ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 66

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-3

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வுக்காக, விடுதலைப் புலிகளின் பழைய வீடியோ கேசட்டுகள் மற்றும் போட்டோக்களை ஆராயத் தொடங்கியது, சி.பி.ஐ.

இந்த புலனாய்வின்போது, பலர் கைது செய்யப்பட்டனர். சிவராசன், சுபா உட்பட பலர் சயனைட் குப்பி கடித்து தற்கொலை செய்து கொண்டனர். தனு மனித வெடிகுண்டாக மாறி வெடித்தார்.

இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க ஆதாரம் தேவை. அந்த ஆதாரங்களை, விடுதலைப் புலிகளின் பழைய வீடியோ கேசட்டுகள், மற்றும் போட்டோக்களில் தேடியது, சி.பி.ஐ.

அதாவது இவர்கள், விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கேசட்டுகளில், அல்லது போட்டோக்களில் காணப்பட்டால், இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்பதை கோர்ட்டில் நிரூபிக்கலாம்.

சி.பி.ஐ. புலனாய்வுக் குழு பரிசீலித்த ஆயிரக்கணக்கான போட்டோக்களிலிருந்து மிக நன்றாகத் தெரிந்த, மற்றும் அவ்வளவாகத் தெரிந்திராத விடுதலைப்புலி உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கு, இந்த வழக்குக்காக கைது செய்யப்பட்ட சிலர் சி.பி.ஐ.க்கு உதவினர்.

அத்துடன், இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, விடுதலைப்புலிகளுடன் நேரடி டீலிங் செய்த இந்திய அமைதிப்படை வீரர்கள் சிலரின் உதவியும் பெறப்பட்டது. போட்டோக்கள், வீடியோக்களில் இருந்த விடுதலைப்பு லிகளில் சிலரையும், சென்னையில் காவலில் இருந்த விடுதலைப் புலிகள் சிலரையும் அவர்களில் சிலர் அடையாளம் காட்டினர்.

கிடைத்த வீடியோ கேசட்டுகளில் இடம்பெற்ற காட்சிகளில் ஒன்று, யாழ்ப்பாணத்தில் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகள் உறுப்பினர் கேப்டன் மோரீஸ் என்பவரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி. கேப்டன் மோரீஸின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி அருகே இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட விடுதலைப் புலிகளிகளில் ஒருவராக, லுங்கி அணிந்து, தோளில் ஏ.கே. 47 ரைபிளைத் தொங்கவிட்டவாறு காட்சியளித்தார் சிவராசன்.

இலங்கை வனப்பகுதியில் எடுக்கப்பட்ட பெண் விடுதலைப்புலிகள் பயிற்சி வீடியோ ஒன்றில், விடுதலைப் புலிகளுக்கான சீருடையில் ஆதிரை இருந்தார்.

சென்னை – டில்லி ரயிலில் சி.பி.ஐ. பின்தொடர்ந்த இலங்கைப் பெண் இவர்தான்.

தொடரின் 33-வது அத்தியாயத்தில், சென்னை – டில்லி ரயிலில் ஆதிரையை பின்தொடர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள், ஆதிரையையும், சபாபதி பிள்ளை என்ற முதியவரையும் (விடுதலைப் புலிகள் தளபதி ராதாவின் தந்தை), டில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர்.

ஆதிரையின் உண்மையான பெயர் சந்திரலேகா. விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் இவரை சோனியா என்றுதான் அழைப்பார்கள். இவர் இந்தியாவுக்கு வந்த பின்னர் மேலும் இரு பெயர்களை (ஆதிரை, கௌரி) சூட்டிக்கொண்டார்.

வாகனங்கள் ஓட்டுவதில் திறமைவாய்ந்த சாரதியான ஆதிரைக்கு, அதைவிட மற்றொரு திறமையும் இருந்தது. ரகசியக் குறியீடுகளை டீகோடிங் செய்வதில் நிபுணர். அதையடுத்தே பொட்டு அம்மானின் உளவுப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்.

இந்த ஆதிரை, விடுதலைப் புலிகளுக்கான சீருடையில் பயிற்சி எடுக்கும் வீடியோ காட்சிகளை, இந்த வழக்கில் ஒரு ஆதாரமாக சேர்த்துக் கொண்டது சி.பி.ஐ.

இலங்கையின் வன்னி வனப்பகுதியில் விடுதலைப்புலிகள் எடுத்திருந்த போட்டோக்கள் சிலவற்றில், தமிழகத்தில் இருந்து பயிற்சிக்காக சென்று, திரும்பி வந்தபின் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட இந்தியரான ரவி, துப்பாக்கியுடன் காணப்பட்டார்.

தொடரின் 61-ம் அத்தியாயத்தில், விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் கொடுத்த ஆயுதங்களுடன் தமிழகத்தில் நம்புதாளை கடற்கரையில் வந்திறங்கி, கடற்கரையில் ஆயுதங்களை புதைத்து விட்டு, திண்டுக்கல்லில் வைத்து கைது செய்யப்பட்டவர்தான், இந்த ரவி.

மற்றொரு போட்டோவில், விடுதலைப்புலிகள் இயக்கத் தளபதிகளில் ஒருவரான சங்கருக்கு (வான்புலிகள் பிரிவை தொடங்கியவர்) அருகே நின்றிருந்தார் ரங்கன்.

தொடரின் 59-வது அத்தியாயத்தில் சி.பி.ஐ. டீம், சென்னை அடையாறு ட்ராவல் ஏஜென்சியை சுற்றிவளைத்து, அடையாறு வீதிகளில் ஹாலிவுட் திரைப்படப் பாணியில் துரத்திச் சென்று பிடித்த நபர்தான், ரங்கன். இந்த ரங்கன்தான், சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூருவில் பயன்படுத்திய மாருதி ஜீப்பை ஓட்டிச் சென்றவர்.

விடுதலைப் புலிகளின் தளபதி சங்கருடன் இவர் ஏன் போட்டோ எடுத்துக்கொண்டார் என கைதாகி காவலில் இருந்த மற்ற விடுதலைப் புலிகளிடம் சி.பி.ஐ. விசாரித்த போது, இந்த ரங்கன்தான், தளபதி சங்கரின் பிரத்தியேக கார் சாரதியாக இருந்தவர் என்பது தெரிய வந்தது.

1990-ம் ஆண்டு, மே, மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியர்களான முத்துராஜா, அறிவு, இரும்பொறை ஆகியோர் ரகசியமாக யாழ்ப்பாணம் சென்றபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், மாத்தையா, பேபி சுப்பிரமணியம் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களும் இருந்தன.

மிகவும் ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?

தமது நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு தடயத்தையும் அழித்துவிட வேண்டிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள், ராஜிவ் கொலையில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்கள், அகப்பட்டவர்கள் பலரையும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்தக்கூடிய ஆதாரங்களான இந்த போட்டோக்கள், வீடியோக்களை அழிக்காமல், தமிழகத்தில் விட்டு வைத்திருந்தார்கள்!

அதற்கு காரணம், இந்த வீடியோக்கள், போட்டோக்கள் பல, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவோடு தொடர்புடையவர்கள் வசம்தான் இருந்தன. ராஜிவ் கொலை திட்டமிடலில், விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்தவர்களே ஈடுபட்டனர்.

அப்படியொரு கொலை திட்டம் உள்ளது என்பதே, அரசியல் பிரிவினருக்கு தெரியாத நிலையில், முக்கியமான இந்த தடயங்களை அழிக்காமல் விட்டிருந்தனர். அவை, சி.பி.ஐ.-யின் கைகளில் சிக்கிக் கொண்டது!

இங்குள்ள மற்றொரு விஷயம், ராஜிவ் கொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு கிடையாது என்று மற்றொரு கோணம் இன்றும் பலரால் கூறப்படுகிறது.

இந்த புலனாய்வு, 1991-92ல் நடந்தது. தற்போது 20 வயதில் உள்ள ஒருவர் அப்போது பிறக்கவே இல்லை. 30 வயதில் உள்ள ஒருவருக்கு அப்போது 10 வயது. இதனால், பலர் இந்த புலனாய்வு லைவ்வாக நடந்து கொண்டிருந்தபோது, அதை ஃபாலோ-அப் பண்ணியதில்லை.

புலனாய்வின்போது, என்னவெல்லாம் ஆதாரங்கள் சிக்கி, ராஜிவ் கொலையை விடுதலைப் புலிகளை நோக்கி இழுத்துச் சென்றது என்பது பலருக்கு தெரியாது.

வேறு சிலருக்கு மற்றொரு விஷயம் தெரியாது.

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 15 ஆண்டுகளின் பின், 2006-ம் ஆண்டு ஜூலையில், NDTV-க்கு வழங்கிய பேட்டியில், ராஜிவ் கொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் சார்பில் மன்னிப்பு கோரி, நடந்ததை இந்தியா மறந்துவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Anton Stanislaus Balasingham was the chief political strategist and chief negotiator of the Liberation Tigers of Tamil Eelam or LTTE. In this show, he apologises for LTTE killing former PM Rajiv Gandhi and requests India to be “magnanimous in putting the past behind.” -NDTV

ராஜிவ் காந்தி படுகொலையின்போது, மனித வெடிகுண்டாக வெடித்த ‘தனு’ என்ற பெண் யார் என்பதையும், அந்தப் பெண்ணுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் என்ன தொடர்பு என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s