருந்த விடுதலைப் புலிகளும் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு, நேரடிச் சாட்சிகள், கைப்பற்றப்பட்ட டேங்கர் லாரி ஆகியவை ஆதாரங்களாக காட்டப்பட்டன. டேங்கர் லாரிக்குள் மறைத்து வைத்தே சிவராசன் பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

பிரபாகரனுக்கு திருச்சி சாந்தன் எழுதிய கடிதத்தில் (இது நடுக்கடலில் இரும்பொறையிடமிருந்து கைப்பற்றப்பட்டது), சிவராசன் பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது எப்படி என்பதை, திருச்சி சாந்தன் தன் கைப்பட எழுதியிருந்தார்.

4) அந்தக் கடிதம் திருச்சி சாந்தனால் எழுதப்பட்டதுதான் என்பதற்கு என்ன ஆதாரம்?

ராஜிவ் கொலை நடப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னதாக, 1989-ல், இரும்பொறைக்கு திருச்சி சாந்தன் வேறு விஷயங்கள் தொடர்பாக எழுதிய உள்நாட்டுக் கடிதங்கள் (இன்லான்ட் லெட்டர்கள்) சிலவற்றை இரும்பொறை தமது வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இரும்பொறையின் வீடு சோதனையிடப்பட்ட போது அந்தக் கடிதங்கள் சிக்கின.

அக்கடிதங்களில் காணப்பட்ட கையெழுத்தும், 1991ல் இந்தியக் கடற்படையினரால் நடுக்கடலில் இரும்பொறையிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரு கடிதங்களில் காணப்பட்ட கையெழுத்தும் ஒன்றாக இருந்தன என்பதற்கு, கையெழுத்து தடய ஆய்வாளர்கள் சர்டிபிகேட் கொடுத்திருந்ததை சி.பி.ஐ. ஆதாரமாக காட்டியது.

5) ராஜிவ்காந்தி கொலையுண்ட ஸ்ரீபெரும்புதூரில் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் (உள்ளூரைச் சேர்ந்த பொதுக்கூட்ட அமைப்பாளர்கள் தரப்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும்) குண்டுவெடிப்பைப் படம் பிடிக்கத் தவறிவிட்டன. இது தற்செயலாக நடந்ததா, குண்டுவெடிப்புச் சம்பவம் வீடியோவில் எடுக்கப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டதா?

பொதுக்கூட்ட நிகழ்வை உள்ளூர் அமைப்பாளர்கள் வீடியோவில் பதிவு செய்தபோது, தரமில்லாத வீடியோ கேசட் காரணமாக வீடியோ காட்சிகளின் கடைசிப்பகுதி தெளிவாக இல்லை. எனினும், அந்த வீடியோவில் யாராவது மாற்றங்களை செய்திருந்தனரா?

அந்த வீடியோ கேசட்டை, அமெரிக்க புலனாய்வுத்துறை FBI-ன் சோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

FBI-ன் சோதனை முடிவுகளின்படி, வீடியோ கேசட்டில் குளறுபடியோ, மாற்றமோ செய்யப்பட்டிருக்கவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.

6) விடுதலைப்புலிகளின் ஒயர்லெஸ் தொடர்புகளை இந்திய உளவுத்துறை ரா குறுக்கிட்டுக் கேட்ட தகவல்கள், ராஜிவ்காந்தி படுகொலைக்கு முன்னரும், பின்னரும் சிவராசன் மற்றும் பொட்டு அம்மான் இடையே நடைபெற்ற ஒயர்லெஸ் தகவல் பரிமாற்றங்களின் ரகசியக் குறியீட்டுக் காகிதங்கள் ஆகியவையும் ஆதாரங்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டன.

7) ராஜிவ் கொல்லப்பட்டபின் கைது செய்யப்பட்ட பிரபல தமிழக போட்டோகிராபர் மற்றும் செய்தியாளர் சுபா சுந்தரத்தின் யோசனையின் பேரில், ராஜிவ் கொல்லப்பட்டபோது இறந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் வீட்டில் இருந்த இந்த ஆவணங்களை அவர்களது குடும்பத்தினர் உறவினர் ஒருவரது வீட்டில் மறைத்து வைத்திருந்தனர்.

அந்த ஆவணங்கள், ஹரிபாபு, பாக்கியநாதன், முருகன், சுபா சுந்தரம் ஆகியோருக்கு விடுதலைப்புலிகளுடன் இருந்த தொடர்புகளுக்கு ஆதாரமாக காட்டப்பட்டன.

premium-id8) சென்னை மடிப்பாக்கத்தில் முருகன் (ராஜிவ் கொலையில் தண்டனை பெற்று தற்போது, சிறையில் உள்ள அதே முருகன்) தங்கியிருந்த மறைவிட வீட்டில் இருந்த தடயச் சான்றுகள் பல ஆதாரமாக காட்டப்பட்டன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப்பிரிவைச் சேர்ந்த முருகன், மற்றும் இந்தியரான நளினி (தற்போது சிறையில் உள்ள அதே நளினி) ஆகியோர் 1991 ஜூன் 14-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

அப்போது நடந்த விசாரணையில், முருகன் அளித்த தகவலின் அடிப்படையில், மடிப்பாக்கத்தில் இருந்த அவரது மறைவிட வீடு ரெயிட் செய்யப்பட்டது. அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை-

a) போலியாகத் தயாரிக்கப்பட்ட PRESS ID. இந்த பத்திரிகையாளருக்கான அங்கீகார அடையாள அட்டை, முருகனின் போட்டோவுடன், அவர் அசைட் சஞ்சிகையின் நிருபர் என்பது போலக் காட்டப்பட்டிருந்தது.

b) வெற்றிவேல் சிவஸ்ரீ என்ற பெயரில் இலங்கை தேசிய அடையாள அட்டை.

இந்த இலங்கை தேசிய அடையாள அட்டை உண்மையானதுதான். விடுதலைப்புலிகள் வெளியிட்ட அதிகாரபூர்வ மாவீரர் பட்டியலில், சிவஸ்ரீ என்ற விடுதலைப்புலி 1987 ஆகஸ்ட் 11-ம் தேதி, இலங்கையில் தற்செயலாக ஏற்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். இவர் முருகனின் அண்ணன்.

மடிப்பாக்கம் வீட்டில் கைப்பற்றப்பட்ட தேசிய அடையாள அட்டையில் இருந்த சிவஸ்ரீயின் போட்டோவும், விடுதலைப்புலிகள் வெளியிட்ட அதிகாரபூர்வ மாவீரர் பட்டியலில் காணப்பட்ட சிவஸ்ரீயின் போட்டோவும் ஒரே நெகடிவிலிருந்து எடுக்கப்பட்டவை. முருகனுக்கு இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தொடர்புகளை இவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக்கிவிட்டன.

c) ஈகிள் டைரி,

d) விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு பயன்படுத்திய ஒயர்லெஸ் தகவல் தொடர்புக்குரிய ரகசிய டீ-கோடிங் காகிதங்கள்.

e) சிவரூபனின் ஜெய்ப்பூர் முகவரி.

மேலே குறிப்பிடப்பட்ட ஈகிள் டைரியில் முருகன் செய்த பல்வேறு செலவுகணக்கு விவரங்கள் இருந்தன. பாக்கியநாதன், பத்மா, அறிவு, ஹரிபாபு, நளினி ஆகியோருக்கு முருகன் கொடுத்த பண விவரம், சுதந்திர ராஜா மற்றும் சிவராசனிடமிருந்து பெற்ற பண விவரம், திருப்பதி மற்றும் வேலூர் சென்ற வந்த பயணச் செலவு விவரம், புத்தகங்கள், புகைப்படங்கள், வீடியோ கேசட் வகைக்காகச் செலவிட்ட விவரம் போன்றவை டைரியில் இடம்பெற்றிருந்தன.

டைரியிலிருந்து ஒரு காகிதம் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது.

வேதாரண்யத்தில் இருந்து வரும்போது கைது செய்யப்பட்ட ரூசோவிடமிருந்து பொலிஸாசாரால் கைப்பற்றப்பட்ட துண்டுக் காகிதம், இந்த ஈகிள் டைரியில் இருந்து கிழிக்கப்பட்ட காகிதம்தான்!

அந்தக் காகிதத்தில்தான், நளினி, தாஸ் ஆகியோரது பெயர்களையும், நளினியின் சென்னை (அடையாறு) அலுவலகத் தொலைபேசி எண்ணையும் முருகன் எழுதி, ரூசோவிடம் 1991 மே மாதத்தில் வேதாரண்யத்தில் வைத்து முருகன் கொடுத்திருக்கிறார். (துண்டுக் காகிதத்தில் தனது பெயரைத்தான் தாஸ் என குறிப்பிட்டிருந்தார் முருகன்)

அந்தத் துண்டுக் காகிதத்தில் இருந்தது முருகனின் கையெழுத்து என்றும், அந்தத் துண்டுக்காகிதம் முருகனின் ஈகிள் டைரியிலிருந்து கிழிக்கப்பட்டது என்றும் தடய அறிவியல் நிபுணரின் சாட்சியச் சான்று கூறியது.

அதனால், இந்த டைரி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவு உறுப்பினரான முருகனுக்கு, அறிவு, ஹரிபாபு, நளினி, பத்மா, பாக்கியநாதன் மற்றும் ரூசோ, சிவராசன், சுதந்திர ராஜாவுடன் இருந்த தொடர்பையும், விடுதலைப்புலிகளுக்காக அவரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செலவுகளையும் நிரூபிப்பதற்கு ஆதாரமாக தாக்கல் செய்தது, சி.பி.ஐ.

சென்னை மடிப்பாக்கம் வீட்டிலிருந்து சி.பி.ஐ. கைப்பற்றிய மற்றொரு முக்கிய தடயம், விடுதலைப் புலிகளின் இந்திய ஆதரவாளரான முத்துராஜாவுக்குச் சொந்தமான சூட்கேஸ்.

இந்த முத்துராசா மதுரைக்காரர். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த இந்தியத் தமிழர்களில், விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன் முதல், உயர்மட்ட தளபதிகள் பலருடன், மிக நெருக்கமாக இருந்தவர் இவர்தான்.

(இந்த விவகாரங்களுக்கு முன், – எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் – 1980-களில் கோவையில், தனிப்பட்ட முறையின் இவருடன் எனக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. அந்த நாளைய அ.தி.மு.க. அமைச்சர் அரங்கநாயகத்தின் நண்பர் இவர்).

விடுதலைப்புலிகளுக்காக, அதிக காலம் இலங்கையில் இருந்து, யுத்தத்தில் பங்கெடுத்த இந்தியரும், இந்த முத்துராசாதான்

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s