ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 65

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-2

சென்னை மடிப்பாக்கம் வீட்டிலிருந்து சி.பி.ஐ. கைப்பற்றிய மற்றொரு முக்கிய தடயம், ஒரு சூட்கேஸ். அது, விடுதலைப் புலிகளின் இந்திய ஆதரவாளரான முத்துராஜாவுக்குச் சொந்தமானது. சூட்கேஸ் முழுவதும் போட்டோக்கள், வீடியோ கேசட்டுகள், மற்றும் சில பழைய கடிதங்கள் இருந்தன.

முத்துராஜா 1980களின் தொடக்கத்தில் மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்தார். பின்னர் சென்னைக்குக் குடியேறிய அவர், விடுதலைப்புலிகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த சுபா சுந்தரத்துடன் பணியாற்றினார். அந்த வகையில், அங்கு அடிக்கடி வந்து செல்லும் விடுதலைப் புலிகளின் சீனியர் உறுப்பினர் பேபி சுப்பிரமணியத்துடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

இந்த பேபி சுப்ரமணியம்தான், விடுதலைப்புலிகள் வளர்வதற்குமுன் சிறிய இயக்கமாக இருந்த நாட்களில் இலங்கையில் செய்யப்பட்ட முதலாவது விமான குண்டு வெடித்தலை நடத்தியவர்.

1978-ம் ஆண்டு செப்டெம்பர் 7-ம் தேதி, யாழ்ப்பாணம் பலாலி ஏர்போர்ட்டில் இருந்து கொழும்பு சென்ற விமானம், கொழும்பு ரத்மலான ஏர்போர்ட்டில் இறங்கியபின் வெடித்து சிதறியது.

அந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்தவர், பேபி சுப்ரமணியம்.

அதன்பின் 1980-களில் சென்னையில் தங்கியிருந்த பேபி சுப்ரமணியத்துடன் மிக நெருக்கமாக இருந்த மதுரைக்காரரான முத்துராஜாதான், விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த இந்தியத் தமிழர்களில், மிக நெருக்கமானவர் எனலாம்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தனர் விடுதலைப்புலிகள். இதில் ஓர் அறையில் பேபி சுப்பிரமணியம் தங்கி இருந்தார். அந்த வீட்டின் எஞ்சிய பகுதியில் முத்துராஜாவின் தாயாரும், சகோதரியும் வசித்து வந்தனர்.

1991-ம் ஆண்டு மார்ச்சில், முத்துராஜாவின் கட்டளைப்படி, பேபி சுப்பிரமணியத்தின் ஆவணங்கள், விடுதலைப்புலிகளின் போட்டோக்கள் மற்றும் உள்ள ஆவணங்களை பாக்கியநாதன், அறிவு, ஹரிபாபு ஆகியோர் செங்கல்பட்டில் இருந்த விடுதலைப்புலிகள் ஆதரவாளரின் வீட்டுக்கு மாற்றினர்.

அங்கு எஞ்சியிருந்த சூட்கேஸில் இருந்தவை, 1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து முத்துராஜா கொண்டுவந்த போட்டோக்கள், வீடியோ கேசட்டுகள், மற்றும் அவரது பழைய லெட்டர்கள் அடங்கிய சூட்கேஸ்தான்.

அந்த சூட்கேஸ்தான், விடுதலைப்புலிகளின் சென்னை மடிப்பாக்கம் வீட்டில் இருந்து, ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் சி.பி.ஐ.யால் கைப்பற்றப்பட்டது.

1980-களின் இறுதியில் விடுதலைப்புலிகள் உளவுப்பிரிவு தமிழகத்தில் அதன் தளத்தை நிறுவியபோது, நம்பகமான இந்தியர்களின் சிலரின் உதவி தேவைப்பட்டது.

அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் இருந்த போதிலும், அவர்களில் யாரையும் தமது இயக்கத்தில் உறுப்பினர்கள் ஆக்கவில்லை விடுதலைப் புலிகள்.

அப்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் இணைக்கப்பட்டிருந்த ஒரேயோரு இந்தியர், இந்த முத்துராஜாதான்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவால் இணைத்துக் கொள்ளப்பட்ட முத்துராஜாவுக்கு, பயிற்சிக்காக யாழ்ப்பாணம் சென்றபோது, ஒரேயொரு இந்தியர் என்ற ரீதியில், மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்களுடனும் பரிச்சயம் ஏற்பட்டது. அந்த வகையில், புலிகளின் யாழ்ப்பாண தளபதியாக இருந்த கிட்டுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது.

புலிகளின் உளவுப் பிரிவு தலைவராக இருந்த பொட்டு அம்மானின் ஆட்கள், தமிழகத்தில் தமது தளத்தை உருவாக்கியபோது, முத்துராஜாவின் உதவி தேவையாக இருந்தது.

முத்துராஜாவை அழைத்த கிட்டு, இந்தியத் தொடர்பாளர்களை, உளவுப்பிரிவின் நிக்சனுக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதேநேரம், இதுபற்றி, அரசியல் பிரிவின் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று கிட்டு கூறியிருந்தார்.

இந்த ப்ராஜெக்ட்டுடன் தமிழகம் திரும்பிய முத்துராஜா, தமக்கு பரிச்சயமான, அல்லது தம்மை மற்றவர்கள் அறிந்த நகரமான சென்னைக்கு செல்லவில்லை. கோவைக்கு சென்றார். கோவையில் குடியேறினார்.

1980களில் கோவை நகரத்தின் நடமாட்டம் சிறிய ஏரியாவுக்குள் அடங்கியிருந்தது. பீளமேடு கடந்தால், ஓரிரு கல்லூரிகளை விட்டால், பெரிதாக நடமாட்டம் இல்லாத பகுதி. இரவில் கும்மிருட்டாக இருக்கும்.

இங்கு ‘ஹோப்காலேஜ்’ பகுதியில் வீடு பிடித்து தங்கினார் முத்துராஜா. விடுதலைப் புலிகள் உளவுத்துறையின் இந்திய தொடர்பாளர்களின் பேஸ், அங்கிருந்துதான் தொடங்கியது.

தமழிகத்தில் அப்போது (எம்.ஜி.ஆர்.ஆட்சியில்) விடுதலைப் புலிகளுக்கு செல்வாக்கு இருந்தாலும், மத்திய உளவுப்பிரிவு ரா முதல், தமிழக க்யூ பிராஞ்ச் வரை விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

இதனால், அந்த நாட்களில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகம் இல்லாத கோவையை தேர்ந்தெடுத்த முத்துராஜா, மற்ற நகரங்களில் இருந்த தமது தொடர்பாளர்களை கோவைக்கு வரச்செய்து சந்தித்தார்.

விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு, தமது அரசியல் பிரிவுக்கு தெரியாமல் கோவையில் இயங்கத் தொடங்கியது.

முத்துராஜாவின் அழைப்பில், பாக்கியநாதன், அறிவு ஆகியோர் கோவைக்கு வந்தபோது, அவர்களை புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நிக்சனிடம் அறிமுகம் செய்துவைத்தார் முத்துராஜா. பாக்கியநாதனும், அறிவும் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தபோதிலும், உளவுப்பிரிவு நடவடிக்கைகளை ரகசியமாகவே வைத்திருந்தனர்.

இதனால்தான், உளவுப் பிரிவைச் சேர்ந்த முருகனின் தமிழக வருகைக்குப் பின்னர், அவரை அழைத்துக்கொண்டு போய் பாக்கியநாதன் வீட்டுக்கு அறிவு குடியேறினார்.

உளவுப்பிரிவின் தளம் அமைக்கப்பட்டபின், கோவை ‘ஹோப்காலேஜ்’ வீட்டை காலி செய்துகொண்டு, அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருவதுபோல சென்னை போய் சேர்ந்தார் முத்துராஜா. இதனால், முத்துராஜாவின் உளவுப்பிரிவு டீலிங்குகள், அரசியல் பிரிவுக்கு தெரிந்திருக்கவில்லை.

தமிழக அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தனர், யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகள். தற்போது உள்ளதுபோல இன்டர்நெட், கேபிள் டி.வி. வசதியெல்லாம் இல்லாத நாட்கள் அவை.

இதனால், இந்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் செய்தி நிகழ்ச்சிகளை யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்வதுதான் அறிவின் முக்கியப் பணியாக இருந்தது. இதற்காக, வி.சி.ஆர்.களையும் வீடியோ கேசட்டுகளையும் பேபி சுப்ரமணியம் கொடுத்தார்.

பாக்கியநாதன், பாக்கியநாதனின் தங்கை, அந்த வீட்டில் தங்கியிருந்த தங்கையின் தோழி ஆகியோரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய உதவினர்.

ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர், வி.சி.ஆர்.களையும் வீடியோ கேசட்டுகளையும் பாக்கியநாதனின் வீட்டிலிருந்து மற்றொரு நண்பரின் வீட்டுக்கு மாற்றினார் அறிவு. புலன் விசாரணையின்போது, இந்த வி.சி.ஆர்.களும், வீடியோ கேசட்டுகளும் கைப்பற்றப்பட்டன. அவற்றால் விசாரணைக்கு பலன் ஏதுமில்லை என்ற போதிலும், அந்த தூர்தர்ஷன் செய்தி கேசட்டுகளுடன், விடுதலைப் புலிகளின் வேறு பல வீடியோ கேசட்டுகளும் கிடைத்தன.

இவை தவிர, சென்னை மடிப்பாக்கம் வீட்டிலிருந்து சி.பி.ஐ. கைப்பற்றிய முத்துராஜாவின் சூட்கேஸிலும், யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோ கேசட்டுகள் மற்றும் போட்டோக்கள் கிடைத்தன.

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வுக்கும், விடுதலைப் புலிகளின் பழைய வீடியோ கேசட்டுகளுக்கும் என்ன சம்மந்தம்?

இந்த புலனாய்வின்போது, பலர் கைது செய்யப்பட்டனர். சிவராசன், சுபா உட்பட பலர் சயனைட் குப்பி கடித்து தற்கொலை செய்து கொண்டனர். தனு மனித வெடிகுண்டாக மாறி வெடித்தார். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க ஆதாரம் தேவை.

அந்த ஆதாரங்களை, விடுதலைப் புலிகளின் பழைய வீடியோ கேசட்டுகளில் தேடியது, சி.பி.ஐ.

அதாவது இவர்கள், விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கேசட்டுகளில், புலிகளின் நிகழ்வுகளில் பங்கு பற்றிய ஆதாரம் வேண்டும். இவர்கள் அங்கு துப்பாக்கி சகிதம் நின்ற படங்கள் வேண்டும்.

கிடைத்த வீடியோ கேசட்டுகளில் இடம்பெற்ற காட்சிகளில் ஒன்று, யாழ்ப்பாணத்தில் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகள் உறுப்பினர் கேப்டன் மோரீஸ் என்பவரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி. கேப்டன் மோரீஸின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி அருகே பல விடுதலைப்புலிகள் காணப்பட்டனர்.

இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட விடுதலைப் புலிகளிகளில் ஒருவராக, லுங்கி அணிந்து, தோளில் ஏ.கே. 47 ரைபிளைத் தொங்கவிட்டவாறு காட்சியளித்தார் சிவராசன்.

தொடரும்..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s